
2 மே 2023
பஹாய் உலக மையம் – உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் அவர்கள் வசிக்கும் சமூகங்களின் ஆன்மீக, தார்மீக மற்றும் லௌகீக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்காக நடந்து வரும் திறனாற்றல் உருவாக்க செயல்முறை குறித்து பிரதிநிதிகளிடையே பல நாட்கள் கலந்தாலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, அனைத்துலக பஹாய் மாநாடு இன்று நிறைவடைந்தது.
ஓர் அமர்வுக்குத் தலைமை தாங்கிய ஆஸ்திரேலியாவின் ஆலோசகர்கள் வாரியத்தின் உறுப்பினரான டெஸ்ஸா ஸ்க்ரைன் தமது தொடக்க உரையில் பின்வருமாறு கூறினார்: “நம் முன் உள்ள தொலைநோக்கு நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு தேசத்தின் பிரதிநிதிகளும், அங்கு இருக்க முடியாதவர்களும்… தங்கள் சொந்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.”
அசர்பைஜானைச் சேர்ந்த ரம்ஜான் அஸ்கர்லி, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கோட்பாட்டில் பஹாய் சமூகத்துடனான கலந்துரையாடல்களால் ஈர்க்கப்பட்ட மதச் சங்கங்கள் குறித்த அரசாங்கத்தின் மாநில செயற்குழு நடத்திய சகவாழ்வு குறித்த தேசிய மாநாட்டின் அனுபவங்களை எடுத்துரைத்தார். சமூக நல்லிணக்கம் குறித்த எங்கள் நாட்டின் முதல் மாநாடு இதுவாகும். அந்த அனுபவத்திலிருந்து, நம் சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாக தன்னலமற்ற சேவை போன்ற கருப்பொருள்களை ஆராய நாடு முழுவதும் பல மாநாடுகளை நடத்த அரசாங்கம் ஊக்குவித்தது.
மாலியைச் சேர்ந்த பிரதிநிதியான பல்லகிஸ்ஸா டோகோலா, தம் கிராமத்தில் பல பெண்கள் கல்வியறிவுடன் போராடுகிறார்கள் என கூறினார். பஹாய்களின் முயற்சிகள் பெரும்பாலும் பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வந்துள்ளன. “நாங்கள் பக்திக் கூட்டங்களை நடத்தி வருகிறோம், அத்துடன் ஆன்மீக மற்றும் தார்மீக ஆற்றலளித்தல் நிகழ்ச்சிகளை வழங்குகிறோம். இது கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் திறந்திருக்கும்,” என அவர் கூறினார். “இந்தத் திட்டங்கள் பங்கேற்பாளர்கள் தங்கள் கல்வியறிவுத் திறனை மேம்படுத்த உதவுகின்றன; சில பெண்கள் தாங்களாகவே வழிநடத்துனர்களாக மாறி வருகின்றனர்.”
மிகவும் இளமையாக இருந்த, பல பேராளர்கள், அவர்களில் சிலர், இளைஞர்களுடனான தங்கள் பணியின் முக்கியத்துவத்தையும், தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தையும் வலியுறுத்தினர்.
மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் நகைச்சுவை மிகுந்த ஒரு தருணத்தில், கரோலின் தீவுகளின் தேசிய ஆன்மீக சபையில் பணியாற்றும் தனது பஹாய் குழந்தைகள் வகுப்பு ஆசிரியருடன் ஓர் இளம் பேராளர் மேடைக்கு வந்தார். தனது ஆன்மீக அடையாளத்தைப் பேணுவதிலும், சேவைக்கான அவரது அர்ப்பணிப்பைப் பராமரிப்பதிலும் அவரது ஆசிரியர் ஆற்றிய முக்கிய பங்கை அப்பேராளர் எடுத்துரைத்து, பஹாய் கல்வித் திட்டங்களின் உருமாற்ற சக்தியைச் சித்தரித்தார்.
வெனிசுவேலாவின் கார்மென் ரோஜாஸ், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் இளம் பங்கேற்பாளர்களின் அயராத முயற்சிகளைப் பற்றி பேசினார். “சமுதாய மற்றும் பொருளாதார சவால்கள் வெனிசுவெலாவிலிருந்து மக்களை வெளியேற்றத் தூண்டியுள்ளன. இருப்பினும், சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர்கள் மீது அத்தகைய சக்திகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது. அவர்கள் தங்களைப் பகுத்தறியும் முன்னணியாளர்களாகக் வெளிப்படுத்தியுள்ளனர்— தேவைகளை நிவர்த்தி செய்யும் சமுதாய நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொள்வது மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்குப் பங்களிக்க உள்நாட்டிலேயே தங்கிடத் தீர்மானிப்பது.”
மால்டோவாவைச் சேர்ந்த பேராளரான அலெக்ஸாண்ட்ரா ஸ்டெபனோவா, அடித்தட்டு முன்முயற்சிகளின் சக்தியை எடுத்துக்காட்டினார். இது சமீபத்தில் ஓர் அண்டை சமூக மையத்தை நிறுவுவதில் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. “உள்ளூர் அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களே இந்தத் தொலைநோக்கை நனவாக்க எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படலாம் என்பதைப் பற்றி விவாதிக்க உதவும் கலந்தாலோசனை தளங்களின் தோற்றம் இதன் பின்னணியில் உள்ள படைப்பாற்றல் சக்தியாகும்” என அவர் வலியுறுத்தினார். இந்தச் செயல்முறையின் விளைவாக, குழந்தைகளும் இளைஞர்களும் மையத்தின் பராமரிப்பிற்கு அதிக பொறுப்புணர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர், இம்மையம் அவர்களின் சுற்றுப்புற மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்கான சமூகத்தின் முயற்சிகளின் மையமாக இருக்கும்.
