(சாரா பெர்சிவல் – குழந்தைகளுக்கான கதைகள்)
(அப்துல் பஹாவுக்கு 9 குழந்தைகள் பிறந்தனர், 7 பெண்களும் 2 ஆண்களும். இந்த 9 பிள்ளைகளில் 4 பேர் மட்டுமே முதுமை வரை வாழ்ந்திருந்தனர். சிறு வயதிலேயே இறந்தோரில் ருஹாங்கிஸ் என்னும் பெண் பிள்ளையும் இருந்தார். இந்தக் கதை அவரைப் பற்றியது.)
அப்துல்-பஹாவுக்கும் முனிரி ஃகானுமுக்கும் பல பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்த போது, ஐயோ பாவம், இதுவும் பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டதே, ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா என்றனர் அங்கிருந்தோர். அதை கேட்ட பஹாவுல்லா, அவர்களைக் கண்டித்து, அவர்கள் அவ்விதம் பேசக்கூடாது என அறிவுரை கூறினார். தாம் இந்தக் குழந்தையை மற்ற குழந்தைகளைவிட அதிகமாக நேசிக்கப்போவதாகக் கூறினார். தமது பேத்தியான இந்தப் பெண் குழந்தையே தமது மிகுந்த பாசத்திற்குரிய பேத்தியாக இருப்பார் எனவும் கூறினார். அவள் ஆணாகப் பிறந்திருக்கக்கூடாதா என யாரும் கூறக்கூடாது என்றார். அந்தப் பெண் குழந்தையின் பெயர் ருஹாங்கிஸ். அப்பெண் குழுந்தையும் வளர்ந்தது. வளரும் போது பஹாவுல்லாவின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தது. ருஹாங்கிஸ்ஸின் அன்பார்ந்த தாத்தா பஹாவு்லலா அவள் மீது பெரும் பாசம் வைத்திருந்தார்.
ஒரு நாள் ஒரு சேவகர், அப்துல்-பஹாவை ஒரு செய்தியுடன் காண வந்தார். பஹாவுல்லா நோயுற்றிருக்கின்றார் எனவும் அவர் அப்துல்-பஹாவைக் காண விரும்புகின்றார் எனவும் தெரிவித்தார். அங்கு எல்லாரும் மிகவும் கவலையுற்றிந்தனர். பஹாவு்லலாவை தங்களால் முடிந்த அளவு சௌகர்யமாக வைத்திருக்க முயன்றனர். ஆனால் அவருக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் அதிகமாகியது. 19 நாள்கள் காய்ச்சலுக்குப் பிறகு, ஒரு நாள் அதிகாலை வேளை அவரது ஆன்மா இவ்வுலகை நீத்து ஒளியுலகில் அவரது சிருஷ்டிகர்த்தாவைச் சென்றடைந்தது.
எல்லாரும் மனமுடைந்து போயினர். உடனடியாக, ஒரு குதிரைக்காரர் பஹாவுல்லா விண்ணேற்றம் அடைந்துவிட்டார் என்பதை அறிவிக்க அக்காநகரத்திற்கு விரைந்தார். விரைவில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் புனிதமான மனிதர்களுக்கென ஓதப்படும் ஒரு பிரார்த்தனை அங்கிருந்த பள்ளிவாசல்கள் அனைத்திலும் ஒலித்தது. ‘கடவுளே வல்லவர் அவர் உயிரை வழங்குகிறார், அதை எடுத்துக்கொள்ளவும் செய்கின்றார். அவர் இறப்பதில்லை அவர் என்றென்றும் நிலையாக வாழ்கின்றார்.’ விரைவில் அருகிலும் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இந்த பிரார்த்தனை ஓதப்படும் ஒலி செவிமடுக்கப்பட்டது. அதைக் கேட்ட அனைவரும் தங்களின் மரியாதையைச் செலுத்த வந்தனர்.
அப்துல்-பஹாவின் மகள் ருஹாங்கிஸ், பஹாவுல்லாவின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். அது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் சோகம் நிறைந்த நாள்களாக இருந்தன. அப்துல்-பஹா ருஹாங்கிஸுக்கு ஆறுதல் கூறினார். ஆனால் ருஹாங்கிஸ்ஸோ, தமக்கு எதுவும் வேண்டாம், தாம் பஹாவுல்லாவுடன் இருக்கவே விரும்புவதாகக் கூறினார். தாமும், சுவர்க்கத்திற்கு செல்லும் அதே வாசல் வழியாகச் சுவர்க்கம் செல்ல விரும்புவதாகக் கூறினார்.
அவர் எல்லா நேரங்களிலும் பஹாவுல்லா இருக்கும் அந்தத் தெய்வீகமான இடத்தைப் பற்றியே பேசி வந்தார். அவர் அந்த ஒளிமிகு அழகிய இடத்தை பற்றிப் பேசி, விரைவில் அதற்கு மிகவும் அணுக்கமாகிவிட்டது போன்றிருந்தது. அடுத்த நாளே ரூஹாங்கிஸ்ஸும் நோயுற்றார். அந்த நோய் குணமாகவில்லை. அவரும் இவ்வுலகிலிருந்து மறைந்து, என்றென்றும் பஹாவுல்லாவின் அருகிலிருக்க சென்றார்.