20 ஏப்ரல் 2023
ரித்வான் 12 நாள் திருவிழாவைக் கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள பஹாய்களுடன் நாம் ஒன்றுசேரும்போது, இந்த விசேஷ நாள்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இது பாக்தாத்தில் உள்ள ரித்வான் தோட்டத்தில் 12 நாள்கள் பஹாவுல்லா தங்கியிருந்ததைக் குறிக்கின்றன.
1. திருவாக்கு
ரித்வான் என்பது அரபு மொழியில் “சொர்க்கம்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது; அது ஆன்மீக அழகு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒர் இடம் அல்லது மையத்தை விவரிக்க பஹாய் திருவாக்குகளில் பயன்படுத்தப்படலாம். “தெய்வீகப் பிரசன்னம் என்னும் ரித்வான்” அல்லது “பேரொளிமிக்க மகிமையின் ரித்வான்” போன்ற சொற்றொடர்களில், ரித்வானை சொர்க்கம் என்னும் வார்த்தைக்கு ஒத்ததாக நாம் புரிந்துகொள்கிறோம்.
2. (ரித்வான்) திருவிழா
1863-ஆம் ஆண்டில் பாக்தாத்தில் உள்ள ரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லா கழித்த 12 நாட்களை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 21 முதல் மே 2 வரை 12 நாட்கள் வருடாந்திர திருவிழாவான ரித்வான் பண்டிகையை ரித்வான் பெரும்பாலும் குறிக்கிறது. இந்த நேரத்தில் அவர் தமது நம்பிக்கையாளர்களுக்குத் தமது தீர்க்கதரிசன பணியை அறிவித்ததுடன் அவரது ஸ்தானத்தை அனைத்து மதங்களிலும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஒன்றாக அறிவித்தார். ரித்வான், பாப் பெருமானார் பிரகடனம் இரண்டும், பஹாவுல்லாவினால் “இரு அதிபெரும் திருவிழாக்கள்” என பெயரிடப்பட்டுள்ளன. மேலும், அவை பஹாய் நாள்காட்டியிலும்் அவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன, மற்றும் பஹாய் உலகில் அதற்கேற்ப கொண்டாடப்படுகின்றன. ரித்வானின் 1, 9 மற்றும் 12-வது நாள்கள் புனித நாள்களாகக் கருதப்படுகின்றன; அந்நாள்களில் பணிநிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
3. முதலாம் நாள்
1863-ஆம் ஆண்டில், புத்தாண்டு (நவ்-ரூஸ்) கொண்டாடப்பட்ட சரியாக 31 நாட்களுக்குப் பிறகு, பஹாவுல்லா நகரின் நிர்வாக அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட பின்னர் பாக்தாத்திலிருந்து கான்ஸ்டான்டிநோப்பிள் வரை நான்கு மாத பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். பஹாவுல்லா தமது வீட்டை விட்டு வெளியேறி டைகிரிஸ் நதியின் குறுக்காக படகில் பயணம் செய்த பிறகு நஜிபிய்யா தோட்டத்தை அடைந்தார். அங்கு, அடுத்த 12 நாள்கள் பாக்தாத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு பிரியாவிடை அளித்திடுவார். பஹாவுல்லாவின் புறப்பாடு துக்கரமான நிகழ்வாக இருந்தபோதிலும், அதை விழுமிய பேரானந்தமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு திருவிழாவின் தொடக்க விழாவாக முன்னறிவித்தார்.
4. ஒன்பதாம் நாள்
ரித்வான் தோட்டம் என அழைக்கப்படும் நஜிபியிய்யா தோட்டத்திற்கு பஹாவுல்லா வந்த ஒன்பது நாட்களுக்குப் பின்னர், அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் அவருடன் இணைந்தனர். அதற்குள்ளாக, அடுத்தடுத்து பார்வையாளர்கள் பஹாவுல்லாவின் வருகையைத் தேடியும், அவரிடம் விடைபெறவும் தோட்டத்திற்கு படையெடுத்து வந்தனர். நபில் தனது விவரணையில், தோட்டத்திற்கு வந்தோர் தங்கியிருந்த கூடாரங்களுக்கிடையில் பஹாவுல்லா இரவில் நடந்து செல்வதைப் பற்றி விவரிக்கிறார்:
‘இந்த இராப்பாடிப் பறவைகளைப் பாருங்கள். இந்த ரோஜ மலர்களின் மீது அவற்றிற்கு உள்ள அளவு கடந்த நேசத்தினால், சாயத்திலிருந்து வைகறை வரை, தங்கள் கீதங்களைப் பாடிக்கொண்டும் தங்கள் ஆராதனைக்குறிய அவற்றுடன் பெரும் உணர்வெழுச்சியுடன் தொடர்புகொண்டும் இருக்கின்றன. ஆனால், தங்கள் அன்பரின் ரோஜா நிகர் அழகினால் பெரும் தகிப்படைந்துள்ளோம் எனக் கூறிக்கொள்வோர் மட்டும் எவ்வாறு தூங்க முடிகின்றது?’
