பேரிடர்களுக்கு ஒரு நோக்கம் உள்ளதா?


இக்குழந்தை துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூகம்ப இடிபாடுகளிலிருந்து காப்பாற்றப்பட்டது. இக்குழந்தையின் தாய் பிரசவத்திற்குப் பிறகு இறந்துவிட்டிருந்தார். இடிபாடுகளுக்கிடையே குழந்தையின் அழுகுரல் கேட்ட மீட்பாளர்கள் அதைக் காப்பாற்ற முயன்ற போது, குழந்தையின் தொப்புள் கொடி இன்னமும் அதன் தாயிடம் இணைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, தொப்புள்கொடியை வெட்டி குழந்தையைக் காப்பாற்றினர். இக்குழந்தைக்கு அயா அல்லது ‘கடவுளின் அடையாளம்’ எனப் பெயிரிடப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தினால் இதுவரை சுமார் 30,000 பேர் இறந்துள்ளனர்.

அப்துல்-பஹா 1912-இல் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தார். அவர் அப்பயணத்தை மேற்கொள்வதற்கு வசதியாக சில பஹாய்கள் அவர் டைட்டானிக் கப்பலில் அதன் முதல் வெள்ளோட்டத்தில் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அப்துல்-பஹா, தமது பயணத்திற்காக வேறொரு கப்பலைத் தேர்ந்தெடுத்தார். டைட்டானிக் பேரிடருக்குப் பிறகு, பேரிடர்கள் குறித்து அப்துல்-பஹா பின்வருமாறு கூறினார்:

கடந்த சில நாட்களில் உலகில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது, இது ஒவ்வொரு இதயத்தையும் கவலையடையச் செய்து, ஒவ்வொரு ஆன்மாவையும் வருத்தமுறச் செய்துள்ளது. நான் இங்கு டைட்டானிக் பேரழிவைக் குறிப்பிடுகின்றேன், அதில் நமது சக மனிதர்கள் பலர் கடலில் மூழ்கிப் போயினர், பல அழகான ஆன்மாக்கள் இந்த பூவுலக வாழ்க்கையைத் துறந்துச் சென்றன. இத்தகைய நிகழ்வு உண்மையிலேயே வருந்தத்தக்கது எனும் போதிலும், நடப்பவை அனைத்தும் ஏதோ ஒரு விவேகத்தினால்தான் ஏற்படுகின்றன என்பதையும், காரணமின்றி எதுவும் நடக்காது என்பதையும் நாம் உணர வேண்டும். அதில் ஒரு மர்மம் இருக்கின்றது; ஆனால் காரணம் மற்றும் மர்மம் எதுவாக இருந்தாலும், இது மிகவும் சோகமான நிகழ்வு, இது பலரின் கண்களில் கண்ணீரையும் பல ஆன்மாக்களுக்குத் துயரத்தையும் கொண்டு வந்துள்ளது. இந்தப் பேரழிவினால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். காணாமல் போனவர்களில் சிலர் எங்களுடன் நேப்பிள்ஸ் வரை செட்ரிக் கப்பலில் பயணம் செய்து பின்னர் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தனர். அவர்களை நினைக்கும் போது எனக்கு மிகவும் சோகமாக இருக்கின்றது. ஆனால், இந்தப் பேரிடரை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, கடவுளின் உலகங்கள் எல்லையற்றவை என்பதை உணர்ந்து நான் ஆறுதல் அடைகிறேன்; “என் பிதாவின் இல்லத்தில் அநேக மாளிகைகள் இருக்கின்றன” என இயேசு கிறிஸ்து சொன்னபடி, இந்த (உலக) வாழ்வை அவர்கள் இழந்திருந்தாலும், அதற்கு அப்பால் அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தற்காலிக வாழ்விலிருந்து அழைக்கப்பட்டு நித்திய வாழ்விற்கு மாற்றப்பட்டுள்ளனர்; அவர்கள் இந்த பௌதீக இருப்பைக் கைவிட்டு ஆன்மீக உலகின் நுழைவாயில்களுக்குள் பிரவேசித்துள்ளனர். பூவுலகின் இன்பங்களையும் சுகங்களையும் துறந்து, இறைவனின் இராஜ்யத்திற்கு விரைந்தபடியால், அவர்கள் இப்பொழுது மிகவும் நிலையானதாகவும் உண்மையானதாகவும் ஒரு மகிழ்ச்சியையும் களிப்பையும் பெறுகிறார்கள். இறைவனின் கருணை எல்லையற்றது, மறைந்த இந்த ஆன்மாக்களை நமது பிரார்த்தனைகளிலும் வேண்டுதல்களிலும் நினைவுகூர்வது நமது கடமையாகும். இதனால், அவர்கள் திருமூலாதாரத்திற்கு மேன்மேலும் அணுக்கம் அடைவர். (அனைத்துலக அமைதிக்கான பிரகடனம்)

துருக்கி நாட்டில் பூகம்பப் பேரிடர்

இக்கப்பல், அக்காலத்தில் மிகப் பெரிய கப்பலாகும். ஐம்பதாயிரம் டன்கள் கொண்ட அக்கப்பலைத் தயாரித்தோர், அதனை கடவுளால் கூட மூழ்கடிக்க முடியாது என தம்பமடித்தனர்.

