

9 பிப்ரவரி 2023
அஸ்தானா, கஸாக்ஸ்தான் – உலகைப் பற்றிய நமது கண்ணோட்டம், அதில் நமது இடம் ஆகியவற்றின் மீது கலைகளின் தாக்கம் எத்தகையது? கலைகள் எவ்வாறு மக்களிடையே உயர்ந்த இலட்சியங்களைத் தூண்டி, சமுதாய நல்லிணக்கத்திற்குப் பங்களித்திட அவர்களை ஊக்குவிக்க முடியும்? மதம் எப்படி கலைகளில் அழகைத் தூண்ட முடியும்?
இவை, சமூகத்தின் நல்வாழ்வை ஊக்குவித்தல் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் தொடரின் ஒரு பகுதியாக கலைஞர்களும் கஸாக்ஸ்தானில் உள்ள பஹாய் பொது விவகாரங்களுக்கான அலுவலகமும் ஆராய்ந்த கேள்விகளில் அடங்கும்.
சமூக நல்லிணக்கம் குறித்த உரையாடலில் பங்கேற்பதற்கான அலுவலகத்தின் நீண்டகால முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தக் கலந்துரையாடல்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தோரை ஒன்றிணைத்து, ஒருங்கிணைந்த மற்றும் வளமான சமூகத்தைக் கட்டமைப்பதில் அவர்களின் துறைகள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்கிறது.
கலையில் அழகின் வெளிப்பாட்டைப் பிரதிபலிப்பதானது, நல்லிணக்கம் மற்றும் மனித ஆன்மாவை உத்வேகப்படுத்தல் குறித்த எண்ணங்களை மனதில் உண்டாக்குகின்றது என பொது விவகார அலுவலகத்தின் தைமூர் செக்கர்பயேவ் விளக்குகிறார். கலைகளானவை, மக்கள் தங்களின் சக மனிதர்களில் உள்ள மேன்மையை உணர உதவும் என அவர் கூறுகிறார்.
“நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதிலும், பிளவுகளைக் குறைப்பதிலும், ஒற்றுமை உணர்வைப் பேணுவதிலும் கலைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்காமல் சமூக முன்னேற்றத்தையும் அமைதியான உலகையும் கற்பனை செய்வது கடினம்” என திரு செக்கர்பயேவ் கூறினார்.
இருப்பினும், மனித இயல்பு குறித்த மக்களின் கண்ணோட்டத்தைச் சிதைத்திடவும், பிரிவினை என்னும் நெருப்பைத் தூண்டுவதற்கும் கலைகள் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகின்றன என பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
அலுவலகத்தின் மற்றொரு உறுப்பினரான லியாசாட் யாங்கலியேவா மேலும் கூறுகின்றார்: “சாந்தமான மனப்பான்மைகளை ஊக்குவிப்பதற்கான கலைகளின் சாத்தியத்தை உணர்வதற்கு, கலை சார்ந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் நம்பிக்கைமிகு கண்ணோட்டத்தைப் பராமரிப்பதன் மூலமும், ஆன்மீகக் கொள்கைகளைத் தங்கள் பணிகளில் பயன்படுத்துவதன் மூலமும் பெரிதும் பயனடையலாம்.”

திரைப்படத் தயாரிப்பாளர் அஜீஸ் ஸைரோவ் இதே உணர்வை எதிரொலித்தார்; ஆழமான அர்த்தத்துடன் நிரப்பப்பட்ட படைப்பாற்றல் மிக்க படைப்புகள் மக்களை ஒன்றிணைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். “சமூக நனவுணர்வுள்ள கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் அர்த்தத்தைப் உட்புகத்துகின்றனர்; ஆன்மாவுடன் சேர்ந்து எதிரொலிக்கும் ஓர் ஆற்றலை தங்கள் படைப்புகளில் புகுத்துகிறார்கள். இத்தகைய படைப்புகள், பிறர் வாழ்க்கைகளைத் தாங்கள் மேம்படுத்துகின்றனர் என்னும் எண்ணத்தை மக்கள் மனதில் தூண்டிட முடியும்.
கஸ்டீவ் அருங்காட்சியகத்தின் ஓவியரும் கலை ஆசிரியருமான நட்டாலியா பாஸெனோவா, படைப்பாற்றல் மற்றும் அழகு குறித்த ஆரம்பகால மதிப்புணர்வை மக்களிடையே பேண வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். “கலை சுய வெளிப்பாட்டுக்கான ஒரு வழிமுறையை வழங்குகிறது,” என அவர் கூறினார். “முறையாகப் பேணப்படும்போது, கலை சார்ந்த முயற்சிகள் ஒரு நபரின் வாழ்க்கை நோக்கத்தையும் செல்திசையையும் உயர்த்திட முடியும்.”
திருமதி பாஸெனோவா மேலும் கூறியதாவது: “நான் பல ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்குக் கற்பித்து வருகிறேன், அவர்கள் எவ்வாறு மாற்றம் காண்கின்றனர், அவர்கள் எவ்வாறு உலகில் அழகை பார்க்கத் தொடங்குகின்றனர் என்பதைப் பார்த்துள்ளேன். அழகின் மீதான ஈர்ப்பின்றி ஒருவர் வளர்ச்சி காண்பது கடினம்.”
இக்கலந்துரையாடல்கள் கலைகள் சமூகத்துடன் கொண்டிருக்கும் பலக்கிய மற்றும் பன்முக உறவை எடுத்துக்காட்டுகின்றன. கலைகள் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகவும், மனிதப் படைப்பாற்றல் மற்றும் அனுபவத்தின் வளமான மற்றும் பல்வகைகளிலான வெளிப்பாடாகவும் செயல்பட முடியும்; அவை உலகைப் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை ஊக்குவிக்கவும் உயர்த்திடவும் திறன்பாடு உடையவை.
இந்தக் கலந்துரையாடல் தொடரின் அணுகுமுறையைப் பற்றிப் பிரதிபலிக்கும் திருமதி யாங்காலியேவா, இந்த உரையாடல்களின் மையத்தில் உள்ள கலந்தாலோசனைக் கொள்கை பங்கேற்பாளர்கள் சமூகப் பிரச்சினைகளின் நுணுக்கங்களை ஆராய்வதில் ஒருவருக்கொருவரைப் பங்காளிகளாகப் பார்த்திட உதவுகிறது என கூறுகின்றார். “இந்த அணுகுமுறை எதிர்வாத உறவுகளைத் தவிர்க்கின்றது, (எதிர்நோக்கப்படும்) சவால்களின் மூல காரணங்களை வளமாக ஆய்வு செய்திட உதவுகின்றது” என அவர் கூறுகிறார். ஒற்றுமையைப் பேணுவதில் ஊடகங்களின் பங்கு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் உள்ளிட்ட சமூக நல்லிணக்கம் குறித்த சொல்லாடல் தொடர்பான விஷயங்களை பொது விவகார அலுவலகம் தொடர்ந்து ஆராயவிருக்கின்றது.