முடியாட்சியும் குடியாட்சியும்


பஹாய் சமயத்தில் முடியாட்சி குறித்து என்ன கூறப்படுகின்றது என்பதை இக்குறுங் கட்டுரை ஆராய்கிறது.

கடந்த சில நாள்களாக, 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் ஒரு பெரும் பகுதிக்கு அரசியாக விளங்கிய 2-ஆம் எலிஸபெத் இராணியின் மரணம் ஒரு முக்கிய செய்தியாக இருக்கின்றது. சமோவா தீவின் மறைந்த மன்னராகிய மலியதோவா தனுமாஃபிலி ஒரு பஹாய் ஆவார். அதே போன்று ருமேனியாவின் கடைசியான அரசியாக இருந்த மரீ இராணியும் சமயத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். மரீ இராணி பாலஸ்தீன விஜயத்தின் போது ஷோகி எஃபெண்டியை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன, ஆனால் இறுதியில் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் அச்சந்திப்பு நடைபெறாமலேயே போயிற்று. அரசியார் அதனால் மிகவும் மனமுடைந்து போனார்.

மரீ இராணியார் விக்டோரியா மகாராணியின் மகன் ஒருவர் ரஷ்யாவின் 2-ஆம் அலெக்ஸாந்தரின் மகளைத் திருமணம் செய்தார். இவ்விருவருக்கும் பிறந்தவரே மரீ இராணி. பஹாவுல்லா பாரசீகத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட போது, அவருக்கு அப்போதிருந்த ரஷ்ய அரசாங்கம் அடைக்கலம் வழங்க முன்வந்தது நமக்கு ஞாபகம் இருக்கும். பஹாவுல்லாவின் நிருபத்தைப் பெற்ற அதற்கு மதிப்பளித்த விக்டோரியா மகாராணியின் செயலும், ரஷ்ய நாடு பஹாவுல்லாவுக்கு அடைக்கலம் வழங்க முன்வந்த செயலும் ஒன்று சேர்ந்து மரீ இராணியின் உருவத்தில் இணைந்தது.

இனி முடியாட்சி குறித்து பஹாய் சமயத்தில் என்ன கூறப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்

முடியாட்சியும் குடியாட்சியும்

கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக முடியாட்சி முறையில் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். பல நாடுகளில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சி முறை அமுலுக்கு வந்துள்ளது. ஒரு பேரரசாக விளங்கிய ஆங்கிலேயரின் ஐக்கிய பேரரசின் முடியாட்சியும் அரசியலமைப்பு முடியாட்சியாக மாறிவிட்டிருந்தது. அந்த நாட்டில் தற்போது குடியாட்சியே அதிகாரத்தில் இருக்கின்றது. முடியாட்சி  சம்பிரதாயமான ஒன்று மட்டுமே.

இப்போது முடியாட்சி குறித்து பஹாவுல்லா என்ன கூறுகின்றார் என்பதைப் பார்ப்போம்.

அரச பரம்பரையினர் அதிகாரத்தின் சரிவு

அரசவர்க்கத்தில் ஏற்பட்ட சரிவை பஹாவுல்லாவின் அரசகர்களுக்கான நிருபத்தில் வரும் பின்வரும் கூற்றின் அடிப்படையில் நாம் தொடர்புபடுத்திடக்கூடும்.

