

6 நவம்பர் 2022
வியன்னா – பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலைக்கான பஹாய் நாயகியான தாஹிரிக்கும் — ஆஸ்திரியாவின் பெண்கள் இயக்கத்தின் ஸ்தாபகர் மரியென் ஹைனிஷ்சுக்கும் என்ன தொடர்பு?
“Der Siegelring!” என்னும் தலைப்பில் ஒரு நாடகத்தில் இது ஆய்வுக்கு உட்பட்டதாக இருந்தது. கலை மற்றும் கலாச்சார அமைச்சின் நாடு தழுவிய திறந்த இல்ல முன்முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் பல தேசியப் பிரச்சனைகள் பற்றிய பொது விவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரியாவின் பஹாய் தேசிய நிலையத்தில் அரங்கேற்றப்பட்டது.
ஆஸ்திரியா நாட்டின் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்ட ஹைனிஷ், உயர் கல்விக்குச் சமமான அணுகலுக்காக வாதிட்டதுடன் அந்த நாட்டில் பெண்களுக்கான முதல் உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவினார்.

மார்த்தா ரூட்டுடனான ஒரு நேர்காணலில்-குறிப்பிடத்தக்க ஆரம்பகால பஹாய் ஆன-ஹைனிஷ் கூறியதாவது: “நான் ஓர் இளம் பெண், தாஹிரியின் தியாகத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது பதினேழு வயதுதான். அப்போது நான் சொன்னதாவது, ‘தாஹிரி தமது உயிரைக் கொடுத்து பெண்களுக்காக என்ன செய்ய முயன்றாரோ ஆஸ்திரியாவின் பெண்களுக்காக அதை நானும் செய்ய முயல்வேன். …'”
பாப் பெருமானார் பிறந்த இருநூறாவது ஆண்டு நினைவாக 2019-இல் இஸ்மா ஃபோர்கானி இந்த நாடகத்தை எழுதினார். “பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்திற்கான வாகையராக தாஹிரியின் வாழ்க்கையில் உத்வேகம் பெற்ற பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் முக்கிய ஐரோப்பியர்களுக்கு இடையிலான உரையாடலை இந்த நாடகம் பின்தொடர்கிறது” என திருமதி ஃபோர்கானி கூறுகிறார்.

நிக்கோல் ஃபெண்டெசாக் இந்த நாடகத்தின் சமீபத்திய தயாரிப்பை இயக்கியுள்ளார், இது கடந்த மூன்று ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்பட்டது. “நாடகத்தின் மூலம், கடந்த காலம் நிகழ்காலம் இரண்டிலும் தங்கள் வாழ்க்கை மற்றும் செயல்கள் மூலம் செல்வாக்கு செலுத்திய விதிவிலக்கான வரலாறு சார்ந்த பெண்களை நாங்கள் சந்திக்கின்றோம், ஆனால், எதிர்கால சந்ததியினருக்கும் இவர்கள் சொல்வதற்கு நிறையவே இருக்கின்றது.”
ஆஸ்திரியாவின் பஹாய் தேசிய சபை உறுப்பினரான கோரின் ஃபரிட், இந்த நாடகம் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் பற்றிய சொற்பொழிவுக்குப் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என விளக்குகிறார்.
“இந்த நாடகம், அதன் சாராம்சத்தில், மனிதகுலத்தின் ஒருமைப்பாடு மற்றும் அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் நீக்குதல் பற்றிய பஹாய் கொள்கையின் ஆய்வு ஆகும்,” என அவர் கூறுகிறார்.
சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட ஆஸ்திரிய பஹாய்களின் முயற்சிகள் பற்றிய கண்காட்சியில் வருகையாளர்கள் இந்தக் கருப்பொருள்களின் ஆராய்வைத் தொடர்ந்து மேற்கொண்டனர், இது அந்த நாடு முழுவதிலும் உள்ள பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் முயற்சிகளின் நுண்ணறிவுகளை எடுத்துக்காட்டுகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1623/