

BIC (பஹாய் அனைத்துலக சமூகம் பி.ஐ.சி.) ஜெனீவா, 1 ஆகஸ்ட் 2022, (BWNS) – ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் ஈரான் முழுவதும் 52 பஹாய்களின் வீடுகள் மற்றும் வணிகங்கள் மீதான சோதனைகளை நியாயப்படுத்தும் முயற்சியாகவும், 13 தனிநபர்கள் கைது செய்யப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்டதை நியாயப்படுத்தும் முயற்சியாகவும், துன்புறுத்தப்பட்ட பஹாய் மத சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு திகிலூட்டும் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.
உளவுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைகள் பற்றி ஒரு சம்பிரதாயமான அறிக்கையை வெளியிட்டுள்ளது—இது பல வாரங்களாக பஹாய்களின் மீது தொடுக்கப்பட்ட அழுத்தத்தை அதிகரித்த பின்னர் வெளியிடப்பட்டுள்ளது—கைதுகள் “பஹாய் உளவு [அரசியல்] கட்சியின்” உறுப்பினர்களுக்கு எதிரானவை எனவும், கைது செய்யப்பட்டவர்கள் “தாங்களே நிர்மாணித்துள்ள பஹாய் காலனித்துவ போதனைகளைப் பரப்பி வருவதாகவும், மேலும் மழலையர் பள்ளிகள் உட்பட கல்விச் சூழல்களை ஊடுருவி வருவதாகவும்” அவ்வறிக்கை கூறியது. மழலையர் பள்ளிகளைப் பற்றிக் குறிப்பிடுவது, பாலர் பள்ளி ஆசிரியர்களாக இருக்கும் பல பஹாய்களை குறிவைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வெளிப்படையான சாக்குப்போக்காகும்.
பஹாய் சர்வதேச சமூகம் (BIC) இந்த அபத்தமான மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத குற்றச்சாட்டுக்களை அப்பட்டமான கட்டுக்கதைகள் என நிராகரிக்கின்றது. ஈரானிய அரசாங்கம் செய்து கொண்டிருப்பது, ஒரே நேரத்தில் அப்பட்டமான ஒடுக்குமுறையின் ஒரு செயலும், மிக மோசமான வெறுப்புப் பேச்சுக்களின் திமிர்த்தனமான உதாரணமும் ஆகும்.
பதின்மூன்று தனிநபர்கள் –அவர்களுள் மஹ்வாஷ் சபேத், ஃபரிபா கமலாபாடி மற்றும் அஃபிஃப் நயீமி ஆகியோர் முன்பு சமூக தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் மற்றும் மனசாட்சி சார்ந்த கைதிகள் ஒவ்வொருவரும் ஒரு தசாப்தத்தை சிறையில் கழித்தனர்—இந்த சோதனைகளின் போது கைது செய்யப்பட்டனர். ஒருவர் எவின் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மற்ற இருவரின் இருப்பிடம் தெரியவில்லை.
“மஹ்வாஷ் சபேத், ஃபரிபா கமலாபாதி மற்றும் அஃபிஃப் நயீமி ஆகியோர் ஈரானில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது” குறித்து நாங்கள் சீற்றமடைந்துள்ளோம் என ஐ.நா.வுக்கான பி.ஐ.சி.யின் பிரதிநிதியான டயேன் அலாயி கூறினார்.
திருமதி அலாயி மேலும் கூறியதாவது: “ஈரானின் பாதுகாப்பைக் கீழறுக்க முயலும் வெளிநாட்டு சக்திகளின் முகவர்களாக இந்த நபர்களை உளவுத்துறை அமைச்சகம் சித்தரிக்க முயற்சிப்பது மேலும் எரிச்சலூட்டுகிறது. அமைச்சின் அறிக்கை முற்றிலும் முட்டாள்தனமானது, தன்னிலேயே முரண்பாடு உடையது. மேலும் குற்றச்சாட்டுக்கள் தெளிவாகவே அபத்தமானவை மற்றும் ஆதாரமற்றவை. ஈரான் நாட்டு அதிகாரிகள் தங்கள் நாட்டின் சவால்களைக் கையாள்வதற்குப் பதிலாக, அப்பாவிகள் மீதான அவர்களின் தாக்குதல்களை வழிநடத்தி, மத வெறுப்பைத் தூண்ட முயல்கின்றனர்.
“ஈரான் அரசாங்கம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஹாய்கள் வெளிநாடுகளின் உளவாளிகள் என குற்றம் சாட்டி வருகிறது, ஆனால் அந்த நேரத்தில், நம்பகமான ஆதாரங்களின் ஒரு துளியை கூட முன்வைக்கத் தவறிவிட்டது. இப்போது அவர்கள் மழலையர் பள்ளி மற்றும் தினப்பராமரிப்பு ஆசிரியர்களைத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர் என கூறுகின்றனர்.”
