பிரேசிலியா, பிரேசில் – பிரேசில் நாட்டின் பிரேசிலியாவில் உள்ள தேசிய காங்கிரஸில் சமீபத்தில் நடைபெற்ற பொது விசாரணையானது, மனிதகுலத்தின் ஆன்மீக இயல்பை அங்கீகரிப்பதன் மூலம் நாட்டின் பலதரப்பட்ட மக்களிடையே பகிரப்பட்ட அடையாளத்தை ஊக்குவிப்பதில் மதத்தின் பங்கை ஆய்வு செய்தது.
காங்கிரஸின் கீழ்சபையின் ஃபெடரல் துணை அதிகாரி எரிகா கோகே தமது தொடக்கக் கருத்துக்களில், பின்வரும் யோசனையை வலியுறுத்தினார்: “நமது ஆன்மீக இயல்பை மறுப்பது மனித இருப்பின் அடிப்படை அம்சத்தைப் பிய்த்து எறிவது போன்றது.”
பிரேசிலின் பஹாய் வெளிவிவகார அலுவலகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசாரணையில், கல்வியாளர்கள், சமய சமூகங்கள், பொதுமை சமூக அமைப்புக்கள் ஆகியன அடங்கிய ஒரு சமய ஒருமைபாட்டுக் குழுவின் பங்கேற்பு இருந்தது.
ஆழமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் ஆன்மீகக் கொள்கைகளைத் தழுவுவதன் மூலம் எவ்வாறு பலப்படுத்தப்படலாம் என்பதை விவாதங்கள் ஆராய்ந்தன.
பிரேசில் நாட்டின் பிரேசிலியாவில் உள்ள தேசிய காங்கிரஸில் நடைபெற்ற பொது விசாரணையில் பங்கேற்ற சிலரின் குழு புகைப்படம்.
வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரான லூயிஸா கவால்கன்டி, சமூகத்தில் பிரிவினைகளின் மையத்தில் அடையாள நெருக்கடி உள்ளது என கூறினார். “நாம் மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் வாழ்கிறோம்… கொந்தளிப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய, நெருக்கடி மற்றும் மாற்றத்தின் காலம் அது,” என அவர் கூறினார்.
சில குழுக்கள், பெரும்பாலும் “மற்றவர்” என கருதப்படுபவர்களுக்கு எதிரான எதிர்ப்பின் அடிப்படையாக மாறும் குறுகிய அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட ஒற்றுமை உணர்வைக் கொண்டுள்ளனர், என திருமதி காவலன்டி விளக்கினார்.
இந்த அணுகுமுறைகள் இறுதியில் கலாச்சார மட்டத்தில் வலுப்படுத்தப்படுகின்றன என அவர் கூறினார். “தவறுதலாக, ‘மற்றவர்’ என்னும் இந்தக் கலாச்சாரத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொள்வதுதான் இன்றைய நமது சவால் எனவும், இதுவே போதும் எனவும் நாம் எண்ணுகிறோம்.”
திருமதி. கேவல்காண்டி கூறுகையில், “தேவைப்படும தன்மைமாற்றமானது, மனிதத் தொடர்புகளின் கூட்டுறவு வடிவங்களையும்… நமது சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் ஒடுக்குமுறை மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கும் கலாச்சாரத்தின் கூறுகளை வேறுபடுத்திப் பார்க்க அதிக மக்களுக்கும் சமூகங்களுக்கும் உதவும் ஒரு பரந்த கற்றல் செயல்முறை நிறுவப்படுதலைக் கோருகின்றது.
அத்தகைய கற்றல் செயல்முறையை ஸ்தாபிப்பதற்கு, மதத்திலிருந்து வழிகாட்டும் கொள்கைகள் தேவைப்படும். அதாவது, “மனித கண்ணியத்தின் அசைக்க முடியாத பாதுகாப்பு, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வகைப்படுத்தும் இடைத்தொடர்பு” மற்றும் கூட்டு நடவடிக்கையும் தீர்மானம் செய்வதற்குமான அடிப்படையாக நீதி, கலந்தாலோசனை ஆகியன. பிரேசில் சமூகத்தின் ஒரு குறுக்குப் பிரிவினருடன் சமூக நீதி மற்றும் கலாச்சார மாற்றத்தின் பிரச்சினையை ஆராய்வதற்கான வெளியுறவு அலுவலகத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விசாரணை இருந்தது. பெரும்பாலும் அது வழக்கமாக நடத்தும் கலந்துரையாடல் மன்றங்கள் மூலம் நடைபெற்றது.
