

22 டிசம்பர் 2022
வியன்னா – நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரியாவிற்கு புதிதாக வந்திருந்த தங்கள் பெற்றோர் மற்றும் அண்டை வீட்டாருக்கு இளைஞர்கள் குழு ஒன்று வழங்கிய ஜெர்மன் மொழி வகுப்புகள் என ஆரம்பித்த ஒன்று, இன்று மிகவும் பெரிதான ஒன்றாக உருவெடுத்துள்ளது.
வியன்னாவின் பஹாய்களால் நடத்தப்படும் ஒரு சமூக மையத்தில் வாராந்திரக் கூட்டங்கள் சிறு குழுக்களை ஒன்றுகூட்டி, அவர்களின் மொழித் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, வலுவான நட்புறவையும் உருவாக்குகின்றன.
பஹாய் சமூகத்தைச் சேர்ந்த பூரியா மஹல்லி கூறுகையில், “அவர்களின் சொந்த நாட்டில் எதிர் எதிரான மதப் பிளவுகளில் இருந்த பலர், வேறுபாடுகளைக் கடந்து வாழும் இடமாக இது ஆகியுள்ளது.
“மொழி கஃபே” என பெயரிடப்பட்ட வாராந்திர அமர்வுகள், வியன்னாவின் அண்டைப்புறத்தில் சமூகத்திற்கு சேவை செய்யும் திறனை வளர்க்கும் பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்களின் முயற்சியாலிருந்து வளர்ந்துள்ளது.
திரு. மஹாலி கூறுவதாவது, “நட்பு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் நமது பொதுவான மனிதத்தன்மை போன்ற கருப்பொருள்களில் பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கு மொழி கஃபே ஒரு வாய்ப்பை வழங்குகின்றது. ஒரே மாதிரியான பல சவால்களையும் அபிலாஷைகளையும் அவர்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றனர் என்பதைப் பார்க்க பல்வேறு குடும்பங்கள் அங்கு வருகின்றன.

பஹாய் சமூகத்தின் மற்றொரு உறுப்பினரான லிசெலோட் பால்க் விளக்குவதாவது: அவர்களின் கலந்துரையாடல்கள் சக குடிமக்களுக்கான சேவையை சிறப்பித்துக் காட்டுவதால், பங்கேற்பாளர்கள் மொழி கஃபேவின் வளர்ச்சிக்குப் பங்களிக்க தூண்டப்படுகிறார்கள்.
“உதாரணமாக, இந்த முன்முயற்சி குறிப்பாக பெண்கள் தங்கள் எழுத்தறிவு திறன்களை மேம்படுத்த ஒருவருக்கொருவர் உதவிட தூண்டியுள்ளது,” என அவர் கூறுகிறார். “சில பெண்களுக்கு இது மிகவும் கடினம். ஏனெனில், அவர்கள் தங்கள் சொந்தத் தாய்மொழியில் முறையான கல்வியைப் பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.”
இந்தப் பிரச்சினையைப் பற்றி கலந்தாலோசித்த பிறகு, பங்கேற்பாளர்களில் சிலர், மொழி கஃபேயின் ஏற்பாட்டுக் குழுவின் உதவியுடன், தங்கள் தாய்மொழிகளில் எழுத்தறிவு வகுப்புகளை வழங்கத் தொடங்கினர் என திருமதி பால்க் கூறுகிறார்.
முன்பு ஆப்கானிஸ்தானில் பள்ளி இயக்குநராகப் பணிபுரிந்த ரஹிமா, இப்போது மொழி கஃபே அமைப்புக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கின்றார். அவர் கூறுவதாவது: “மக்கள் எப்போதும் பெண்களைப் பற்றி (சொந்தமாக) முடிவெடுத்து, அவர்களுக்குக் கல்வியை மறுத்துள்ளனர். ஆனால் இப்போது, நமது எழுத்தறிவு மற்றும் மொழித் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், நாம் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாகவும் இருக்கின்றோம். எங்கள் குழந்தைகள் கல்விமீது நாங்கள் சிறப்பாகக் கவனம் செலுத்த முடிகிறது.
“நான் கஃபேயில் பங்கேற்கும் வெவ்வேறு பெண்களிடம் உரையாடும்போது, அவர்கள் அனைவரும் உண்மையான சேவை மனப்பான்மையை அனுபவித்தது இதுவே முதல் முறை என கூறுகின்றனர்.”
மற்றொரு பங்கேற்பாளரான ஃபாஹிமா, இந்த முழு முன்முயற்சியும் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாக மதம் செயல்பட முடியும் என்னும் நுண்ணறிவுக்கு வழிவகுத்துள்ளது என விளக்குகிறார். “கடந்த காலங்களில், என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எந்த நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும், எவருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என எங்களுக்கு எப்போதும் கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், நான் இங்கு எல்லா மதங்களின் உண்மையான விழுமியங்களைப் பார்க்கின்றேன்.
அவர் மேலும் கூறுவதாவது: “செயல்களில் நேர்மையை நீங்கள் காணலாம். இங்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஆதரவு நல்கியும் ஒன்றாக உணவு உண்பதையும் பார்க்கின்றீர்கள். வேற்றுமைகள் பற்றிய விவாதம் இல்லாத சூழலை அனுபவிப்பது மிகவும் அழகாக இருக்கிறது. மாறாக, நம் அனைவரையும் ஒன்றிணைப்பதிலும், எங்களின் குடும்பங்களுக்கான எங்கள் விருப்பங்கள் மற்றும் மிகவும் அமைதியான உலகத்தைப் பேணுவதற்கான விருப்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1634/