

BIC ஜெனீவா, 11 டிசம்பர் 2022, (BWNS) – ஈரானிய அதிகாரிகள் தங்கள் சொந்தக் குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியில், மீள்திறத்தின் சின்னங்களாகக் கருதப்படும் இரண்டு பஹாய் பெண்மணிகளான, மஹ்வாஷ் சபேட், ஃபரிபா கமலாபாடி இருவரும் ஈரானில் 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு, இரண்டாவது முறையாக அவர்களுக்குக் கொடூரமான 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் பஹாய்களுக்கு எதிரான புதிய ஒடுக்குமுறையின் தொடக்கத்தில் இந்த இரண்டு ஈரானிய பஹாய் பெண்களும் ஜூலை 31-இல் இரண்டாம் முறையாகக் கைது செய்யப்பட்டனர்.

மஹ்வாஷ் மற்றும் ஃபரிபா கைது செய்யப்பட்டதில் இருந்து 320-க்கும் மேற்பட்ட பஹாய்கள் தனிப்பட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷிராஸ், மஸிந்தரான் மாகாணம் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். ரோஷன்கோவ் கிராமத்தில் பஹாய்களுக்குச் சொந்தமான வீடுகள் இடிக்கப்பட்டன. வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் பிரச்சாரம் மூலம் பஹாய்களுக்குக் களங்கம் விளைவிக்கும் அரசாங்கத் திட்டங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. மேலும் குறைந்தபட்சம் சுமார் 90 பஹாய்கள் தற்போது சிறையில் உள்ளனர் அல்லது கணுக்கால்-பட்டை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நவம்பர் 21-இல் ஒரு மணிநேர விசாரணைக்குப் பிறகு சமீபத்திய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது – இது பெரும்பாலும் நீதிபதி பிரதிவாதிகளை அவமதிப்பதிலும் அவமானப்படுத்துவதிலும் செலவிடப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த விசாரணை நடந்தது. தெஹ்ரானில் உள்ள புரட்சி நீதிமன்றத்தின் கிளை 26-க்குத் தலைமை தாங்கிய நீதிபதி இமான் அஃப்ஷாரி, இரண்டு பெண்களும் தங்கள் முந்தைய சிறைவாசத்தில் இருந்து “பாடம் கற்றுக்கொள்ளவில்லை” என கண்டித்தார்.
மஹ்வாஷ், ஃபரிபா இருவரின் முதல் விசாரணையின் போது வழக்குரைஞரும் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ஷிரின் எபாடி, 2008-இல் தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகள் அல்லது பிற குற்றச்சாட்டுகளை நிரூபிக்க “ஒரு துளி ஆதாரமும் இல்லை” என கூறினார். அதே போன்று, இந்த சமீபத்திய விசாரணையிலும் எந்த புதிய ஆதாரமும் வெளிவரவில்லை.
“ஏற்கனவே அநியாயமாக ஒரு தசாப்த காலத்தைத் தங்கள் நம்பிக்கைகளுக்காக சிறைவாசம் அனுபவித்த இந்த இரண்டு பஹாய் பெண்களும், அதே கேலிக்குரிய குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என அறிவது மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது” என ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதி சிமின் ஃபஹாண்டேஜ் கூறினார். “மஹ்வாஷ் மற்றும் ஃபரிபா இருவரும் ஏற்கனவே 10 கடுமையான ஆண்டுகளாக தங்களிடையே இல்லாததைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பங்களின் மனைவிகள், தாய்மார்கள் மற்றும் பாட்டிகளாவர். இந்தக் குடும்பங்கள் ஏற்கனவே அனுபவித்த அநியாய சிறைதண்டனைக்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, ஈரான் அரசாங்கம் நம்பமுடியாத மற்றும் விவரிக்க முடியாத அதே கொடுமையை இரண்டாவது முறையாக மீண்டும் இழைக்கின்றது. எந்த ஆதாரமும் இல்லாமல் வழங்கப்பட்ட இந்த அபத்தமான தண்டனை, ஈரானிய நீதித்துறை அமைப்பை முற்றிலும் கேலி செய்கிறது. அங்கு நீதிபதிகளே வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் ஜூரிகள் என அனைவரும் ஒரே நிலையில் உள்ளனர். இந்த அபத்தமான மற்றும் கொடூரமான அநீதியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.