விவேகானந்தர், சாரா ஃபார்மர் (அவரது இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார்), சார்லஸ் மல்லாய் (நின்று), வெள்ளை தொப்பி மற்றும் கைத்தடியுடன். இது மற்றொரு, இதுவரை அறியப்படாத, விவேகானந்தர் அவரது வகுப்பில் ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம்…
கிரீன் ஏக்கர் – தங்கும் விடுதி
விவேகானந்தர் 12 ஜனவரி 1863-இல் இந்தியா, வங்காளத்தில் பிறந்தார். இவர் இராமகிருஷ்னரின் பிரதான சீடராவார். 1893-இல் சிக்காகோவில் நடைபெற்ற மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்துகொண்ட பிறகு அமெரிக்கர்களிடையே விவேகானந்தர் மிகவும் பிரபலம் பெற்றிருந்தார். அவரது அமெரிக்க விஜயத்தின் போது, இவர் பஹாய் பள்ளியான கிரீன் ஏக்கரின் நிறுவனரான சாரா ஃபார்மரின் அழைப்பின் பேரில் பல வாரங்கள் கிரீன் ஏக்கள் பள்ளியில் தங்கியிருந்தார்.
இந்தப் பாராளுமன்றத்தில்தான் பஹாய் சமயம் பற்றிய முதல் அறிமுக உரை வழங்கப்பட்டது. இந்தக் கூட்டம் பஹாவுல்லா மறைந்த ஒரு வருடத்திற்குள், அதுவும் சிக்காகோ நகரில் ஏன் நடைபெற்றது என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்க ஒன்றாகும்.
“உலகின் கொலம்பிய கண்காட்சி தொடர்பாக சிக்காகோவில் நடைபெற்ற உலக மதங்கள் பாராளுமன்றத்தில், மேற்கில் முதன் முறையாக பஹாய் சமயம் குறிப்பிடப்பட்டது. சிரியா நாட்டில் பணியாற்றிய ரெவரெண்ட் ஹென்றி ஹெச். ஜெஸ்ஸப் எழுதிய ஒரு கட்டுரையில், 1890-இல் பஹாவுல்லா ஓரியண்டலிஸ்ட் எட்வர்ட் கிரான்வில் பிரவுனிடம் பேசிய வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். “மிகவும் உன்னதமான, கிறிஸ்துவைப் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அச்சொற்களை எங்கள் முடிவுரையாக நாங்கள் மீண்டும் கூறுகிறோம்.”:
“எல்லா தேசங்களும் சமயரீதியில் ஒன்றாகவும், எல்லா மனிதர்களும் சகோதரர்களாகவும் ஆகிட வேண்டும்; மனித புத்திரர்களுக்கிடையே பாசம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்; மதங்களின் பன்முகத்தன்மை நிறுத்தப்பட வேண்டும் மற்றும் இன வேறுபாடுகள் நீக்கப்பட வேண்டும். இதில் என்ன தீங்கு இருக்கிறது? இருப்பினும் இது அவ்வாறே ஆகிடும். இந்த பலனற்ற சண்டைகள், இந்த அழிவுகரமான போர்கள் கடந்து போகும்; ‘அதிமகா சமாதானம்’ வரும். ஐரோப்பாவில் உள்ள உங்களுக்கும் இது தேவைப்படவில்லையா? ஒரு மனிதன் தன் நாட்டை நேசிக்கிறான் என்பதில் பெருமை கொள்ள வேண்டாம்; அவன் தனது இனத்தை நேசிக்கின்றான் என்பதில் அவன் பெருமைகொள்ளட்டும்.”
பஹாய் உலகம், தொகுதி 2, பக். 169.
1893-இல் நடைபெற்ற முதல் மதங்களின் பாராளுமன்றம்
1893-இல் நடந்த முதல் உலக மதங்களின் பாராளுமன்றத்தில், பஹாவுல்லா மறைந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, நன்கு பிரபலமான கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர் டாக்டர் ஹென்றி எச். ஜெஸ்ஸப், உலக மதங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படலாம் என்பது குறித்த கட்டுரையை எழுதினார். பாராளுமன்றத்தில் நடந்த பிரதான அமர்வின் போது மற்றொரு கிறிஸ்தவ மதகுருவால் வாசிக்கப்பட்ட கட்டுரை, பஹாவுல்லாவின் இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டியது. இது முதன் முதலில் அவரைச் சந்தித்த ஒரே மேற்கத்தியரான பிரிட்டிஷ் ஓரியண்டலிஸ்டும் அறிஞருமான எட்வர்ட் கிரான்வில் பிரவுனினால் பதிவு செய்யப்பட்டது”ஜூலை 28 அன்று, பாஸ்டனின் பிராஹ்மணீய மற்றும் உலகப் புகழ்பெற்ற ஈவினிங் டிரான்ஸ்கிரிப்ட்டில் கிரீன் ஏக்கரில் விவேகானந்தர் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இது நிச்சயமாக ரால்ப் வால்டோ டிரைனினால் எழுதப்பட்டது, அவர் பின்னர் மனோதத்துவ பாடங்களில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக ஆனார். (அந்த நேரத்தில், அவர் க்ரீனேக்கரில் டிரான்ஸ்கிரிப்ட் என்னும் பத்திரிக்கையின் சிறப்பு நிருபராக இருந்தார், அங்கு அவர் தனக்காக ஒரு பைன்மர குழுமத்தின் விளிம்பில் ஒரு சிறிய அறையை கட்டினார்.) கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு வாசிக்கப்பட்டது: வெள்ளிக் கிழமை க்ரீனேக்கரில் சில வாரங்களைக் கழிக்கும் இந்தியாவின் விவேகானந்தரால் கூடுதல் விரிவுரை வழங்கப்படும். தொடங்கப்பட்ட இந்த ஐக்கியத்துவ பணியில் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர், மேலும் ஒவ்வொரு காலையிலும் அவர் அலைபாயும் சிவப்பு நிற ஆடைகள் மற்றும் மஞ்சள் தலைப்பாகை அணிந்து, பரந்த பைன்மரங்களின் அருகே தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து, ஆண்களும் பெண்களுமான, ஆர்வத்துடன் செவிமடுக்கும் குழு ஒன்றினால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம், அவர் அறிவு மற்றும் அனுபவம் என்னும் பொக்கிஷங்களைத் தாராளமாகப் பொழிகின்றார். அதை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற நமக்கு இது ஒரு வளமான வாய்ப்பாகும், மேலும் பல பசித்திருக்கும் உள்ளங்கள் அதைப் பெறவில்லை என்பதுதான் எங்களின் ஒரே வருத்தம். கிரீன்ஏக்கர் மிகவும் நிரம்பியுள்ளது, அருகிலுள்ள அரை டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட குடிசைகள் உள்ளன: இன்னும் இடம் உள்ளது. அனைவருக்கும் இலவசமான விரிவுரைகளில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு இடமளிக்க நகரவாசிகள் தங்கள் அறைகளைத் திறக்கிறார்கள்.”
கிரீன் ஏக்கர் பள்ளி
ஜூலை 31 அன்று விவேகானந்தர் கிரீன் ஏக்கர் விடுதியில் இருந்து ஹேல்ஸின் மகள்கள் மற்றும் உடன்பிறப்புகளின் மகள்கள் ஆனோருக்கு எழுதினார்: “சத்திரத்தின் மக்கள் ஏறத்தாழ வசதி படைத்தவர்கள், மேலும் முகாம் மக்கள் ஆரோக்கியமானவர்கள், இளைஞர்கள், நேர்மையானவர்கள் மற்றும் புனிதமான ஆண்கள் மற்றும் பெண்கள். நான் அவர்கள் அனைவருக்கும் ஷிவோஹம், ஷிவோஹம் என்னும் (மந்திரத்தைக்) கற்பிக்கிறேன், அவர்கள் அனைவரும் களங்கமில்லாதவர்கள், தூய்மையானவர்கள் மற்றும் எல்லா கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட துணிச்சலுடன் அதை மீண்டும் உச்சரிக்கிறார்கள். பின்னர், 1894-ஆம் ஆண்டு செப்டம்பரில், 1893-ஆம் ஆண்டு சென்னையில் தமது விருந்தோம்பலராக இருந்த திரு. மன்மத நாத் பட்டாச்சார்யாவுக்கு விவேகானந்தர் ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் அவர்: “சிறிது நேரத்திற்கு முன்பு கிரீன்ஏக்கர் என்னும் இடத்தில் பல நூறு அறிவார்ந்த ஆண்களும் பெண்களும் கூடியிருந்தனர், நான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அங்கு இருந்தேன். ஒவ்வொரு நாளும் நான் ஒரு மரத்தடியில் நமது இந்து பாணியில் அமர்ந்திருப்பேன், என்னைச் சுற்றியிருந்த புல்லில் என்னைப் பின்பற்றுபவர்களும் சீடர்களும் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு காலையிலும் நான் அவர்களுக்குப் போதிப்பேன், அவர்கள்தான் எவ்வளவு ஆர்வமாக இருந்தனர்.”
