சாண்டி, ஐக்கிய அரசு, 6 டிசம்பர் 2022, (BWNS) — அஃப்னான் நூலகத்தைப் பற்றிய ஒரு சிறு ஆவணப்படத்தை பஹாய் உலக செய்தி சேவை வெளியிட்டுள்ளது, இதில் 12,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், அசல் கடிதங்கள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளன.
பஹாய் சமயத்தின் மைய நாயகர்களின் முக்கியமான சுயசரிதைகளை எழுதிய சமய திருக்கரமும் ஒரு புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான ஹசான் பால்யுசியின் (1908 – 1980) வேண்டுகோளின் பேரில் 1985-ஆம் ஆண்டில் அஃப்னான் நூலக அறக்கட்டளை ஸ்தாபிக்கப்பட்டது. அவரது சுய சேகரிப்பு “அறிவைத் தேடும் அனைவருக்கும்” கிடைக்க வேண்டும் என்பதே திரு. பால்யுசியின் விருப்பமாகும்.
திரு. பால்யூஸி அஃப்னான் குடும்பத்தைச் சேர்ந்தவர், பாப் பெருமானார் மைத்துனரின் பேரன், பஹாய் சமயத்தின் இரட்டை அவதார-ஸ்தாபகர்களில் ஒருவர்.
நூலகத்தின் அறங்காவலர்களில் ஒருவரான மூஜான் மோமன், “ஒர் ஆராய்ச்சி நூலகத்தின் மையமாகத் தனது சேகரிப்பை உருவாக்க விரும்புவதாக திரு பால்யூசி தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்” என கூறுகின்றார்.
நூலக அறக்கட்டளை 1985-ஆம் ஆண்டு நிறுவப்பட்டும், பல்வேறு தற்காலிக இடங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், 2015-ஆம் ஆண்டு வரை தற்போதைய கட்டிடத்தில் நிரந்தரமாக சேகரிப்பு இடம் பெற முடியவில்லை.
பஹாய் சமயம், பாரசீக மற்றும் மத்திய கிழக்கு வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதம் பற்றிய ஆய்வு உட்பட, திரு. பால்யூசியின் தொகுப்பில் உள்ள பாடப் பகுதிகளை பிரதிபலிக்கும் புத்தகங்களுடன் அஃப்னான் நூலகம் தொடர்ந்து அதன் சேகரிப்பை வளர்த்து வருகிறது என டாக்டர் மோமன் விளக்குகிறார்.
அவர் மேலும் கூறுவதாவது: “நூலகத்தில் 1970-களில் ஈரான் பஹாய்களின் தேசிய ஆன்மீகச் சபையால் வெளியிடப்பட்ட பஹாய் சமயத்தின் புனித எழுத்துக்களின் கையெழுத்துப் பிரதிகளின் நூறு தொகுதிகள் அடங்கியுள்ளன.”
ஈரானிய தேசிய பஹாய் காப்பகங்கள் என்னும் தலைப்பில் உள்ள இந்தத் தொகுதிகளின் டிஜிட்டல் டிரான்ஸ்கிரிப்டுகளை அஃப்னான் நூலக இணையதளத்தில் கிடைக்கும் வகையில் பஹாய் உலக மையத்தின் ஆராய்ச்சித் துறையுடன் நூலகம் அணுக்கமாகப் பணியாற்றியுள்ளது.
“இந்த தொகுதிகள் டிஜிட்டல் டைப்ஸ்கிரிப்டுகளாகவும், கையெழுத்துப் பிரதிகளின் டிஜிட்டல் படங்களாகவும் கிடைப்பது பாரசீக மற்றும் அரபு மொழிகளைப் படிக்கும் நபர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கிறது, ஆனால் 19-ஆம் நூற்றாண்டின் கையெழுத்துப் பிரதிகளின் கையெழுத்தைப் படிப்பதில் சிரமம் இருந்திருக்கலாம்” என ஆராய்ச்சித் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஹோலி ஹான்சன் கூறுகிறார்.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொகுதிகளில் பஹாவுல்லாவின் 4,000 படைப்புகளும், அப்துல்-பஹாவின் 3,000-க்கும் மேற்பட்ட படைப்புகளும், பாப் பெருமானாரின் பல எழுத்துக்களும் உள்ளன என்று டாக்டர். ஹான்சன் மேலும் கூறுகிறார். “பஹாய் எழுத்துக்களை கருப்பொருளாகப் படிக்க விரும்புவோருக்கு அல்லது இந்த ஆயிரக்கணக்கான நிருபங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேட விரும்புவோருக்கு இது மிகப்பெரும் மதிப்புமிக்க வளத்தை வழங்குகிறது.”
அஃப்னான் நூலகத்தைப் பற்றிய சிறு ஆவணப்படத்தை இங்கே பார்க்கலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1629/