காதலுக்கு கண்ணில்லை…


காலஞ்சென்ற சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய பாட்டு ஒன்று “காதலுக்குக் கண்ணில்லை காதில்லை கேளாயோ,” எனும் வரியோடு ஆரம்பிக்கின்றது. ஒரு வகையில் இது உண்மையே. வாலிப வயதில் இயற்கையின் உந்துதலுக்கு வயப்பட்ட குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயல்பாகவே ஏற்படக்கூடிய ஈர்ப்புச் சக்தி்யைக் காதல் எனக் கூறுகின்றோம். ஆனால் மிருகவியல்பான இவ்வீர்ப்புச் சக்தியை அன்பு எனக் கூறுவது தவறாகும். அன்பு திடீரென ஏற்படாது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளும் போது, அதாவது ஒருவர் மற்றவரின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டு, அக்குறைநிறைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் அக்கறையே அன்பாகும்.. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்புச்சக்தியோடு இவ்வித அன்பு சேரும்போது அங்கு உண்மையான காதல் உருவாகின்றது.

வெறும் காதல் லௌகீகமானது, எல்லைக்குட்பட்டது. அன்பு ஆன்மீகமானது. அன்பு என்பது “unconditional” அதாவது அது (நிபந்தனையற்றது) பாகுபாடு பார்க்காதது, எல்லையற்றது, எதிர்பார்ப்புகள் இல்லாதது. நல்லவர் கெட்டவர், என்னுடையது உன்னுடையது, அழகு குரூபம் என்ற பாகுபாடெல்லாம் உண்மையான அன்பிற்குக் கிடையாது. அதற்கு வயது வரம்பெல்லாம் கிடையாது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ், அன்பே உலக மகா சக்தி, அன்பே சிவம் என்பதெல்லாம் இவ்வித விதிகளுக்கு அப்பாற்பட்ட அன்பையே குறிப்பிடுகின்றன. ஆனால், இங்கு ஒரு விஷயத்தை நாம் மறுக்க முடியாது. பொதுவாக மனிதர்களுக்கிடையில் அன்பு எனும் ஒன்று இருந்தபோதும் திருமணமானவர்களுக்கிடையில் ஆன்மீக ரீதியான அன்பு என்பது உடல் சார்ந்த ஈர்ப்பு சக்தியோடு இணைந்திருக்க வேண்டும், அதாவது காதல் எனும் ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். உடலும் உள்ளமும் சேர்ந்ததே உண்மையான காதலாகும்.

பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பஹாய் உலகை வழிநடத்திய பஹாவுல்லாவின் மூத்த புதல்வரான அப்துல்-பஹா, அன்பு என்பது நான்கு விதமாக பிரிக்கப்படலாம் எனக் குறிப்பிடுகின்றார். அதாவது, கடவுள் மனிதன் மீது கொள்ளும் அன்பு, மனிதன் கடவுள் மீது கொள்ளும் அன்பு, மனிதன் மனிதன் மீது கொள்ளும் அன்பு மற்றும் கடவுள் தமது படைப்பினங்களில் வெளிப்படும் தமது சுயபிரதிபலிப்பின் மீது கொண்டுள்ள அன்பு. கடவுள் தமது படைப்பினங்களின் மீது கொள்ளும் அன்பை கருணை எனக் கூறுகின்றோம். மனின் சகமனிதன் மீது கொள்ளும் அன்பை பாசம், நேசம், காதல் என கூறுகின்றோம். தாய் தன் சேய்மீது கொள்ளும் அன்பு பாசமாகும். இது ஒரு தாய் தன் சேயின் மீது கொள்ளும் சுயநலம் கலந்த அன்பாகும். ஒரு குடும்பத்தினர் தமது பிற குடும்ப உறுப்பினர்கள் மீது கொள்ளும் அன்பும் இத்தகையதாகும். சினேகிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கொள்வது நேசமாகும். இதிலும் சுயநலம் கலந்துள்ளது. பருவமடைந்த ஓர் ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு காதலாகும். காதல் உணர்வில் காம உணர்வு கலந்தே இருக்கும். இல்லையெனில் அங்கு ‘காதல்’ பிறக்க வழியில்லை. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இது இயல்பாகவே, உள்படையான ஓர் உணர்வாகும். இவ்வுணர்வு பகுத்தறிவிற்கு உட்பட்ட ஓர் உணர்வல்ல.

வெறும் காதலைப் பொருத்தமட்டில் அது பல காரணங்களின் அடிப்படையில் ஏற்படக்கூடும். ஒரு வகையான காரணத்தைத் தமிழ் சினிமாப் படங்களில் காணலாம். அதில் காதல் வயப்படும் ஆண் வாலிப முறுக்கு மிக்கவராகவும், நல்ல உயரம் மற்றும் அழகுமிக்கவராகவும் இருப்பார். பெண்ணைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. அவர் உலக அழகி போன்று இருக்கவேண்டும். இல்லையென்றால் காதல் ஏற்பட வழியில்லை. குட்டையாக, கருப்பாக, சாதரமான பெண்களுக்கெல்லாம் தமிழ்ப் படங்களில் காதலுக்கு வழியில்லை போலும். வாலிப வயதைத் தாண்டியவர்களுக்குச் சினிமாப் படங்களில் வாழ்க்கை என்பதே இல்லை எனும் விதத்தில் படங்களின் ஹீரோக்களின் மீதே கவனம் மையப்படுத்தப்படுகின்றது. அதாவது, சினிமாவைப் பொருத்த மட்டில் அழகற்றவர்களுக்கு வாழ்க்கையே கிடையாதது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. “உண்மைக் காதல்” எனும் வார்த்தைகளை வேறு அவ்வப்போது நாம் இச்சூழலில் செவிமடுக்கின்றோம். அவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்னவென்பது தெரியுமா என்பது கேள்விக்குறியே. இப்படிப்பட்ட காதல் குறித்து சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய பாட்டின் வரிகளை எழுதியவர் இன்னொரு வார்த்தையையும் சேர்த்து எழுதியிருக்கலாம், அதாவதுகாதலுக்குக் கண்ணில்லை, காதில்லை என்பதோடு “மூளையும்” இல்லை என்று எழுதியிருக்கலாம்.

இப்படி இந்த சினிமா காதலைத் தினசரி நமது தொலைக்காட்சியிலும், வீடியோக்களிலும் காணும் இளவயதினர் மனதில் எவ்வித எண்ணங்கள் பதிகின்றன? அவர்கள் அறியாமல் அவர்களின் மனங்கள் எவ்வித பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன என்பது பொதுவாக அறியப்படவில்லை. இவ்வேளையில் Insidious” எனும் ஆங்கில வார்த்தை ஞாபகத்திற்கு வருகிறது. சிறு குழந்தைகள் இவ்வித சினிமாக்களைப் பார்க்கும் போது அவர்களின் மனங்களில் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை கருத்துகள் எத்தகையவையாக இருக்குமெனத்  தெரியவில்லை. மனித வாழ்விற்கு அஸ்திவாரமான அக அழகு, அதாவது மனித நற்பண்புகள் பற்றி அறிந்துகொள்வதற்குப் பதிலாக அவர்கள் புற அழகு குறித்தே பெரும்பாலும் தெரிந்துகொள்கின்றனர். முளைத்து மூன்று இலை விடுவதற்குள் இ்ப்போதெல்லாம் காதல் செய்யவும் நமது சிறார்கள் கிளம்பிவிடுகின்றனர். பிற்காலத்தில் தங்கள் சிறு வயதில் தாங்கள் அடைந்த அனுபவங்களின் அடிப்படையில் அவர்களின் வாழ்கையை அமைத்துக்கொள்ளவும் முயல்கின்றனர். இதன் விளைவு என்ன? முதல் கோணல் முற்றும் கோணல்.

இந்தியாவில் விவாகரத்து எனும் வார்த்தை அபூர்வமானது ஆனால், இன்று அங்கும் 2 – 5 விழுக்காடு திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மலேசியா போன்ற நாடுகளில் 10 – 20 விழுக்காடு திருமணங்கள் முறிந்து விடுகின்றன. அமெரிக்காவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அங்குப் பாதிக்குப் பாதி திருமணங்கள் பொசுங்கிப் போய்விடுகின்றன. பல மேற்கத்திய நாடுகளில் திருமணம் செய்துகொள்வது கூட குறைந்து “companionate marriage” எனும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் முறை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒருவரை ஒருவர் பிடிக்காது போகும்போது அவரவர் வழியே போய்க்கொள்ளலாம். அமெரிக்காவில் ஒரு பழமொழி (அல்லது புதுமொழி?) உண்டு. அதாவது, “ஒரு காலத்தில் பெற்றோர்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தன. ஆனால், இன்று குழந்தைகளுக்கு நிறைய பெற்றோர்கள் இருக்கிறார்கள்,” என்பது. இத்தகைய விளைவுகளினால் திருமணம் என்றாலே ஒரு விதமான பீதி (phobia) ஏற்படுகின்றது.

ஒரு காலத்தில் இத்தகைய பிரச்சினைகள் இல்லைதான். விவாகரத்து என்பது ஒரு கெட்ட வார்த்தையாக இருந்தது. ஆனால் அதற்காக அந்தத் திருமணங்களும் இக்கலாத்திற்குச் சரியென கொள்ளமுடியாது. காரணம், கடந்தகாலங்களில் ஆண்கள் சாம்ராஜ்யம் நடந்தது. கவன் வைத்ததே சட்டம் மற்றும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் (அல்லது கள்ளனானாலும் கணவன் மற்றும் புல்லனானாலும் புருஷன்?), கணவனே கண் கண்ட தெய்வம் என்றெல்லாம் போதனை வழங்கப்பட்டது. அந்தக் காலத்திற்கு இதெல்லாம் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று பெண்களும் ஆண்களுக்குச் சரி நிகர் சமமாக வாழ்கின்றனர், வேலைக்குச் செல்கின்றனர், சமூக விவகாரங்களில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த நிலைக்குத் தங்களை ஈடுபத்திக்கொள்ள முடியாத ஆண்களாலும், அதே வேளை தங்களுக்குக் கிடைத்துள்ள இப்புதிய சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படு்த்திக் கொள்ளாத பெண்களாலும் திருமணங்கள் முறிந்து போகின்றன.

இதற்கு முடிவுதான் என்ன?

