ஒரு தனிநபர் பஹாய் வலைப்பதிவை தழுவி எழுதப்பட்டது
ஒரு பஹாய் புனிதப் பயணம் மேற்கொள்ளும் போது, அவர் புனிதநிலத்தில் ஓர் ஒன்பது நாள்கள் கொண்ட முறையான நிகழ்வில் கலந்துகொள்கின்றார். இந்த நிகழ்வில், வழிகாட்டப்பட்ட பயணங்கள், உரைகள், படித்தளங்கள் வழி உலா, பாப் மற்றும் பஹாவுல்லாவின் நினைவாலயங்களுக்கான நீண்ட விஜயங்கள் உள்ளன.
நான் வருடம் 2001 ஆரம்பத்தில் புனிதப் பயணம் மேற்கொண்ட போது, திருமதி குரோஸ்மன் என் வழிகாட்டியாகப் பணிபுரிந்தார். அக்கா நகர் மற்றும் ஹைஃபாவுக்கு வருகையளித்தபோது பல அற்புதமான கதைகளை நான் செவிமடுத்தேன். இங்கு என் மனதில் நின்ற மூன்று கதைகள் உள்ளன. இக்கதைகள் பஹாவுல்லா மற்றும் அவரது சகாக்களின் புத்திசாலித்தனம் மற்றும் விகடத்தை நினைவூட்டுகின்றன. இவை என் நினைவிலிருந்து வருபவை. அவற்றுக்கான மூலாதாரங்கள் தெரிந்திருந்தால் தயவு செய்து இங்கு குறிப்பிடவும்.
மிஷ்கின்-கலாம் தமது நாள்களில் ஒரு சிறந்த கையெழுத்துக் கலைஞராக விளங்கியதுடன், அவர் பஹாய்கள் தங்கள் சமயத்தின் ஒரு சின்னமாகக் கொள்ளும் அதிபெரும் நாமத்தின் எழுத்துக் கலைவடிவத்தை அமைத்தவரும் ஆவார். அவர் பஹாவுல்லாவின் நெருங்கிய நண்பரும் அவரது பயணங்கள் பலவற்றில் கலந்துகொண்டுமுள்ளார். ஒரு நாள் பஹாவுல்லாவுக்குத் தேநீர் பாத்திரம் (சமோவார்) ஒன்று தேவைப்பட்டது. அதை மிஷ்கின்-கலாமிடமிருந்து இரவல் வாங்கி வர ஒருவரை அனுப்பி வைத்தார். அந்த மனிதர் மிஷ்கின்-கலாமிடம் வந்து, “பஹாவுல்லா உங்கள் தேநீர் பாத்திரத்தை இரவல் வாங்கி வர சொன்னார்,” என்றார். அதற்கு மிஷ்கின்-கலாம் “நான் இரவல் தர முடியாது என பஹாவுல்லாவிடம் சொல்லுங்கள்,” என கூறினார். திடுக்கிட்டுப் போன அந்த மனிதர், பஹாவுல்லாவிடம் திரும்பிச் சென்று, “மிஷ்கின்-கலாம் இரவல் தர முடியாது என கூறிவிட்டார்,” என தெரிவித்தார். அது கேட்ட பஹாவுல்லா முகத்தில் ஒரு புன்னகையுடன், திரும்பிச் சென்று ஏன் தர முடியாது என கேட்டு வரும்படி அம்மனிதரிடம் கூறினார். அம்மனிதரும் மிஷ்கின்-கலாமிடம் திரும்பிச் சென்று, “நீங்கள் ஏன் தர முடியாது என கூறினீர் என தெரிந்து வரும்படி பஹாவுல்லா என்னைப் பணித்துள்ளார்,” என கூறினார். அதற்கு மிஷ்கின்-கலாம், “என் வாழ்க்கையில் பல முறை நான் இறைவனிடம் ஏதாவது ஒன்றை யாசித்துள்ளேன், ஆனால் கடவுள் அவற்றையெல்லாம் மறுத்துள்ளார். என் வாழ்க்கையில் ஒறு முறையாவது கடவுள் என்னிடம் கேட்டவற்றை மறுதலிப்பதற்கான ஒரு வாய்ப்பு எனக்களிக்கப்பட வேண்டுமென அவரிடம் தெரிவி,” என கூறியனுப்பினாராம்.