சபேத், கமலாபாடி மற்றும் நயீமி ஆகியோர் ஈரானின் “யாரன்” அல்லது “நண்பர்கள்” என்று அழைக்கப்படும் ஒரு குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்: இது 2008 வரை ஈரானிய பஹாய் சமூகத்தின் முறைசாரா தலைமையாக செயல்பட்டது. அதன் ஏழு உறுப்பினர்களும் 2007 மற்றும் 2008ல் கைது செய்யப்பட்டு ஒரு தசாப்த காலத்திற்குச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரான் நாட்டின் மிகப் பெரிய முஸ்லிமல்லாத மதச் சிறுபான்மையினரான சமூகத்தின் அடிப்படை ஆன்மீக மற்றும் லௌகீகத் தேவைகளை யரான் கவனித்துக் கொண்டார். மேலும், அந்த நேரத்தில் ஈரானிய அதிகாரிகளின் அறிவு மற்றும் ஏற்புடன் அவ்வாறு செய்தார். ஆனால் அவர்களின் முதல் கைதுகளின் விளைவாக யாரான் கலைக்கப்பட்டதுடன், அது ஒருபோதும் மீண்டும் ஒன்றிணைக்கப்படவோ அல்லது மீண்டும் ஸ்தாபிக்கப்படவோ இல்லை. எனவே, அவர்கள் பஹாய் “உளவாளிக் கட்சியின்” “முக்கிய உறுப்பினர்கள்” என அழைக்கப்படுபவர்களின் ஒரு பகுதியாக இருக்கின்றனர் என உளவுத்துறை அமைச்சகத்தின் மறைமுக அறிக்கைகள் ஒவ்வொரு வகையிலும் முற்றிலும் தவறானவை.
ஷிராஸ், தெஹ்ரான், யாஸ்ட் மற்றும் போஜ்னோர்-டில் உள்ள 20 பஹாய்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, அல்லது வீட்டு சோதனைகள் மற்றும் வணிக மூடல்களுக்கு உட்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்த சோதனைகளும் தடுப்புக்காவல்களும் வந்துள்ளன, மேலும், ஈரான் முழுவதிலும் உள்ள 44 பேர் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு அல்லது சிறையில் அடைக்கப்பட்ட ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள் இந்தச் சோதனைகளும் தடுப்புக்காவல்களும் வந்துள்ளன. ஷிராஸில் இருந்த 44 பேரில் 26 பேருக்கு மொத்தம் 85 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனவே, கடந்த சில வாரங்களில் ஈரான் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பஹாய்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
தெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் இருந்த தமது தசாப்தகாலத்தில் கவிதைகளை எழுதிய மஹ்வாஷ் சபேட், அவர் சிறையில் இருந்தபோது பகிர்ந்துகொண்டும் பின்னர் “சிறைக் கவிதைகள்” என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் அவற்றை வெளியிடப்பட்டார். பின்னர், 2017-ஆம் ஆண்டில் ஒர் ஆங்கில PEN துணிச்சலுக்கான சர்வதேச எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
“2017-ஆம் ஆண்டு சர்வதேச துணிச்சல் எழுத்தாளருக்கான PEN Pinter பரிசை வென்ற மஹ்வாஷ் சபேட் ஈரானில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்னும் செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைகிறோம்” என ஆங்கில PEN இயக்குனர் டேனியல் கோர்மன் கூறினார். “நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவோம்.”
ஒரு மனோதத்துவ மேம்பாட்டினரான ஃபரிபா கமலாபாடி 2008-இல் கைது செய்யப்பட்டார்; ஒரு தசாப்த காலத்தை சிறையில் கழித்தார். 2017-ஆம் ஆண்டில் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அவரை மனசாட்சி சார்ந்த மதக் கைதியாக அங்கீகரித்து ஆதரித்தது.
2008 இல் கைது செய்யப்பட்ட தொழிலதிபரான அஃபிஃப் நயீமி, தமது 10 ஆண்டுச் சிறைத் தண்டனையின் பெரும்பகுதியை உடல்நலக் குறைவில் கழித்த போதிலும், தமக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது. அவர் முன்னாள் பஹாய் தலைமைக் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் 2018-இல் விடுவிக்கப்பட்டார்.
“இந்த பஹாய்களைத் தடுத்து வைத்திருப்பது ஈரான் நாட்டு அரசாங்கம் முழு பஹாய் சமூகத்தையும் துன்புறுத்துவதற்கான அதன் திட்டமிட்ட பிரச்சாரத்தின் அர்த்தமற்ற குரூரத்தை நிரூபிக்கிறது” என மிஸ். அலாயி கூறினார். “மஹ்வாஷ் சபேத், ஃபரிபா கமலாபாடி மற்றும் அஃபிஃப் நயேமி ஆகியோர் ஈரான் நாட்டு மீள்திறம் சார்ந்த சின்னங்கள், மனசாட்சி சார்ந்த கைதிகளெனும் முறையில் அவர்களின் தைரியத்திற்காக உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்கள்; உதவியற்ற, அமைதியான (பஹாய்) சமூகத்தைத் தாக்குவதற்கான ஈரானிய அரசாங்கத்தின் சாக்குப்போக்குகளை எவரும் நம்பப்போவதில்லை. ஆனால், இந்த இடைவிடாத மற்றும் தீவிரமடைந்து வரும் மனோததுவ போர், வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் பஹாய்களை மேலும் துன்புறுத்துவதற்கான களத்தை அமைக்கிறது.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1606/