இவ்விரு பெண்களின் ஆதரவாளர்கள் அவர்களை மீள்திறத்தின் சின்னங்கள் எனவும், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட பிற நபர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் எனவும், அனைத்து ஈரானியப் பெண்களுக்கும் தாய்கள் எனவும் அழைத்தனர்.
மஹ்வாஷ் சபேத் சிறையில் தாம் எழுதிய கவிதைத் தொகுதி ஆங்கிலத்தில் சிறைக் கவிதைகள் என்னும் தலைப்பில் வெளியான பிறகு சர்வதேச அளவில் பிரபலமடைந்தார். மஹ்வாஷ் PEN இன்டர்நேஷனினால் அதன் 2017 ஆண்டிற்கான துணிச்சல்மிகு சர்வதேச எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டவராவார்.
மஹ்வாஷ் மற்றும் ஃபரிபாவின் முதல் சிறைவாசத்தின் போது அதே நேரத்தில் பல முக்கிய ஈரானிய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரானில் பெண்களின் கோரிக்கைகளை ஆதரித்ததற்காகத் தானே மீண்டும் சிறையில் இருக்கும் முன்னாள் ஈரானிய ஜனாதிபதி அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானியின் மகள் ஃபயிஸே ஹஷெமி, ஃபரிபாவின் சிறை விடுமுறையின் போதும் அவர் விடுதலையான பிறகும் அவரைச் சந்தித்தபோது அவர் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளையே உருவாக்கினார். மேலும் ஈரானிய-அமெரிக்க பத்திரிகையாளரான ரோக்ஸானா சபேரி, மஹ்வாஷ் மற்றும் ஃபரிபாவுடன் ஒரு சிறை அறையைப் பகிர்ந்துகொண்டார். அவ்விரண்டு பஹாய்களும் தங்கள் சக கைதிகளுக்கு ஆறுதலுக்கும் நம்பிக்கையின் ஆதாரங்களாகவும் இருந்தனர் என அவர் கூறினார்.
“டைம் இதழ் ஈரானியப் பெண்களை ‘ஆண்டின் சிறந்த ஹீரோக்கள்’ என குறிப்பிடுவது போல, அனைத்து ஈரானியர்களின், குறிப்பாகத் தங்களின் உரிமைகள் கொடூரமான முறையில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட போது, தியாகத்துடன் உறுதியாக இருந்த பெண்களின் துணிச்சலையும் வீரத்தையும் சர்வதேச சமூகம் சரியாக அங்கீகரித்துள்ளது” என திருமதி. ஃபஹண்டேஜ் மேலும் கூறினார். மாஹ்வாஷ், ஃபாரிபா இருவரும் அத்தகைய இரு பெண்களாவர். அவர்கள் பல வருடங்களாக பெண் மற்றும் ஆண் சமத்துவத்தை ஊக்குவித்து வந்துள்ளனர், நீதிக்கும் உண்மைக்கும் அறைகூவல் விடுத்துள்ளனர், அதன் விளைவாக அக்கோட்பாடுகளை ஊக்குவித்ததன் காரணமாகக் கடும் விளைவுகளை அனுபவித்துள்ளனர். இந்தத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், மஹ்வாஷ், ஃபரிபா மற்றும் அனைத்து மனசாட்சிக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், மேலும் அதன் மக்களின் உரிமைகளை திட்டமிட்டு மீறும் அடக்குமுறை இயந்திரத்தின் ஒவ்வொரு பகுதியையும் அகற்ற வேண்டும் என ஈரான் அரசாங்கத்திற்குச் சொல்ல அனைவரும் இப்போது அவர்களுடனும், அனைத்து ஈரானிய பெண்களுடனும் ஒன்று சேர்ந்து நிற்போமாக.”
பின்னணி
69 வயதான மஹ்வாஷ் மற்றும் 60 வயதான ஃபரிபா ஆகியோர் ஈரானிய அரசாங்கத்தின் முழு அறிவோடு பஹாய் சமூகத்தின் அடிப்படை நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முறைசாரா குழுவின் உறுப்பினர்களாக 2008-இல் முதன்முதலில் கைது செய்யப்பட்டனர். ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட இந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்கள் நம்பிக்கைகளுக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். மஹ்வாஷ், ஃபரிபா மற்றும் மற்றவர்கள் இறுதியாக 2018-இல் விடுவிக்கப்பட்டனர்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1631/