மன்னர் கூடத்தினரே, கடவுளுக்கு அஞ்சுங்கள்; இந்த அதி உன்னத அருளைப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்திடாதீர்… உங்கள் உள்ளங்களை கடவுளின் திருமுகத்தின்பால் திருப்புங்கள்; உங்கள் ஆசைகள் பின்பற்றத் தூண்டியவற்றை கைவிடுங்கள்; அழிந்துபோவோர்களாக ஆகிடாதீர்… அவரது (பாப் பெருமானார்) சமயத்தை நீங்கள் ஆராயவில்லை, நீங்கள் அதனை உணர கூடியவராயின், அவ்வாறு செய்திருந்தீரானால் சூரியனின் ஒளிவீசப்படும் அனைத்தையும் விட அது உங்களுக்கு மேலானதாக இருந்திருக்கும்… முன்பு நீங்கள் கவனக்குறைவாக இருந்ததைப் போன்று இனிமேலும் கவனக்குறைவின்றி இருப்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள். எமது வதனம் திரைகளுக்குப் பின்னாலிருந்து வெளித்தோன்றி, அதன் பிரகாசத்தை விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தின் மீதும் பொழிந்துள்ளது; இருப்பினும் அவர்பால் நீங்கள் திரும்பிடவில்லை. ஆதலால், முன்னெழுந்து… உங்கள் சிந்தனையை விட்டகன்றவற்றிற்காக திருத்தங்கள் செய்வீராக… இந்த நிருபத்தில், ஒப்பற்றதும் ஐயத்திற்கிடமில்லா மொழியில் யாம் வெளிப்படுத்தியுள்ள அறிவுரைகளின்பால் கவனம் செலுத்தாவிட்டால், தெய்வீகத் தண்டனை எல்லா திசையிலிருந்தும் உங்களைத் தாக்கும், மற்றும் அவரது நீதியின் தீர்ப்பு உங்களுக்கு எதிராக வழங்கப்படும்… மன்னர்களே, இருபது ஆண்டுகள் கடந்து விட்டன; அந்த நேரத்தில் யாம், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய துன்பத்தின் வேதனையை அனுபவித்தோம்… பெரும்பாலான எமது துன்பங்களை அறிந்திருந்தும், நீங்கள், அவ்வெதிரிகளின் செயல்களைத் தடுக்கத் தவறியுள்ளீர். உங்களின் உயரிய நீதியுணர்வு மனித இனம் முழுவதற்கும் வெளிப்படுத்தப்பட கொடியோனின் அக்கிரமங்களைத் தடுக்க வேண்டியதும், உங்கள் பிரஜைகளை நியாயமாக நடத்துவதும், உங்களின் தெளிவான கடமையல்லவா?

மன்னர்கள் தம்மை நடத்திய விதம் கண்டு பஹாவுல்லா பின்வருமாறு எழுதினார்:

“மனிதர்களுள் இரண்டு நிலைகளிலிருந்து அதிகாரம் கைப்பற்றப்பட்டுள்ளது: அரசர்களும் மதத்துறையினரும்.”

ஷேய்க் சால்மானுக்கு எழுதிய ஒரு நிருபத்தில் பஹாவுல்லா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“உலகத்தின் முதிர்ச்சியின் அறிகுறிகளில் ஒன்று, முடியாட்சியின் சுமையை ஏற்க எவருமே முன்வரமாட்டார்கள். முடியாட்சி, அதன் சுமையை தனியாக சுமக்க எவருமே இல்லாத நிலையில் இருக்கும். அந்த நாளே மனுக்குலத்தினரிடையே விவேகம் வெளிப்படுத்தப்படும் நாளாகும். கடவுளின் சமயத்தைப் பிரகடனம் செய்வதற்கும், அவரது சமயத்தை எல்லா திசைகளிலும் பரப்புவதற்காக மட்டுமே இந்தக் கடுமையான சுமையை ஏற்க எவரும் முன்வருவர். கடவுளுக்கும் அவரது சமயத்தின் மீதான அன்புக்காகவும் கடவுளுக்காகவும் அவரது சமயத்தை பிரகடனம் செய்வதற்காகவும் இப்பெரும் அபாயத்தின்பால் தம்மை வெளிப்படுத்திக்கொண்டு, இக்கடுமையான முயற்சியையும் துன்பத்தையும் ஏற்கும் எவரும் நலம் பெறுவர்.

முடியாச்சியின் அங்கீகரிப்பு

இருப்பினும் பஹாவுல்லாவின் நோக்கத்தை எவருமே தப்பாகப் புரிந்துகொள்ள அல்லது, தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளாது இருப்பார்களாக. அவரைத் துன்புறுத்திய மன்னர்களின்பால் அவரது கண்டனம் கடுமையாக இருந்தாலும், அவரது சமயத்தின் உண்மையை ஆராய்ந்து அநியாயக்காரர்களின் கரங்களைத் தடுத்து நிறுத்தும் தங்கள் தெளிவான கடமையில் வெளிப்படையாகத் தவறியவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தப்பட்ட கண்டனங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், அது முடியாட்சி என்னும் ஸ்தாபனத்தை மறைமுகமாவேனும் மறுதலிப்பதாகவோ அவமதிப்பதாகவோ கருதப்படக்கூடாது.

