மஹாபாரதப் போர் எதற்காக


அப்துல்-பஹா தமது ஐரோப்பிய பயணங்களின் போது பாரீஸ் நகருக்கும் விஜயம் செய்தார். அப்போது, அவரைச் சந்திப்பதற்கு ஓர் இந்தியர் வந்திருந்தார். அச்சந்திப்பின் போது அவ்விந்தியர் “கிருஷ்ணரின் செய்தியை உலகிற்குப் பரப்புவதே தமது வாழ்க்கையின் நோக்கம்”[i] என்றார். அதற்கு அப்துல்-பஹா: “கிருஷ்ணரின் செய்தி அன்பு பற்றிய செய்தி. எல்லா இறைத்தூதர்களும் அன்பு குறித்த செய்தியையே கொண்டுவந்துள்ளனர். அவர்களுள் எவருமே போரும் பகைமையும் நல்லதென கூறவில்லை. அன்பும் பரிவிரக்கமும் சிறந்ததென கூறுவதில் எல்லாருக்குமே ஒப்புதல் உண்டு,” என்றார்.

புனித ஆன்மாக்களான மோசஸ், இயேசு, ஸோரவேஸ்தர், கிருஷ்ணர், புத்தர், கொன்ஃபியூஷஸ், அல்லது முகம்மதே ஆயினும் அவர்கள் அனைவரும் மானிட உலகின் அறிவொளிக்கான காரணங்கள் ஆவர்.”[ii]

இங்கு கிருஷ்ணர் ஏந்திவந்த செய்தி அன்பு குறித்த செய்தி எனும்போது, மஹாபாரத யுத்தமும் அதில் எண்ணற்றோரின் மரணமும் எப்படி அன்பு குறித்ததாகும் எனும் எண்ணம் மனதில் தோன்றுவது இயல்பே. இதற்கான பதிலை பஹாய் திருவெளிப்பாட்டின் கண்ணோட்டத்தில் காண முயல்வோம்.

மாணிக்ஜி சாஹிப் என்பவர் பஹாவுல்லாவுக்குப் பல கடிதங்கள் எழுதினார்.[iii] அக்கடிதங்களில் பல கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதில் ஒன்று, ஹிந்து சமய அவதாரங்கள் குறித்ததாகும்.

மாணிக்ஜியின் கேள்வி

சில இந்து தீர்க்கதரிசிகள் பிரகடனப்படுத்தியுள்ளதாவது: “யாமே இறைவன். எம்பால் விசுவாசம் காண்பித்திட படைப்பு முழுமையுமே விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடையே பிளவும், பிரிவும் தோன்றும்போதெல்லாம், அதனை அணைப்பதற்காக யாம் முன்னெழுந்திடுவோம்,”[iv] என ஹிந்து சமய தீர்க்கதரிசிகள் கூறியுள்ளதையும், மற்ற இறைத்தூதர்கள் கூறியுள்ளதையும் ஒப்பிட்டு, இவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பது என வினவியுள்ளார்.

இங்கு ஹிந்து தீர்க்கதரிசிகள் கூறியதாக சொல்லப்படுவது, பகவத் கீதையில் வரும் பின்வரும் செய்யுற்களுடன் ஒத்திருக்கின்றது:

ஸ்ரீ பகவான் கூறுகின்றார்:

எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன் 4:7
நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன் 4:8

மேலும், “ஆதியில் தோன்றியவரும் யாமே,” என அத்தீர்க்கதரிசிகள் கூறியுள்ளதாக மாணிக்ஜி குறிப்பிடுகின்றார்.

