மார்ச் மாதம் 21-ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் தங்களின் வருடப்பிறப்பான நவ்-ருஸ் திருநாளைக் கொண்டாடவிருக்கின்றனர். பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களான பாப் பெருமானார், பஹாவுல்லா இருவரும் பஹாய் சமயத்தின் புனித நாள்கள் ஒன்பதில் ஒன்றாக, நவ்-ருஸ் தினத்தையும் அங்கீகரித்து, அதனைக் கடவுளின் அதிபெரும் நாமத்துடன் தொடர்புபடுத்தினர். பஹாய் மாதமான பஹா மாதத்தின் முதல் நாளே நவ்-ருஸ் ஆகும். இந்த பஹா அல்லது பேரொளி என்பது கடவுள் நாமங்களுள் ஒன்றாகும்.
இந்த நவ்-ருஸ் எனப்படும் வருடப்பிறப்பானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில், இளவேனிற் காலத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகின்றது. அஃதாவது, சூரியன் குளிர்காலத்தைக் கடந்து அதன் உச்சநிலைக்குச் சென்று, பகலும் இரவும் ஒரே அளவாக வரும், மகா விசுவதினம் எனப்படும் நாளில் கொண்டாடப்படுகின்றது. சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் அத்தருணத்திற்கு ஏற்ப நவ்-ருஸ் புத்தாண்டு நிர்ணயிக்கப்படும். பஹாய் நாள்கள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பிக்கின்றதன் காரணமாக, சூரியன், அதன் அஸ்தமனத்திற்கு முன்பாக மேஷ ராசிக்குள் பிரவேசிக்கின்றதா அல்லது அதற்கு பிறகு பிரவேசிக்கின்றதா என்பதைப் பொறுத்து நவ்-ருஸ் பண்டிகை எந்த தேதியில் நிகழும் என்பது நிர்ணயிக்கப்படும். இதையே பஹாவுல்லா, “சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் (மகா விசுவ) தினமே இவ்விருந்து (நவ்-ருஸ்) கொண்டாடப்பட வேண்டுமென விளக்குகின்றார் — இது சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நிமிடம் முன்பாக நிகழ்ந்தாலும் சரி. ஆதலால், விசுவத்தின் நேரத்தைப் பொறுத்து நவ்-ருஸ் தினம் மார்ச் 20, 21 அல்லது 22-இல் நிகழலாம்.
நவ்-ருஸ் என்பதன் அர்த்தம் ‘புதிய நாள்’ என்பதாகும். இது ஆரம்பத்தில் பாரசீக மதமான பார்சி (Zoroastrianism) மதத்தில் அதன் மூலாதாரத்தை கொண்டிருப்பதன் காரணமாக இரானிய மக்களின் கலாச்சாரத்தில் அது வேரூன்றியுள்ளது. நவ்-ருஸ் பண்டிகை சில இடங்களில் சமய சார்பற்ற முறையிலும், சில இடங்களில் சமயம் சார்ந்த ஒரு பண்டிகையாகவும் கொண்டாடப்படுகின்றது. உதாரணத்திற்கு, பஹாய்களுக்கும், பார்ஸி மதத்தினருக்கும், சில இஸ்லாமிய பிரிவினருக்கும் நவ்-ருஸ் திருநாள் சமயம் சார்ந்த ஒரு பண்டிகையாகும். இவர்கள் தவிர்த்து, நவ்-ருஸ் பண்டிகை கடந்த 3,000 வருடங்களாக மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, கௌகசஸ், கறுங்கடல் பகுதி, பால்க்கன் பகுதிகள், தென் ஆசியா போன்ற இடங்களில் சமய சார்பற்ற முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பஹாய்கள் நவ்-ருஸ் தினத்திற்கு முன்பாக ஒரு பஹாய் மாதத்திற்கு (19 நாள்கள்) சூரியோதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை உண்ணா நோன்பிருப்பர். பஹாய்கள் இந்த உண்ணா நோன்பிருத்தலை, ஆன்மாவை பக்குவப்படுத்தும் ஒரு செயலாக மேற்கொள்கின்றனர். அஃதாவது, உணவு உண்ணாமல் இருப்பதை அன்மீக நோன்புக்கான ஒரு புறச் சின்னமாகக் கருதுகின்றனர். உடலியல் இச்சைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, தாங்கள் ஆன்மீகப் பிறவிகள் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு, கடவுளின் அண்மையை அடைய முயல்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களை வரும் ஒரு வருடகாலத்திற்குத் ஆயத்தமாக்கிக்கொள்கின்றனர்.