5. பன்னிரண்டாம் நாள்
பஹாவுல்லா புறப்படுவதற்கு முன்பு ரித்வான் தோட்டத்தில் தங்கியிருந்த கடைசி நாள், எஞ்சியிருக்க வேண்டியவர்களுக்கு இழப்பும் சோகமும் நிறைந்த நாளாக இருந்தது.
நம்பிக்கையாளர்களும், நம்பிக்கையாளர் அல்லாதாரும் ஒன்றாக அழுது புலம்பினர். கூடியிருந்த தலைவர்களும், முக்கியஸ்தர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். எந்த நாவினாலும் விவரிக்க முடியாத அளவுக்கு உணர்ச்சிகள் கிளரப்பட்டன; அவற்றின் தொற்றலிலிருந்து எந்த பார்வையாளரும் தப்பிக்க முடியவில்லை.
நடுப்பகலில், தோட்டத்திற்கு அவர் வந்த 12 நாள்களுக்குப் பிறகு, பஹாவுல்லா ஒரு குதிரையில் ஏறி தோட்டத்தை விட்டுப் புறப்பட்டார்.
6. முக்கியத்துவம்
ரித்வான் பண்டிகையின் போதுதான், பஹாவுல்லா, முதன்முதலில், உலகின் அனைத்து மதங்களிலும் முன்னறிவிக்கப்பட்ட வாக்குறுதியளிக்கப்பட்ட கடவுளின் அவதாரம் என்னும் தமது ஸ்தானத்தைப் பகிரங்கமாக அறிவித்தார். பஹாய் சமயத்தின் ஆரம்பமான ஒரு புதிய சகாப்தத்தை முன்னறிவிக்கும் ஒரு திருவெளிப்பாட்டை அவர் தம்முடன் கொண்டு வந்தார்.
7. தோட்டங்கள்
மேற்குறிப்பிட்ட ரிட்வான் தோட்டம் நஜிபிய்யா தோட்டத்தைக் குறிக்கிறது, அங்கு பஹாவுல்லா பாக்தாத்தில் தமது கடைசி 12 நாட்களைக் கழித்தார், அங்கு அவருக்கு பிரியாவிடை கொடுக்க வந்த நண்பர்களை வரவேற்றார். உண்மையில், பஹாய்களால் குறிப்பிடப்படும் இரண்டாவது ரித்வான் தோட்டம் ஒன்றும் உள்ளது. அசல் ரித்வான் திருவிழாவில் பஹாவுல்லா தமது பணியை அறிவித்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இறுதியில் இன்றைய இஸ்ரேலில் உள்ள சிறை நகரான அக்காநகருக்கு வெளியே ஒரு வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். பஹாவுல்லாவின் மகனார் அப்துல் பஹா, பஹாவுல்லா அடிக்கடி சென்றுவருவதற்காக வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய தீவுத் தோட்டத்தை வாடகைக்கு எடுத்தார். பஹாவுல்லா இந்த தோட்டத்திற்கு ரித்வான் தோட்டம் என பெயரிட்டார். ஒரு முறை ஒன்பது நாட்கள் வரை அங்கு யாத்ரீகர்கள் அவரைத் தரிசிக்க வந்தனர்.
8. தேர்தல்கள்
பஹாய் சமூகத்தை இன்று வரை நிர்வகித்து வரும் ஒரு தனித்துவமான நிர்வாக முறையை பஹாவுல்லா ஸ்தாபித்தார். தனித்துவமான தேர்தல் மற்றும் கலந்தாலோசனைக் கொள்கைகள் தொகுப்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட பஹாய் நிர்வாக அமைப்பு உள்ளூர், தேசிய மற்றும் அனைத்துலக மட்டங்களில் செயல்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அவைகள் குழுக்களைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மட்டத்தில், பஹாய் சமூக வாழ்க்கை உள்ளூர் ஆன்மீக சபையினால் நிர்வகிக்கப்படுகிறது – சமூகத்தின் விவகாரங்களை வழிநடத்தவும் நிர்வகிக்கவும் ஒன்பது பேர் கொண்ட சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு. உள்ளூர் ஆன்மீக சபை ரித்வான் முதல் நாளில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இது, பஹாய் நாள்காட்டியின்படி, ஏப்ரல் 20 அன்று சூரிய அஸ்தமனத்தில் தொடங்கி ஏப்ரல் 21 அன்று சூரிய அஸ்தமனத்தில் முடிவடைகிறது.
ஷோகி எஃபென்டி கூறுகின்றார்:
அது ஸ்தாபிக்கப்படும் வரை, கிழக்கு மற்றும் மேற்கு முழுவதும் சம சீரான தன்மையை உறுதி செய்வதற்காக, அனைத்து உள்ளூர் சபைகளும் ஆண்டுக்கு ஒரு முறை, ரித்வான் முதல் நாளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், மற்றும் முடிந்தால், வாக்குப்பதிவின் முடிவு, அதே நாளில் அறிவிக்கப்பட வேண்டும்.
9. பேராளர் மாநாடுகள்
‘தேசிய ஆன்மீக சபை’ என அழைக்கப்படும் நாட்டின் பஹாய் தேசிய நிர்வாக அமைப்பில் பணியாற்றக்கூடிய ஒன்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மை நோக்கத்திற்காக உலகெங்கிலும் உள்ள பஹாய்கள் ஆண்டுக்கு ஒரு முறை அந்தந்த நாடுகளில் ஒரு தேசிய பேராளர் மாநாட்டை நடத்துகின்றனர்.
இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள பஹாய் உலக மையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பஹாய் சமயத்தின் அதிவிழுமிய உலகளாவிய ஆட்சி மற்றும் நிர்வாக அமைப்பான ‘உலக நீதிமன்றத்தின்’ உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஓர் அனைத்துலக மாநாடு நடத்தப்படுகிறது.
வருடாந்திர தேசிய பேராளர் மாநாடு மற்றும் அனைத்துலகப் பேராளர் மாநாடு இரண்டும், அப்துல் பஹாவின் அறிவுறுத்தலின் பேரில், ஏப்ரல் 21 முதல் மே 2 வரை ரித்வான் காலத்தில் நடத்தப்படுகின்றன.
10. செய்திகள்
ஒவ்வொரு ஆண்டும் ரித்வானில், உலக நீதிமன்றம் உலக பஹாய்களுக்கு ஒரு ரித்வான் செய்தியை வெளியிடுகிறது. சட்டமியற்றும் அதிகாரமாக இருப்பதால், பஹாய் சமூகம் அதன் ஆன்மீக மற்றும் நிர்வாக விவகாரங்களில் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் வழிகாட்டுதலுக்காக உலக நீதிமன்றத்தை நோக்கித் திரும்புகின்றது.
பஹாவுல்லா கூறுகின்றார்:
. . .ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புதிய பிரச்சினை உள்ளது, ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு விரைவான தீர்வு உள்ளது, அத்தகைய விவகாரங்கள் காலத்தின் தேவைகள் மற்றும் அவசியங்களுக்கு ஏற்ப நீதி சபையின் நிர்வாகஸ்தர்கள் செயல்பட, அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
1863-ஆம் ஆண்டில் ரித்வானின் போது தமது பிரகடனத்துடன் தொடங்கிய புதிய சகாப்தம் குறித்த தமது தொலைநோக்கை பஹாவுல்லா பகிர்ந்து கொண்டது போன்றே, உலக நீதிமன்றமும் தொடர்ந்து பரிணமித்து வரும் உலகில் பஹாய் சமூகத்தை தன்னுடன் இணக்கமாக வைத்திருக்க ஒவ்வொரு ரித்வானிலும் தொடர்ந்து செய்துவருகின்றது.
11. நிருபங்கள்
ரித்வான் பண்டிகையின் போதும், அப்பண்டிகைக்காகவும் பஹாவுல்லா வெளிப்படுத்திய பல நிருபங்கள் உள்ளன. இந்தப் புனித வார்த்தைகள் பெரும்பாலும் ரித்வான் நிகழ்வைக் குறிக்கவும், அதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கவும், பஹாய் சமூகத்திற்கு அதன் நீடித்த தாக்கத்தினால் பயன் பெறவும் உரக்கவோ அல்லது தனிப்படவோ வாசிக்கப்படுகின்றன.
“கருணைமயமான அவர் ரித்வானை நோக்கி அடியெடுத்து வைத்து, அதனுள் பிரவேசித்துள்ளார் என்னும் செய்தியினைப் படைப்பு முழுமைக்கும் பிரகடனஞ்செய்ய எழுவீராக. பிறகு, இறைவன் தமது சுவர்க்கத்தின் அரியாசனமாக ஆக்கியுள்ள பேருவகை என்னும் பூங்காவின்பால் மக்களை வழிநடத்திச் செல்வீராக. உம்மை யாம், எமது அதிவலிமைமிகு எக்காளமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதன் எக்காள ஒலி முழக்கம் மனிதகுலம் அனைத்தின் மறுவுயிர்த்தெழுதலுக்குச் சமிக்ஞை காட்டிடும்.”
12. அதன் முக்கியத்துவம்
இறுதியாக, பாக்தாத்தில் அவரைச் சுற்றிக் கூடியிருந்த நண்பர்களைப் போன்றே, அவரது பிரசன்னத்தின் சொர்க்கத்தைத் தேடும் பஹாவுல்லாவின் சீடர்களாக, “பண்டிகைகளின் அரசனை” அங்கீகரிக்கும் கடமை நமக்கு வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதற்கான ஆசீர்வாதமும் நமக்குள்ளது.
மூலாதாரம்: https://www.bahaicenterwashtenawcounty.org/blog/12-things-about-ridvan/