முடியாட்சி மீதான பஹாவுல்லாவின் கண்டனங்கள் அந்த ஸ்தாபனத்தின் எதிர்கால நிலையை குழப்பத்திற்குள்ளாக்கிடக் கூடாது.

பஹாவுல்லாவின் எண்ணிலடங்கா உரைப்பகுதிகளில் முடியாட்சி என்னும் கோட்பாடு புகழப்பட்டும் நியாயமான மற்றும் நியாயமான எண்ணம் கொண்ட அரசர்களின் அந்தஸ்தும் நடத்தையும் போற்றப்படுகிறது, நீதியுடன் ஆட்சி செய்து, அவரது சமயத்தை ஏற்றுக்கொண்ட அரசர்களின் எழுச்சி கற்பனை செய்யப்படுகின்றது, மற்றும் முன்னெழுந்து பஹாய் அரசர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான புனிதமான கடமையும் வலியுறுத்தப்படுகின்றது.

பஹாவுல்லாவின் பிஷாராட் (நற்செய்தி) நிருபத்தில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:

மன்னர்களில் யாராவது—இறைவன் அவர்களுக்கு உதவிடுவாராக—எழுந்து, அழுத்தப்பட்ட இம்மக்களைப் பாதுகாக்க உதவுவாராயின், அவர்பால் அன்பு செலுத்துவதிலும் அவருக்குச் சேவை புரிவதிலும் அனைவரும் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக்கொள்ள வேண்டும். இச்செயல் ஒவ்வொருக்கும் கடமையாகின்றது. இதற்கேற்பச் செயலாற்றுவோருக்கு அது நன்று.

ஜனநாயக அரசியல் முறை உலக மக்களுக்கு நன்மை பயக்கவல்லதாயினும் மன்னராட்சியின் மாட்சிமை ஆண்டவனின் அடையாளங்களுள் ஒன்றாகும். உலக நாடுகள் அதன் பயனை இழப்பதை யாம் விரும்புவதில்லை. கூர்மதி வாய்ந்தோர் இவ்விரண்டு முறைகளையும் இணைத்திடுவராயின், இறைவனின் முன்னிலையில் அவர்கள் பெறும் கைம்மாறு அதிகம்.

தமது கித்தாப்-இ-அக்டாஸ் திருநூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

இறைவனின் நேர்மையின் சாட்சியாக! உங்களது இராஜ்யங்களின் மீது கை வைப்பது எமது நோக்கமன்று. எம் தூதுப்பணி மனிதர்களின் உள்ளங்களைக் கைப்பற்றி அவற்றை ஆட்கொள்வதேயாகும். அவற்றின் மீதே பஹாவின் பார்வை பொருந்தியுள்ளது. இதனை நீங்கள் உணர முடியுமாயின், அதற்கு நாமங்களின் இராஜ்யமே சாட்சியம் பகர்கின்றது. தனது தேவரைப் பின்பற்றும் ஒருவன் இவ்வுலகையும் அதிலுள்ள அனைத்தையும் துறப்பான்; அவ்வாறாயின், அத்துணை உயர்வான ஸ்தானத்தைக் கொண்டுள்ள அவரது பற்றின்மை எத்துணை உயரியதாக இருக்கக் கூடும்! உங்களது அரண்மனைகளைத் துறந்து அவரது இராஜ்யத்தினுள் நுழைய விரையுங்கள். மெய்யாகவே, இதுவே, உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மை பயப்பதாகும். இதனை நீங்கள் அறிவீராயின் மேல் உலக இராஜ்யத்தின் அதிபதியானவரே இதற்குச் சாட்சியமளிப்பார்.

எமது இராஜ்யத்தில் எமது சமயத்திற்கு உதவிட எந்த மன்னர் எழுகின்றாரோ, எந்த மன்னர் எம்மைத் தவிர மற்ற அனைத்தின்பாலும் பற்றைத் துறக்கின்றாரோ, அந்த மன்னருக்குக் காத்திருக்கும் அருட்பேறுதான் என்னே! அப்படிப்பட்ட மன்னர் பஹாவின் மக்களுக்காக இறைவன் தயாரித்துள்ள கலமான – செங்கலத்தின் அன்பர்களின் எண்ணிக் கையில் சேர்க்கப்படுகின்றார். அனைவரும் அவரது பெயரை மகிமைப்படுத்த வேண்டும். அவரது ஸ்தானத்திற்குப் பக்தி மரியாதை அளிக்க வேண்டும். கண்களுக்குப் புலனாகும், புலனாகா இராஜ்யங்களில் வசிப்போர் அனைவரின் சர்வ சக்தி வாய்ந்த பாதுகாப்பாளர் எனும் எமது நாமங்கள் என்னும் திறவுகோல்களைக் கொண்டு நகரங்களைத் திறப்பதற்கு அவருக்கு உதவுங்கள். அத்தகைய மன்னர் மனித இனத்தின் கண்ணாவார், படைப்பின் புருவத்தில் பிரகாசிக்கும் ஆபரண மாவார், உலகம் முழுவதின் அருட்பேறுகளுக்கு மூலத் தோற்றுவாய் ஆவார். பஹாவின் மக்களே, அவருக்கு உதவிட உங்கள் பொருள்களை மட்டும் அல்லாது, உங்கள் உயிர்களையே அர்ப்பணித்திட முன்வாருங்கள்.

வாக்களிக்கப்பட்ட நாள் வந்துவிட்டது நூலில் ஷோகி எஃபென்டி குறிப்பிடுகின்றார்: “உலகத்தின் தாய்” மற்றும் “ஒளியின் ஊற்றுக்கண்” என்னும் தமது சொந்த நகரத்தின் அரியணைக்கு, நீதி மற்றும் தமது சமயத்தின்பால் பக்தி என்னும் இரட்டை அனிகலன்களினால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அரசன் உயர்வதை அவர் கற்பனை செய்கின்றார். “தா என்னும் நிலமே, உன்னை எதுவுமே கலங்கச் செய்திட அனுமதியாவே, ஏனெனில் கடவுள் உன்னை மனுக்குலம் அனைத்திற்கும் மகிழ்ச்சியின் மூலாதாரமாகத் தேர்வு செய்துள்ளார்.”   அவர், அது அவரது சித்தமாயிருந்தால், ஓநாய்கள் சிதறடித்த தேவனுடைய மந்தையை ஒன்றுதிரட்டி, நீதியோடு ஆளப்போகின்ற ஒருவரால் உனது சிங்காசனத்தை ஆசீர்வதிப்பார்.  அப்படிப்பட்ட ஆரசன், மகிழ்ச்சியுடனும் களிப்புடனும் பஹாவின் மக்களின்பால் தன் முகத்தைத் திருப்பி அவர்களுக்குத் தனது தயவுகளை நீட்டுவார்  உண்மையில், கடவுளின் பார்வையில் அவர் மனிதர் மத்தியில் ஒரு ஆபரணம் போன்ற ஒருவராகக் கணக்கிடப்படுகிறது.  தேவனுடைய மகிமையும், அவருடைய திருவெளிப்பாடு என்னும் ராஜ்யத்தில் வசிக்கின்ற அனைவருடைய மகிமையும் அவர்மீது என்றென்றைக்கும் இலயித்திருக்கும்.”

ஆதலால், கடந்த சுமார் இருநூறு ஆண்டுகளாக, அரசபரம்பரையினரைத் தாக்கிய துன்பகரமான பேரிடர்கள், அவர்கள் மீதான பஹாவுல்லாவின் கண்டனம் ஆகியவற்றை மனதில் கொண்டு அரசபரம்பரையினர் உறுதியாக நசித்துப் போவர் என முடிவு செய்வது அவரது போதனைகளின் சிதைவுக்குச் சமமாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: