
இச்செய்தி குறித்த கூடுதல் படங்களுக்கு, https://news.bahai.org/story/1600/ செல்லவும்
ஓகுஸ், அஜர்பைஜான், 24 ஜூன் 2022, (BWNS) – அஜர்பைஜானில் சகவாழ்வைப் பேணுவதற்கான முதல் தேசிய மாநாடு சனிக்கிழமையன்று அரசாங்கத்தின் மத சங்கங்களுக்கான மாநில குழுவால் நடத்தப்பட்டது, அதிகாரிகள், பல்வேறு மத சமூகங்களின் பிரதிநிதிகள், பொது சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்களை இம்மாநாடு ஒன்றுகூட்டியது.
வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பஹாய் கொள்கை பற்றி பல்வேறு சமூக நடவடிக்கையாளகர்களிடையே கலந்துரையாடல்கள் நடந்த ஆறு நாள்களுக்குப் பிறகு மாநிலக் குழுவால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அஸர்பைஜான் சமூகத்தில் உள்ளடங்கலான ஒரு தேசிய அடையாளத்தைப் பற்றிய கேள்விகளை ஆராய்வதில் அதிகரித்து வரும் ஆர்வத்திற்கு இந்த கூட்டம் ஒரு விடையிறுப்பாக இருந்தது.
ஓகுஸ் மாவட்ட நிர்வாக ஆணையத்தின் தலைவர் எய்வாஸ் குருபானொவ் தொடக்கக் கருத்துகளை வழங்கினார், பன்முக கலாச்சாரத்திற்கான ஒரு நீண்ட பாரம்பரியத்தை அஸர்பைஜான் கொண்டுள்ளது எனவும், சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கு நாட்டில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் கூறினார்.
அஜர்பைஜானின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ரமஸான் அஸ்கர்லி, ஒரு பிரதான அமர்வின் போது இந்த யோசனையை விரிவாகக் கூறினார்: “பன்முக கலாச்சாரம் ஓர் இயக்கமற்ற யதார்த்தத்தைப் பிரதிநிதிக்கவில்லை. இது ஆற்றல்மிகு, உள்ளடக்கிய மற்றும் மாறிவரும் உலகின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒன்றைக் குறிக்கிறது.”
அடையாள நெருக்கடியே உலக மக்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான போராட்டங்களுக்கு அடிப்படைக் காரணம் என திரு.அஸ்கர்லி விளக்கினார். “வெவ்வேறு நாடுகளும் குழுக்களும் உலகில் அவற்றிற்கான இடம் எது என்பதைக் கண்டுபிடிக்க முயல்கின்றன, பொதுவான அடையாளம் இல்லாத நிலையில், அவர்களின் உறவுகள் நெருக்கடிக்கு ஆளாகின்றன.”
அவருடைய கருத்துகள் ஒரே நேரத்தில் ஒற்றுமையைப் பேணும் மற்றும் பன்முகத்தன்மையின் இன்றியமையா கருத்தாக்கத்தை உள்ளடக்கிய எண்ணங்களின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.
“நாம் அனைவரும் ஒரே தோட்டத்தின் மலர்கள் போன்றவர்கள்,” என அவர் கூறினார், “எல்லா பூக்களும் ஒரே நிறமாகவும், வடிவமாகவும் இருந்தால், அந்தத் தோட்டம் வசீகரிக்காது, நிறம், வடிவம், வாசனை ஆகியவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் அதன் அழகு மெருகூட்டப்படுகிறது.
“இதன் அடிப்படையில் நாம் அனைவரும் நம்மைப் பார்த்தால், நம் உறவுகள் மாறும். தோட்டத்தின் மலர்கள் ஏன் ஒன்றுக்கொன்று முரண்பட வேண்டும்?”
மாநாட்டின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் தங்கள் விவாதங்களைத் தொடரவும், தங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றாகப் பிரார்த்தனை செய்யவும், ஒவ்வொரு மதத்துடனும் தொடர்புடைய வெவ்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு கூட்டாகச் சென்றனர்.
மாநாட்டின் முடிவில், மற்றொரு பங்கேற்பாளரும் ஓகுஸ் பஹாய்களின் பிரதிநிதியுமான அல்மாஸ் அப்துரஹ்மானோவா, இவ்வாறு கூறினார்: “அஸர்பைஜானில் சகவாழ்வு மதிக்கப்படுகிறது என்றாலும், பல்வேறு மதத் தலங்களுக்கான குழு விஜயம் பல தடைகளைத் தகர்த்து நம்பிக்கையை உருவாக்கிட குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தது.”
பரந்த தேசிய கவனத்தைப் பெற்ற இந்த மாநாடு, உள்ளடங்கலான அடையாளத்தை வளர்ப்பது தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கான எதிர்கால கருத்தரங்குகளுக்குப் பங்கேற்பாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1600/