

BIC ஜெனீவா – சமீபத்திய மாதங்களில் ஈரான் நாட்டின் பஹாய் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பது, அந்த நாட்டின் பஹாய்களை, அவர்களின் சமயத்தின் ஆரம்பத்திலிருந்தே பீடித்து வந்துள்ள துன்புறுத்தல்களின் தொடர்ச்சியான வெளிப்பாடாகும். அரசாங்கத்தால் தூண்டப்பட்ட இந்த அயராத தாக்குதல்கள் பல ஆண்டுகளாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இந்தப் பதிவுகளின் விரிவான மற்றும் அதிகரித்து வரும் தொகுப்பு பஹாய் அனைத்துலக சமூகத்தால் சேகரிக்கப்பட்டு, ஈரான் நாட்டில் பஹாய் துன்புறுத்தல் குறித்த ஆவணக்காப்பகங்களில் ஆன்லைனில் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பரந்த பொதுமக்களுக்கு இந்த துன்புறுத்தலின் போக்கையும் அதன் பல சம்பவங்களையும் விவரிக்கும் வரலாற்று ஆவணங்களுக்கான அணுகலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது, தனித்துவமான சேகரிப்பில் 10,000 க்கும் மேற்பட்ட ஆவணங்கள், படங்கள், மற்றும் 1848-ஆம் ஆண்டு முதல் ஈரான் நாட்டில் நடந்த துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான ஒலி மற்றும் காணொளி (audio and video) பதிவுகள் உள்ளன. காப்பகங்களில் உள்ள பெரும்பாலான உபகரணங்கள் 1979 -ஆண்டு முதல் மிக சமீபத்திய துன்புறுத்தல் அலைகளுடன் தொடர்புடையவை.
முழுவதுமாகத் தேடக்கூடிய காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் படங்களாக வழங்கப்படுவது மட்டுமல்லாமல், பெரும் சிரமத்துடன் உரை வடிவமாகவும் மாற்றப்பட்டுள்ளன. அவை பாரசீக அசலிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் கிடைக்கின்றன. ஈரான் நாட்டில் பஹாய் அனுபவத்தின் பரிமாணம் பற்றிய ஏராளமான ஆவணச் சான்றுகளை வழங்கும் இந்த அம்சங்கள், இந்த வகை தரவுத்தளத்தை தனித்துவமான ஒன்றாக ஆக்குகின்றன.
ஆவணக் காப்பகங்களில் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள், இப்போது ஈரான் நாட்டைப் பற்றிக் கொண்டிருக்கும் சமூக அமைதியின்மையை ஆழமாக எதிரொலிக்கின்றன. அங்கு அந்த நாட்டின் மக்கள் பல தசாப்தங்களாக பஹாய்களால் அனுபவிக்கப்பட்ட கஷ்டங்களை அவர்களும் இப்போது அனுபவித்து வருகின்றனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1667/