அக்காநகருக்கு அருகே இருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க அங்கு பஹாய்கள் ஒரு சிறு வண்டல் மண் தீவை உருவாக்கி, அதை ஒரு பூந்தோட்டமாக ஆக்கினர். அதற்கு ரித்வான் தோட்டம் எனவும் பெயரிட்டனர். (இதை, பஹாவுல்லா தம்மைப் பொதுநிலையில் பிரகடனப்படுத்திய பாக்தாத் நகரில் உள்ள ரித்வான் தோட்டத்துடன் குழப்பிவிடக்கூடாது) இது பஹாவுல்லா அக்காநகர் கதவுகளுக்கு வெளியே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட அவரது வாழ்க்கையின் இறுதித் தருணங்கள் ஆகும். பஹாவுல்லா, சிரமப் பரிகாரத்திற்காகவும் அவ்விடத்தின் இயற்கை அழகை அனுபவிப்பதற்காகவும் இத்தோட்டத்திற்கு அடிக்கடி விஜயம் செயவார். இப்பூந்தோட்டத்தின் தோட்டக்காரர் அபுல் காஸிம் என்னும் ஒரு மனிதராவார். இவர் அப்பூந்தோட்டத்தை நேர்த்தியாக்குவதற்குப் பல நாள்கள் பாடுபட்டிருந்தார். ஒரு நாள் ஒரு பெரும் வெட்டுக்கிளிகள் கூட்டம் பூந்தோட்டத்தை அணுகிக்கொண்டிருந்தது. அது தோட்டத்தையே அழிக்கக்கூடிய ஒரு கூட்டமாக இருந்தது. அபுல் காஸிம் மிகவும் பதட்டம் அடைந்து பஹாவுல்லாவை அணுகி, செடிகளின் அழிவைத் தடுப்பதற்கு ஏதாவது செய்யுமாறு முறையிட்டார். அதற்கு பஹாவுல்லா, “அபுல் காஸிம், வெட்டுக்கிளிகளுக்கும் உணவு தேவையல்லவா?” என்றார். அபுல் காஸிம் தனது பூந்தோட்டத்திற்குச் சென்று கவலையுடன் அமர்ந்திருந்தார்.
வெட்டுக்கிளிகள் கூட்டம் அணுகிக்கொண்டிருந்தது. அபுல் காஸிம் மீண்டும் பஹாவுல்லாவிடம் சென்று உதவிக்காக மன்றாடினார். அப்போதும் பஹாவுல்லா அதே பதிலைத்தான் அளித்தார். வெட்டுக்கிளிகள் அபுல் காஸிமின் செடிகளை தின்றுகொண்டிருந்தபோது, அபுல் காஸிம் மீண்டும் உதவிக்காக பஹாவுல்லாவிடம் மன்றாடினார். பஹாவுல்லா தோட்டத்திற்குச் சென்று, அணுகிக்கொண்டிருந்த வெட்டுக்கிளிகள் கூட்டத்தைப் பார்த்து, ஓர் உரத்த குரலில் “அபுல் காஸிம் உங்களால் பெரும் மன உளைச்சலுற்றிருக்கின்றார் என கூறிவிட்டு, தமது மேலாடையை உயர்த்தி வேகமாக உதறினார். தோட்டத்தில் இருந்த பெரும்பாலான வெட்டுக்கிளிகள் தோட்டத்தை விட்டு பறந்து சென்றன.
அதே தோட்டத்தைப் பராமரித்து வந்த அபுல் காஸிம் அங்கு சிதறிக்கிடந்த முசுக்கட்டைப் பழங்களை சுத்தம் செய்வதற்குக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அங்கு, பஹாவுல்லா எப்போதும் அமர்கின்ற இருக்கைக்கு மேலே ஒரு முசுக்கட்டைப் புதர் வளர்த்திருந்தது. அவ்விடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு விழுந்து கிடந்த முசுக்கட்டை பழங்களைப் பொறுக்கி அவற்றிலிருந்து வழிந்திருந்த பழச்சாற்றை துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இது அடிக்கடி நடந்து வந்தது. இப்பிரச்சினை குறித்து அபுல் காஸிம் பஹாவுல்லாவிடம் புகார் செய்து, என்ன செய்வது என கேட்டார். அதற்கு பஹாவுல்லா, அந்த முசுக்கட்டைப் புதரின் முன்னால் நின்று, அப்புதரைப் பார்த்து, “அபுல் காஸிம் உன் காரணமாக மகிழ்ச்சியாக இல்லை,” என கூறினார். அவர் மீண்டும் முசுக்கட்டைப் புதரை நோக்கித் தமது மேலாடையை வேகமாக உதறினார். அதற்குப் பிறகு அந்தச் செடியில் பழங்கள் காய்க்கவே இல்லை.