விவேகானந்தர் 4 ஜூலை 1902-இல் தமது 39-வது வயதில் காலமானார். இவர் நினைவாக இந்திய அரசாங்கம் 12 ஜனவரியில் அவரது பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்துள்ளது.
இக்கட்டுரை ஒரு சுருக்க விவரமே அன்றி முழுமையானதல்ல. இடம் மற்றும் நேரம் போதாமையின் காரணமாகப் பல விஷயங்கள் இதில் விடுபட்டிருக்கலாம்.
BIC அடிஸ் அபாபா— பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) அடிஸ் அபாபா அலுவலகம், அமைதியை உருவாக்குவதில் பெண்கள் ஆற்றக்கூடிய முக்கியப் பங்கை ஆராய்ந்து, ‘அமைதியில் பெண்கள்’ என்னும் தலைப்பில் ஒரு சிறு காணொளியை வெளியிட்டுள்ளது.
BIC-யின் பிரதிநிதியான சோலமன் பெலே, பெண்களின் முன்னேற்றத்திற்கும் வளமான மற்றும் அமைதியான சமூகங்களை உருவாக்குவதற்கும் இடையிலான உறவை காணொளி ஆராய்கிறது என கூறுகிறார். “சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாகத் தலைமைத்துவப் பாத்திரங்களில் பெண்களின் முழுப் பங்கேற்பு அவசியம்” என அவர் கூறுகிறார்.
டாக்டர் பெலே மேலும் கூறுவாதாவது: “முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் உள்ளடக்குதலைப் பராமரிப்பதற்குப் பெண்களின் திறனாற்றல் அவசியம்.” மக்கள் தொகையில் இந்த ஒரு பகுதியினர் இச்செயல்முறையிலிருந்து விலக்கப்பட்டால் அமைதியை உருவாக்குவது சாத்தியமில்லை என அவர் மேலும் வலியுறுத்துகிறார்.
மனித முயல்வுகளின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முழுப் பங்கேற்பைத் தடுக்கும் சமூகத்தின் சில அம்சங்களைக் காணொளி ஆராய்கிறது. வீடியோவில் சாப்ரினா ஸெலெக்கெ ஷோட்யாய் குறித்துக்காட்டிய ஓர் உதாரணம் குடும்பம் என்னும் ஸ்தாபனமாகும். “பாராட்டத்தக்க ஒழுக்கங்களும் திறன்களும் பேணப்படும் இடமாகக் குடும்பம் என்னும் அலகை நாம் பார்க்கும் போது அதில் பெண்கள் அமைதியின் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.”
திருமதி. ஸெலெக்கெ ஷோட்யாய், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவக் கொள்கை அங்கீகரிக்கப்படாதபோது, குடும்பத்தில் மக்கள் கற்றுக் கொள்ளும் தீங்கான மனப்பான்மை மற்றும் நடத்தைகளானவை வாழ்க்கையின் பிற துறைகளில் அவர்களின் சமுதாய இடைத்தொடர்புகளைத் தொடர்ந்து பாதிக்கின்றன என விளக்குகிறார். “ஒரு குடும்பம் சமத்துவத்தை அங்கீகரிக்கத் தவறினால், பெண்கள் சமூகத்தில் தாழ்த்தப்படுகின்றனர்.” இது பின்னர் ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறையாக மாறுகிறது என அவர் கூறுகிறார்.
இங்கு காணக்கூடிய குறுகிய காணொளியானது, அடிஸ் அபாபா அலுவலகம் பல ஆண்டுகளாகப் பெண்களின் தனித்துவமான பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக மேற்கொண்ட பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். மிகச் சமீபத்தில், அலுவலகம் பெண்களுக்குக் பருவநிலை நெருக்கடியின் சமமற்ற தாக்கம் குறித்த கலுந்துரையாடல் மன்றத்தை ஏற்பாடு செய்து நடத்தியது, இந்தச் சவாலுக்கு மத்தியிலும் ஆப்பிரிக்காவில் பெண்கள் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முன்னணி பங்கை வகிக்கின்றனர் என குறிப்பிட்டார்.
அடிஸ் அபாபா அலுவலகம், அமைதி மற்றும் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சொல்லாடல்கள் தொடர்பான தலைப்புகளை ஆராயும் கூடுதல் வீடியோக்களை வெளியிடும்.
பஹாய் உலக மையம் — இணைய வெளியீடான ‘பஹாய் உலகம்’ மூன்று புதிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
“அடையாளம் குறித்த நெருக்கடி” மனிதகுலத்தின் ஒருமைப்பாடு பற்றிய பஹாய் கொள்கை எவ்வாறு ஒற்றுமைக்கும் பன்முகத்தன்மைக்கும் இடையிலுள்ள தீர்க்க முடியாத பதற்றத்தை தீர்க்க முடியும் என்பதை ஆராய்கிறது. “முரண்பாடாக, மனித ஒருமை குறித்த ஆழமான உணர்வின் தேவை மிகவும் வெளிப்படையாக அதிகரித்திருந்தாலும், ‘நாம்’ மற்றும் ‘அவர்கள்’ என்னும் பிரிவுகள் பெருகி, உலகம் முழுவதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன” என ஆசிரியர் எழுதுகிறார்.
“நல்லிணக்கத்தின் சவாலுக்கு முன்னெழுதல்” என்னும் தலைப்பிலான மற்றொரு கட்டுரை, கனடாவில் காலனித்துவம், இனவெறி ஆகியவற்றின் பாரம்பரியத்தை பகுப்பாய்வு செய்வதுடன், உண்மையான நல்லிணக்கம் உட்குறிக்கின்ற சமூக தன்மைமாற்றத்தின் ஆழமான, பன்முக செயல்முறையை ஆராய்கிறது.
“தன்மைமாற்ற காலமாக நவீனத்துவம்” என்னும் கட்டுரை பின்வரும் கேள்வியைக் கேட்கிறது: “நவீனத்துவம்” மனிதகுலத்தின் கூட்டு வளரிளம் பருவத்தின் ஒரு காலமாக மறுபரிசீலனை செய்யப்பட்டால் என்னவாகும்? அத்தகைய முன்னோக்கு, மனிதகுலத்தின் கூட்டு முதிர்ச்சிக்கு ஏற்ற நாகரிகத்தின் அடித்தளத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்கும் அறிவாற்றல் செயல்பாடுகளின் புதிய மற்றும் நீண்டகால வடிவங்களுக்கான வழியைத் திறக்கிறது என ஆசிரியர் முன்மொழிகிறார்.
பஹாய் உலக இணையதளம், மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்குத் தொடர்புடைய கருப்பொருள்களை ஆராயும் கட்டுரைகள் மற்றும் நீண்ட வடிவக் கட்டுரைகளின் தொகுப்பை வழங்குகிறது, உலகளாவிய பஹாய் சமூகத்தில் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுவதுடன், பஹாய் சமயத்தின் ஆற்றல்மிக்க வரலாற்றின் மீது பிரதிபலிக்கின்றது.
இரண்டு உயிர்த்தியாகிகளின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்; ஒருவர் பாரசீக பிரபு, அரச சபையில் பிரபலமானவர், அதிக செல்வம் படைத்தவர், நாடு முழுவதும் அறியப்பட்டவர். அவர் பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் என கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தப் புகழ்பெற்ற மனிதர் மற்றொருவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார், உணவோ நீரோ இல்லாமல் சிறையில் தள்ளப்பட்டார். சிறைசெய்யப்பட்ட மூன்றாம் நாள் அவர்களில் ஒருவர் தனக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுக்கும்படி சிறை காவலரிடம் கேட்டார். அவரது பணிவு மனப்பான்மையால் தாக்கம் அடைந்திருந்த, காவலர் அம்மனிதர் கேட்டுக் கொண்டபடி தேநீர் வழங்கினார்; அவருக்கு நன்றி தெரிவித்து, கைதி கூறினார்: “உங்களைத் தொந்தரவு செய்வதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால், இன்றிரவு எங்கள் கோரிக்கைகளுக்கு கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள், நாளை இரவு நாங்கள் கடவுளின் விருந்தினர்களாக இருப்போம்,” என கூறினார்.
நான்காவது நாளன்று அவர்கள் சிறையிலிருந்து வெளியே கொண்டுச் செல்லப்பட்டனர்; இரண்டு கரடிகள் அவர்களுக்கு முன்பாக நடனமாட விடப்பட்டன; அவர்களை அவமானப்படுத்துவதற்காக பல குரங்குகள் கொண்டுவரப்பட்டன. சாலமன் ஃகானும் அவரது நண்பரும் ஓர் அறைக்குள் கொண்டுச் செல்லப்பட்டனர்; அவர்களின் மார்பகங்கள் கிழிக்கப்பட்டு, திறந்தநிலையில் இருந்த துளைகளில் ஒளிரும் மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டன. பாரசீகத்தில் இது சித்திரவதைகளில் ஒரு மிகவும் இழிவான வடிவமாகக் கருதப்படுகிறது.
இது உயிர்த்தியாகி சுலைமான் ஃகானின் (நடுவில்) படம்?
பின்னர் நகர் முழுவதும் ஊர்வலமாகப் புறப்பட்டனர். சாலமன் ஃகான் காவலரைப் பார்த்துக் கூறினார்: “இந்தக் குழப்பநிலைக்கு அவசியமில்லை. எங்கள் மரணத்தைப் பற்றி ஏன் இத்தனை அக்கறை? உண்மையில், இது எங்களின் திருமண விருந்து. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். வாத்தியக் குழுவுடன், ஏராளமானோர் பின்தொடர்ந்து, நகரின் சந்தை மற்றும் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர். மக்கள் அவர்களை நீண்ட ஊசிகளால் குத்தி, “எங்களுக்காக நடனமாடுங்கள்!” என கூறினர். தளராத தைரியத்துடனும் களிப்பு நிறைந்த மகிழ்ச்சியுடனும் அவர்கள் நடந்து சென்றனர்; காலை முதல் மாலை வரை நகரின் வழியாக நடந்து சென்றனர். மெழுகுவர்த்திகள் எரிந்து முடிந்த போது, காவலர்கள் புதிய மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தனர்.
தெஹரான் நகர வாசல்களில் ஒன்று
எல்லா நேரத்திலும் நமது வீரமனதினர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்; அவர்கள் அணிவகுத்துச் செல்லும்போது அவர்கள் வலப்புறத்திலும் இடதுபுறத்திலுமு உள்ள மக்களைப் பார்த்து நகைத்தனர்; விண்ணுலகை நோக்கி முணுமுணுத்தனர். இறுதியில் அவர்கள் நகரின் வெளிப்புற வாயில்களுக்கு வந்தனர்; அங்கு அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டனர்.
தெஹ்ரான் நகரில் நான்கு உயரமான வாயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் உடலின் ஒரு பகுதி வாயில்களின் இருபுறமும் அலங்கரித்தது. உடல் துண்டிக்கப்பட்ட போதும், சாலமன் ஃகான் கடவுளிடம் பிரார்த்தித்தும் மன்றாடவும் செய்தார். இந்தக் காரணத்திற்காக ஓர் எதிரியினால் தொகுக்கப்பட்ட வரலாற்றில் இந்தக் கதை காணப்படுகின்றது; ஏனெனில் அனைத்தும் ஷா மன்னரின் வரலாற்றாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. முடிவில், வரலாற்றாசிரியர் சாலமன் ஃகானைப் பற்றி கூறுகிறார், “இந்த மனிதன் ஒரு தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டான்.” கடவுளின் விசுவாசிகள் எவ்வளவு எளிதில் தங்கள் உயிரைக் கொடுக்கின்றனர், அவர்கள் எவ்வளவு சுய தியாகம் செய்கின்றனர், நித்தியமாக உறுதியுடனும் பற்றுறுதியுடனும் இருக்கின்றனர் என்பதை இந்தக் கதை காட்டுகிறது. எல்-அஃபாவின் அடிவானத்திலிருந்து இந்தத் தியாகிகள் நிலையான நட்சத்திரங்களைப் போன்று எப்போதும் பிரகாசிக்கக்கூடிய பிரதிபலிப்பு சக்தியுடன் கடவுளின் ராஜ்யத்திற்கு அவர்களை ஈர்த்த பஹாவுல்லாவின் ஒளியின் விளைவுதான் இந்த ஒளிபெற்ற ஆன்மாக்கள்.
சான்டியாகோ, சிலி – சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் தளம் சமீபத்தில் ஓர் ஒன்றுகூடலை நடத்தியது. இது, ஆண்டிஸ் மலைகளில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் முறைமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாதுகாப்புப் பணித்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்தது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மலைத் திட்டம், கோயில் அமைந்துள்ள பென்யலோலன் உட்பட சான்டியாகோ பெருநகரம் மற்றும் வால்பரைசோ பகுதிகளின் இயற்கைச் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கப் பொது மற்றும் தனியார் துறைகளை ஈடுபடுத்தியுள்ளது.
பென்யலோலன் நகர மேயரான கேரொலினா லெய்டாவ் அல்வரெஸ், கோவில் திறக்கப்பட்டதில் இருந்து இப்பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் அது ஆற்றியுள்ள பங்கிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். “இந்த மைதானங்களுக்கு ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு… ஏனெனில், இந்த மலையடிவாரங்களை மீட்டெடுப்பதற்கான [பஹாய் சமூகத்தின்] முயற்சிகள் மிகவும் முக்கியமானவை,” என அவர் கூறினார்.
உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மலைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கருத்தரங்கு குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள்.
GEF திட்டத்தின் பிரதிநிதியான மேக்ஸிமிலியானோ கொக்ஸ் லாரேய்ன் கோவில் தளத்தில் வனப் பராமரிப்புடன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை நிலைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்: “பூர்வீக தாவரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், பார்வைத் தடைகளைக் குறைப்பதன் மூலமும், சுற்றுச்சூழல் முறைமை மறுசீரமைப்பில் ஈடுபடுவதன் மூலமும், வடிவமைப்பும் நிலதோற்றமும் இயற்கையை ரசிப்பதற்கான ஒரு அமைதியான இடத்தை உருவாக்குகிறது. அதில் நகரம் அமைதியைக் காண்கிறது; பார்வையாளர்கள் இயற்கையுடன் இணைந்திட முடியும். இந்த இணைப்பு அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டுவதுடன் தியானம் மற்றும் பிரதிபலிப்பு நிலையில் கோயிலை அணுகிட உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
மற்ற பங்கேற்பாளர்களில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் துணைச் செயலாளரும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், GEF மலைத் திட்டம் மற்றும் குடிமை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடங்குவர்.
அதன் இயற்கைச் சூழலில் சில்லி கோவிலின் ஒரு தோற்றம்
வழிபாட்டு இல்லத்தின் இயக்குநரான வெரோனிகா ஓரே, தமது கருத்துகளில், தளத்தில் நிலைப்படுத்தல் முயற்சிகளுக்கும் அப்பால், பஹாய் சமூகம் மனிதகுலத்தின் ஒற்றுமை போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ஆன்மீக மேம்பாட்டின் உயிரியல்முழுமை தொலைநோக்கை ஆராயும் உரையாடல்களுக்கான இடங்களை உருவாக்குவதன் மூலம் திட்டத்திற்கு மேலும் ஆதரவளிக்க முயன்றதாக விளக்கினார். .
“இந்தப் பூமியும், அதன் மக்களும், அதன் உயிரினங்களும், தனிமனிதனை உலகின் பொருள் வளங்களில் எப்போதும் அதிகரித்து வரும் பங்கைக் குவிக்க மற்றவர்களுடன் போட்டியிடுகின்ற, முற்றிலும் பொருளாதார மற்றும் சுயநலப் பிரிவாகக் கருதும் லௌகீகவாத மனப்பான்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன,” என அவர் கூறினார்.
பஹாய் வழிபாட்டு இல்லம் எல்லா மக்களுக்கும் திறந்திருப்பதுடன், பிரார்த்தனைகளும் தியானங்களும் சமுதாய சேவையை ஊக்குவிக்கும் ஓரிடமாகவும் அது உள்ளது.
மனிதகுல ஒருமைப்பாடு என்னும் கண்ணாடி வில்லையின் வழி மேம்பாட்டைப் பார்ப்பதன் மூலம், உண்மையான செழிப்பு என்பது அனைத்து மக்களின் செழுமை, நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் கிரகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அதிக தெளிவுடன் காணலாம் என திருமதி ஓரே விளக்கினார். லௌகீக முன்னேற்றம் மட்டும் போதாது. உண்மையான முன்னேற்றம் என்பது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆன்மீக மற்றும் தார்மீக வளர்ச்சியையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என இது அறிவுறுத்துகிறது.
சிலியின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரான லூயிஸ் சாண்டோவல், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பிரதிபலிப்பில், இந்தத் தொலைநோக்கை ஊக்குவிப்பதில், வழிபாட்டு இல்லம் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கூறுகின்றார். அது “மக்கள் தங்களின் ஆன்மீகத் தன்மையை நோக்கித் திரும்புவதற்கு ஊக்குவிப்பு அளித்துள்ளது.”
பஹாய் கோவில், “சமுதாயத்தின் புதுப்பித்தலுக்காக உழைக்க விரும்புவோரை ஈர்க்கும் இடமாக செயல்பட்டுள்ளது” என திரு. சந்தோவல் கூறுகிறார்.
பஹாய் உலக மையம் – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) ஜாக்கார்த்தா அலுவலகம், சமுதாய மேம்பாட்டிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறது. மிக சமீபத்தில் இந்தோனேசியா, பாலியில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசியாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் (SEAFORB) குறித்த மாநாட்டிலும் இது நடைபெற்றது.
வருடாந்திர சர்வமத மன்றம் பொது அக்கறை சார்ந்த பிரச்சினைகளை ஆராய்ந்திட, அரசாங்க அதிகாரிகள், மத சமூகங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் குடிமை சமூக நடவடிக்கையாளர்களை ஒன்றுகூட்டியது. இந்த ஆண்டு, பங்கேற்பாளர்கள் மத சுதந்திரம் குறித்த இணையவழி தகவல் தொடர்பு மற்றும் சமுதாய ஊடக உலகில் விரைவான மாற்றங்களின் தாக்கத்தை ஆராய்ந்தனர்.
