
கித்தாப்-இ-அஃடாஸ் என்னும் அதிப்புனித நூலில் பஹாவுல்லா இரண்டு இடங்களை பஹாய்களின் புனித யாத்திரைக்கான இடங்களாக அருளியுள்ளார். ஒன்று பாரசீகத்தின் ஷிராஸ் நகரில் உள்ள பாப் பெருமானாரின் இல்லம். இவ்வில்லம், இரான் புரட்சிக்குப் பிறகு 1979-இல் மதவெறியர்களால் அழிக்கப்பட்டது. மற்றது, இராக் நாட்டின் பாக்தாத் நகரில் உள்ள, பஹாவுல்லா பத்து வருடகாலம் வாழ்ந்த இல்லம். உலக பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இந்த இல்லம், 2013-இல் அழிக்கப்பட்டது (https://news.bahai.org/story/961/). அவ்விரு இடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன, ஆனால் எதிர்காலத்தில் அவை மீண்டும் அதே இடங்களில் பேரொளியுடன் அமைக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அத்திருத்தலங்கள் வெறும் கற்களாலும் காரைகளாலும் மரங்களாலும் ஆனவையல்ல, அவை புனித ஆவியின் வெளிப்பாடுகள்.
அருள்ஜோதியரான பஹாவுல்லாவின் மறைவிற்குப் பிறகு, அவரது மூத்த மகனாராகிய அப்துல்-பஹா, மேலும் இரண்டு இடங்களைப் புனித யாத்திரைக்கான மையங்களாக அறிவித்தார். அவை பாப் பெருமானார், பஹாவுல்லா இருவரின் இளைப்பாறல் தலங்கள், அவ்விருவரின் சன்னதிகள்.

புனிதப் பயணிகள் பாப் பெருமானாரின் சன்னதிக்கு விஜயம் செய்யும் போது சிலர் முதலில் அச்சன்னதியைச் சுற்றி வலம் வருவர், வேறு சிலர் உள்ளே சென்று அவரது திருவாசலில் தலை வைத்துத் தங்கள் பணிவை வெளிப்படுத்துவர். பிறகு, அத்திருவிடத்தினுள் அமர்ந்து பிரார்த்தனை செய்வர். அங்கு நம்பிக்கையாளர்கள் இப்படித்தான் பிரார்த்திக்க வேண்டுமெனும் முறைகள் ஏதும் கிடையாது. ஆனால் பஹாவுல்லா அறிவித்த இடங்களில் கூறுவதற்காக அவர் சில பிரார்த்தனைகளையும் நிருபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். சன்னதியின் உள்ளே இயல்பாகவே கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை முறைகள் உள்ளன. காலனிகளை வெளியே கழற்றிவைத்துவிட்டு சப்தமின்றி உள்ளே நுழைதல், நுழைந்தவுடன் பிரார்த்தனைகளை உரக்கக் கூறாமல் இருத்தல்; பிரார்த்தனைக்குப் பிறகு முன்னோக்கிய முகத்துடன் பின்னோக்கி நடக்க வேண்டும், என்பன போன்ற சில நடைமுறைகள்.
நம்பிக்கையாளர்கள் பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கு விஜயம் செய்யும் போது, சிலர் நேரே அவரது சன்னதியின் உட்புறம் சென்று பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஈடுபடுவர். அதற்கும் மேற்பட்டு சன்னதியைச் சுற்றியுள்ள அழகிய தோட்டங்களுக்கு வருகையளித்து அமைதியாகத் தியானம் செய்தல் மற்றொரு நடவடிக்கையாகும். இங்கு அழகு என்பது ஓர் ஆன்மீகப் பண்பாகும். அது இவ்வுலகிலும் ஆன்மீக இராஜ்யங்களிலும் ஒரு பொக்கிஷம் போன்ற மெய்மையாகும். இவ்வழகை வெளிப்படுத்தவே பஹாய் புனிதத் தலங்களில் அழகிய, மனதைக் கவரும் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சன்னதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் வட்டவடிவமான நான்கு கால்வட்டங்கள் கொண்ட ஹராம்-இ-அஃடாஸின் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் தடத்தின் வழி சன்னதியைச் சுற்றி வலம் வருதல் மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். இத்தடத்தின் வழி விண்ணவ திருக்கூட்டத்தினரும் வலம் வருவர் என்பது ஐதீகம். சிலர் பாஹ்ஜி மாளிகையைச் சுற்றி அதன் அருகிலேயே உள்ள நடைபாதையின் வழியும் சன்னதியை வலம் வருவர். இவ்வலம் வருதல் குறித்த ஒரு கதையைப் பார்ப்போம்:
அக்காநகரில் இருந்த ஹாஜி முஹம்மது-தாஹிர்-இ-மல்மிரி, சுக்-இ-அப்யாத் அருகே உள்ள நபில்-இ-அஸாம் -இன் அறைக்கு அடுத்த ஒர் அறையில் வசித்து வந்தார். இவர்களின் அறைகள் வீதியில் செல்வோரைக் காணும்படி அமைந்திருந்தன. சில வேளைகளில் பஹாவுல்லா பாஹ்ஜியிலிருந்து அக்காநகருக்கு வந்துவிட்டு இவ்விருவரின் அறைக்கு வெளியே இருந்த வீதியின் வழி பாஹ்ஜி மாளிகைக்குத் திரும்பிச் செல்வார்.
அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்வை ஹாஜி முஹம்மது-தாஹிர்-இ-மல்மிரி எழுதுகின்றார்:
புனிதப் பேரழகர், அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக, பாஹ்ஜி மாளிகைக்குச் செல்லவிருந்த மாலையில், புனிதப் பரிபூரணர் எங்கள் வீட்டைக் கடந்து செல்வதைக் காண அன்று காத்திருந்தோம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. பஹாவுல்லா ஒரு வெள்ளைக் கழுதையின் மீது சவாரி செய்து எங்கள் அறைகளுக்கு முன்னால் செல்வதைக் கண்டோம். பஹாவுல்லா எங்கள் பார்வையில் இருந்து மறைந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து பாஹ்ஜி மாளிகைக்குச் சென்று அதைச் சுற்றி வலம்வந்துவிட்டு வீட்டிற்குத் திரும்புவோம் என நபில் பரிந்துரைத்தார். மிகுந்த ஆர்வத்துடன் நானும் அதற்கு ஒப்புக்கொண்டு, நாங்கள் இருவரும் உடனடியாகப் படிக்கட்டுகளில் இறங்கி ஓடி, ஐம்பது அடிகள் தூரத்திலிருந்து அவர் பின்னால் வேகமாக நடந்து பாஹ்ஜி மாளிகையைச் சென்றடைந்தோம். பாஹ்ஜி மாளிகைக்குள் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தை வெளியில் இருந்து எங்காளால் பார்க்க முடிந்தது.
புனிதப் பரிபூரணர் மாளிகைக்குள் சென்றதும், மாளிகையை வலம் வருவதற்காகக் கட்டிடத்தை நோக்கி நடந்தோம். ஆனால் நாங்கள் சற்று நெருங்கி வந்தபோது, மாளிகையின் சுவர்களைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் மக்கள் நிரம்பியிருந்ததைக் கண்டோம். மாளிகையின் நான்கு பக்கங்களிலும் கூட்டம் கூடியிருந்தது, அவர்களின் முணுமுணுப்பையும் அவர்களின் சுவாசத்தையும் எங்களால் செவிமடுக்க முடிந்தது. அந்த மாளிகையை வலம் வருவதற்காக அக்காநகரிலிருந்து யாரும் வரவில்லை என்பதும், நாங்கள் இருவரும் அனுமதியின்றி அங்கு சென்றிருந்தோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும், நடைபாதையில் நடப்பதற்கு இடமில்லாததால், நாங்கள் சற்றுப் பின்வாங்கி, மாளிகையிலிருந்து சுமார் முப்பது அடிகள் தொலைவில் மாளிகையைச் சுற்றி வலம் வந்தோம். நாங்கள் மாளிகையைச் சுற்றி வரும்போது நாங்கள் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் கட்டிடத்தின் நான்கு பக்கங்களிலும் மக்கள் கூட்டம் இருப்பதை எங்களால் உணர முடிந்தது. இறுதியில், நாங்கள் மாளிகையின் வாயிலுக்கு எதிரே தரையில் விழுந்து வணங்கிவிட்டு, அக்காநகருக்குத் திரும்பினோம்.
நாங்கள் வீட்டிற்கு வந்ததும், அன்றிரவு நாம் தூங்க வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நபில் பரிந்துரைத்தார். இரவு முழுவதும் நான் பலமுறை தேநீர் தயாரித்தேன், நபில் கவிதைகள் புனைந்து கொண்டிருந்தார். கவிதைகளுக்குப் பிறகு, நாங்கள் இருவரும் பஹாவுல்லாவைப் பின்தொடர்ந்து பாஹ்ஜி மாளிகைக்கு சென்றதையும், நாங்கள் மாளிகையைச் சுற்றி வலம் வரும்போது எல்லா தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் விண்ணவ திருக்கூட்டத்தினர் மாளிகைக்கு வெளியே கூடியிருந்து தங்கள் பிரபுவின் அரியணையை வலம் வந்ததையும் நபில் எழுதினார். நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்ததையும் நான் தேநீர் தயாரித்ததையும் அவர் கவிதையில் வடித்திருந்தார்.
புனிதத் திருவுருவானவர் நபிலின் கவிதைகளைப் பெற்றுக்கொண்டு, எங்கள் இருவருவரின் பெயரில் ஒரு நிருபத்தை வெளிப்படுத்தினார். அதில் மாளிகைக்கான எங்களின் புனித யாத்திரையை கருணையுடன் ஏற்றுக்கொண்டு நபிலுக்கு புல்புல் (இராப்பாடி) என்னும் பெயரையும் எனக்கு பஹ்ஹாஜ் (களிப்பு நிறைந்தவர்) என்னும் பெயரையும் வழங்கியிருந்தார்.
(https://d9263461.github.io/cl/Baha’i/Others/ROB/V4/p103-117Ch07.html)
தடத்தின் வழி பாஹ்ஜி மாளிகையை வலம் வரும்போது இன்றைய யாத்ரீகர் ஒருவர் தமது அனுபவத்தை விவரிக்கின்றார்.
பாஹ்ஜி யாத்ரீகர் வரவேற்பு மையத்திலிருந்து சற்று தூரத்திலிருந்த கோல்லின்ஸ் வாசலை நோக்கி நடந்தேன். பொண்மாலை நேரம், மனதை அமைதிப்படுத்தும் நிசப்தம், அவ்வப்போது கேட்கும் பறவைகளின் ஒலி, இதமளிக்கும் இளம் தென்றல், ஹராம்-இ-அஃடாஸ் என்னும் திருவிடத்தின் விளிம்பின் ஓரத்தைச் சுற்றிலும், கோல்லின்ஸ் வாசலுக்கு முன்னாலிருந்து ஆரம்பிக்கும் வெள்ளை சரளைகளால் இடப்பட்ட ஒரு நடைபாதை. நடையின் வேகத்தைக் குறைப்பதற்கும், சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கும் தியானத்துடன் நடப்பதற்காகவும் திட்டமிடப்பட்ட நடைபாதை. மனதை ஒருநிலைப் படுத்திக்கொண்டு நிதானித்து நடக்க ஆரம்பித்தேன். நடக்கும் போது இயல்பாகவே பக்தி மனப்பான்மை நம்மை வந்தடையும். தடத்தில் இடப்பட்ட கற்களின் மீது கால்கள் பதிவதால் உண்டாகும் சரக் சரக் என்னும் ஓசை மனதிற்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது. பாதுகாவலர் இத்தகைய சரளைகளைக் கொண்ட பாதையை ஏன் உண்டாக்கினார் என்பது இப்போது மனதிற்குப் புரிகிறது. மேலான எண்ணங்கள் மனதில் உதிக்கின்றன. பஹாவுல்லாவைப் பற்றிய எண்ணங்கள், அவர்மீது கரைபுரண்டோடும் அன்பு, அல்லது காதல் எனவும் சொல்லலாம். பாதையின் இருபுறமும் மரங்களும் செடிகளும் நம்மை வரவேற்பதைப் போன்றிருக்கின்றது. பக்திப் பெருக்கினால் கண்களில் நீர் வழிகின்றது. ‘காதலாகிக் கசிந்து கண்ணீரும் மல்கியே’ என்பார்களே அதைப் போன்று. மனதில் ஒருவித இன்பமும் சூழ்கின்றது. சிறிது தூரம் நடந்தவுடன் சூழ்நிலையின் காரணமாக திடீரென என்றோ கேட்ட ஒரு பாடல் மனதில் தோன்றுகின்றது. ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா’ என்னும் பாடல். இவ்விடமல்லவா சுவர்க்கம் என எண்ணுவோம். சுமார் மூன்றரை கிலோமீட்டர்கள் கொண்ட அந்தப் பாதையில் நேரம் போவது தெரியாமல் தியானத்துடன் நடப்போம். திடீரென கனவு கலைந்தது போன்று, கோல்லின்ஸ் வாசலுக்கு முன் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருப்பது தெரிகின்றது. மீண்டும் ஒரு முறை சுற்றி வரலாமா என்னும் எண்ணம் தோன்றுகின்றது. ஆரம்பித்த இடத்திற்கு எதிரே, கோல்லின்ஸ் வாசலுக்கு உட்புறமாக உலகின் போக்கிஷம் போன்ற அருட்பேரழகர் பள்ளிகொண்டிருக்கும் சன்னதி. அதை நோக்கி சரளைகளின் மீது நடந்து அத்திருத்தலத்தைப் பயபக்தியுடன் அணுகுவோம். படிகளைக் கடந்து உள்ளே கால் பதிவது தெரியாமல் மெல்ல நடந்து சென்று தலைத்திருவாசலில் சிரம் பதித்துப் பக்திப் பெருக்கினால் கண்ணீர் வழிய பிரார்த்திப்போம். நமக்குப் பின்னால் தங்கள் முறைக்காகப் பலர் நிற்பது தெரிகின்றது. அவர்களுக்கு வழிவிட எழுந்துநின்று, அமைதியாக, உடலைத் திருப்பாமல் முன்னோக்கியவாறு பின்னால் மெல்ல நடந்து சென்று, அங்குள்ள அறைகளுள் ஒன்றில் அமர்ந்து பஹாவுல்லாவின்பால் நமது அன்பைப் பிரார்த்தனைகளாக வெளிப்படுத்துவோம், நமது சொந்த வேண்டுகோள்களையும் பிரார்த்தனைகளின் மூலம் வெளிப்படுத்துவோம். நண்பர்களின் பிரார்த்தனை வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்கு அதுவே தருணம். போதிய நேரம் கழித்து, அறைக்கு வெளியே வந்து அதே முன்னோக்கிய நடையுடன் பின்னால் சென்று, சன்னதிக்கு வெளியே வருவோம்.
இங்கு ஒரு வியப்பு யாதெனில், இத்திருவிடத்தில் பயபக்தியும், பணிவும் எக்கிருந்துதான் நம்மை வந்தடைகின்றது என்பது தெரியவில்லை. பிற யாத்ரீகர்களிடம் உரையாடும் போது, நடக்கும் போது, கூட்டத்தில் இருக்கும் போது, நாம் வேறொரு பிறவியாகின்றோம். இல்லம் திரும்பினாலும் இதே தோரணையைக் கடைப்பிடிக்க வேண்டுமெனும் மனவுறுதி உண்டாகின்றது.
புனித இடங்களை வலம் வருதல் ஒரு பக்தியும் அன்பும் சார்ந்த நடவடிக்கையாகும். அது புனிதத் திருவுருக்களின்பாலான ஒரு தனிநபரின் பணிவு, கீழ்ப்படிதல் மற்றும் ஆராதனையைக் குறிக்கின்றது. அது ஒருவர் அவர்களை முற்றிலும் சார்ந்திருப்பதன் அடையாளம். இதே செயல் இயற்கையிலும் நிகழ்கின்றது. ஒரு துணைக்கோள் ஒரு கிரகத்தைச் சுற்றி வலம் வருகின்றது, அது ஈர்ப்புச் சக்தியினால் சுற்றுப்பாதையில் நிலைப்படுத்தப்படுகின்றது. அது அக்கிரகத்திலிருந்து தோன்றுகின்றது, அதன் இருப்பு அந்த கிரகத்தையே சார்ந்துள்ளது. அவ்விரண்டிற்கும் இடையில் ஒரு விசேஷ உறவு உண்டு: ஒன்று யஜமானராகவும் மற்றது ஊழியனாவும் செயல்படுகின்றது.
(தொடரும்…)