இதன் தொடர்பில் கீதையில் கூறப்படுவது:

ஸ்ரீ பகவான் கூறுகின்றார்:

அழிவுறாத இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்குப் போதித்தேன், விவஸ்வான் மனுவுக்குப் போதித்தான், மனு இக்ஷ்வாகுவிற்குப் போதித்தான். 4:1
இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பார்த்தா! அந்த யோகம் கால மிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.4:2

இதில் ஹிந்து சமயத்தின் தசாவதாரங்கள் பற்றி கிருஷ்ணர் எதுவுமே குறிப்பிடவில்லை, மாறாக அவர் விவஸ்வான், மனு, மற்றும் இக்ஷ்வாகு என ஒரு வரிசையை நமக்கு வழங்குகிறார்.

உண்மையில் தசாவதாரம் என குறிப்பிடப்படுவது பிற்காலத்தில் புராணங்களில் காணப்படும் பற்பல அவதாரங்களிலிருந்து, மட்ச அவதாரத்திலிருந்து ராம அவதாரம் வரை எழுவரையும், பின்னர் சிலர் எட்டாவதாக கிருஷ்ணரின் ஒன்றுவிட்ட சகோதரரான பலராமரையும், ஒன்பதாவதாக கிருஷ்ணரையும் குறிப்பிடுகின்றனர். வேறு சிலரோ, பலராமரை விடுத்து எட்டாவதாக ஸ்ரீ கிருஷ்ணரையும் ஒன்பதாவதாக புத்தரையும் குறிப்பிடுகின்றனர். பத்தாவதாக எதிர்ப்பார்க்கப்படுவது கல்கி அவதாரமாகும்.

இப்போது, மாணிக்ஜியின் கேள்விக்கான பஹாவுல்லாவின் பதிலைக் காண்போம்.

“ஸ்தானங்கள் ஒவ்வொன்றும், ஒரு வகையில் மற்ற தீர்க்கதரிசிகளின் ஸ்தானங்களிலிருந்து மாறுபட்டவை என்பதை முதலில் கவனிக்க வேண்டும். உதாரணமாக, மோசஸையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு திருநூலை வெளிக் கொணர்ந்து சட்டங்களை நிலைநாட்டினார். அதே நேரத்தில், அவருக்குப் பின் தோன்றிய பல தீர்க்கதரிசிகளும், தூதுவர்களும், காலத்தின் தேவைகளுக்குப் பொருத்தமாக அச் சட்டங்கள் ஏற்புடையதாக பொருந்தியிருக்கும் வரை அவரது சட்டங்களையே பறைசாற்றினர். தோரா என்னும் புனித நூலுடன் இணைக்கப்பட்டுள்ள நூல்களும், அவ்வப்போது நிகழ்ந்த நிகழ்ச்சித் தொகுப்புகளும் இம் மெய்ம்மைக்கு ஆதாரப்பூர்வமான சாட்சியம் பகர்கின்றன.”[v]

அடுத்து,

“எல்லா திருத்தூதர்களும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்து, மீண்டும் அவரிடமே திரும்பிச் சென்றுள்ளவர்கள்,”[vi]
என பஹாவுல்லா குறிப்பிடுகின்றார்.

மேலும்,

“இந்த வகையில் பார்க்குமிடத்து அவர்கள் அனைவரும் ஒரே நபர் ஆவர். ஏனெனில், தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசினார்களில்லை, ஒரு செய்தியைக் கூட கொண்டு வந்தார்களில்லை அல்லது ஒரு சமயத்தைக் கூட வெளியிட்டார்களில்லை. இல்லை. அவர்கள் மொழிந்துள்ளவை அனைத்தும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்தவையாகும். அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுவதாக. மிக உயரிய தொடுவானத்தின்பால் விரைந்திடுமாறு மனிதர்களை அவர்கள் அனைவரும் ஆணையிட்டு அழைத்து நித்திய வாழ்வு குறித்த நற்செய்திகளை வழங்கியிருக்கின்றனர்,”[vii] என பஹாவுல்லா கூறுகின்றார்.

இப்பொழுது, சில இறை அவதாரங்கள் போர்களைத் தூண்டிவிடுவதற்கும் அன்பிற்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்ப்போம்.