மேலும், இந்த நிகழ்வுகளுக்கு ஆழமான காரணங்கள் உள்ளன. மனிதனுக்குச் சில பாடங்களைக் கற்பிப்பதே அவற்றின் குறிக்கோளும் நோக்கமும் ஆகும். பௌதீக சூழல்களையே நம்பியிருக்கும் ஒரு நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு கப்பலின் பெரிய அளவு, அதன் வலிமை, இயந்திரங்களின் பரிபூரணம் அல்லது ஒரு மாலுமியின் திறன் பாதுகாப்பை உறுதி செய்யும் என மனிதர்கள் கற்பனை செய்கின்றனர். ஆனாலும், இந்தப் பேரழிவுகள் சில நேரங்களில் நிகழவே செய்கின்றன. ஆனால் அவை கடவுளே உண்மையான பாதுகாவலர் என்பதை மனிதர்கள் அறியச் செய்வதற்காகும். மனிதனைப் பாதுகாப்பது கடவுளின் விருப்பமாக இருந்தால், ஒரு சிறிய கப்பல் கூட அழிவிலிருந்து தப்பிக்கலாம், அதே நேரத்தில் சிறந்த மற்றும் மிகவும் திறமையான மாலுமியைக் கொண்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட கப்பல் கூட அப்போது கடலில் நிலவிய ஆபத்தில் (பனிப்பாறைகள்) இருந்து தப்பிக்க முடியாது. இதன் நோக்கம் என்னவென்றால், உலக மக்கள் ஒரே பாதுகாப்பாளரான இறைவனிடம் திரும்ப வேண்டும்; மனித ஆன்மாக்கள் அவருடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கவும், அவர்தான் உண்மையான பாதுகாப்பு என்பதை அறிவதற்கும். மனிதனின் (கடவுள்) நம்பிக்கை அதிகரிக்கவும், பலப்படுத்தப்படவும் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன. எனவே, நாம் வருத்தமும், மனச்சோர்வும் அடைந்தாலும், நம் இதயங்களை இராஜ்யத்தின்பால் திருப்பி, இந்த மறைந்த ஆத்மாக்களுக்காக அவரது எல்லையற்ற இரக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும். இதனால், அவர்கள் இந்த பூவுலக வாழ்க்கையை இழந்திருந்தாலும், பரலோக பிதாவின் உன்னத மாளிகைகளில் ஒரு புதிய வாழ்வை அனுபவிக்க முடியும். (அனைத்துலக அமைதிக்கான பிரகடனம்)

அத்தகைய நெஞ்சை பிளக்கின்ற நிகழ்வுகளுக்குப் பின்னால் அறிதிடவியலாத ஒரு தெய்வீக விவேகம் உள்ளது. அது ஓர் இரக்க  குணமுடைய  தோட்டக்காரர் அப்போதுதான் மலர்ந்திட்ட, ஒரு மென்மையான செடியை ஒரு நெருக்கமான இடத்திலிருந்து ஒரு விசாலமான இடத்திற்கு இடம் மாற்றி நடுவதைப் போன்றாகும். இந்த இடமாற்றமானது அந்தச் செடி  வாடிப் போவதற்கோ, குறைவுபட செய்வதற்கோ அதை அழிப்பதற்கான காரணமோ அல்ல; இல்லை, மாறாக, அது அந்தச் செடியை வளரவும் செழுமை அடையவும் செய்திடும், செழிப்பும் மென்மையும் பெற்று, பசுமையாக்கி  கனி  கொடுக்கவும் செய்திடும். இந்த மர்மமான இரகசியத்தை அந்த தோட்டக்காரர் நன்கறிவார், ஆனால் இந்த அருட்கொடையைப் பற்றி அறிந்திராத ஆன்மாக்கள், தோட்டக்காரர் தன் கோபத்தினாலும் சீற்றத்தினாலும் அந்தச் செடியை வேருடன் பிடுங்கிவிட்டார் எனக் கருதுகின்றனர். ஆனால் அறிந்தவர்களுக்கு, இந்த மறைவான உண்மை தெளிவானதாகும்; முன்கூட்டிய நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கட்டளை ஒரு கருணையாகக் கருதப்படும். (அப்துல்-பஹா, அப்துல்-பஹாவின் தேர்வு செய்யப்பட்ட சில வாசகங்கள், பக். 199-200)

சோதனைகளும் இடுக்கண்களும், நம்மை கடவுளிடம் அணுக்கமுறச் செய்வதற்காகவே நிகழ்கின்றன. ஆனால் அத்தகைய நிகழ்வுகளில் சிக்கிக்கொண்டோர் அவற்றின் உண்மையான நோக்கத்தை அறியாமல் இருக்கலாம். இருப்பினும், இத்தகைய பேரிடர்களில் சிக்கிக்கோண்டோருக்காக நாம் பிரார்த்திப்போமாக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: