
பஹாய் உலக மையம் – பஹாய் புனித ஸ்தலங்களுக்குச் சென்று ஆன்மீகத் தயாரிப்புக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள 176 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,250 பிரதிநிதிகள் இன்று உலக நீதிமன்றத்தின் தேர்தலுக்குப் பயபக்தியுடன் வாக்களிக்க ஒரு முக்கியமான ஒன்றுகூடலில் ஒன்றுகூடினர். நேரடியாக வராதோர் வாக்குகள் உட்பட பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1590ஐத் தாண்டியது.
நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினரான ஹோலி வுடார்ட் தமது தொடக்கக் கருத்துக்களில், இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், இது “இதுவரை அதிக எண்ணிக்கையிலான சபைகள் பிரதிநிதிக்கப்பட்டதும், ஓர் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பாளர்களின் மிகப்பெரிய கூட்டமும் ஆகும்” என குறிப்பிட்டார். ”
டாக்டர் வூட்டார்ட், “51 தேசிய மற்றும் மண்டல ஆன்மீக சபைகளின் 288 உறுப்பினர்கள் ஹைஃபாவில் உள்ள அப்துல்-பஹா மாளிகையின் பிரதான மண்டபத்தில் 1963இல் உலக நீதிமன்றத்தின் முதல் தேர்தலுக்காக ஒன்றுகூடியதில் இருந்து” பல தசாப்தங்களான உலகளாவிய பஹாய் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை சுட்டிக்காட்டினார்.
மாநாட்டின் தொடக்கத்தில், பல தசாப்தங்களாக பஹாய் ஸ்தாபனங்களை உருவாக்குவதிலிருந்து தடுக்கப்பட்டு, அதனால் பேராளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தடைகளுக்குள்ளாகியிருந்த ஈரான் நாட்டு பஹாய்கள், பங்கேற்பாளர்களால் நினைவுகூரப்பட்டனர். மேலும் அவர்கள் அங்கு இல்லாதது 95 சிகப்பு ரோஜாக்களால் ஆன பூச்சென்டினால் குறிக்கப்பட்டது.
இன்று காலை நடைபெற்ற வாக்குப்பதிவு உலகளாவிய தேர்தல் செயல்முறையின் உச்சக்கட்டமாகும், இதில் வயது வந்த ஒவ்வொரு பஹாய்களும் பங்கேற்கலாம். பஹாய் தேர்தல்களில் வேட்புமனுக்களும் பிரச்சாரமும் இல்லாததால் அது தனித்துவமானது. அனைத்து தேசிய பஹாய் சபைகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அனைத்துலக பேராளர் மாநாட்டின் பிரதிநிதிகள், உலக நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என அவர்கள் நம்பும் ஒன்பது நபர்களுக்கு ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிக்கின்றனர்.
பஹாவுல்லா தமது சட்டப் புத்தகத்தில் வகுத்துள்ள உலக நீதிமன்றத்திற்கான ஆணை, பல பொறுப்புகளுக்கு மத்தியில் மனித குலத்தின் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது, கல்வி, அமைதி மற்றும் உலகளாவிய செழிப்பை மேம்படுத்துவது மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதும் ஆகும்.
உலகளாவிய பஹாய் சமூகத்தின் ஒற்றுமையை நீதிமன்றம் பாதுகாத்து, வளமான உலகளாவிய நாகரீகத்தை உருவாக்குவதில் பங்குபெறும் திறனை வளர்த்துக்கொள்ளவும், உலக அமைதி பற்றிய பஹாவுல்லாவின் பார்வையை மெய்நிலைப்படுத்திடவும் வழிகாட்டுகிறது.
நாளின் பிற்பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள், பேராளர்கள், ஆலோசகர்கள் மற்றும் , மனித இனத்தின் குறுக்குப் பிரிவைப் பிரதிநிதிக்கும் பிற பங்கேற்பாளர்கள் ரித்வான் பண்டிகையைக் கொண்டாடினர்.
166 ஆண்டுகளுக்கு முன்பு பஹாவுல்லா கடவுளின் அவதாரமாகப் பிரகடனப்படுத்தியதன் ஆண்டு நிறைவை இந்த விழா நினைவுபடுத்துகிறது. அப்போது அவர் வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தின் வருகையைக் குறிக்கும், தமது போதனைகளின் மையத்தில் இருக்கும் அத்தியாவசிய ஆன்மீகக் கொள்கைகளை அறிவித்தார்.
மாநாட்டின் இன்றைய காலை அமர்வின் படங்களைப் பார்க்க news.bahai.org ஐப் பார்வையிடவும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1658/




































