“குடும்பம் மாற்றத்திற்கான விதைப்பாத்தி”: இந்தியாவில் ஒரு புதிய சமத்துவ கலாச்சாரத்தைப் பேணுதல்


1 ஜூன் 2022

புது டில்லி, 1 ஜூன் 2022, (BWNS) – ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும் என்பது நீதியின் தேவையாகும். எவ்வாறாயினும், உண்மையான சமத்துவத்தை அடைவது கடினம், மற்றும் மனித முயற்சியின் அனைத்து பகுதிகளிலும் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களின் பங்கேற்பைத் தடுக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும். பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் என்னும் உலகளாவிய கொள்கையை அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு குடும்பம் என இந்தியாவின் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகம் கூறுகிறது.

“சமூகத்தின் முன்னேற்றத்திற்குக் குடும்ப வாழ்க்கையை வலுப்படுத்துவது அவசியம்,” என பொது விவகார அலுவலகத்தின் நிலாக்ஷி ராஜ்கோவா பஹாய் செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த சொல்லாடலுக்கு பொருத்தமானவை என அலுவலகம் பார்க்கும் நுண்ணறிவு மற்றும் அனுபவங்கள் பற்றி கூறுகிறார். .

பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் என்ற ஆன்மீகக் கோட்பாட்டின் அடிப்படையில் குடும்பம் எவ்வாறு மறுபரிசீலனை செய்ய முடியும் என்பதை ஆராய்வதற்காக சமீபத்தில் இந்தியாவில் பஹாய் பொது விவகார அலுவலகம் நடத்திய ஆய்வரங்கில் குழு உறுப்பினர்களை இங்கே காணலாம்.

சமத்துவத்தை வளர்ப்பதற்கான ஒரு சமூகத் தளமாக குடும்பத்தை மறுபரிசீலனை செய்தல்

திருமதி. ராஜ்கோவா, இந்தச் சொற்பொழிவில் சமீப வருடங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள உரையாடல்களுள் சில, பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பவர்கள் எனும் முறையில் ஆண்களின் பங்கு குறித்தது என விளக்குகிறார்.

“இந்த உரையாடல்கள் ஓர் அடிப்படை சமூக ஸ்தாபனமாக அடிக்கடி குடும்பத்தையே சுற்றிவருகின்றன. அங்கு பெண்கள் மற்றும் ஆண்களின் பங்கு பற்றிய கருத்துகள் கற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன,” என அவர் கூறுகிறார்.

செய்திச் சேவையுடன் பேசிய பொது விவகார அலுவலகத்தின் மற்றொரு உறுப்பினரான கார்மல் திரிப்பதி, உலகில் உள்ள பல ஸ்தாபனங்களைப் போலவே குடும்பம் என்னும் ஸ்தாபனமும் நெருக்கடி நிலையில் உள்ளது என கூறுகிறார். “ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய மரபுவழி கருத்துக்கள் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றத்தின் சக்திகளால் அதிகரித்த முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வழக்கற்றுப் போகின்றன,” என அவர் கூறுகிறார்.

திருமதி. ராஜ்கோவா மேலும் கூறுகையில், நீடித்த மாற்றத்திற்கு குடும்பத்திற்குள் ஊக்குவிக்கப்படும் கண்ணோட்டங்கள் மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் மட்டும் தேவைப்படாது, பொது வாழ்வில் பெண்களின் முழுமையான மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பைத் தடுக்கும் சமூகத்தின் கட்டமைப்பை மாற்றுவதற்கான முறையான மற்றும் நீடித்த முயற்சிகளும் தேவைப்படும்.

பெருந்தொற்றின் போது, இந்தியா முழுவதும் பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பல குடும்பங்கள் கலந்தாலோசனை, பிரார்த்தனை மற்றும் அண்டை குடும்பங்களுடன் ஆழ்ந்த விவாதம் செய்வதற்கான வழிகளைக் கண்டறிந்து, தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பார்த்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

“பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் என்பது வெறுமனே அடையப்பட வேண்டிய ஒரு குறிக்கோள் அல்ல, மாறாக மனித இயல்பைப் பற்றிய உண்மையை ஒப்புக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்னும் திடநம்பிக்கையில் குடும்பத்திலும் வாழ்க்கையின் பிற துறைகளிலும் ஏற்படும் மாற்றங்கள் அடித்தளமாக இருக்க வேண்டும்.

“ஆன்மாவுக்கு பாலினம் இல்லை. நம்மை மனிதர்களாக்குவதன் சாராம்சம் ‘ஆண்’ அல்லது ‘பெண்’ அல்ல,” என அவர் கூறுகிறார்.