பஹாய் திருமொழிகளில் ஒரு குறிப்பு உண்டு, “மனிதனை விலைமதிப்பற்ற இரத்தினங்கள் நிறைந்த ஒரு சுரங்கமாகக் கொள்வாயாக. கல்வி மட்டும் தனியே அதன் பொக்கிஷங்களை வெளிக்கொணரச் செய்து மனிதர்கள் அதன் வாயிலாக பயனடையச் செய்ய முடியும்,” என்பது ஏறக்குறைய அதன் கருத்து. இ்ங்குக் கல்வி என்பது தெய்வீகப்ண்புகள் பற்றிய ஆன்மீகக் கல்வியைக் குறிக்கின்றது. சிறு வயதிலேயே இத்தகைய கல்வியை வழங்குவதன் மூலம் நமது குழந்தைகள் சரியான உட்பார்வைகள் பெற்று, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக இத்தகைய கல்வி சிறு வயதிலேயே வழங்கப்பட வேண்டும். வளர்ந்து வாலிப வயதை அடைந்த பிறகு இதைச் சரி செய்ய நினைப்பது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும். இன்று உலகம் முழுவதும் பஹாய்கள் தங்கள் நண்பர்களோடு சேர்ந்து இத்தகைய கல்வியைத் தங்களைச் சுற்றியுள்ள குழந்தைகளுக்கு வழங்கிட முயன்று வருகின்றனர். குழந்தைகள் நற்பண்புகள் பற்றி தெரிந்துகொண்டும் தங்கள் ஆன்மீக ஆற்றல்களை அப்போதிருந்தே வளர்த்துக் கொள்ளவும் ஆரம்பிக்கின்றனர். தனிநபர் மற்றும் உலக பிரச்சினைகள் உடனே தீர்க்கப்பட முடியாதவை. சிறுக சிறுகவே இது மாற்றப்பட முடியும். ஆனால், அதற்கான முயற்சிகள் இப்பொழுதிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது ஏன்?


பஹாய்கள் இரான் நாட்டில் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர். இது கடந்த 160 வருடங்களாகவே நடந்து வருகிறது. பஹாய்கள் அமைதி விரும்பிகள். உலக மக்கள் ஆன்மீக ரீதியில் தன்மைமாற்றம் பெற வேண்டும், அவர்கள் தங்கள் படைப்பின் குறிக்கோளை உணரவேண்டும் அதன் வாயிலாக உலகில் சமயங்கள் ஒன்றுபட்டு மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவ வேண்டும் எனும் நோக்கில் பஹாய்கள் பாடுபடுகின்றனர் மற்றும் மனிதகுலத்திற்கு தங்களால் இயன்ற சேவைகளையும் செய்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் தங்கள் சமயத்தின் பிறப்பிடத்திலும் வேறு பல நாடுகளிலும் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது ஏன்? தற்போது இரான் நாட்டில் பல பஹாய்கள் மரண தண்டனைக்குள்ளாகி மேலும் பலர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு பலவித பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஏன்?

இக்கேள்விக்கான பதிலை பல கோணங்களிலிருந்து ஆராயலாம். முதலாவதாக சமய ரீதியில் இதைக் காண்போம்.

உலகின் பெரும்பாலான சமயங்கள் ஏதோ ஒரு வகையில் அவற்றின் ஸ்தாபகரின் மறைவுக்குப் பிறகு அதே ஸ்தாபகர் அல்லது அவதாரம் மறுபடியும் உலகில் தோன்றுவர் என போதித்துள்ளன. உதாரணமாக கிருஷ்னர் “கல்கி விஷ்ணு யாஷா” எனும் பெயரில் கலி யுகத்தின் முடிவில் அவதரித்து உலகில் தர்மத்தை நிலைநிறுத்துவார் என்பது ஐதீகம் மட்டுமல்ல பகவத் கீதையிலும் இதற்கான ஆதாரம் உள்ளது. புத்தரைப் பொருத்த மட்டில் அவர் புத்தர்களின் வரிசையில் நான்காவது புத்தர் எனவும் பிற்காலத்தில் ஐந்தாவது புத்தராக, “மைத்ரேயி அமிதபா” எனும் நாமத்தில் மறுபடியும் பூமியில் தோன்றுவார் என பௌத்தர்கள் நம்புகின்றனர். யூத மதத்தினர்களும் மோசஸ் குறித்து இது போன்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். கிருஸ்தவர்களும் இயேசு கிருஸ்து “இறைவனின் ஒளியில்” மறுபடியும் பூமியில் தோன்றி தமது விசுவாசிகளை இரட்சிப்பார் என எதிர்ப்பார்க்கின்றனர். இஸ்லாம் சமயத்தின் ஒரு பிரிவினரான சுன்ன வர்க்கத்தினரும் இயேசு மறுபடியும் தோன்றுவார், அதுவே கியாமத் நாள் எனவும் நம்புகின்றனர். அதே போன்று ஷீயா முஸ்லீம்கள் தங்களின் 12வது இமாம் ஆன இமாம் மெஹ்டி மறுபடியும் தோன்றுவார் என கூறுகின்றனர். இந்த நம்பிக்கையில் முதன்மையாக வீற்றிருப்பவர்களுள் தற்போதைய இரான் நாட்டு அதிபரான அஹ்மதிநிஜாட்டும் ஒருவராவார்.

ஆனால், அந்த அந்த தூதர்கள் எங்கு, எப்படி, எச்சூழ்நிலையில் தோன்றுவர் என்பன போன்ற கேள்விகளுக்கு அவற்றை போதிக்கும் திருநூல்கள் தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே, விசுவாசிகள் தாங்களே தங்கள் மனதில் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களின் இறைத்தூதர் இவ்வாறுதான் தோன்றுவார் அல்லது தோன்றவேண்டும் என முடிவு செய்து அதையே காலங்காலமாக நம்பி வருகின்றனர். யூதர்கள் இயேசு நாதரை மறுத்து அவர் மரணமுறுவதற்கு காரணமாக இருந்ததும் இவ்வித கற்பனையான நம்பிக்கைகளே ஆகும். இதை ஆங்கிலத்தில் ‘figments of imagination’ என கூறுவர். அவர் (இயேசு) டேவிட்டின் சிங்காதனத்தில் அமர்ந்து உலகை செங்கோல் செலுத்துவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால் அவரோ வெறும் மாட்டுத் தொட்டிலில் பிறந்தார். அவரது தந்தையோ ஒரு சாதாரன தச்சர். இதை காரணமாகக் கொண்டு அவரை கேலி செய்து பின்னாளில் அவர் சிலுவையில் அரையப்பட்டு மரணமும் அடைந்தார். ரோம் நாட்டில் அவரது விசுவாசிகள் பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பௌத்த சமயம் இந்தியாவில் உதித்த போது அது இந்திய நாட்டில் நிலைபெறாது சீன, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சியும் கண்டது. இந்திய நாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கிருஸ்துவ சமய நூலான பழைய ஏற்பாட்டிலும் ஆபிரஹாம் ஒரே கடவுள் கோட்பாட்டை போதித்த போது அவருக்கு நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆக, ஒரு புதிய சமயம் தோற்றம் காணும் போது அது மக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை மற்றும் அவற்றின் விசுவாசிகள் பலவித கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அப்புதிய சமயத்தின் ஒளி சிறுக சிறுகவே வெளிப்படுகிறது அதனு உண்மையும் சிறிது சிறிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

கிருஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் பார்சி மதத்தினர் போன்று பஹாய்கள் “திருநூலின் மக்களாக” (People of the Book) இஸ்லாத்தில் கருதப்படுவதில்லை. மற்ற சமயங்கள் போன்று பஹாய்களும் ஒரு கடவுள், கியாமத் நாள், ஆன்மாவின் நெறிமுறை சார்ந்த தீர்ப்பளிப்பு, சாத்தானிய பன்பு போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்த போதிலும் பஹாய்கள் திருநூலின் மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதற்கு முதன்மையான காரணம், முகம்மது நபியவர்களுக்கு பிறகு வேறு இறை தூதர்கள் தோன்ற போவதில்லை எனும் ஒரு கருத்தாகும். ஒரு வகையில் இக்கருத்து உண்மைதான். முகம்மது நபியவர்கள் நபிகள் வரிசையில் இறுதியானவர். அவரே “ஹாத்திமுந் நபியீன்” நபியாவார். அதாவது அவர் ‘தீர்க்கதரிசிகளின் வரிசையில் இறுதியானவர்’. இதை பஹாய்கள் மறுக்கவில்லை. ஆனால், கடவுள் அவதாரங்கள் இருவகைப் படுவர்; தீர்க்கதரிசிகள் மற்றும் அவதாரங்கள் (ரசூல்கள்). கடவுளின் முழு அவதாரங்களான ரசூல்கள் இனி தோன்றமாட்டார்கள் என எங்குமே குறிப்பிடப்படவில்லை. பார்க்கப்போனால் இஸ்லாமிய மறைகளில் வருங்காலத்தில் அத்தகைய தூதர்கள் தோன்றுவதற்கான பல குறிப்புகள் உள்ளன. இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1260ல் இத்தகைய தோற்றம் ஒன்று நடைபெறும் என்பது ஷீயா வர்க்கத்தினரின் மரபாகும். அதாவது அவர்களின் இறுதி இமாமான இமாம் முகம்மது இப்ன் அல்-ஹசான் இயேசு கிருஸ்துவோடு ஒன்றாக இவ்வுலகில் தோன்றுவார் எனவும், இஸ்லாத்தை இவ்வுலகில் மறுஸ்தாபிதம் செய்வார் என்பதும் நம்பிக்கையாகும். இதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய ஹதீஸ்களில் நிறையவே உள்ளன.

ஹி1260ல் அதாவது அதற்கு இணையான ஆங்கில வருடம் 1844ல் முகம்மது அவர்களின் திருமகளாரான பாத்திமா அம்மையாரின் வழியில் உதித்தவரான சிய்யிட் அலி முகம்மது அல்லது ‘பாப்’ அதாவது ‘வாசல்’ எனும் பெயர் கொண்டவர் தாமே அத்தகைய இறைத் தூதர் என அறிவித்தார். இரான் நாடே அல்லோலகல்லோலமாகியது. சில மதிப்பீடுகளின்படி இரான் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பாப் அவர்களின் விசுவாசிகளாயினர் என கூறுப்படுகின்றது. ஆனால், திருமறைகளில் பல நிரூபனங்கள் இருந்த போதும் அதற்கு முன் உலகில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களுக்கும் நிகழ்ந்தது போன்று பாப் அவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டு இறுதியில் 750 சிப்பாய்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையானார்.

பாப் அவர்களுக்கு ஏற்பட்ட இம்முடிவுக்குக் காரணம், அவர் முன்கூறப்பட்டதுபோல் இஸ்லாம் சமயத்தை மறுஸ்தாபிதம் செய்யாமல் ஒரு புதிய சமயத்தையே தாம் தாங்கி வந்திருப்பதாக கூறியது ஒரு முக்கிய காரணமாகும். (பாப்’யி சமயத்தின் வரலாற்றை விவரிக்கும் நபில் அவர்களின் The Dawnbreakers நூலை காணவும்) புதிய சமயத்தைக் கொண்டுவந்தது ஒரு பக்கமிருக்க அவர் இஸ்லாத்தின் சமயக்காலகட்டம் முடிந்து தமது அறிவிப்பால் ஒரு புதிய சமயகாலகட்டம் ஆரம்பித்துள்ளது எனவும் கூறினார். மேலும் பாப் அவர்கள் தாம் தமக்குப் பின் வரவிருக்கும் ஒரு மாபெரும் கடவுள் அவதாரத்திற்கான முன்னோடி மட்டுமே எனவும் கூறினார். பாப் அவர்களின் மறைவுக்குப் பிறகு 1863ல் பாப் அவர்களின் விசுவாசிகளுள் ஒருவரான பஹாவுல்லா பாப் அவர்கள் அறிவித்த அந்த வாக்களிக்கப்பட்ட கடவுளின் அவதாரம் தாமே என அறிவித்தார். (பாப் அவர்களைப் போன்று பஹாவுல்லா கொல்லப்படாவிடினும் அவர் தேசப்பிரஷ்டத்திற்கு உள்ளாகி இரான், இராக், துருக்கி மற்றும் இறுதியில் 1868ல் ஒட்டமான் அரசின் சிறை நகரான ஆக்கா நகருக்கு கைதியாக அனுப்பப்பட்டார். இன்று பஹாய்களின் புனித ஸ்தலம் அன்று பாலஸ்தீனம் எனவும் இன்று இஸ்ரேல் எனவும் உருவெடுத்துள்ள நாட்டிலேயே உள்ளது. பாப் அவர்களின் விசுவாசிகள் பின்னாளில் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டு ‘பஹாய்கள்’ என வழங்கப்படுகின்றனர். திருக்குர்’ஆனுக்குப் பதிலாக பஹாய்கள் பாப் மற்றும் பஹாவுல்லா எழுதிய புனித எழுத்துக்களை தங்கள் புனித நூல்களாக கொண்டுள்ளனர். பஹாய் சமூக விதிமுறைகள் இஸ்லாத்தின் சமூக விதிமுறைகளுக்கு சற்று மாறுபட்டவை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.) உதாரணமாக பஹாவுல்லா ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கின்றார். இருபாலருக்கும் கல்வி வாய்ப்புக்கள் சமமாக இருக்கவேண்டும் அல்லது பெண்களுக்கு இதில் முதன்மை வழங்கப்பட வேண்டும் என கூறுகின்றார். தாய்மைப் பேறு பெண்களுக்கு உரியது. அத்தாய்களுக்கு தக்க கல்வியறிவு இல்லையெனில் அவர்கள் எவ்வாறு நல்ல தாய்மார்களாக இருக்கமுடியும்? இது போன்றே பஹாவுல்லா இக்காலத்திற்கு தேவையான பல கோட்பாடுகளை போதித்துள்ளார். ஆனால், பழமை விரும்பிகளுக்கு இவை யாவும் ஏற்பு இல்லை. இரான் நாட்டில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இதை தெளிவாகவே விளக்குகின்றது.

மேலும், பஹாவுல்லா இனி மக்களுக்கு இடையீட்டாளர்களாக மதகுருக்கள், மதத்தலைவர்கள், புரோகிதர்கள் போன்றோர் இனி தேவையில்லை என விதித்துள்ளார். கல்வியறிவு பெருகியுள்ள இக்காலத்தில் மக்கள் அனைவரும் கடவுளின் குறிக்கோளை தாங்களாகவே படித்து அறிந்துகொள்ளலாம, இடையீட்டாளர்கள் இனி தேவையில்லை. அதாவது பாதிரிகள், முல்லாக்கள் போன்றோர் தேவையில்லை.

மக்கள் சுயமாக சிந்தித்து எதையும் தேர்வு செய்ய வேண்டும் என பஹாவுல்லா போதிக்கின்றார். ஆனால், முக்கிய சமயங்களில் இது ஊக்குவிக்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும் எனும் நிலை உள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளான உலக சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் இது விளங்கும். உதாரணமாக ஐரோப்பாவின் இருள் காலத்தைக் குறிப்பிடலாம். மதகுருக்கள் வைத்ததே சட்டம். கேள்வி கேட்காமல் பின்பற்றவேண்டும்.

ஆக, இவ்விதமாக பஹாய்கள், குறிப்பாக இரான் நாட்டில் ஏன் எதிர்ப்புக்குள்ளாகின்றனர் என்பதற்கு பல காரணங்களைச் சுட்டலாம். ஆனால், இவ்வெதிர்ப்புகள் காலப்போக்கில் சூரியனைக் கண்ட பனி போல் விலகி, இயேசுநாதர் கூறியது போல், இவ்வுலகமும் கடவுளின் சுவர்க்கத்தைப் போன்று ஆகும் என்பது நிச்சயமே.

‘பெர்செப்ஷன்’


‘பெர்செப்ஷன்’ (கருத்துணர்வுகள்?)

(நன்றி K. Gopal)

…உங்கள் சிந்தனைக்கு…

வாஷிங்கடன் டி.சி. மெட்ரோ நிலையத்தில் குளிர் நிறைந்த ஜனவரி 2007 காலைப்பொழுது ஒன்றில் பின்வரும் சம்பவம் நிகழ்ந்தது. வயலின் ஏந்திய மனிதர் ஒருவர் சுமார் 45 நிமிடங்களுக்கு இசைக் கலைஞர் பாக்’கின் 6 படைப்புக்களை வாசித்தார். அவ்வேளை சுமார் இரண்டாயிரம் பேர்கள் அந்த நிலையத்தை கடந்துகொண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வேலைக்குச் செல்பவர்களாவர். சுமார் 3 நிமிடங்கள் கழித்து நடுத்தர வயதுடைய ஒருவர் அங்கு இசைக்கலைஞர் ஒருவர் இசைமழை பொழிவதைப் பார்த்தார். அவர் சற்று நிதானித்து சில வினாடிகள் நின்று பிறகு தன் வழியே விரைவாகச் சென்றார்.

4 நிமிடங்களுக்குப் பிறகு:
அந்த இசைக் கலைஞர் தமது முதல் டாலரைப் பெற்றார்: ஒரு பெண்மனி அவர் முன் இருந்த தொப்பியில் பணத்தை வீசிவிட்டு, ஆனால் நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்றார்…

6 நிமிடங்கள்:
ஓர் இளைஞர் சுவற்றில் சாய்ந்தவாறு இசையை செவிமடுத்தும், பிறகு தமது கைக்கடிகாரத்தைக் கவனித்துவிட்டு தொடரந்து நடக்கவாரம்பித்தார்.

10 நிமிடங்கள்:
மூன்று வயது சிறுவனொருவன் நின்றான் ஆனால் அவனுடைய தாயார் அவனை விறுவிறுவென்று இழுத்துச் சென்றாள். அச்சிறுவன் மீண்டும் இசைக் கலைஞரைத் திரும்பிப் பார்த்தான், ஆனால் அவனுடைய தாயார் அவனை மேலும் வற்புறுத்தி தொடர்ந்து நடந்தாள், சிறுவனும் அவ்வப்போது இசைக் கலைஞரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான். மேலும் பல சிறுவர்கள் அதே போன்று செய்தனர். ஆனால், பெற்றோர்கள் அவர்களை விரைவாகவே இழுத்துச் சென்றனர்.

45 நிமிடங்கள்:
இசைக் கலைஞர் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தார். ஆறே ஆறு பேர்கள் மட்டும் சற்று நின்று இசையை செவிமடுத்துச் சென்றனர். சுமார் 20 பேர்கள் பணத்தை போட்டுவிட்டு ஆனால், நிற்காமல் நடந்து சென்றனர். அம்மனிதருக்கு அன்று கிடைத்த வருமானம் 32 டாலர்.

1 மணி நேரம்:
அவர் தமது வாசிப்பை முடித்துக் கொண்டார். அங்கு நிசப்தம் நிலவியது. யாரும் எதையும் கவனிக்கவில்லை. யாரும் கை தட்டவில்லை அல்லது யாரும் அவரை அறிந்துகொள்ளவும் முயலவில்லை.

யாருக்கும் தெரியாது, ஆனால் நமது இசைக்கலைஞரின் பெயர் ஜோஷுவா பெல் ஆகும். அவர் உலகளாவிய நிலையில் ஒரு மாபெரும் இசைக்கலைஞராவார். அவர் அந்த மெட்ரோ நிலையத்தில் மிகவும் சிக்கலான இசைப் படைப்பு ஒன்றை 3.5 மில்லியன் டாலர் விலையுடைய வயலினில் வாசித்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜோஷுவாவின் இசை நிகழ்ச்சி ஒன்றின் 100டாலர் மதிப்புடைய சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு முடிந்து போயின.

இது ஒரு உண்மைக் கதை. ஜோஷுவாவின் அந்த நிகழ்ச்சி வாஷிங்டன் போஸ்ட்’டினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்களின் ‘பெர்செப்ஷன்’, சுவை மற்றும் முக்கியத்துவங்கள் குறித்த ஒரு ஆய்வின் பகுதியாக அது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு எழுந்த கேள்வி: ஒரு பொது இட சூழ்நிலையில் மக்கள் தங்கள் அலுவல்களுக்காக விரைந்துகொண்டிருக்கும் நிலையில் ‘அழகு’ கண்களுக்கு தெரிகிறதா? நிதானித்து அதை நாம் ரசிக்கின்றோமா? எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் நாம் கலையாற்றலை கண்டுகொள்கிறோமா?

பின்வருவது இதற்கான ஒரு விளக்கமாக இருக்கக்கூடும்: உலக பிரசித்தி பெற்ற ஓர் இசைக் கலைஞர், பெருமதிப்புடைய இசைக்கருவி ஒன்றில் இதுவரை எழுதப்பட்ட இசைகளுள் தலையாய இசை ஒன்றை வாசித்ததை ரசித்திடக்கூட நமக்கு நேரம் இல்லையெனில்… நாம் தினந்தோறும் வேறு எத்தனை எத்தனை விஷயங்களைத்தான் இவ்வாறு தவறவிடுகிறோமோ?

லியோ டால்ஸ்டாய்


பஹாய் சமயத்தை ஏற்றுக் கொண்டோரில் பல பிரமுகர்களும் அடங்குவர். ருமேனிய நாட்டின் (விதவை) அரசியார், சமோவா தீவின் மன்னர், பாரசீக அரச குடும்பத்தினர் சிலர் என கூறலாம். அவர்களுள் தத்துஞானியரான லியோ டால்ஸ்டாயும் அடங்குவார். பஹாய் சமயத்துடனான அவரது தொடர்புகள் குறித்து சில விவரங்கள் கீழே வழங்கப்படுகின்றன:

டால்ஸ்டாய்
டால்ஸ்டாய்


லியோ டால்ஸ்டாய் (1828 – 1910) ஒரு மாபெரும் ரஷ்ய தத்துவஞானியும் எழுத்தாளரும் ஆவார். “War and Peace” எனும் மாபெரும் நாவல் இவருடைய படைப்பாகும். இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

லியோ டால்ஸ்டாய் முதன் முதலில் 1884ல் பஹாய் சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் 22 அக்டோபர் 1903ல்:

“நான் நீண்ட நாட்களாகவே பாப்’யிக்கள் குறித்து அறிந்து வைத்து அவர்களுடைய போதனைகளின்பால் எப்போதுமே ஆர்வமுள்ளவனாக இருந்துவந்துள்ளேன். இந்த போதனைகள்… பிரிவினைகள் உண்டாக்கும் குழப்புகின்ற கசடுகளை நீக்கி, மனிதகுலத்தையே ஒரே பொது சமயத்தின் கீழ் ஒன்றிணைக்கும் இலட்சியமுடைய இப்போதனைகள், என்னைப் பொறுத்தவரை… மிகவும் சிறந்த எதிர்காலமுடையவை. ஆகவே, பழைய மூடநம்பிக்கைகளைக் களைந்தும் பழைய மூடநம்பிக்கைகளிலிருந்த புதிய பிரிவுகளை உருவாக்கக்கூடிய புதியனவற்றை ஸ்தாபிக்காமலும் இருக்கும் இந்த பாப்’யிக்களின் போதனைகள்… அவை சகோதரத்துவம், சமத்துவம், மற்றும் அன்பு குறித்த முக்கிய அடிப்படை கருத்துக்களை அவர்கள் சார்ந்திருப்பதால், அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற்றிருக்கின்றனர்… ஆகவே பாப்’யி சமயம் மக்களுக்கு சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தையும், கடவுள் சேவையில் தங்கள் உலகவாழ்வையே அர்ப்பனிக்கவும் போதிப்பதால் நான் பாப்’யி சமயத்தின்பால் பெரிதும் அனுதாபம் கொண்டவனாவேன்.” மறுபடியும், 1908ல், டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதினார்: “இஸ்லாம் சமய பின்னனியிலிருந்து தோன்றியுள்ள பாப்’யிக்களின் போதனைகள் பஹாவுல்லாவின் போதனைகளால் சிறிது சிறிதாக மேம்பாடு கண்டு இப்போது மிகச் சிறந்ததும் மிகத் தூய்மையானதுமான சமய போதனைகளை நமக்கு வழங்குகிறது.”

மூலம்: The Promise of All Ages, Christophil (aka)
George Townshend அவர்கள் எழுதிய நூல், ப. 26
ருஷ்ய மொழியின் தற்காலிக மொழிபெயர்ப்பு:
“ருஷ்யாவில் பஹாய் சமயம்” by Nancy Ackerman & Graham Hassall, (Appendix II in the Russian edition of Hatcher & Martin அவர்களின் பஹயா சமயம் பற்றிய அறிமுக நூல்) ப. 259-262ல் உள்ள வரிகள் :

“ருஷ்யாவின் மாபெரும் சிந்தனையாளரான லியோ டால்ஸ்டாயின் கவனத்தையும் பாப்’யி சமயம் கவர்ந்தது, அவர் ஆரம்பத்தில் O.S. லெபதேவிடமிருந்து பாப்’யிக்கள் குறித்து தெரிந்துகொண்டார். அதிலிருந்து அவர் விண்ணேற்றம் அடைந்த வரை, சுமார் 16 ஆண்டுகளுக்கு அவர் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் குறித்து அவர் தமது தபால்களிலும் நாட்குறிப்பிலும் பல முறை எழுதியுள்ளார். அதே சமயம் அவர் கிரினெவ்ஸ்காயாவின் நாடகம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார். (நாடக எழுத்தாளரான இசாபெல்லா கிரினெவ்ஸ்காயா பல நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் மற்றும் அவர் பாப் அவர்கள் பற்றியும் ஒரு முழு நாடகம் எழுதியுள்ளார். இந்த நாடகம் St. பீட்டர்ஸ்பர்க்கில் இரு வெற்றிகரமான அரங்கேற்றம் கண்டது. கிரினெவ்ஸ்காயா பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டு, பல முறை அப்து’ல்-பஹாவையும் ஷோகி எஃபெண்டி எஃபெண்டியையும் சந்தித்துள்ளார்.) டால்ஸ்டாய் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவர் செய்து வரும் காரியங்கள் குறித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதில் மேலும்… பாப்’யி சமயத்தின் போதனைகள்… சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் அன்பு குறித்த அஸ்திவார மற்றும் அடித்தல கருத்துக்களை நிலைநிறுத்துவதால் அவற்றுக்கு மகத்தான வருங்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். (1)

டால்ஸ்டாயின் இக்கடிதம் பிரசுரிக்கப்பட்டு ருஷ்யாவில் பஹாய் சமயத்தின்பால் பெரும் ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவு பெருகியது.

உண்மையான சமய நம்பிக்கைகளின் ஆதரவாளராக டால்ஸ்டாய் திகழ்ந்தார், மற்றும் அவரது ஆன்மீக வேட்கை மற்றும் ஓர் அனைத்துலக சமயத்திற்கான உடனடி தேவை, உண்மையை தன்னிச்சையாக தேடுவது, சமயம் மற்றும் பகுத்தறிவுக்கிடையிலான இணக்கம், சமய சடங்கு சம்பிரதாயங்களை எளிமைப்படுத்துதல், அனைத்துலக கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள் பஹாய் சமயத்தின் கோட்பாடுகளோடு ஒத்திருந்தன. பஹாய் சமயத்துடனான அவரது உறவு சற்று சிக்கலானதாகவும், சில நேரங்களில் சமநிலையற்றும் இருந்தது உண்மையே: சமயத்தின்பால் அவர் வலியுறுத்திய பெரும் மதிப்பும் மற்ற நேரங்களில் அதன்பால் அவர் கொண்டிருந்த சிரத்தையின்மையும் குறைகூரல்களும் மாறி மாறி வந்தன. நம்பிக்கையான மூலாதாரங்கள் கிட்டாததால், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாயிக்கு தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. இத்தகைய குறைபாடு நிறைந்த தகவல்களோடு அவர் தமது சொந்த தத்துவார்த்த நம்பிக்கைகளில் கொண்டிருந்த உள்ளார்ந்த முரண்பாடுகளும், அதன் நம்பிக்கைகள் அவரது கருத்துக்களோடும் இலட்சியங்களோடும் ஒத்துப்போகவில்லை என்பதால் சில வேளைகளில் அவர் பஹாய் சமயத்தை உதறித்தள்ளவும் உந்தப்பட்டார். ஆனால், அவர் பஹாய்களுடனான மற்றும் அதனை ஆய்வு செய்வோருடனான தமது தொடர்பிலும் கடவுளின் இயல்பு, தேசபக்தி, கடவுள் அவதாரங்கள், சமயங்களின் ஒற்றுமை, மற்றும் மனம் மற்றும் ஆன்மவுக்கிடையிலான தொடர்பு போன்ற தம்மை வாட்டி வந்த கேள்விகள் குறித்து ஆராயத் தவறியதில்லை: (2)

டால்ஸ்டாயின் கடிதங்களிலிருந்து சமயம் சம்பந்தமான கேள்விகளில் ஆர்வமுடையோரிடமிருந்து அவர் பல பஹாய் நூல்களைப் பெற்றிருந்தார் என்பது தெரிய வருகின்றது. அவருடைய நாட்குறிப்பிலிருந்து கிடைக்கும் பாப்’யி மற்றும் பஹாய் சமயம் பற்றிய மேலோட்டமான குறிப்புகள் தெளிவாக இல்லை, ஆனால் அவற்றிலிருந்து பஹாய் சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் குறையவில்லை என்பது தெளிவு. டால்ஸ்டாய் பஹாய் சமயத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் அப்து’ல்-பஹாவுக்கு தெரியும் மற்றும் ருஷ்ய பிரதேசங்களில் அடங்கியிருந்த பஹாய்கள் (பாக்குவைச் சார்ந்த அலி-அக்பர் நாக்ஜவானி உட்பட) டால்ஸ்டாயோடு தொடர்பு கொண்டு பஹாய் சமயம் குறித்த உறுதியான தகவல்களை அவருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். நாக்ஜவானிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் பற்றி தாம் ஒரு நூல் வெளியிட விரும்புவதாக டால்ஸ்டாய் தெரிவித்திருந்தார். 1901ல் டால்ஸ்டாயிக்கு “அமைதி” எனும் தலைப்பிலான ஒரு கவிதையை அனுப்பியிருந்த பாரசீக தூதருக்கு எழுதிய ஒரு கடிதத்தில்: உங்கள் தாய்நாட்டில் உள்ள பாப்’யிக்களைப் போன்று உலகம் முழுவதும் மக்கள் உள்ளனர். அவர்கள் உண்மையான சமயத்தை பின்பற்றியும், எங்கெங்கும் அவர்கள் தொடர்ந்தாற்போன்றகொடுமைகளை அனுபவித்தாலும், அவர்களின் கருத்துக்கள் அதிகரிக்கும் துரிதத்துடன் பரவி இறுதியில் அவை காட்டுமிராண்டித்தனத்தை வெற்றிகொள்ளவே செய்யும்…” (3)

1902 செப்டம்பரில், அப்து’ல்-பஹாவிடமிருந்து ஒரு தனிப்பட்ட செய்தியை அஸிஸுல்லா ஜஸாப் எனும் பெயர் கொண்ட இரான் நாட்டு பஹாய், டால்ஸ்டாயின் இல்லமான யாஸ்னாயா போலியானாவுக்கு கொண்டு வந்தார். அக்கடிதத்தில் “சமயங்கள் எனும் உலகில் உங்கள் பெயர் நல்லனவற்றை ஞாபகப்படுத்திட செயல்படுக. பல தத்துவ ஞானிகள் தோன்றியுள்ளனர், மற்றும் அவர்கள் தங்கள் கொடிகளை, ஐந்து மீட்டர் அளவுக்கு என கொள்வோம், உயர்த்தியுள்ளனர். நீரோ 10 மீட்டர் அளவுக்கு உமது கொடியை உயர்த்தியுள்ளீர்; ஒறுமைத்தன்மை எனும் சமுத்திரத்தில் உம்மை ஆழ்த்திக் கொள்வீராக அதனால் என்றும் நிலையான கடவுளின் துணை உமக்குக் கிட்டும்,” எனும் வரிகள் அதில் எழுதப்பட்டிருந்தன. (4)

அந்த பஹாய் அன்பர், பஹாவுல்லா அவரது சமயம் மற்றும் டால்ஸ்டாயிக்கும் இடையில் என்னதான் தொடர்பு எனும் கேள்விக்கு டால்ஸ்டாய் பின்வருமாறு பதிலளித்தார்: “அதை (பஹாவுல்லாவின் செய்தியை) நான் எவ்வாறுதான் மறுக்கக்கூடும்?… இச்சமயம் நிச்சயமாகவே உலகையே தன்பால் வெல்லும்.” பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் இக்காலத்தின் உணர்வுகளோடு ஒத்திருப்பதால், அவை காலப்போக்கில், மானிடத்தின் நலனை உறுதி செய்யும் வகையில் உலகில் உறுதியாக நிலைநிறுத்தப்படும். (5)

தமது வாழ்வின் இறுதி நாட்களில், பஹாவுல்லாவின் படைப்புக்களில் பாப் அவர்களின் போதனைகள் அடைந்திருக்கும் மேம்பாடுகள், சமயங்களில் உள்ள மிக உயரிய மற்றும் தெளிவான விஷயங்களைப் பிரதிநிதிக்கின்றன எனும் முடிவுக்கு வந்தார். 1910ல் தமது மறைவுக்கு சிறிது காலத்திற்கு முன், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதியுள்ளார்: “அது மிகவும் ஆழம்மிக்கது. இத்தகைய ஆழம்மிக்க சமயம் வேறு எதையும் நான் அறியேன்.” (6)

1. Moojan Momen, The Babi and Bahá’í Religions, ப. 52
2. Luigi Stendardo, Leo Tolstoy and the Bahá’í Faith, Ch. 3-4
3. L. N. Tolstoy, Polnoye sobraniye sochinenii [Complete Works] v. 80, p. 102
4. Stendardo, ப. 2
5. Momen, ப. 30
6. Tolstoy, Complete Works, v. 78, ப. 306
7. D.P. Makovitskii, U Tolstogo: 1904-1910 Yasnopolyanskiye zapiski (With Tolstoy: 1904-1910, குறிப்புகள் from Yasnaya Polyana] Moscow, Nauka 1979, v. 4, ப. 255

உலகம் அழியப்போகின்றது?


சமீப காலமாக உலகம் அழியப்போகிறது எனும் பேச்சு ஆங்காங்கு எழுந்துவருகின்றது. அது குறித்த செய்திப்படங்கள் கூட தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ளன மற்றும் விரைவில் உலகம் 2012ல் அழியப்போகிறது என்பது பற்றி ஒரு முழு நீள திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக அழிவு குறித்த பேச்சு “2012” படத்தை நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உலகம் அழியப்போகிறது இது முதன்முறையல்ல. பல முறை இது போன்ற செய்திகள் உலகை வலம் வந்துள்ளன. உதாரணமாக 1963ல் இதே போன்று உலகம் அழியப்போகிறது எனும் செய்தி கிராமப்புரங்களில் கூட பேசப்பட்டது. ஆனால் அழிந்தது என்னவோ உலகம் அழியப்போகிறது எனும் செய்திதான். இப்போது அது மறுபடியும் தலைதூக்கியுள்ளது.

“நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?” எனும் பாடல்தான் நினைவிற்கு வருகிறது. இத்தனை கோடானுகோடி வருடங்களாக உலகையும் அதனுள் வாழ்வன அனைத்தையும் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ள படைப்பாளரான கடவுள் அதை ஒரு நொடியில் அழிப்பதற்காகவா அத்தனை முயற்சி செய்துள்ளார்?

2012ல் உலகம் அழியப்போகிறது எனும் கருத்து அமெரிக்காவின் மாயா பூர்வகுடியினரின் வழக்கிலிருந்து பிறந்ததாகும். அவர்களுடைய பஞ்சாங்கம் 2012ல் ஒரு முடிவுக்கு வருகின்றதால் உலகமும் அதனோடு அழிந்துவிடும் எனும் கருத்தும் தோன்றியுள்ளது. இதிலும் கருத்தவேறுபாடு உண்டு. சிலர் இந்த மாயா பஞ்சாங்கள் உண்மையில் 2012ல் முடியவில்லை என கூறுகின்றனர். அப்பஞ்சாங்கம் மிகவும் சிக்கலானது. அதை தவறாக புரிந்துகொண்டவர்கள் உலகம் முடியப்போகின்றது என கூறுகின்றனர்.

இது போக, உலக அழிவின் மீது மக்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம்? கிருஸ்துவர்களின் சில குழுவினர், விசுவாசிகளை விசுவாசம் அற்றவர்களிடமிருந்து பிரிக்கும் செயலே இது என்கிறார்கள். விசுவாசிகள் அனைவரும் இவ்வுலகிலிருந்து சுவர்கத்திற்கு நேரே போய்விடுவார்களாம். இப்படி இன்னும் பல நம்பிக்கைகள். அப்படியே உலகம் அழிவதாக இருந்தாலும், அது குறித்து கவலைப்படுபவர்கள் என யாரையும் காணமுடியவில்லை. வாழ்க்கை எப்போதும் போலவே நடந்துகொண்டிருக்கின்றது, வயதான காலத்தில் ஓய்வ்வூதியத்திற்காக பாடுபடுவோர் உலக அழிவைப் பற்றி சிறிதும் கவலையுறாமல் தமது நோக்கிலேயே கவனமாக இருக்கின்றார்கள். உடலை வருத்தி வேலை செய்வோர் அதில் முழு கவனத்துடனேயே இருக்கின்றனர். உலகில் மாமூலாக அட்டூழியங்கள் எப்போதும் போலவே நிகழ்கின்றன.

அப்படியானால் உலக அழிவு குறித்த கவனம் ஏன்? மக்களின் வாழ்க்கையில் உற்சாகத்திற்கான விஷயங்கள் குறைந்துவிட்டதா? “எக்சைட்மெண்டுக்காக” இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றோமா? இது மனித இயல்பு போலும்.

எது எவ்வாறு இருந்த போதிலும், பஹாய் திருவாக்குகளில் இந்த “உலக அழிவு” குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக் காணும்போது, உலக அழிவு விரும்பிகளுக்கு சற்று ஏமாற்றமாகவே இருக்கும். பஹாவுல்லா, தமது சமயம் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்துள்ளது எனவும், அந்த சகாப்தம் ஏறக்குறைய 5,00,000 வருடங்களுக்கு நீடிக்கும் எனவும் கூறுகின்றார். இக்கால அவதாரமும் தீர்க்கதரிசியுமான அவர் பல விஷயங்கள் குறித்து தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். அவை யாவும் நடந்தேறியுள்ளன. அதே போன்று உலகம் குறைந்தது மேலும் 5.00,000 வருடங்களுக்கு நீடிக்க போகின்றது என அவர் கூறியதிலும் சந்தேகம் ஏதும் ஏற்பட வழியில்லை.

ஆனால், “உலக அழிவு” என்பது ஒரு வகையில் உண்மையே. வியாக்கியானத்தில்தான் தவறே ஒழிய உட்கருத்தில் தவறு கிடையாது. இந்த “உலக அழிவு” என்பது எல்லா சமயங்களிலும் ஏதோ ஒரு வகையில் குறிக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் பிரலயம் எனவும், கிருஸ்துவ சமயத்தில் “உலக முடிவு” எனவும், இஸ்லாத்தில் “கியாமத்” எனவும் கூறப்பட்டுள்ளது. அர்த்தங்கள் சற்று மாறுபட்டிருந்தாலும் இவை யாவும் உலகில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

பஹாவுல்லாவின் எழுத்துக்களில் பின்வரும் திருவாக்குக் குறிப்புகளை காணலாம்:

மனிதர்களே, யாம் உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்துள்ளோம். நியமிக்கப்பட்ட நேரத்தில், நீங்கள், இறைவன்பால் திரும்பத் தவறுவீராயின், மெய்யாகவே அவர், உங்கள் மீது ஆவேசமாகக் கை வைத்து, எல்லாத் திசைகளிலிருந்தும் கடுந் துன்பங்கள் உங்களைத் தாக்குமாறு செய்திடுவார். உண்மையாகவே, அப்பொழுது உங்களின் பிரபுவானவர் உங்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைதான் எத்துணை கொடூரமானது!

உலக மக்களே! மெய்யாகவே அறிவீராக; எதிர் பாராத பேரிடர் ஒன்று உங்களைப் பின் தொடர்ந்து வருகின்றது. கடுந் தண்டனை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஆற்றிய செயல்கள் எனது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன என்று எண்ணிவிடாதீர். எனது அழகின் மீது ஆணை! உங்களின் செயல்கள் அனைத்தையும், எனது எழுதுகோல், மரகதத் தகடுகளின்மீது தெளிவான எழுத்துக்களாள் செதுக்கி வைத்துள்ளது.

உலகம் பிரசவவேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது; நாளுக்கு நாள் அதன் கலவரம் அதிகரித்து வருகின்றது. அதன் முகமோ கீழ்ப்படியாமை, அவநம்பிக்கை ஆகியவற்றின்பால் திருப்பப்பட்டுள்ளது. அதன் அவலநிலை அத்துணை மோசமடையவிருப்பதனால் அதனை இப்பொழுது பகிரங்கப்படுத்துவது பொருத்தமுமன்று, சரியுமன்று. அதன் முறைகேடான நடத்தை நெடுங்காலத்திற்குத் தொடரும். அக்குறிப்பிட்ட நேரம் வந்ததும், மனித இனத்தின் அங்கங்களையே நடுக்கமுறச் செய்யக்கூடியதொன்று திடீரெனத் தோன்றும்; அப்பபொழுதுதான், தெய்வீகக்கொடி அவிழ்த்துப் பறக்கவிடப்படும்; விண்ணுலக இராப்பாடி (பறவை) அதன் இன்னிசையை ஒலித்திடும்.

இங்கு பஹாவுல்லா தற்போது உலகில் நிகழும் ஒழுக்கமின்மை குறித்து தமது காலத்திலேயே முன்கூறியுள்ளார். ஏதோ ஒரு நிகழ்ச்சி, உலகையே உலுக்கும் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு உலகில் மாற்றங்கள் உண்டாகும் மற்றும் அமைதி நிலவும் என்பது புரிகிறது.

பஹாவுல்லாவின் மறைமொழிகளில் பின்வரும் வாசகத்தைக் காணலாம்:

மனிதனின் புத்திரனே! எனது பேரிடரே எனது அருள்பாலிப்பு; வெளித்தோற்றத்திற்கு அது தீயும் வஞ்சந் தீர்த்தலும் ஆகும்; ஆனால் உள்ளளூர அது ஒளியும் கருணையும் ஆகும்.

இதிலிருந்து உலக சீர்திருத்தம் அடைய பேரிடர் ஒன்று அவசியம் என பொருள்படுகின்றது. ஆனால் அதன் முடிவு ஒளி நிறைந்ததாகும்.

கிருஸ்தவ விவிலியத்தில் “உலக அழிவு” எனும் வார்த்தைகள் அக்காலத்து ரோமானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டதாகும். சிலர் ரோமானிய மொழியில் இதற்கு மற்றொரு அர்த்தம் “காலங்களின் முடிவு” எனவும் எடுத்துக்கூறியுள்ளனர். அதாவது ஏதோ ஒன்று அழிந்து அதனிடத்தில் மற்றொன்று புதிதாக பிறக்கும் என்பதாகும். உலகம் அழியாது மாறாக, பெரும் மாற்றம் ஏதோ மனிதர்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றது. அழியப்போவது உலகம் ஒட்டுமொத்தமும் அல்ல; அழியப்போவது மனிதர்கள் குறித்த ஏதோ ஓர் அம்சம்.

கிருஸ்தவ விவிலியத்தில் பதிக்கப்பட்டுள்ள பின்வரும் பிரார்த்தனையை காண்போம்:

பரமண்டலங்களில் இருக்கும் பிதாவே
உமது நாமம் பரிசுத்தபடுவதாக
உமது இராஜ்யம் வருவதாக
உமது சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதுப்போல
பூமண்டலத்திலும் செய்யபடுவதாக
அன்றேன்று எங்களுக்குறிய ஆகாரத்தை தாரும்
எங்களுக்கு விரோதமானவர்கள் குற்றங்கள் செய்வதை
நீங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்
எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப்படாமல்
இரட்சித்துக்கொள்ளும்
உமது இராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும்
என்றென்றைக்கும் உடையவைகளே

இந்த பிரார்த்தனையில் சுவர்க்கத்தில் இருப்பது போல இந்த உலகமும் ஆகிட பிரார்த்தனை செய்யப்படுகின்றது. உலகின் பௌதீக அழிவு குறித்து இதில் அறிகுறிகள் இல்லை ஆன்மீக ரீதியில்தான் மாற்றங்கள் பிரார்த்திக்கப்படுகின்றன. அதே போன்று இயேசு நாதரிடம் அவரது மறு வருகை குறித்து கேட்கப்பட்டபோது அவர் பல குறிப்புகளை வழங்கியுள்ளார். இரவில் திருடனைப்போல் வந்துசெல்வேன் என்றெல்லாம் கூறியுள்ளாரே ஒழிய உலக அழிவு பற்றி அவர் எதையுமே கூறவில்லை. சுவர்க்கத்தை போன்று இந்த உலகமும் மாறும் எனும் உற்சாகம் வழங்கும் குறிப்புகளே உள்ளன. இதைப் போன்று மேலும் பல எடுத்துக்காட்டுகளை வழங்கலாம்.

பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளராக விளங்கிய ஷோகி எஃபெண்டி அவர்கள் உலக நிலை பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்:

“தற்போது அதன் நிலையைக் காண்கையில், உண்மையில் அதன் அன்மை வருங்காலம் பெரிதும் இருள் சூழ்ந்ததாக, பெருந்துயரமளிக்கும் இருள் சூள்ந்ததாகவே உள்ளது. ஆனால், இதன் பிறகு காணப்படும் வருங்காலமோ பிரகாசம் மிக்கதாக, தேஜஸ் நிறைந்த பிரகாசம் மிக்கதாக உள்ளது.”

என கூறியுள்ளார். உலகம் ஏதோ ஒரு கட்டத்தை இப்போது அடைந்துகொண்டிருக்கின்றது. அது மிகவும் இருள் சூழ்ந்த ஒரு காலம் என்பது உண்மை. உலகையே உலுக்கும் பேரிடர் ஏதோ ஒன்று நிகழப்போகின்றது.  ஆனால், இந்த துயர சூழ்நிலை அழிந்து பிரகாசம் மிக்க எதிர்காலம் இவ்வுலகிற்காக காத்துக்கொண்டிருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார்.

“தூய்மையான மற்றும் நற்செயல்களின் மூலமும் மெச்சத்தகுந்ததும் மிக பொருத்தமான ஒழுக்கத்தின் மூலமும் உலகசீர்திருத்தம் அடையப்படக்கூடும்,”

எனும் பஹாவுல்லா திருவாய்மொழிந்தருளியுள்ளார். அழியப்போவது இவ்வுலகமல்ல, மாறாக, உலகில் காணப்படும் ஆன்மீக இருளே. ஆகவே உலகம் அழியப்போகின்றது எனும் வீண் எண்ணத்தை விடுத்து உலக நன்மைக்காக பாடுபடுவோமாக, இவ்வுலகைச் சூழ்ந்துள்ள ஆன்மீக இருளின் அழிவிற்காக பாடுபடுவோமாக.

கலந்தாலோசனை


பஹாய் சமயத்தின் நிர்வாக அமைப்புக்கள் தனிச்சிறப்பு மிக்கதும் எதிர்ப்புணர்வு அற்றதுமான கலந்தாலோசனை எனும் முடிவுகள் எடுக்கும் செயல்பாட்டை எல்லா நிலைகளிலும் பயன்படுத்துகின்றன.

கலந்தாலோசனைக்கான கோட்பாடுகள் பஹாவுல்லாவின் திருவாக்குகளில் பதிக்கப்பட்டுள்ளன, மற்றும், கருத்தொருமித்தலை பேணுவதற்கும் உண்மையை ஆராய்வதற்கும் உரிய ஒரு வழிமுறையெனும் வகையில் அக்கோட்பாடுகள் விரிவான பயன்பாட்டிற்கான உள்ளாற்றலை பெற்றிருக்கின்றன. பார்க்கப்போனால், குழுத்தீர்மானம், கூட்டுறவு ஆகியவை தேவைப்படும் எந்த சூழ்நிலையிலும் அவை பயன்மிக்கவையாக இருப்பதை பஹாய்கள் காண்கின்றனர். இக்கோட்பாடுகள் பஹாய் சமயத்தின் ஸ்தாபனங்களால் மட்டுமல்லாமல் பஹாய்களின் தொழில்களில், பஹாய்களால் நடத்தப்படும் பள்ளிகளில், மற்றும் பஹாய் குடும்பங்களில் எடுக்கப்படும் தினசரி தீர்மானங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

அதன் சாரத்தில், கலந்தாலோசனை பல்வேறு விஷயக் கூறுகளை தனித்தனியே பிரித்துப் பார்ப்பதற்கு பதிலாக அவற்றை ஒன்றிணைக்கும் வகையில் கருத்தொருமிப்பை பேணுகின்றது. அது பல்வகையான மாறுபட்ட கருத்துக்களை ஊக்குவித்து வழிவழி மரபாக பயன்படுத்தப்பட்டுவரும் தீர்மானசெயற்பாட்டு முறைகளில் இயல்பாகவுள்ள அதிகாரம் செலுத்த முயலும் போட்டி மனப்பான்மைகளை கட்டுப்படுத்துகின்றது.

பஹாய் கலந்தாலோசனை பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது:

பலதரப்பட்ட கருத்துக்களை குறிவைத்து முடிந்த அளவு பரவலான மூலாதாரங்களிலிருந்து தகவல் சேகரிக்கப்படவேண்டும். ஒரு வேளை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அல்லது அறிவியலாளர்கள் போன்ற வல்லுணர்களின் உதவி இதற்காக நாடப்பட வேண்டியிருக்கலாம். மேலும், வழிவழியான தகவல் சேகரிப்பு சாதனங்ளுக்கும் அப்பால் தகவல் சேகரிப்பட அல்லது பல்வேறு பின்னனியில் உள்ள சமூக உறுப்பினர்களின் கருத்துக்களை கண்டறிய விசேஷ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கலாம்.

கலந்தாலோசிப்பின் போது, பங்கேற்பாளர்கள் முடிந்த அளவு ஒளிவுமறைவின்றியும் வெளிப்படையாகவும், அதே வேளை மற்றவர்களின் கருத்துக்களின்பால் பனிவான அக்கறை மனப்பான்மையை கொண்டிருக்கவும் வேண்டும். தனிநபர்களை தாக்கிப்பேசுவது, இறுதி எச்சரிக்கைகள், மற்றும் பாரபட்சமான வார்த்தைகளை தவிர்க்கவேண்டும்.

ஒரு கருத்து முன்மொழியப்பட்டவுடன் அது அக்குழுவின் உடைமையாகிவிடுகின்றது. இது கேட்பதற்கு எளிமையாக இருந்தபோதிலும், கலந்தாலோசனை குறித்த கோட்பாடுகளுள் இது ஓர் ஆழமான கோட்பாடாகும். ஏனெனில், இக்கோட்பாட்டின் அடிப்படையில் எல்லா கருத்துக்களும் எந்த தனிநபர், துணைக்குழு, அல்லது தோகுதியினருக்கும் உடைமையாகாது. தனிநபரை உயர்த்துதல் அல்லது தன்னைச்சுற்றி ஆதரவாளர்களை சேகரிக்கும் ஆசையிலிருந்து பிறக்கும் கருத்துக்களோடு ஒப்பிடுகையில், சேவையாற்றவேண்டும் எனும் தூய்மையான ஆவலிலிருந்து பிறக்கும் எண்ணங்களை இக்கோட்பாடு தூண்டிவிடுகிறது.

குழு கருத்தொருமிப்புக்காக முயலுகின்றது, ஆனால், இறுதி முடிவெடுப்பதற்காக பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்படலாம். இக்கோட்பாடு குறித்த ஒரு முக்கிய அம்சம் யாதெனில் ஒரு முடிவு எடுக்கப்பட்டவுடன், குழுவினர் அனைவரும் அம்முடிவுக்கு ஒற்றுமையோடு உடனடியாக கீழ்படிய வேண்டும் என்பதாகும் – இது அம்முடிவுக்கு எத்தனை பேர்கள் வாக்களித்தனர் என்பதைப் பொருத்ததல்ல.

இந்த நிலையில் கலந்தாலோசனையில் “சிறுபான்மையினர்” அறிக்கை அல்லது “எதிர்ப்பாளர்கள் நிலை” என்பது இருக்கமுடியாது. மாறாக, ஒரு முடிவு தவறான முடிவாகவே இருந்தபோதிலும், முடிவெடுக்கும் குழுவும், சார்புடைய சமூகத்தினரும் முழுமனதோடு அம்முடிவை ஆதரிக்கும் பட்சத்தில் அத்தவறு அம்முடிவின் அமலாக்கத்தின்போது கண்டிப்பாக வெளிப்படும்.

ஒரு முடிவோ திட்டமோ தோல்வியுறும்போது, (அதன் விளைவான) பிரச்சினை அக்கருத்து சார்ந்ததாக இருக்குமே ஒழிய, சமூக உறுப்பினர்களின் ஆதரவு அல்லது அக்கருத்தின் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கை சார்ந்ததாக இருக்காது என்பதை ஒற்றுமை குறித்த கடமையுணர்வு உறுதிசெய்கின்றது.

மீண்டும், இங்கு கோட்பாடு, ஒற்றுமையின் ஆற்றல் பற்றிய புரிந்துகொள்ளலையே சென்று சாருகின்றது. பஹாவுல்லாவின் திருமகனாரான, அப்து’ல்-பஹா, பஹாய்கள் எக்காலத்திலும் எப்பிரச்சினையிலும் கருத்தொருமிப்பு காண முயல வேண்டும் என கூறியுள்ளார்:

அவர்கள் ஒரு விஷயம் குறித்து சரியாக இருந்து ஆனால், கருத்துவேறுபாடு கொண்டவர்களாக இருப்பதைவிட தவறான கருத்து கொண்டிருந்தபோதிலும், அதில் ஒத்தகருத்தினராக இருப்பதே சாலச்சிறந்தது. ஏனெனில், கருத்துவேறுபாடு தெய்வீக அடித்தலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும். ஒரு சாரர் சரியான கருத்துடையவராகவும் (மற்றவர் வேறு கருத்துடையவராகவும் இருந்து) அதனால் அங்கு கருத்துவேறுபாடு நேர்ந்தால் அக்கருத்துவேறுபாட்டின் விளைவாக அங்கு ஆயிரம் தவறுகள் ஏற்படக்கூடும். ஆனால், அவ்விரு குழுக்களும் கருத்தொருமித்து ஆனால் தவறான முடிவே எடுக்கும்போது, அவர்கள் ஒற்றுமையாக இருக்கும்நிலையில் உண்மை வெளிப்பட்டு தவறு திருத்தப்படும்.

மூலாதாரம்: http://info.bahai.org/article-1-3-6-3.html

ஒரு முல்லாவின் வசைமாரி


பஹாய் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பஹாய்களுக்கு புதியனவல்ல. இவ்வருடம் இரான் நாட்டின் முல்லா ஒருவர் தமது சமயக்கூட்டத்தினருக்கு பின்வருமாறு பஹாய்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றார்.

உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்!
பஹாய்கள் பெரும் சலசலப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் என்ன செய்துள்ளனர் என்பதைப் பார்த்தீர்களா?
உங்களுக்கு அது தெரியுமா?

அவர்களின் செயல்கள் எவ்வாறு அவர்களின் போதனைகளோடு ஒத்திருக்கின்றன என்பதைப் பார்த்தீர்களா? அவர்கள் தங்கள் சமயத்தை இவ்வகையிலேயே மிகவும் வெற்றிகரமாகப் போதிக்கின்றனர்.
இதை நீங்கள் தெரிந்துவைத்திருக்கின்றீர்களா? தெரிந்துவைத்திருக்கின்றீர்களா?

800 மாணவியரைக் கொண்ட ஒரு பள்ளியில், ஒரு பஹாய் மாணவி வெகு கெட்டிக்காரத்தனமாகப் பயின்று எல்லாரும் பிரமிக்கும் அளவுக்கு நடத்தையுடைவளாக இருக்கின்றாள்.
இதுவும் உங்களுக்குத்தெரியுமா?

அவளுடைய நடத்தையின் மேன்மை எத்தகையது என்றால் அவளை முன் பின் தெரியாத எவரும் அவளை ஓர் ஆயத்துல்லாவின் மகள் என்றே நினைப்பார்கள்… ஆனால், அவள் ஒரு பஹாய்.

ஒரு பஹாய் பெண்ணின் நடத்தையையும், ஒரு ஷியா பெண்ணின் நடத்தையையும் பாருங்கள்!
ஆ ஆ ஆ! நான் மேற்கொண்டு பேசிக்கொண்டு போனால் நீங்கள் அனைவரும் நம்பிக்கையிழந்து போவீர்கள்! உண்மையில் “நான் உங்களை நாளைக்கு நரகத்திலேயே பார்த்துக்கொள்கிறேன்,” என கூறிவிடுவது நல்லது.

அவர்கள் செய்வதைப்பாருங்கள். நான் உங்களை நம்பிக்கையிழக்கச் செய்திட விருப்பமில்லை. – உங்களை விழித்தெழச் செய்திடவே விரும்புகிறேன்!

உங்களுக்கு (முல்லாக்கள்) எதையாவது செய்யத் தெரியுமோ தெரியாதோ. அப்படி இயலாதென்றால், தொலைந்து போய்விடுங்கள், வேறு யாராவது இந்த வேலையை செய்யட்டும். ஒரு முல்லா ஏதாதவது நல்ல காரியம் செய்த மறு கணமே, உங்களில் ஒருவர் வேறு எதையாவது செய்து குழப்பிவிடுகிறீர்கள்.

நான் ஒன்று சொல்லப் போகின்றேன். அது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் இங்கு நாளைக்கு வரத்தேவையில்லை.

பஹாய்களின் சமயம் நமக்கும் நமது முயல்வுகளுக்கெல்லாம் ஓர் ஓநாயைப் போன்றது.
போதைப் பழக்கத்துக்குள்ளான ஒரு பஹாய் அல்லது யூதரை எனக்குக் காட்டும் முதல் மனிதருக்கு நான் ஒரு பரிசு கொடுக்கிறேன்.
போதைப் பழக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் ஒரு பஹாயைக்கூட நீங்கள் காணமுடியாது.
கெட்ட நடத்தையுடைய அல்லது மற்றவர் சட்டையைப் பிடித்து கொச்சையாகத் திட்டும் ஒரு பஹாயைக் கூட நீங்கள் பார்க்கமுடியாது.

குர்’ஆன் குறித்து நடத்தப்பட்ட ஒரு பள்ளி சோதனையில், ஒரு பஹாய் 20/20 மார்க் வாங்குகிறார் ஆனால் ஒரு ஷியா முஸ்லிம் 2/20 வாங்குகிறார்.(அது கூட, அம் மாணவரின் தந்தை நமக்குத் தெரிந்தவர் என்பதால் அந்த 2 புள்ளிகளை நாம் வழங்குகிறோம்). இல்லையென்றால் அந்தத் தந்தை திருப்தியடையாமல் ஆத்திரம் கொள்ளக்கூடும்.

நானும் ஒரு பஹாய், யூத, மற்றும் கிருஸ்தவ மாணவனை பெற்றிருந்தேன். அந்தப் பஹாய் மாணவரின் இயல்பு மற்றும் நடத்தைக்கு நான் 20/20 புள்ளிகள் கொடுப்பேன்… ஏனெனில் நான் அவருக்கு 30/20 என கொடுக்க முடியாது.

ஒரு வகுப்பில் ஒரு பஹாய் மாணவன் யாருடனும் சண்டையிட மாட்டார், மற்றவரைப் பார்த்து சாபமிடமாட்டார், வகுப்பை குலைக்கமாட்டார், (சத்தமாக) மிகவும் நேர்த்தியான உடைகள் (மேலும் சத்தமாக): ஆனால் ஒரு ஷியாவின் நிலை என்ன? ஒன்றுமே இல்லை. அப்பள்ளி முழுவதும் தேடினாலும் 2 கிலோ விஷயம் கூட கிடைக்காது.

மைய நடவடிக்கைகள் எதற்காக


மைய நடவடிக்கைகள்

உலகம் முழுவதும் உள்ள பஹாய் சமூகங்களில் இன்று நடைபெறும் நடவடிக்கைகளில் மைய நடவடிக்கைகளாக பயிற்சி வட்டங்கள், வழிபாட்டுக் கூட்டங்கள், இளைய இளைஞர் ஒன்றுகூடல்கள் மற்றும் குழந்தைகள் வகுப்புகள் உள்ளன. இந்த நான்கும் அடிப்படை நடவடிக்கைகளாக விளங்குகின்றன. இந்த நடவடிக்கைளுக்கான அடிப்படை நோக்கம் என்ன?

பெரும்பாலான பஹாய்கள் சமய வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கைகளுக்கான நோக்கம் என நினைக்கின்றனர். ஆனால், பஹாய்களின் அனைத்துலக ஆலோசகரான டாக்டர் முஹாஜர் அவர்கள் (இப்போது உலக நீதிமன்ற உறுப்பினர்) இந்த நடவடிக்கைகளுக்கான நோக்கம் சமுதாயத்திற்கு சேவை செய்வதும் “எழுத்தில் வடிக்கபட்டவற்றை மெய்ப்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதாகும்,” என வலியுறுத்தினார். அதாவது, உலக சீர்திருத்தத்திற்கு சேவை செய்வது.

நம்மில் பலர் ரூஹி பயிற்சியாளர்களாக இருக்கின்றோம். நம்மில் எத்தனை பேர் நாம் செயல்படுத்தும் இந்த மையநடவடிக்கைகளை, தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு நாகரிகம், ஒரு புதிய மனித இனத்தை உருவாக்குவது, சமுதாய சீர்திருத்தத்திற்கான வழி என காண்கிறோம்? பெரும்பாலும் மைய நடவடிக்கைகள் பஹாய் சமயத்தைப் போதனை செய்வது மற்றும் பஹாய் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது என்பதே நம்மில் பலரின் கருத்தாகும். ஆனால், நமது மைய நடவடிக்கைகளின் நோக்கமே சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான நமது ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்வதாகும். அதன் மூலமாக இந்த நடவடிக்கைகள் சமூகங்கங்களை உருவாக்குதலன்றி வெறும் சமய போதனை மட்டுமே சார்ந்தவையன்று.

டாக்டர் முஹாஜர் அவர்கள் 1 – 7 வரையிலான ரூறி பயிற்சி நூல்களை சமுதாயத்தின் கண்களைக் கொண்டு பார்க்குமாறு கூறுகிறார். அவ்வாறு செய்து அந்தப் பயிற்சி நூல்களில் பதிந்துள்ள கருத்துக்கள் வெறும் சமய விரிவாக்கம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு என்றில்லாமல் அவை எவ்வாறு சமுதாய செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்பது குறித்து ஆழச்சிந்திக்கச் சொல்கிறார். உதாரணமாக, ரூஹி முதல் நூலின் முதல் வாசகக்குறிப்பு தூய்மையான நற்செயல்களின் மூலம் உலக சீர்திருத்தம் ஏற்படக்கூடுதல் பற்றி விவரிக்கின்றது. அப்துல்-பஹாவின் போதனையான “உங்கள் பாதையில் குறுக்கிடும் அனைவருக்கும் உங்கள் உள்ளங்கள் அன்பெனும் தீயினைக் கொண்டு எரியட்டும்” என்பது சகல தப்பெண்ணங்களையும் அகற்றக்கூடும் என்பது பற்றி சிந்தித்திருப்பீர்களா? நாம் மேலும் மேலும் வாய்மையோடு வாழ முயல்வது நமது ஆன்மீக வளர்ச்சி மட்டுமின்றி மேலும் நல்ல சமுதாயம் ஒன்று உருபெறுவதே நோக்கம் என்பது குறித்து நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்கின்றோமா? ஆதலால், நமது மைய நடவடிக்கைகளில் பங்கெடுப்போர்களுள் சமுதாய தன்மைமாற்றம் மற்றும் சுயதன்மைமாற்றத்திற்கான ஓர் அகக்காட்சி வழங்கப்படுவது அவசியம் என்பது தெளிவு.

சரி இப்போது யாராவது நீங்கள் எதற்காக இந்த ரூஹி பயிற்சிக்கு என்னை அழைக்கிறீர்கள் என கேட்டால், அதன் வாயிலாக என்னை பஹாய் ஆக்கிடுவது உங்கள் நோக்கமா என கேட்டால், அதற்கு நாம் வெகு தைரியாமாக ‘இல்லை’ எனக் கூறி இந்த மைய நடவடிக்கைகளின் நோக்கம் சமுதாயத்தின் தன்மைமாற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் உதவுவதே நோக்கம் என கூறிடலாம்.

கார்மல் மலைமீது நாடாலுடன் ஓர் உரையாடல்


டான் கெய்கர் மற்றும் புனிதநிலத்திலிருந்து ஒரு மிகவும் மாறுபட்ட, இனிமை மிகு கதை
(இது நடந்து பல வருடங்கள் ஆகியபோதும் அதன் மையக்கருத்து எக்காலத்திற்கும் எவ்வேளைக்கும் பொருத்தமானதாகும்)

நாடால்

“மிஸ்டர் டான், நான் உங்களோடு சற்று பேசமுடியுமா?” என என் அறையின் பாதி திறந்திருந்த கதவின் வழியாக, இரு கைகளிலும் காப்பிக் கோப்பைகளை ஏந்தியிருந்த நாடால் கேட்டார். “நான் இங்கு வேலை செய்து வந்து இரண்டு வருடங்களில் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.” என மேலும் கூறினார்.

நாடால் ஜோர்டான் நாட்டைச் சார்ந்த ஓர் அரேபியராவார். அவர் கார்மல் மலை படித்தளங்களில் நிர்மானிக்கப்பட்டுவரும் அலங்கார நீரூற்றுக்களின் நீர்குழாய் அமைப்பாளரிடம் உதவியாளராக கடந்த மூன்றாண்டுகளாக பனியாற்றி வந்துள்ளார். தமது குடும்பத்தை ஜோர்டான் நாட்டிலேயே விட்டு வந்த அவர் ஓர் சிறந்த உழைப்பாளியாவார்.

“நாம் இதயபூர்வமாக சேவையாற்றும் போது வாழ்க்கை வளமாக இருக்கும், ஆனால், வெரும் பணத்திற்காக மட்டுமே நாம் செய்யும் போது நாம் ஒன்றுமற்றவர்களாக ஆகிவிடுகின்றோம்,” என ஆரம்பித்தார். உயரமான, மெலிந்த முப்பதிற்கும் சற்று அதிகமான வயதுடைய அவர் மீசையில்லாத ஒமார் ஷாரிஃப்பைப் போன்று காட்சியளித்தார். கூர்ந்த கருமை நிற கண்களும் எந்நேரமும் சிரித்த முகத்துடனான அவர் தமக்குத் தெரிந்த சிறிதே ஆன ஆங்கிலத்தில் உரையாட தயங்கமாட்டார், அதிலும் அவ்வப்போது ஓரிரு அரபு வார்த்தைகளும் கலந்து வரும்.

“தொழில் என்பது ஒரு நூலைப் போன்றது, அதை முன்புறம் ஆரம்பித்து பின்புறமாக செல்வது நல்லது. மாறாக, அதை நடுவில் ஆரம்பித்து அதை முடிக்காமல் விடுவது நல்லதல்ல. நான் ஆரம்பத்தில் துவங்கி பிறகு முடிவிற்குச் செல்ல விரும்புகிறேன். இந்த அலங்கார நீருற்றுகள் அனைத்திலும் நீர் ஊறுவதைக் காண விரும்புகிறேன்,” நான் இங்கு இரண்டு வருடங்களாக வேலை செய்கிறேன். ஓர் அராபியர் ஒருவரோடு பதினான்கு நாட்கள் ஒன்றாக உணவுண்டாரேயானால் அவர் அக்குடும்பத்தைச் சார்ந்தவராகின்றார் என என் தாத்தா கூறுவார். நான் இங்கு இரண்டு வருடங்களாக இருக்கின்றேன், உங்களுக்கு அது புரிகின்றதா?” என்றார் அவர்.

“ஆமாம், நீர் குடும்ப அங்கத்தினர் போன்றவர். சரி, இங்கு நீர் என்ன கற்றுக்கொண்டுள்ளீர்?” என நான் வினவினேன்.

“இங்கு நாங்கள் ஆற்றும் கடமை நமக்குத் தெரிந்த அளவைவிட மிகவும் முக்கியமானதாகும். ஒரு நாள் நான் ஜோர்டான் நாட்டிற்கோ அமெரிக்காவிற்கோ சென்று அங்கு பஹாய் ஆகிவிடுவேன்,” என தொடர்ந்தார்.

“நீர் ஏன் பஹாய் ஆகிட விரும்புகிறீர்?” என நான் வினவினேன்.

“பஹாய்கள், முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்தவர்களிலிருந்து மாறுபட்டுள்ளனர். நீங்கள் நபி முகம்மது மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையை மதிக்கின்றீர்கள். ஆகவே, உங்கள் நம்பிக்கைகள் நல்லதாகவே இருக்கவேண்டும்,” என்றார்.

“பஹாய்களின் நம்பிக்கை என்னவென்பது உமக்குத் தெரியுமா?” என கேட்டேன்.

“நான் நூல்கள் படிக்காததினால் அது குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது ஆனால் அது ஒரு நதியைப் போன்றது. முகம்மது அந்த நதியின் ஒரு பகுதியாவார் ஆனால் நதி நீர் ஓடிச் சென்று பஹாய்’இல் கலக்கின்றது பிறகு நதி கடலைப் போன்று பெரிதாகின்றது. இப்போது நான் காத்திருப்பேன் ஆனால் ஒரு நாள் நான் நிச்சயமாக நூல்கள் படிப்பேன்,” என மேலும் தெரிவித்தார்.

நான் அவருடைய கண்களில் தேடுதல் மற்றும் அறிவுப்பசியைக் காண்கின்றேன். “நீர் இங்கு கடுமையாக சேவையாற்றியுள்ளீர் மற்றும் கடமைகளை செவ்வனே முடித்திட எங்களுக்கு உதவுவதற்காக நிறைய தியாகங்கள் செய்துள்ளீர். இந்த தியாகம் எனும் வார்த்தையை நீர் அறிவீரா?” என நான் கேட்டேன்.

இரண்டு பேனாக்களை மேஜையின் மீது வைத்து, “இதில் நான் உமக்கு ஒரு பேனாவை வழங்கினால் அது தியாகமல்ல ஆனால், நான் இரண்டையுமே உங்களுக்குக் கொடுத்து என்னிடம் ஒன்றுமே இல்லாது போனால், அது தியாகமாகும்,” என்றேன்.

“ஆமாம், இந்த மலையின் நிர்மானங்களை அமைத்திட நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கின்றேன். அவை வெகு அழகுமிக்கவை. இதன் வாயிலாக பஹாய்கள் ஒன்பது நாட்கள் மட்டுமே வருகின்றனர் ஏனெனில் ஒன்பது நாட்களுக்காக அவர்கள் இதை விட்டு வருவதில்லை,” என்றார்.

“நாடால், அது எனக்குத் தெரியும், கடவுள் அதை மறக்கமாட்டார், ஒருநாள் நீர், உமது குழந்தைகள் மற்றும்  பெற்றோருடன் இத்தியாகங்களுக்கான பிரதிபலன்கள் வழங்கப்படுவீர்கள்,” என நான் கூறினேன்.

“அப்பிரதிபலன்கள் என்னவாக இருக்கும்?” என்றார் அவர்.

“எனக்குத் தெரியாது, கடவுளுக்கு மட்டுமே அது தெரியும்,” என நான் பதிலளித்தேன்.

நீண்ட தாமதத்திற்குப் பிறகு, நாடால் தமது நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து, நீண்ட புன்முறுவலுடன், கண்கள் பிரகாசிக்க, “ஆமாம், நீர் கூறுவது சரியே, இந்த மலையில் ஏதோ ஒன்று உள்ளது, இப்போது நமக்கே தெரியாத ஒன்று அது ஆனால், சுவர்க்கத்தில் அது என்னவென்பதை நாம் தெரிந்துகொள்வோம்,” என்றார்.

“நிச்சயமாக நீர் தெரிந்துகொள்ளத்தான் போகிறீர் நாடால். கடவுள் அதை மறக்கமாட்டார்,” என்றேன் நான்.

“ஆமான் நீர் கூறுவது உண்மை, கடவுள் என்றுமே மறப்பதில்லை.”