“நாம் அனைவரும் ஒரே குடும்பம்”: மதத் தலைவர்கள் அமைதிக்கான ஓர் அடித்தலமாக தார்மீகக் கல்வியை முன்னிலைப்படுத்துகின்றனர்


23 மே 2022

ஹைஃபா, இஸ்ரேல் – இஸ்ரேலில் உள்ள மதத் தலைவர்கள் மன்றத்தின் 12-வது ஆண்டு மாநாடு சமீபத்தில் பஹாய் உலக மையத்தில் நடத்தப்பட்டது, இதில் பல்வேறு சமய சமூகங்களின் தலைவர்கள், உள்துறை அமைச்சர், ஹைஃபா நகர தலைவர் மற்ற அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 115 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தார்மீகக் கொள்கைகளைப் பேணுதல் மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடும் திறனை வளர்ப்பதில் கல்வியின் முக்கியப் பங்கை இக்கூட்டத்தில் நடந்த விவாதங்கள் எடுத்துக்காட்டின.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், ஒரு வீடியோ செய்தியின் வழி கூட்டத்தில் உரையாற்றினார், மதங்களுக்கிடையில் பகிரப்பட்ட விழுமியங்களை முன்னிலைப்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “ஒற்றுமை என்பது சீர்மை அல்ல, அது நமக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மங்கச் செய்வது என்பதல்ல, மாறாக, பாரம்பரிய மற்றும் கலாச்சார வேறுபாடுகள் தான் நம்மை மிகவும் சிறப்புறச் செய்கின்றன.”

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வீடியோ செய்தியில் கூட்டத்தில் உரையாற்றினார், மதங்களுக்கிடையில் பகிரப்பட்ட விழுமியங்களை முன்னிலைப்படுத்தினார் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஹைஃபாவில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அரியன் சபேட் தனது தொடக்கக் கருத்துக்களில் கூறியது: “மனிதகுலத்தின் உன்னதத்தை உறுதிப்படுத்தவும், அதன் தன்மையை செம்மைப்படுத்தவும், நிலையான மற்றும் செழிப்பான நாகரிகத்தை உருவாக்குவதற்கு அர்த்தத்தையும் ஊக்கத்தையும் வழங்குவதில் மதத்தின் தனித்துவமான சக்தியை மிகைப்படுத்தவியலாது.”

அவர் மேலும் கூறியதாவது: “இந்த மாநாடு நம் அனைவருக்கும், சமயங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகத்தின் தலைவர்கள் எனும் முறையில் மனிதகுலம் ஒரே மனித குடும்பத்தின் உறுப்பினர்களாக ஒன்றிணைவதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அழைப்பாக அமையட்டும்.”

மதத் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் அமைதி, நல்லுறவு மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான கூட்டு முயற்சிகளைப் பற்றி விவாதிக்க ஒன்றுகூடினர்.

உள்துறை அமைச்சரான, அய்லெட் ஷாகெட் கூட்டத்திற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்: “இந்த மாநாடு மரியாதை மற்றும் பரஸ்பரம், குறிப்பாக வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு நடவடிக்கைக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.”

ஹைஃபா மேயர், ஐனாட் கலிஷ்-ரோடெம், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த ஹைஃபா நகரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து பேசினார். “இங்கே ஹைஃபாவில், நாங்கள் ஒன்றாக வாழ்வதை மட்டும் நம்பியிருக்கவில்லை, மாறாக நாங்கள் அனைவரும் ஒரே சமூகமாக, ஒன்றாக வாழ்கிறோம்.”

மற்றொரு பங்கேற்பாளரான முஸ்லீம் மதகுருமார்கள் சங்கத்தின் தலைவர் ஷேக் நாதர் ஹெய்ப் கூறினார்: “…அன்புடனும் எதிர்காலத்தை நோக்கிய புதிய பார்வையுடனும்… எப்படி மீண்டும் ஒன்றாக இணைவது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்…”

மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு, ஆக்கப்பூர்வமான உரையாடல், ஒற்றுமையை மேம்படுத்துவதில் கல்வியின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்கள் குறித்து ஆராய்ந்தன.

பள்ளிகளிலும் பிற சமூகத் தளங்களிலும் தங்களிடையே கூடுதல் ஒத்துழைப்பு அவர்களின் ஒற்றுமையையும் அமைதிக்கான அர்ப்பணிப்பையும் குறிப்பாக இளைஞர்களுக்கு வெளிப்படுத்தும் என்று மதத் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவியது.

இஸ்ரேலிய தலைமை ரபினேட் கவுன்சிலின் உறுப்பினர் ரப்பி சிம்ஹா வெயிஸ், இந்த உணர்வை எதிரொலித்தார்: பஹாய் உலக மையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பன்முகத்தன்மை ஒரு நம்பிக்கையான எதிர்காலத்திற்கான பார்வையை அளிக்கிறது என்று கூறினார். “ஒன்றாக வாழ்வது சாத்தியம் என்பதை [அவர்கள்] எங்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள்.”

அவர் மேலும் கூறியதாவது: “நாம் அனைவரும் ஒரே குடும்பம்… இதைத்தான் இன்றைய இளைஞர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1596/