
(விவேகானந்தர் கூறிய கதை)
அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் தயாராக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசவைக்குத் துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது பணியாளர்களின் நேர்மை குறித்துப் பெருமையாகக் கூறினான் அரசன்.
ஆனால் அந்தத் துறவியோ அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். அதன்படி ஒரு சிறிய சோதனை வைத்தார் துறவி. அவர், அரசனின் ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க தாம் ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பசும்பால் தேவைப்படுகிறது எனவும், அரசனது பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் பெரிய அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அரசன் புன்னகையுடன், இதுதானா உங்கள் சோதனை என சந்தேகத்துடன் கேட்டான். பின்னர், அரசன் தனது பணியாளர்கள் அனைவரையும் அழைத்து, துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூறினான். அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்களின் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். அன்று இரவு அவர்கள் அனைவரும் அரசன் கூறியவாறு ஒவ்வொருவரும் பால் சேமிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் தங்கள் பங்கு பாலை ஊற்றிச் சென்றனர்.
மறுநாள் காலையில், அண்டாவில் எவ்வளவு பால் சேர்ந்துள்ளது என்பதை அரசன் வந்து பார்த்தபோது அந்த அண்டா நிறைய வெறும் தண்ணீர் இருப்பதைக் கண்டு அரசன் அதிர்ச்சியடைந்தான். அரசன் பணியாளர்கள் அனைவரையும் அழைத்து என்ன நடந்தது என விசாரித்தான். திருதிருவென விழித்த சேவகர்கள் ஒவ்வொருவரும் பால் ஊற்றும் போது, தான் ஒருவன் மட்டும் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றிச் சென்றனர் என்பது விசாரிப்பின் போது தெரியவந்தது.
இந்த உதாரணக் கதையைக் கூறி உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டினார் சுவாமி விவேகானந்தர். அது போலவே நாமும் நமது பங்கு வேலையை சுயநலத்துடன் செய்யால் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குத் தெரியாது என நினைத்து எல்லாருமே அதே தவறை செய்திடக் கூடாது.