பஹாய் உலக மையம் – அனைத்துலக பஹாய் பேராளர் மாநாட்டு பங்கேற்பாளர்களின் பயணம் நேற்று மாலை மிகவும் உணர்ச்சிகரமாக முடிவடைந்தது, பேராளர்கள் பாஹ்ஜியில் உள்ள பஹாவுல்லாவின் சன்னதியைச் சுற்றியுள்ள புனித மைதானத்தில் ரித்வான் திருவிழாவை நினைவுகூர்ந்தனர் – இது அவர்களை உத்வேகத்தில் ஆழ்த்திய ஆழமான நெகிழ்ச்சி மிக்க அனுபவமாக இருந்தது.
பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, இறைத்தூதராகத் தமது பணியை பகிரங்கமாக அறிவித்த காலகட்டத்தை குறிக்கும் வகையில், ரித்வான் பண்டிகை பஹாய்களின் இதயங்களில் ஒரு விசேஷ இடத்தைப் பிடித்துள்ளது. ஏப்ரல் 21 முதல் மே 2 வரை கொண்டாடப்படும் இந்த பன்னிரண்டு நாள் திருவிழா, உலகெங்கிலும் உள்ள பஹாய்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பிரதிபலிப்புக்குரிய நேரமாகும். மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்கள் ரித்வான் உணர்விலிருந்து உத்வேகம் பெற்றனர். இது ஒற்றுமை மற்றும் புதுப்பித்தலின் ஒரு முக்கிய தருணத்தை பிரதிநிதிக்கின்றது.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் இல்லங்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கியபோது, பாஹ்ஜியில் நடந்த நினைவேந்தலானது மாநாட்டுக்கு ஒரு உருக்கமான கவசமாக அமைந்தது. கடந்த நாட்களில் அவர்களின் அனுபவத்தால் செறிவூட்டப்பட்ட பேராளர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்குத் திரும்பும்போது, அது அமைதியான சமூகங்களைப் பேணுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு உயிரூட்டுகிறது.
பஹாய் உலக மையம் – ஹைஃபாவில் நடைபெற்ற ஒரு வரவேற்பு 13-வது அனைத்துலகப் பேராளர் மாநாட்டின் 160-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்கள் மற்றும் சுமார் 150 அரசாங்க அதிகாரிகள், இராஜதந்திரிகள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் யூத, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் ட்ரூஸ் சமய சமூகங்களின் தலைவர்களை, பேராளர் மாநாட்டுடன் தொடர்புடைய உலகளாவிய தேர்தல் செயல்முறையை மற்றும், சமூக தன்மைமாற்றத்தைப் பேணுவதற்கான பரந்த பஹாய் முயற்சிகளையும் ஆராய்வதற்கு ஒன்றுதிரட்டியது.
ஹைஃபா மேயர் ஐனாட் கலிஷ்-ரோட்டெம், பன்முகத்தன்மை கொண்ட குழுவில் உரையாற்றுவதற்கான வாய்ப்புக்கு ஆழ்ந்த மதிப்புணர்வைத் தெரிவித்து, பஹாய் சமயத்தின் மீதான தனது நீண்டகால ஆழ்ந்த மதிப்பை வெளிப்படுத்தினார். “ஹைஃபா நகரின் மேயராக உங்கள் முன் நிற்பது எனக்கு பெருமை அளிக்கிறது. அதன் அடையாள சின்னங்களில் ஒன்றான, பஹாய் சமூகத்தின் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக இடங்களில் ஒன்று இங்கு உள்ளது. பாப் பெருமானார் நினைவாலயம் மற்றும் படித்தளங்கள் உட்பட பஹாய் உலக மையம் ஒற்றுமை, அமைதி மற்றும் சமத்துவத்திற்கான பஹாய் அர்ப்பணத்தின் அடையாளமாகும்.”
டாக்டர் கலிஷ்-ரோட்டெம் மேலும் கூறியது: “ஹைஃபாவின் மேயர் என்னும் முறையில், பஹாய் சமயத்தின் விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், ஹைஃபாவின் அனைத்து குடியிருப்பாளர்களும் வரவேற்கப்பட்டு, மதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எங்கள் நகரம் பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்களின் தாயகமாகும், மேலும், எங்கள் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் போதும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படும்போதும் நாங்கள் மேலும் வலுவடைகிறோம் என்பது எனது நம்பிக்கை.
பஹாய் அனைத்துலக சமூகத்தின் பொதுச் செயலாளர் டேவிட் ரட்ஸ்டீன் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார்: “பஹாய் உலகின் மிக உயர்ந்த நிர்வாக அமைப்பான உலக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பது என்னும் ஒரு புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்காக நீண்ட தூரம் பயணித்த உங்களுக்கு பஹாய் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
மாநாட்டின் பேராளர்கள் சிலர் மாநாட்டில் கலந்து கொண்ட தங்கள் சொந்த அனுபவங்களைப் பற்றிப் பேசினர். கஸாக்ஸ்தானைச் சேர்ந்த பிரதிநிதி லியாசாட் யாங்கலியேவா, “உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒரே இடத்தில் கூடுவதையும், ஒரு பொதுவான, புனிதமான பொறுப்பில் ஒன்றுபடுவதையும் காண்பது இந்தக் கூட்டத்தை தனக்கு மிகவும் விசேஷமான ஒன்றாக ஆக்கியது” என கூறினார்.
யாங்கலியேவா இந்த மாநாட்டை, அதன் அழகு அவற்றின் பன்முகத்தன்மையால் அதிகரிக்கும் பல்வேறு மலர்கள் நிறைந்த ஒரு தோட்டத்துடன் ஒப்பிட்டார்.
வனுவாத்துவைச் சேர்ந்த பிரதிநிதி ஹென்றி தமாஷிரோ, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக மாநாட்டில் பங்கேற்ற அனைவரிடமும் பகிரப்பட்ட-விருப்பத்தை வலியுறுத்தினார். “எங்கள் நாளைகள் எங்களின் நேற்றைகளை விட சிறப்பாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என அவர் கூறினார்.
இந்த நம்பிக்கையை நனவாக்க, சமூகத்திற்குச் சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவத்தின் ஒரு புதிய கருத்தாக்கம் தேவை என திரு தமாஷிரோ கூறினார். மாநாட்டில் கலந்துகொள்வது சமூக முன்னேற்றத்திற்கான விருப்பத்தின் வெளிப்பாடு என அவர் மேலும் கூறினார். “பஹாய் சமயத்தின் நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பது உண்மையில் ஒரு சிறந்த உலகத்திற்கான எங்கள் தேடலில் உதவும்.”
சேவைக்கான அழைப்பாண என்னும் தலைப்பில் ஒரு 7 நிமிட திரைப்படம் இந்த நிகழ்விற்காகத் தயாரிக்கப்பட்டது, மற்றும் அது உலகளாவிய பஹாய் தேர்தல் செயல்முறையை ஆராய்கிறது. பஹாய் தேர்தல்கள் நியமனங்கள் மற்றும் பிரச்சாரம் இல்லாததால் அவை தனித்துவமுடையவை. பஹாய் அனைத்துலக சமூகத்தின் துணை பொதுச் செயலாளர் ஏரியன் சபேட் கூறுகையில், “பஹாய் சமயம் அதன் விவகாரங்களை நிர்வகிக்கும் விதத்தையும், மனிதகுலத்தின் நல்வாழ்வை மையமாகக் கொண்டு அடித்தட்டிலிருந்து அனைத்துலக மட்டம் வரை அதன் தேர்தல்களை நடத்தும் விதத்தையும் இந்தப் படம் விவரிக்கிறது. நிர்வாகமுறையில், அடிப்படையான ஒரு புதுமை என்ன என்பதைப் பற்றிய கண்ணோட்டத்தை இந்த படம் வழங்குகிறது. இதை மிகவும் பலக்கிய சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்த நாங்கள் கற்றுக்கொள்கிறோம்.”