துருக்கியில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்திட அவசர மேசை உருவாக்கப்பட்டுள்ளது


16 பிப்ரவரி 2023

இஸ்தான்புல், துருக்கி – துருக்கி மற்றும் அருகிலுள்ள நாடுகளை உலுக்கிய பேரழிவுமிக்க நிலநடுக்கங்களின் ஆரம்பத் தருணங்களிலிருந்து, துருக்கியில் உள்ள மண்டல மற்றும் தேசிய மட்டத்தில் உள்ள பஹாய் ஸ்தாபனங்கள் மக்களின் பாதுகாப்பை மதிப்பீடு செய்வதற்கும் தற்போதைய நிவாரணப் பணிகளில் அவர்களின் பங்களிப்பை ஒருங்கிணைப்பதற்கும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உள்ளூர் சமூகங்களுடன் அணுக்கமாகத் தொடர்புகொண்டு வருகின்றன.

இந்த முயற்சிகளின் மையத்தில், முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குள் துருக்கியின் பஹாய் தேசிய ஆன்மீக சபையால் உருவாக்கப்பட்ட அவசர மேசை உள்ளது. இந்த மேசை விரைவில் இஸ்கெண்டரூனில் உள்ள உள்ளூர் பஹாய் ஸ்தாபனங்களுடனும், ஹட்டாய் மாகாணத்தில் உள்ள வேறு சில உள்ளூர்களுடனும் தங்கள் சக நாட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்திகளைப் பற்றி ஆலோசிக்கத் தொடங்கியது.

பல ஆண்டுகளாக பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் பங்கேற்பாளர்கள் மற்றும் வழிநடத்துனர்கள் மத்தியில் உருவான முறைசாரா வலையமைப்புகளும் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபைகளும் அவசரகால மேசையை நம்பகத்தன்மையுடனும் விரைவாகவும் பல்வேறு வட்டாரங்களில், குறிப்பாக்க கிராமப்புறங்களில் முக்கிய தகவல்களைச் சேகரித்து அனுப்பிட உதவியது..

அடானா, இஸ்கெண்டரூன் மற்றும் செரின்யோல் பஹாய்கள், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடுகையில் அதிகாரிகள், முதல் விடையிருப்பாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோருக்கு மையமாகச் செயல்பட தங்கள் உள்ளூர் பஹாய் மையங்களைத் திறந்து விட்டுள்ளனர் என மேசை தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் இடம்பெயர்க்கப்பட்ட மக்களுக்குத் தங்குமிடத்தையும் வழங்கியுள்ளன.

இதற்கிடையில், மேசையானது, அவற்றின் உடனடி அணுகலுக்கு அப்பாற்பட்ட வளங்களுடன் சமூகங்களை இணைக்க முடிந்துள்ளது. ஒரு கிராமத்தில், மின்சாரம் இல்லாததால் சமையல் வேலைகளும் கால்நடை பராமரிப்பும் மிகவும் கடினமாக இருந்தது. அவசர மேசை, அருகிலுள்ள இடத்திலிருந்து ஜெனரேட்டர் ஒன்றைத் தேடிப் பிடித்து விநியோகித்தது. பல இடங்களில் இதே போன்ற தேவைகளுக்கு விடையிருக்கும் விதமாக, மேசை இப்போது அதிக ஜெனரேட்டர்களைப் பெறுவதற்கு முயன்று வருகின்றது.

நாட்டின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தெளிவாகத் தெரிந்தாலும், அவசர மேசைக்கு உத்வேகமளிக்கும் அறிக்கைகள் கிடைத்து வருவதாக தேசிய ஆன்மீகச் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கைகளில் ஒன்று, தனது வீட்டை இழந்த பிறகும், அருகிலுள்ள நகரத்திலிருந்து தண்ணீரையும் உணவையும் சேகரித்து தனது அண்டை வீட்டாருக்கு விநியோகிக்கத் தீர்மானித்த ஒரு நபரைப் பற்றி விவரிக்கின்றது. அவர் சென்றுகொண்டிருந்த போது, வழியில் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துள்ளார் என்னும் துக்கச் செய்தி கிடைத்தது. இந்தச் சிரமத்திற்கு மத்தியிலும் அவர் விடாமுயற்சியுடன் செயல்பட்டார். அந்த நேரத்தில், உள்ளூரில் உணவோ தண்ணீரோ எதுவும் கிடைக்காததால் இது இன்றியமையாத ஒன்றாக விளங்கியது.

பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் மூலம் பேணப்படும் சேவையை நோக்கிய ஒரு நோக்குநிலையும் நட்பின் பிணைப்புகளும் எவ்வாறு நெருக்கடிக்கு விடையிறுப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன என்பதை அவசரகால மேசை அவதானித்துள்ளது. “இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒருமைப்பாட்டின் ஓர் உயர்ந்த உணர்வை உணர்கிறார்கள். மேலும், தேவைப்படும் எவருக்கும் உதவ உந்துதல் பெறுகின்றனர், அண்டை வீட்டாரையும் அந்நியர்களையும் தங்கள் சொந்தக் குடும்பத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கின்றனர்” என மேசையின் உறுப்பினர் ஒருவர் கூறுகிறார். “உதாரணத்திற்கு, பலர் தற்காலிக குடியிருப்புத் தேவைப்படும் மக்களுக்காகத் தங்கள் வீடுகளைத் திறந்துவிட்டுள்ளனர்.” அதன் அவசரகால மேசை சார்ந்த முயற்சிகளுக்கும் மேலதிகமாக, நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து தேசிய ஆன்மீக சபை ஊக்கமளிக்கும் வார்த்தைகளை தெரிவித்து வருகிறது. சபையானது அதன் கடிதம் ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளது: “இந்த நெருக்கடியான தருணத்தில், ஒவ்வொரு சூழலிலும், எல்லா சூழ்நிலைகளிலும் நம் சக குடிமக்களின் தேவைகள் சார்ந்த சேவைகளில் நாம் அனைவரும் அர்ப்பணிப்பு மற்றும் தியாக முயற்சியுடன் ஈடுபடுவோமாக. …அனைவருக்கும் நம்பிக்கையளியுங்கள், அவர்களின் காயங்களை அன்பினால் குணப்படுத்துங்கள்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1643/