
28 su
போர்ட் மோரஸ்பி, பாப்புவா நியூ கினி – பாப்புவா நியூ கினியின் (பி.என்.ஜி) தலைநகரான போர்ட் மோரஸ்பியில் ஒரு மலை உச்சியில், வளர்ந்து வரும் பஹாய் வழிபாட்டு இல்லம் உள்ளது — இது சமூகத்திற்குப் பக்தி மற்றும் சேவையின் ஐக்கியத்தைப் பிரதிநிதிக்கும் ஒரு புனிதமான கட்டமைப்பாகும். அனைத்து பஹாய் வழிபாட்டு இல்லங்களின் நோக்கத்திற்கு அடித்தளமாக இருக்கும் இந்த மைய கருப்பொருள், மிக சமீபத்தில் ஒரு நெசவுத் திட்டத்தின் அடிப்படையில் அந்த நாட்டில் உள்ள கோயிலின் வளர்ச்சிக்கு உதவ இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு உத்வேகமூட்டுகின்றது.
கடந்த வாரம், அருகிலுள்ள சுற்றுப்புறங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் அறிவையும் திறமைகளையும் பயன்படுத்தி, அலுமினிய கீற்றுகளை ஒரு பாரம்பரிய வடிவத்தில் நெசவு செய்ய கோயில் தளத்தில் கூடினர். இது மைய கட்டிடத்தின் உட்புற சுவர்களை அலங்கரிப்பதற்காகும். நெசவு என்பது பி.என்.ஜி.யில் ஒரு பாரம்பரிய கலை வடிவமாகும்; இது மக்கள் அன்றாடம் தொடர்பு கொள்ளும் ஒரு கலை வடிவமாகும்; சிறப்பு நிகழ்வுகளுக்காக உருவாக்கப்பட்ட கூடைகள், குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நெய்யப்பட்ட பாய்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பிற பொருட்கள் போன்றவற்றின் மூலம் மக்கள் ஒருவர் மற்றவருடன் தொடர்புகொள்கின்றனர்.
கோவில் குவிமாடத்தின் வடிவமைப்பும் உட்புற நெசவு வடிவமும் ஒற்றுமை மற்றும் பல்வேறு பின்னணியில் இருந்து மக்கள் ஒன்றாக வருவதை அடையாளமாகக் கொண்டுள்ளன. ஹோஹோலா புறநகரைச் சேர்ந்த ஒரு தன்னார்வலரான யோரி மொய்காமு பின்வருமாறு கூறுகிறார்: “இந்த வழிபாட்டுக்கான ஆலயம் நம் அனைவருக்கும் சொந்தமானது. இதுதான் இங்குள்ள அனைவரையும் ஒன்றாக வேலை செய்ய ஊக்குவிக்கிறது.”
பி.என்.ஜி.யின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் கன்பூசியஸ் இகோய்ரே, இந்த உணர்வுகள் பிரார்த்தனை செய்வதற்கும் சேவை செய்வதற்கும் கோயில் தளத்திற்கு வருகை தரும் அனைத்து மக்களாலும் வெளிப்படுத்தப்படுகிறது என விளக்குகிறார். “கட்டி முடிக்கப்பட்டவுடன், சாந்தி மற்றும் அமைதியைத் தேடும் எவருக்கும் வழிபாட்டு இல்லம் திறந்திருக்கும். அனைத்து மக்களும் தங்கள் வாழ்க்கை பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், சவால்களை எவ்வாறு சமாளிக்க முடியும், தங்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்கவும் இது ஓர் இடமாக இருக்கும்.”
கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் கீழே உள்ள படத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.









மூலாதாரம்: https://news.bahai.org/story/1617/