முதலில் இது குறித்து பஹாவுல்லா என்ன கூறுகின்றார் என்பதைப் பார்ப்போம்:

“எனது பேரிடரே எனது அருள்பாலிப்பு; வெளித்தோற்றத்திற்கு அது தீயும் வஞ்சந் தீர்த்தலும் ஆகும்; ஆனால் உ ள்ளூர அது ஒளியும் கருணையும் ஆகும். அதன்பால் விரைந்திடுவாயாக, அதனால் நீ ஒரு நித்திய ஒளியாகவும், அழிவற்ற ஆவியாகவும் ஆகக்கூடும்.”[viii]

இங்கு ‘பேரிடர்’ என பஹாவுல்லா கூறுவது சில சமயங்களில் அவதாரங்கள் தூண்டிவிடும் போர்களையும் உள்ளடக்கும். பைபிள் திருநூலின் பழைய ஏற்பாட்டிலும் இஸ்லாமிய சமயத்திலும் இதற்கான பல சான்றுகள் உள்ளன. ஆதலால், கடவுள் அவதாரங்கள் தூண்டிவிடும் போர்கள் கடவுள் மனிதர் மீது கொண்ட அன்பினால்தான் என்பது தெளிவு. அப்பேரிடர்களின் விளவாக மனிதர்கள் நித்திய ஒளியாகவும், அழிவற்ற ஆவியாகவும் ஆகக்கூடும் என்பதே நோக்கம்.

பாரத யுத்தத்தின் ஆரம்பத்தின் போது, கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகப் பணிபுரிந்தார். அப்போது யுத்தகளத்தில் தனக்கு எதிரே காணப்பட்ட தன் உறவினர்களைப் பார்த்த அர்ஜனன், தன் சொந்த உறவினரையும் சுற்றத்தாரையும் எங்ஙனம் கொல்வது என மிகவும் மனம் குழும்பிய நிலையில் தன் அம்பையும் வில்லையும் வீசி எறிந்துவிட்டு கீழே உட்கார்ந்தான்.

கிருஷ்ணர் இந்த யுத்தத்தைத் தூண்டியதன் காரணம் கௌரவர்களை போரில் வென்று பாண்டவர்களின் இராஜ்யத்தைத் திரும்பப் பெறுவதற்கு என வெளிப்படையில் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த நோக்கம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டி, அதன்மூலம் மனிதர்களை தன்மைமாற்றுவதற்காகும்.  இங்கு அதர்மத்திற்கு மூலகாரணமாக இருந்தோர் திருதராஷ்டிர கூட்டத்தினரான கௌரவர்கள் ஆவர். இப்போரில் பரத கண்டத்தின் அரசவர்க்கம் முழுவதுமே ஈடுபட்டிருந்தது. அவற்றுள் பாண்டிய மன்னனான சாரங்கத்துவஜன் என்பான் பாண்டவர்களுடன் சேர்ந்து போர்புரிந்ததாக இதிகாசம் கூறுகின்றது.

அதர்ம வழியில் இழக்கப்பட்ட பாண்டவர்களின் இராஜ்யத்தைத் திரும்பப் பெறுவதில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் இடையீட்டாளராகப் பணிபுரிந்த கிருஷ்ணர் அம்முயற்சியில் தோல்வியுற்றார். கிருஷ்ணர் நல்லிணக்கத்தையும் தர்மத்தையும் வலியுறுத்தினார். ஆனால், கௌரவர்கள் செவிசாய்க்கவில்லை. கிருஷ்ணர், இதன் விளைவு போர் என எச்சரித்தார். போரும் மூண்டது.