பயிற்சிக்கழகத்தில் உள்ளார்ந்திருக்கும் சக்தியை மக்கள் புரிந்துகொண்டு, அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பொறுப்பேற்கும்போது ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க விளைவுகளைப் பல பங்கேற்பாளர்கள் விவரித்தனர்.
லாட்வியாவைச் சேர்ந்த பிரதிநிதியான நவா கோர்ரம் அகமது கூறுகையில், இளைஞர்கள் சிறு வயதிலிருந்தே அதிக அளவு குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தனத்தை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில், அவர்களின் சமூகத்தின் பஹாய் பயிற்சிக்கழகம் வழங்கும் தார்மீக ஆற்றலளித்தல் திட்டங்கள் “பாதுகாப்பான இடங்களாக” மாறிவிட்டன. இந்தக் கல்வி முயற்சிகள், “இளைஞர்கள் தங்கள் வளர்ச்சிக்குப் பொறுப்பேற்க உதவியுள்ளன. இந்த இளைஞர்கள் ஒவ்வொரு மாதத்திலும் சேவை, உடல்நலம் மற்றும் நட்பு போன்றவைப் பற்றி கற்றுக்கொள்ள வெவ்வேறு கருப்பொருளைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் இந்தச் சமூகத் தளங்களுக்கு சாந்தி மற்றும் அமைதி உணர்வைப் புகுத்துகின்றனர்.” சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளில் அவர்கள் காணும் வளர்ச்சியைப் பிரதிபலித்து, தங்களுக்கும் இதேபோன்ற இடங்களை உருவாக்குவதை ஆராய்ந்து வருகின்றனர்.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஜூடித் வாட்சன், அந்த நாட்டில் சூறாவளியால் சீரழிந்த ஒரு பகுதி குறித்து பேசினார். பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அண்டைப்புறம் சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் பொருளியல் மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்குவதற்காக “விரைவாகவும் விளைவுத்திறத்துடனும் அணிதிரள முடிந்தது…. இந்த முயற்சிகள் மூலம் உள்ளூர் அதிகாரிகளுடன் காலப்போக்கில் உருவாக்கப்பட்ட உறவுகள் நெருக்கடியின் போது மிகவும் பயனுள்ள ஒத்துழைப்பிற்கு இன்றியமையாதவை என அவர் குறிப்பிட்டார். பஹாய் கல்வித் திட்டங்கள் “மக்கள் தங்கள் பகுதிகளின் தேவைகளை அங்கீகரிப்பதற்கும் பதிலிறுப்பதற்குமான திறனை அதிகரிக்கின்றன” என அவர் வலியுறுத்தினார்.
உருகுவேயைச் சேர்ந்த ஒரு பேராளரான ரமோன் ஃபுமோன், உள்ளூர் பஹாய் ஆன்மீக சபைகள் அவர்கள் சேவை செய்யும் சமூகங்களின் முயற்சிகளை ஊக்குவிக்கவும் வழிநடத்தவும் அவற்றில் அதிகரித்து வரும் திறனைப் பற்றி கலந்துரையாடினார். “இந்த உள்ளூர் சபைகள் தனிநபர்களும் சமூகமும் தங்கள் சொந்த வளர்ச்சிக்குப் பொறுப்பேற்கும் திறனாற்றலின் வளர்ச்சியைத் தூண்ட கற்றுக்கொள்கின்றன.” சபையின் நிலைப்பாடு உள்ளூர் மட்டத்தில் தனிநபர்கள், சமூகங்கள், ஸ்தாபனங்கள் மற்றும் முகவாண்மைகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவின் வலுவான உணர்வைப் பேணுகிறது.
மேலும் ஒரு அமர்வுக்கு தலைமை வகித்து, அமெரிக்காவின் ஆலோசகர்கள் வாரியத்தின் உறுப்பினர் சோன்லா மரியா ஹீர்ன், “பஹாய் போதனைகளின் உத்வேகம் பெற்ற கல்வி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் இயக்கத்திலிருந்து எழும் ஒரு புதிய வகையான சமூக நடவடிக்கையாளர்” பற்றிப் பேசினார். இந்த இளைஞர்கள் ஒரு வலுவான ஆன்மீக அடையாளத்தைக் கொண்டுள்ளனர். இது “வீழ்ச்சியில் உள்ள ஒரு சமூகத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள அவர்களைச் சிறப்பாக தயார்படுத்துகிறது. மேலும், சமூக மேம்பாட்டிற்கான தைரியமான மற்றும் பகுத்தறியும் முன்னணியாளர்களாக மாற அவர்களை ஊக்குவிக்கிறது” என அவர் கூறினார்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1664/

நண்பர்களே, மேற்கொண்டு சுமார் 40 மனதைக் கவரும் படங்கள் உள்ளன. அவற்றைக்கான இங்கு செல்லவும்: https://news.bahai.org/story/1664/slideshow/