
1 மார்ச் 2023
வில்மெட், ஐக்கிய அமெரிக்கா – அமெரிக்காவின் வில்மெட் நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம் சமீபத்தில் கருப்பு வரலாற்று மாதத்தை நினைவுகூரும் கலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மாலை என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்தது.
அமெரிக்கா முழுவதும், ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் அதன் சாதனைகளை கௌரவிப்பதற்கும் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் அனுசரிப்புகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பஹாய் கோயில் வளாகத்தில் கூடிய சுற்றியுள்ள அண்டைப்புறங்களிலிருந்தும் அதற்கு அப்பாலும் இருந்து சுமார் 350 பேரைத் திரட்டிய அந்த ஒன்றுகூடல், ஒருமை மற்றும் இன ஒற்றுமையின் ஆன்மீகக் கொள்கைகளை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்தக் கோட்பாடுகள் குழுப்பாடல், ஆர்கெஸ்ட்ரா இசை, கவிதை, கோயிலின் கீழ்த்தள மண்டபத்தில் ஒரு கலை கண்காட்சி ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. இந்தக் கண்காட்சியில் இன நல்லிணக்கத்தை வளர்ப்பதில் பஹாய் சமூகத்தின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டும் தேசிய பஹாய் ஆவணக்காப்பகத்தின் வரலாறு சார்ந்த பல பொருட்களும் இடம்பெற்றிருந்தன. இது, பொதுமை சமூகத்தின் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்ட மாலைநேர சொற்பொழிவுகள் பலவற்றின் கருப்பொருளாக இடம்பெற்றிருந்தன.

“இன்றிரவு இந்த மண்டபத்தை நிரப்புவதானது, வரவிருக்கும் ஆண்டுகளில் மேன்மேலும் அதிகரிக்கக்கூடிய தொடர்புகள் மற்றும் உறவுகளின் வரிசையாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என கோவில் இயக்குநர் ஜார்ஜ் டேவிஸ் தமது உரையில் கூறினார். “பஹாய் வழிபாட்டு இல்லம் இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவதும், வழிபாட்டுக்கும் சேவைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதும் முக்கியமாகும்.”
வழிபாட்டிற்கும் சேவைக்கும் இடையிலான தொடர்பு அடித்தட்டிலும் வெளிப்படுவதைக் காணலாம் என திரு டேவிஸ் குறிப்பிட்டார். அமெரிக்கா முழுவதும் நடைபெறும் பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த முன்முயற்சிகள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, பொது நன்மைக்குச் சேவை செய்வதற்கான அவர்களின் பகிரப்பட்ட விருப்பத்தில் அவர்களை ஒன்றிணைக்கின்றன.
இந்த நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக இருக்கும் இன்றியமையா மனிதகுல ஒருமைப்பாடு என்னும் கோட்பாட்டை அமெரிக்க பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் கென்னத் போவர்ஸ் மேலும் ஆராய்ந்தார், அவர் இது “நமது காலத்தின் முக்கிய கொள்கை” என கூறினார். அவர் மேலும் கூறினார்: “இந்த விழிப்புணர்வின் பற்றாக்குறையும், அதைச் செயல்படுத்துவதற்கான திறனின்மையும் இன்று அமைதி மற்றும் செழிப்புக்கு முக்கிய தடையாக உள்ளன, … [இதன் விளைவாக] நாம் யார் என்பதைப் பற்றிய சிதைவான பார்வைகளும், அதனுடன் இணைவான அனைத்து தப்பெண்ணங்களும் உள்ளன..”

இனவாதத்தைப் புரிந்துகொள்வதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் ஒரு விரிவான அணுகுமுறையை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய போவர்ஸ், தற்போது நடைபெற்று வரும் இன நீதிக்கான போராட்டத்தை அங்கீகரிக்காமல் கடந்த காலத்தின் மீது குறுகிய கவனம் செலுத்துவதற்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார். “இது வெறும் வார்த்தைகளுடன் முடிவடையும் உரையாடலாக இருக்கக்கூடாது: [இது] அனைத்து மக்களும் முழுமையாக பங்கேற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு வழிவகுக்க வேண்டும்.”
1912-ஆம் ஆண்டில் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின் போது, ‘அப்துல்-பஹா வில்மெட்டில் எதிர்கால வழிபாட்டு இல்லத்திற்கான அடித்தளத்தை அமைத்ததிலிருந்து, இப் புனித அமைப்பு ஒருமையை குறிக்கின்றது.
அடிக்கல் நாட்டு விழாவிற்கு சில நாள்களுக்கு முன்பு, நியூயார்க் டைம்ஸ் ‘அப்துல்-பஹாவின் அமைதி பற்றிய செய்தி’ குறித்து ஒரு செய்தியை வெளியிட்டது. “தப்பெண்ணங்களை அகற்றுமாறு மனிதகுலத்திற்கு அழைப்பு விடுத்தது… தேசியம், இனம், மதம் ஆகியவற்றின் தப்பெண்ணம்.” “மனித உலகின் ஒருமைப்பாடு என்னும் பதாகையை மனிதகுலம் உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, அப்போதுதான் பிடிவாத சூத்திரங்களும் மூடநம்பிக்கைகளும் ஒரு முடிவுக்கு வரும்” என அந்தக் கட்டுரை மேற்கோளிட்டுள்ளது.
அமெரிக்காவின் வில்மெட்டில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் கருப்பு வரலாற்று மாத அனுசரிப்பின் பதிவை இங்கே காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1646/