
11 ஜனவரி 2023
சான்டியாகோ, சிலி – சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் தளம் சமீபத்தில் ஓர் ஒன்றுகூடலை நடத்தியது. இது, ஆண்டிஸ் மலைகளில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் முறைமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாதுகாப்புப் பணித்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்தது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மலைத் திட்டம், கோயில் அமைந்துள்ள பென்யலோலன் உட்பட சான்டியாகோ பெருநகரம் மற்றும் வால்பரைசோ பகுதிகளின் இயற்கைச் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கப் பொது மற்றும் தனியார் துறைகளை ஈடுபடுத்தியுள்ளது.
பென்யலோலன் நகர மேயரான கேரொலினா லெய்டாவ் அல்வரெஸ், கோவில் திறக்கப்பட்டதில் இருந்து இப்பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் அது ஆற்றியுள்ள பங்கிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். “இந்த மைதானங்களுக்கு ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு… ஏனெனில், இந்த மலையடிவாரங்களை மீட்டெடுப்பதற்கான [பஹாய் சமூகத்தின்] முயற்சிகள் மிகவும் முக்கியமானவை,” என அவர் கூறினார்.

GEF திட்டத்தின் பிரதிநிதியான மேக்ஸிமிலியானோ கொக்ஸ் லாரேய்ன் கோவில் தளத்தில் வனப் பராமரிப்புடன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை நிலைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்: “பூர்வீக தாவரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், பார்வைத் தடைகளைக் குறைப்பதன் மூலமும், சுற்றுச்சூழல் முறைமை மறுசீரமைப்பில் ஈடுபடுவதன் மூலமும், வடிவமைப்பும் நிலதோற்றமும் இயற்கையை ரசிப்பதற்கான ஒரு அமைதியான இடத்தை உருவாக்குகிறது. அதில் நகரம் அமைதியைக் காண்கிறது; பார்வையாளர்கள் இயற்கையுடன் இணைந்திட முடியும். இந்த இணைப்பு அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டுவதுடன் தியானம் மற்றும் பிரதிபலிப்பு நிலையில் கோயிலை அணுகிட உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
மற்ற பங்கேற்பாளர்களில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் துணைச் செயலாளரும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், GEF மலைத் திட்டம் மற்றும் குடிமை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

வழிபாட்டு இல்லத்தின் இயக்குநரான வெரோனிகா ஓரே, தமது கருத்துகளில், தளத்தில் நிலைப்படுத்தல் முயற்சிகளுக்கும் அப்பால், பஹாய் சமூகம் மனிதகுலத்தின் ஒற்றுமை போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ஆன்மீக மேம்பாட்டின் உயிரியல்முழுமை தொலைநோக்கை ஆராயும் உரையாடல்களுக்கான இடங்களை உருவாக்குவதன் மூலம் திட்டத்திற்கு மேலும் ஆதரவளிக்க முயன்றதாக விளக்கினார். .
“இந்தப் பூமியும், அதன் மக்களும், அதன் உயிரினங்களும், தனிமனிதனை உலகின் பொருள் வளங்களில் எப்போதும் அதிகரித்து வரும் பங்கைக் குவிக்க மற்றவர்களுடன் போட்டியிடுகின்ற, முற்றிலும் பொருளாதார மற்றும் சுயநலப் பிரிவாகக் கருதும் லௌகீகவாத மனப்பான்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன,” என அவர் கூறினார்.

மனிதகுல ஒருமைப்பாடு என்னும் கண்ணாடி வில்லையின் வழி மேம்பாட்டைப் பார்ப்பதன் மூலம், உண்மையான செழிப்பு என்பது அனைத்து மக்களின் செழுமை, நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் கிரகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அதிக தெளிவுடன் காணலாம் என திருமதி ஓரே விளக்கினார். லௌகீக முன்னேற்றம் மட்டும் போதாது. உண்மையான முன்னேற்றம் என்பது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆன்மீக மற்றும் தார்மீக வளர்ச்சியையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என இது அறிவுறுத்துகிறது.
சிலியின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரான லூயிஸ் சாண்டோவல், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பிரதிபலிப்பில், இந்தத் தொலைநோக்கை ஊக்குவிப்பதில், வழிபாட்டு இல்லம் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கூறுகின்றார். அது “மக்கள் தங்களின் ஆன்மீகத் தன்மையை நோக்கித் திரும்புவதற்கு ஊக்குவிப்பு அளித்துள்ளது.”
பஹாய் கோவில், “சமுதாயத்தின் புதுப்பித்தலுக்காக உழைக்க விரும்புவோரை ஈர்க்கும் இடமாக செயல்பட்டுள்ளது” என திரு. சந்தோவல் கூறுகிறார்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1638/