

BIC நியூயார்க், 11 ஜூலை 2022, (BWNS) – சிறுபான்மை பஹாய் சமயத்தினரைத் துன்புறுத்துவதற்கான ஈரானிய அரசாங்கத்தின் திட்டமிட்ட பிரச்சாரம் கடந்த வாரம் நாடு முழுவதும் குறைந்தது 18 பஹாய் குடிமக்களைக் கைது செய்தல், நீதிமன்ற விசாரணை அல்லது சிறையில் அடைத்தல் ஆகியவற்றின் மூலம் மீண்டும் முடுக்கிவிடப்பட்டது. இது ஜூன் மாதத்திலிருந்து மொத்தம் 44 பேரை உள்ளடக்கியுள்ளது. இதற்கிடையில், நூற்றுக்கணக்கானவர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட அல்லது சிறை செல்வதற்குக் காத்திருக்கின்றனர்.
பஹாய் சர்வதேச சமூகம், சமீபத்திய வாரங்களில் அதிகரித்து வரும் கைதுகள் மற்றும் சிறைப்படுத்துதல்களில் ஒரு கவலையளிக்கும் புதிய வளர்ச்சி காணப்படுவதாக நம்புகிறது மற்றும் பஹாய் சமூகத்தை சிறையில் அடைக்கும் அல்லது துன்புறுத்துவதற்கான தங்கள் திட்டங்களை அதிகாரிகள் அதிகரிக்கும் முறையில் செயல்படுத்துகின்றனர் என்பதையும் இது காட்டுகிறது.
கடந்த வாரம் ஷிராஸ் நகரில் மூன்று பெண்கள் புதிதாக கைது செய்யப்பட்டனர். இதில் இருபது வயதுகளின் ஆரம்பத்தில் இருவர், மற்றும் 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயும் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஷிராஸ் புலனாய்வு அலுவலகத்தின் தடுப்பு மையத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் பல்கலைக்கழக தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 2019-இல் இளம் பெண்களில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் நுழைய முயன்றார். அப்போது அவரிடம் ஒரு “முழுமையற்ற கோப்பு” இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்–விண்ணப்பித்து பல்கலைக்கழகத்தில் நுழைய மறுக்கப்பட்ட பஹாய்கள் மத்தியில் இது ஒரு பொதுவான அனுபவமாகும். 1983 கலாச்சாரப் புரட்சிக்குப் பின்னர் ஈரானில் பஹாய்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்துள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிற ஏழு பஹாய்கள் அனைவரும், கடந்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்பட்டு, முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
தெற்கு ஈரானில் உள்ள பன்டார்-இ-லெங்கேவில், அதிகாரிகள் பஹாய்களுக்குச் சொந்தமான பட்டறையை மூடுமாறு கட்டாயப்படுத்தினர் மற்றும் வேறு இரண்டு மூக்குக்கண்ணாடி வணிகங்களுக்கு வணிக உரிமங்களை மறுத்தனர். இந்தக் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் மற்றும் சமூக உறுப்பினர்களின் பொருளாதார வாய்ப்பு மேலும் நெருக்கதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஈரான் பகுதிகளில் உள்ள சனந்தாஜ் மற்றும் பல சிறிய நகரங்களில், பஹாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் அவர்களின் சமயம் காரணமாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.
“ஈரானில் உள்ள பஹாய்களுக்குப் புதிய கைதுகள், சிறைக்கான அழைப்பாணைகள் மற்றும் ஈரானிய அரசாங்கத்தின் பிற துன்புறுத்தல்கள் இல்லாத ஒரு வாரம் கிடையாது” என ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் சர்வதேச சமூகத்தின் முதன்மைப் பிரதிநிதி பானி டுகல் கூறினார். “ஈரானில் உள்ள பஹாய்கள் பல வருடங்களில் காணப்படாத மிக மோசமான ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். நாங்கள் எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றோம்.”
“முஸ்லிம் சமூகத்தில் அறிவுசார் மற்றும் கருத்தியல் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக” ஒன்றுகூடுதல் மற்றும் கூட்டுச்சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் ஷிராஸில் 26 பஹாய்களுக்கு எதிராக சிறை மற்றும் நாடுகடத்தல் தண்டனைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சமீபத்திய நடவடிக்கைகள் வந்துள்ளன. உண்மையில், உள்ளூர் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் அம்மண்டலத்தின் தண்ணீர் நெருக்கடியின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கும் பஹாய்கள் ஷிராஸ் நகரில் அங்காங்கே கூடிவருகின்றனர். இந்தத் தண்டனைகளின் விளைவாக பல இளம் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஷிராஸில், வேறு 40 பஹாய்கள் ஒரு புரட்சி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டனர், அங்கு ஓர் அதிகாரி அந்தச் சமூகத்தை நகரத்திலிருந்து ‘வேருடன் பிடுங்குவோம்’ என அச்சுறுத்தினார்.
பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான மாஸியார் பஹாரி, 2020 எல்லி வீசல் விருது மற்றும் 2009 Oxfam Novib/PEN விருதின் கருத்துச் சுதந்திரத்துக்கான விருது மற்றும் ஈரானில் பஹாய்களைப் பற்றி பல திரைப்படங்களைத் தயாரித்தவர். இவர் நடந்து வரும் கைதுகள் ஈரானிய அரசாங்கம் அந்நாட்டில் பஹாய் சமூகத்தை “புதைக்க” முயல்வதை காட்டுகின்றது என கூறினார்.
“உலகம் உங்களை மறந்துவிட வேண்டும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை இழக்கச் செய்யவதும் ஈரானிய அதிகாரிகளின் விருப்பம். அதனால்தான் உங்களை சிறையில் அடைக்கிறார்கள்” என பஹாரி கூறினார். “கடந்த 40 ஆண்டுகளாக ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான பஹாய்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது பஹாய்களை புதைகுழியில் தள்ளுவதற்கான ஈரான் நாட்டின் திட்டத்திற்குச் சாட்சியமளிக்கிறது. தற்போது இந்த நிலைமை தீவிரத்துடன் மோசமாகி வருவதாகத் தெரிகிறது. சர்வதேச சமூகம் ஈரானிய அரசாங்கத்திற்கு இதுகுறித்து அழுத்தம் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.
இந்த மாதம் பஹாய்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள் பின்வருமாறு:
28 ஜூன் 2022 அன்று, ஷிராஸில் வசிக்கும் பஹாய் திருமதி ஜிலா ஷரஃபி நஸ்ரபாடி, பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார், அவர்கள் அவரது வீட்டைச் சோதனை செய்து ஏராளமான பொருட்களைப் பறிமுதல் செய்தனர், மேலும் ஷிராஸ் புலனாய்வு அலுவலகத்தின் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். திருமதி நஸ்ரபாடிக்கு வயது 41, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி, 20 வயதிற்குட்பட்ட திருமதி ஷகாயேக் கானேஜாரின் மற்றும் திருமதி நெகர் இகானி இருவரும் ஷிராஸில் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தெரியவில்லை மற்றும் அவர்கள் ஷிராஸ் புலனாய்வு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
20 ஜூன் 2022 அன்று, திரு. மொயின் மிசாகி, திரு. மெஹ்ரான் மொசல்லா நெஜாத், மற்றும் திருமதி. நெகரே காதேரி மற்றும் திருமதி. ஹயீதே ஃபூரூட்டன் ஆகியோர் ஷிராஸில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டனர்.
ஜூன் 19, 2022 அன்று, திரு. சைத் அபேடி, திரு. வஹித் டானா, மற்றும் முதல் பெயர் தெரியாத திரு. சலேஹி ஆகியோர் ஷிராஸில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டனர்.
18 ஜூன் 2022 அன்று, தெஹ்ரானைச் சேர்ந்த திரு. ஃபார்டின் நடாபியன், அவரது தண்டனையை அனுபவிக்க எவின் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
17 ஜூன் 2022 அன்று, திருமதி ஹைதே ராம் தனது தண்டனையை அனுபவிக்க ஷிராஸில் உள்ள அடிலாபாத் சிறைக்கு மாற்றப்பட்டார். மற்ற ஐந்து பஹாய்கள், திரு. போர்ஹான் எஸ்மாயிலி, திருமதி. மரியம் பஷீர், திருமதி. ஃபரானாக் ஷேக்கி, திருமதி. மினு பஷீர் மற்றும் திருமதி. டோர்னா இஸ்மாயிலி ஆகியோர் திருமதி ராம் மீதான வழக்குடன் சேர்த்து இதற்கு முன்னர் மொத்தம் 64 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர்களின் தண்டனையை அனுபவிக்க அழைக்கப்பட்டனர். இந்த வழக்குகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன.
15 ஜூன் 2022 அன்று, குழந்தைக் கல்வியில் நிபுணரான மிஸ் சமின் எஹ்சானி கைது செய்யப்பட்டு, அவரது தண்டனையை அனுபவிக்க எவின் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஈரானின் மிகப்பெரிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரான பஹாய்கள், 1979 இஸ்லாமியப் புரட்சியிலிருந்து ஈரானில் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். 1991 இல் ஈரானின் மூத்த தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் இரகசிய குறிப்பேடு, பஹாய் சமூகத்தின் “முன்னேற்றம் மற்றும் மேம்பாடு” அவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து தடைசெய்து, வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான அவர்களின் திறனை சீர்குலைப்பதன் மூலம் மற்றும் பிற பாரபட்சமான வழிமுறைகள் மூலம் தடுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1603/