இக்கதைகள் மூஜான் மோமனின் பஹாவுல்லா: ஒரு குறு வாழ்க்கைச் சரிதம், பக். 121-122 என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
…ரித்வான் தோட்டத்தின் உருவாக்கத்தின் போது, தீவில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க அத்தீவின் உயரத்தை அதிகரிக்க எல்லா பஹாய்களும் உதவிக் கரம் நீட்டினர், அதன் மண்ணைப் பதப்படுத்தி அதை ஒரு தோட்டமாக ஆக்கிட முயன்றனர். ஒரு நாள், எல்லாரும் வேலையில் கவனமாக இருந்த போது நபில் ஸாரான்டி அத்தோட்டத்திற்கு வந்தார். வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர் நபிலைக் கூப்பிட்டு அவர் கையில் ஒரு மண்வெட்டியைக் கொடுத்து தாமும் உதவி செய்யுமாறு அழைத்தார். …பஹாவுல்லாவினால் நபில் (அரபு மொழியில் மேன்மை) என்னும் பெயர் வழங்கப்பட்டிருந்த அந்த முல்லா முகம்மத், பஹாவுல்லா தமக்கு `நா` `பில்` என பெயரிட்டுள்ளதால் (அரபு மொழியில் அதற்கு `மண்வெட்டி வேண்டாம்` என்பது பொருளாகும்) தாம் மண்வெட்டியைக் கொண்டு வேலை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஒரு முறை, அக்காநகரில் மரணமுற்ற ஒரு பஹாயின் நினைவாஞ்சலியில் பஹாவுல்லா கலந்துகொண்டார். அஃகா முகம்மத் அலி பஹாவுல்லா எவ்வளவு கருணையுடனும் அழகுடனும் இறந்தவரைப் பற்றி உரையாற்றினார் என்பதை கவனித்தார். அதே விதமாகத் தானும் ஒரு நினைவாஞ்சலியைப் பெற வேண்டும் என நினைத்த அஃகா முகம்மத் அலி பஹாவுல்லாவிடம், “நானும் இறந்தவிட்டதாக நினைத்துக்கொண்டு, எனக்கான ஒரு நினைவாஞ்சலி கூட்டத்திற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு சலுகையை வழங்கினால் அது எனக்குப் பெரும் மதிப்புடையதாக இருக்கும் என கூறினார்.
ஒரு முறை அவர்கள் இன்னுமும் பாக்தாத்தில் இருந்த போது, சற்று தடிமனாக இருந்த மதகுரு ஒருவர் பஹாவுல்லாவைக் காண வந்து, பெரும் ஆடம்பரத்துடன் உட்கார்ந்து, “நான் முஜ்டாஹிட்டுகளின் முத்திரையாவேன்,” என அறிவித்தார். முஜ்டாஹிட்டுகள், ஷீயா மதகுருக்களுள் மிகவும் மூத்த பிரிவினர் ஆவர், மற்றும் இந்த சொல் பொதுவாக நபி முகம்மத், நபிகளின் `முத்திரை` அல்லது கடைசி என்பதுடன் தொடர்புடைய சொல்லாகும்.
இந்த வார்த்தைக்கு இங்கே குறிப்பிட்டுள்ளபடி, மிகவும் சிறந்தது எனவும் பொருள் கொள்ளலாம். இருப்பினும், பஹாவுல்லா முதல் அர்த்தமான `கடைசி` என்னும் பொருளிலான சொல்லை எடுத்துக் கொண்டு (‘நான் முஜ்டாஹிட்களில் கடைசி’ என அவர் கூறியதைக் குறித்து), “இன்ஷா`அல்லா, இன்ஷா`அல்லா (கடவுள் சித்தம் கடவுள் சித்தம்)” என கூறினார். (அதாவது இனிமேல் அவரைப் போன்ற ஒருவர் உலகில் இருக்க வேண்டாம் என்னும் பொருளில்)