கல்வி மூலம் குழந்தைகளின் தார்மீக அடித்தளத்தை வலுப்படுத்தல்

இந்தியாவில் பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் பெறப்பட்ட அனுபவங்களிலின் நுண்ணறிவுகள், குழந்தைகளின் தார்மீக அடித்தளங்களை வலுப்படுத்துவதற்குக் குடும்பச் சூழல் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என கூறுகின்றன.

“வாய்மை, கருணை, தயை, தன்னலமின்மை மற்றும் நீதி போன்ற ஆன்மீக குணங்களைக் குழந்தைகள் வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக குடும்பம் உள்ளது” என்கிறார் திருமதி ராஜ்கோவா. “ஆனால் அதே நேரத்தில், பிற்காலத்தில் இளைஞர்களாகவும் பெரியவர்களாகவும் அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களின் சமூக பரஸ்பர தொடர்புகள் மீது செல்வாக்குச் செலுத்தும் தீங்கு விளைவிக்கும் அணுகுமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் குடும்பத்திலேயே அவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.”

திருமதி. ராஜ்கோவா, குழந்தைகளில்தான் எதிர்காலத்திற்கான உறுதிமொழி இருப்பதாகவும், அதனால்தான் குழந்தைகளுக்கான பஹாய் கல்வித் திட்டங்கள் அத்தகைய ஆன்மீகப் பண்புகளைப் பெறுவதை வலியுறுத்துகின்றன எனவும் விளக்குகிறார்.

மானிடத்தின் இன்றியமையாத ஒருமைப்பாடு, சமூகத்திற்கான சேவை, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் அவர்களின் உடனடி மற்றும் விரிவான குடும்ப உறுப்பினர்களுடனும் தங்கள் சுற்றுப்புறங்களிலும் பள்ளிகளிலும் பழகக்கூடிய பிற நபர்களுடனான அவர்களின் அனைத்து தொடர்புகளிலும் கலந்தாலோசனை போன்ற கொள்கைகளைப் பயன்படுத்துவதற்கான திறனையும் இந்தக் கல்வித் திட்டங்கள் பேணுகின்றன என அவர் கூறுகிறார். .

திருமதி ராஜ்கோவா தமது கருத்துக்களில், சமத்துவ கலாச்சாரத்தை வளர்ப்பதில், குழந்தைகளுக்கு மட்டுமல்ல, முழு குடும்பத்திற்கும் தார்மீக கல்வியின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறார். சமீபத்தில் பொது விவகார அலுவலகம் நடத்திய ஆய்வரங்கில் ஒரு பங்கேற்பாளர் தெரிவித்த கருத்துக்களை அவர் குறிப்பிடுகிறார். சமூக நீதியை ஊக்குவிக்கும் ஒரு பொது சமூக அமைப்பான ‘யூத் கி ஆவாஸின்’ (Youth ki Awaaz) நிறுவனரான அன்ஷுல் திவாரி, பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலங்களில் வகுப்புகள் இணையத்திற்கு நகர்ந்தபோது வெளிச்சத்திற்கு வந்த பெண்கள் கல்வியின் டிஜிட்டல் (கணிணி) இடைவெளி பற்றி விவரித்தார்.

பஹாய் கல்வித் திட்டங்களின் பங்கேற்பாளர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மானிடத்தின் இன்றியமையாத ஒருமைப்பாடு, சமூக சேவை, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் போன்ற கொள்கைகளை, அத்துடன் அவர்கள் தங்கள் அண்டைப்புறங்களிலும் பள்ளிகளிலும் பழகக்கூடிய பிற நபர்கள், நீட்டிக்கப்பட்ட குடும்பங்கள், பிற சமூக உறுப்பினர்கள் ஆகியோருடனான அவர்களின் அனைத்து தொடர்புகளிலும் கலந்தாலோசனையை பயன்படுத்துவதற்கான திறனை வளர்க்கிறார்கள்.

ஒரே ஒரு டிஜிட்டல் சாதனம் மட்டுமே இருக்கும் பல வீடுகளில், பெண்கள் அச்சாதனத்தைப் பயன்படுத்துவது ரேஷன் செய்யப்பட்டது. அதே சமயம் உடன்பிறந்த ஆண்கள் அவற்றை அணுகுவதற்குத் தடை இல்லை என திரு. திவாரி விளக்கினார். “நாங்கள் நாடு முழுவதும் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 10,000 இளைஞர்களிடம் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டோம்,” என அவர் கூறினார். பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுக்கெடுப்பின் முழு முடிவுகளும் ஒத்த சீருடன் இருந்தன: 70% இளம் பெண்கள் தங்கள் சகோதரர்கள் தொடர்பாக தொலைபேசிகள் மற்றும் கணினிகளில் சமமற்ற அணுகல் குறித்து அறிவித்தனர்.

கலந்தாலோசனை மூலம் நியாயமான உறவுகளை ஏற்படுத்துதல்

சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான அடித்தட்டில் உள்ள இந்திய பஹாய்களின் முயற்சிகளிலிருந்து பெறப்பட்ட மற்றொரு நுண்ணறிவு, ஒரு குடும்பம் எந்த அளவுக்கு கலந்தாலோசனைக் கொள்கையைப் பயன்படுத்துகிறதோ, அவ்வளவு அதிகமாக உள்ள உறவுகள் குடும்பம் சமமாக மாறும், என பஹாய் பொது விவகார அலுவலகத்தின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

திருமதி ராஜ்கோவா கூறுகிறார்: “குடும்பத்தில் முடிவெடுப்பது தன்னிச்சையான மற்றும் சர்வாதிகார அதிகாரத்தின் விளைவாக இருக்கக்கூடாது எனும் போது, கூட்டு முடிவுகளை எடுப்பதற்குக் குடும்ப உறுப்பினர்கள் அன்பாகவும், அக்கறையுடனும், வெளிப்படையாகவும் கலந்தாலோசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.”

திருமதி திரிபாதி, பொது விவகார அலுவலகம் நடத்திய கருத்தரங்கை நினைவுகூர்ந்தார். அதில் கலந்தாலோசனைக்கு மிகப்பெரிய தடையாக ஆண் ஆதிக்கத்தின் கலாச்சார விதிமுறைகள் அடையாளம் காணப்பட்டன.

பஹாய் பொது விவகார அலுவலகம் சமீபத்தில் நடத்திய ஆய்வரங்கில் ஆராயப்பட்ட சில கருப்பொருள்கள் பின்வருமாறு: பேணி வளர்த்தல் மற்றும் கவனிப்பு வழங்குதல் மற்றும் கலந்தாலோசனையின் செயல்பாடுகளை முடிவெடுப்பதற்கான அடிப்படையாகப் பகிர்ந்துகொள்வது. மேல் வலது: பொது விவகார அலுவலகத்தின் கார்மல் திரிபாதி. கீழே: யூத் கி ஆவாஸின் நிறுவனர் அன்ஷுல் திவாரி.

திருமதி திரிபாதி மேலும் கூறுகையில், குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் திறந்த மனதுடனும் தொடர்பு கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும், கலந்தாலோசனைக்குத் தேவையான அன்பு மற்றும் நல்லிணக்கம், பணிவு, மரியாதை, பொறுமை, நிதானம் மற்றும் உண்மையைத் தேடுவதற்கான ஆவல் போன்ற ஆன்மீக குணங்களின் முழு அளவின் பயனைப் பெற வேண்டும்.

சமாதானம் சமத்துவத்தைச் சார்ந்துள்ளது

இந்தியாவில் உள்ள பஹாய் பொது விவகார அலுவலகத்தின் உறுப்பினர்கள் கூறுவதாவது: சமத்துவத்தால் வகைப்படுத்தப்படும் ஒரு குடும்பம் ஆதிக்கம் மற்றும் சமத்துவமின்மையை வலுப்படுத்தும் பழங்கால மாதிரிகளைக் கடன் வாங்குவதால் உருவாகாது என்பது தெள்ளத்தெளிவாகும்.

திருமதி. ராஜ்கோவா கூறுகையில், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளில் உலகில் அமைதி என்பது பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தின் ஆன்மீகக் கொள்கையை உணர்ந்துகொள்வதைச் சார்ந்துள்ளது என்பது ஒரு முக்கிய கருத்தாகும். இந்தக் கட்டத்தில், 1919-ஆம் ஆண்டு ‘த ஹேக்கில்’ உள்ள நீடித்த அமைதிக்கான மத்திய அமைப்பிற்கு ‘அப்துல்-பஹா எழுதிய செய்தியிலிருந்து அவர் மேற்கோள் காட்டுகிறார். இது ஆண்களையும் பெண்களையும் ஒரு பறவையின் இரண்டு இறக்கைகளுக்கு ஒப்பிடுகிறது: “இரண்டு இறக்கைகளும் சமமாக இருக்கும் வரைதான் பறவை பறக்க முடியும்,” என அப்துல் பஹா எழுதுகிறார். “ஓர் இறக்கை பலவீனமாக இருந்தால், பறத்தல் சாத்தியமற்றது. நற்பண்புகள் மற்றும் பரிபூரணங்களைப் பெறுவதில் பெண்களின் உலகம் ஆண்களின் உலகத்திற்கு சமமாக மாறும் வரை, எவ்வாறு இருக்க வேண்டுமோ அத்தகைய வெற்றியையும் செழிப்பும் அடையப்பட முடியாது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1597/