ஹிந்து சமயத்தில் குறிப்பிடப்படும் க்ஷத்திரிய வம்சத்தினர்[ix] தர்மத்தைக் காப்பதற்காக கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால், காலப்போக்கில் இவர்கள் தங்களுக்கு இருந்த அதிகாரத்தினால் அகங்காரத்திற்கு அடிமையாகி தாங்கள் படைக்கப்பட்டதன் உண்மை நோக்கத்தை மறந்தனர். இந்த வகுப்பினர், அக்காலத்தில் குமரி முனையிலிருந்து இமயம் வரை பரவியிருந்தனர். பாண்டவர்களும் கௌரவர்களும் அரசபரம்பரையினரும் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆதலால், கிருஷ்ணரின் நோக்கம் அவர்களை அழிப்பதல்ல, மாறாக, அவர் அகங்காரத்தை, அதாவது தீய குணங்களை அழித்து ஒரு புதிய தர்மத்தை, தார்மீகத்தை மீண்டும் ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கான பௌதீக உபகரணமாக, ஓர் ஊடகமாக, மஹாபாரத யுத்தம் பயன்பட்டது. மஹாபாரத யுத்தம் ஆன்மீகவாதத்திற்கும் லௌகீகவாதத்திற்கும் இடையிலான ஒரு போராகும். எல்லா தீர்க்கதரிசிகளின் நோக்கம் போன்றே இறுதியில் வெல்ல போவது ஆன்மீகவாதமே.

பின்குறிப்பு

இந்தக் கட்டுரையின் மற்றொரு நோக்கம், கிருஷ்ணர் எல்லா இறை தூதர்கள் போன்றே அவரும் ஓர் ஆணித்தரமான அவதாரம் என்பதைக் காட்டுவதற்காகும். அப்துல்-பஹா சில இடங்களில் கிருஷ்ணரை நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். பஹாவுல்லா அவ்வாறு நேரடியாகக் கிருஷ்ணரைக் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தமாக எல்லா இறைத்தூதர்களுடனும் அவர் கிருஷ்ணரையும் சேர்த்து குறிப்பிடுவதே போதுமானது. மற்றபடி, பஹாவுல்லா கிருஷ்ணரைப் பற்றியும் ஹிந்து சமயம் பற்றியும் நேரடியாகக் குறிப்பிடாமல் பொதுவாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடுகின்றார்.

மேலும், மாணிக்ஜி…

“…எழுதியனுப்பியதை வைத்துப் பார்க்கையில், அவரது மன நிலையும், சூழ்நிலையும் தெள்ளத் தெளிவாகவே புலனாகின்றன. இப்பொழுது அவரது கேள்விகள் சம்பந்தமாக, அக் கேள்விகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், அவ்வாறான பதில், விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம் மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில் புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும். அவ்வாறிருந்தும், தெய்வீக உதவியெனும் விண்ணுலகிலிருந்து அற்புதத் தெளிவுடன் துல்லியமாக அவரது நற்பெயரின் பேரில்     மறுமொழிகள் வழங்கப்பட்டன. ஆயினும், அவ்விஷயத்தை        அவர் மிக அணுக்கமாகக் கவனிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில், அவர் முறையாக அம் மறுமொழிகளை கவனித்திருப்பின், எந்தவொரு கருத்தும் மறுமொழியளிக்கப்படுவதிலிருந்து விடுபட்டிருக்கவில்லை என்பதை அவர் உடனே ஒப்புக் கொண்டு, “இது மிகத் தெளிவானதும், ஆணித்தரமானதுமான வெளியிடுகையேயன்றி வேறில்லை,” என வியந்து கூறியிருப்பார்.”

பஹாவுல்லா கிருஷ்ணரைப் பற்றி நேரடியாக குறிப்பிடாததன் காரணம்,

….விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம் மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில் புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும்.


[i] பாரீஸ் பேருரைகள்

[ii] மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து

[iii] ஒற்றுமை என்னும் திருக்கோவில்

[iv] ibid, இது நிச்சயமாக பகவத் கீதையில் வரும் (4:7 & 4:8) ஒரு செய்யுளைக் குறிக்கின்றது

[v] ibid

[vi] ibid

[vii] Ibid

[viii] பஹாவுல்லாவின் மறைமொழிகள், அரபு 51

[ix] அரசவர்க்கத்தினர் உட்பட, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தோர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: