பரப்பியக்கம் 40 வருடங்களுக்கு முன் ஈரான் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பஹாய் பெண்களுக்கு மரியாதை செலுத்துவதுடன் சமத்துவம் குறித்த கோட்பாட்டை வலியுறுத்துகின்றது.


BIC ஜெனிவா – ஜூன் 18, 2023  ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒரு கொடூரமன ஒடுக்குமுறை செயலை மேற்கொண்ட 40 ஆண்டுகளைக் குறிக்கிறது: ஷிராஸ் நகரில் ஒரு பொது சதுக்கத்தில் ஒரே இரவில் 10 பஹாய் பெண்கள் தூக்கிலிடப்பட்டனர். ஒற்றுமை, நீதி, உண்மை ஆகியவற்றுடன் ஈரானில் இல்லாத மற்றும் குற்றமாக்கப்பட்ட பாலின சமத்துவக் கொள்கைகளை ஊக்குவிக்கும் ஒரு சமயத்தில் தங்கள் நம்பிக்கைகளைத் துறக்க மறுத்தது மட்டுமே அவர்களின் ஒரே ‘குற்றம்’.

ஒவ்வொருவராக தூக்கிலிடப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் அடுத்த பெண்ணின் மரணத்தைப் பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களின் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒருவருக்கு வயது 17 மட்டுமே; பெரும்பாலானோர் 20 வயதை கடந்தவர்கள். ஈரானிய அதிகாரிகளின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலால் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைக் குழுக்களும் சாதாரண குடிமக்களும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

அப்போதிருந்த உலகத் தலைவர்கள், தண்டிக்கப்படவிருக்கும் பஹாய் பெண்களும் ஆண்களும் அவர்களின் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட ஒரு வேண்டுகோள் அலையை வழிநடத்தினர். ஆனால், எந்தப் பயனும் இல்லை.

பஹாய் அனைத்துலக சமூகம் இப்போது தூக்கிலிடப்பட்ட பெண்கள் மற்றும் ஈரானில் பல தசாப்தங்களாக அனைத்து மதங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த பெண்கள் வாழ்ந்த, இன்றுவரை தொடரும் பாலின சமத்துவத்திற்கான நீண்ட போராட்டத்தை கௌரவிப்பதற்காக #OurStoryIsOne என அழைக்கப்படும் ஓர் உலகளாவிய பரப்பியக்கத்தை ஆரம்பிக்கின்றது,

“10 பஹாய் பெண்களின் இந்தக் கதை முடிந்துவிடவில்லை. இது ஈரானிய பெண்களின் மீள்திறம், சமத்துவத்திற்கான தியாகம் ஆகியவற்றின்  விரிவடையும் கதையில் ஒரு அத்தியாயம்” என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) பிரதிநிதி சிமின் ஃபஹண்டேஜ் கூறுகிறார்.

திருமதி ஃபஹண்டேஜ் மேலும் கூறுகிறார்: “இன்று, ஈரானில் சமத்துவத்தை விரும்பும் ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் இரத்தம், கண்ணீர் மற்றும் காயங்களில், ஷிராஸின் 10 பெண்கள் அனுபவித்த அநீதியின் எதிரொலிகளை நாம் காணலாம். நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்காக மிகுந்த முயற்சியுடன் எழுந்து நிற்பது என்ற அதே உணர்வை, அதே தேர்வை நாம் காண்கிறோம். கொடுமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், இன்றைய பெண்கள் – அவர்களுக்கு முன்பு இருந்தவர்களைப் போலவே – ஒரு நியாயமான மற்றும் வளமான ஈரானுக்காக தைரியமாக போராடி வருகின்றனர்.”

சில சந்தர்ப்பங்களில், தூக்கிலிடப்பட்ட பஹாய் பெண்கள் சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் தார்மீகக் கல்வியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். 19-ஆம் நூற்றாண்டிலிருந்து, ஈரானில் உள்ள பஹாய்கள் பெண்களுக்கான பள்ளிகளை நிறுவுவது உட்பட ஒவ்வொரு மட்டத்திலும் மேற்கொண்ட முயற்சிகள் மூலம் பாலின சமத்துவத்தை ஊக்குவித்துள்ளனர்.

“ஈரானில் உள்ள பஹாய் சமூகம் எப்போதும் முடிவெடுக்கும் செயல்முறைகள் உட்பட சமூகத்தின் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களின் முழு பங்கேற்புக்கு அழைப்பு விடுத்துள்ளது, அதற்காக பெரும் விலையை கொடுத்துள்ளது” என திருமதி பஹண்டேஜ் மேலும் கூறுகிறார். “இப்போது அனைத்து ஈரானியர்களுக்கும் சோகமாக விரிவுபடுத்தப்பட்டுள்ள 40 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட துன்புறுத்தலைத் தாங்கிக் கொண்ட பஹாய் சமூகம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பொருட்படுத்தாமல், பாலின சமத்துவம், நீதி மற்றும் கல்விக்கான அணுகலை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு புனித பூமியாகக் கருதும் ஈரானுக்குச் சேவை செய்வதற்கான அதன் உரிமையை வலியுறுத்தியுள்ளது.”

10 பெண்கள் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து நான்கு தசாப்தங்களாக, நூற்றுக்கணக்கான பஹாய் பெண்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளனர், பெண்கள் மற்றும் பஹாய்கள் என்பதில் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். புரட்சிக்குப் பிறகு, நாட்டில் முக்கிய சமூகப் பதவிகளில் பணியாற்றிய பஹாய் பெண்கள் அவர்களது வேலைகளில் இருந்து நீக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டனர். வாழ விடப்பட்டவர்கள் பல்கலைக்கழகங்கள், பொது வேலை வாய்ப்பு மற்றும் சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தடை செய்யப்பட்டனர்.

ஈரானில் இந்த நீண்டகாலப் போராட்டம் மற்றும் பாலின சமத்துவத்திற்கான முயற்சிகளை கௌரவிக்கும் வகையில், ஷிராஸின் 10 பெண்களின் ஞாபகார்த்தமாகவும், அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்த நீதி மற்றும் சமத்துவத்திற்கான காரணத்திற்காகவும், BIC இப்போது உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் அல்லது பிற படைப்புத் துறைகளில் உள்ளவர்களை அஞ்சலி செலுத்த அழைக்கிறது. பங்களிப்புகளில் பின்வருவன அடங்கும்: 10 பெண்களைப் பற்றிய பாடல்கள், அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய சிறு வீடியோக்கள், அப்பெண்களைப் பற்றி ஞாபகங்கள், கிராஃபிக் கலைகள், எழுத்துப் படைப்புகள், சமூக ஊடக இடுகைகள் அல்லது பொது நிகழ்வுகள் மற்றும் அஞ்சலிகள்.

“மேன்மேலும் அதிக ஈரானியர்கள் சமுதாய நீதிக்கான தேடலில் ஒன்றுபட்டு வருகின்றனர். அவர்கள், நாடு எதிர்நோக்கும் பெரும் சவாலான பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்,” என மிஸ் ஃபஹான்டேஜ் கூறுகின்றார். “ஷிராஸின் 10 பஹாய் பெண்களை மட்டுமல்ல,  ஒடுக்குமுறையில் எதிரில் தங்கள் விடாமுயற்சியின் மூலம் நாட்டின் சிறந்த எதிர்காலத்தை நிர்மாணித்திட பங்களித்துள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவக் கொள்கையைப் போற்றும் ஈரான் முழுவதும் உள்ள அனைத்துப் பெண்களையும் நாங்கள் ஒன்றாகக் கௌரவிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.”

நம்பிக்கை மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் நாம் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதைக் காட்ட, ஈரானுக்கான நமது கூட்டு முயற்சிகள் மற்றும் தியாகங்கள் மற்றும் எங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்ட அனுபவங்களால் நாம் ஒன்றுபடுவோம். இந்த 10 பெண்களின் மரணதண்டனையை நினைவில் கொள்வது ஈரானில் நீதி மற்றும் பாலின சமத்துவம் பற்றிய உரையாடல்களை வெளிச்சம் போட்டும் வலுப்படுத்தவும் செய்யும் என நம்புகிறோம். நமது கதை ஒன்றுதான், நமது பகிரப்பட்ட இலட்சியங்கள் உணரப்படும் வரை நாம் குரல் எழுப்பிக் கொண்டே இருப்போம்.

10 பெண்களின் மரணதண்டனையைச் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள் மற்றும் இந்த ஒவ்வொரு பெண்ணின்  வாழ்க்கை பற்றிய  கூடுதல் பின்னணியையும் இந்த BIC கட்டுரையில் காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1668/