ஒரு குழு கலந்துரையாடலில், BIC ஜகார்த்தா அலுவலகத்தின் பிரதிநிதியான டெஸ்டியா நவ்ரிஸ், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் நெறிமுறைகளைக் கருத்தில் கொள்வதை மதத்தின் அத்தியாவசிய நோக்கங்கள் எவ்வாறு வளப்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்தார்.
“[மதத்தின்] நோக்கம் மனித இனத்தின் நலன்களைப் பாதுகாப்பதும், ஒற்றுமையை மேம்படுத்துவதும், அன்பு மற்றும் கூட்டுறவு உணர்வை வளர்ப்பதும் ஆகும். …மதத்தின் வழி வெளிப்படுத்தப்படுபவை தனிப்பட்ட மத நடைமுறைகளுக்கும் மேலானைவயும், மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக நாம் சேவைச் செயல்களை வழங்கும் வழிகளைப் பற்றியதும் ஆகும்.
இந்தோனேசியாவின் பாலியில் 2022 தென்கிழக்கு ஆசிய மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் (SEAFORB) மாநாட்டில் பங்கேற்பாளர் குழு புகைப்படம்.
மிஸ். நவ்ரிஸ், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பல முன்னேற்றங்களுக்கு மூலாதாரமாக இருந்தாலும், தொழில்நுட்ப தயாரிப்புகளில் பொதிந்துள்ள சில மதிப்புகள் மற்றும் அனுமானங்கள், ஒரு தொழில்நுட்ப அமைப்பு அல்லது தீர்வு எவ்வளவு நல்ல நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அவை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். “எனவே இந்த அனுமானங்கள் மற்றும் நெறிமுறைகளை நேர்மையாக ஆராய்தல் முக்கியமாகும், அவை பெரும்பாலும் சமூக, தார்மீக அல்லது ஆன்மீக தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் அடிப்படையில் லௌகீகவாதத்தில் மட்டுமே ஆழமான கருத்தூண்றியவையாக இருக்கின்றன.”
அவர் மேலும் கூறியதாவது: “சந்தேகத்திற்கு இடமின்றி, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு பல முன்னேற்றங்களுக்கு ஆதாரமாக உள்ளது, இது மனித நோக்கத்தையும் திறன்களையும் பெருக்க உதவுகிறது. ஆயினும்கூட, எந்தவொரு கருவியையும் போலவே, அதன் வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டிற்கு அடிப்படையான நெறிமுறைக் கருத்தாக்கங்களைப் பொறுத்து, அது உற்பத்தி அல்லது அழிவுகரமான முறையில் பயன்படுத்தப்படலாம்…தொழில்நுட்பம் முன்னேற்றத்திற்கான வழிமுறையாக இருக்க வேண்டும் என்றால், அது ஒற்றுமை, நீதி போன்ற உன்னத அபிலாஷைகளையும் கொள்கைகளையும் வலுப்படுத்த வேண்டும்.”
சமூக மேம்பாட்டுக்கான ஐநா ஆணையத்தின் 59-வது அமர்வில் வழங்கப்பட்ட நமது விழுமியங்கள் மீதான பிரதிபலிப்புகள்: டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒரு நியாயமான மாற்றம் என்னும் தலைப்பில் BIC-யின் அறிக்கையில் இந்த எண்ணங்கள் மேலும் ஆராயப்பட்டுள்ளன. இந்த அறிக்கை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் “மனிதகுலத்தின் மிக உயர்ந்த லட்சியங்களைப் பிரதிபலிப்பதான ஓர் உலகிற்கு நீதியுடன் மாற்றப்படுதல்” குறித்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றிய கேள்விகளையும் ஆராய்கிறது.
பஹாய் உலக மையம் – பஹாய் உலக செய்தி சேவை கடந்த ஆண்டில் பல கதைகளை வெளியிட்டிருந்தது. ஒரு சிறந்த உலகத்தை நோக்கி நகர மனிதகுலத்தின் முயற்சிகளுக்கு பங்களிக்க உலகளாவிய பஹாய் சமூகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்கும் அக்கதைகளை செய்தி சேவை மறுகண்ணோட்டம் இடுகிறது.
உலகளாவிய மாநாடுகள்
2022-ஆம் ஆண்டின் முதல் தருணங்கள் வந்தபோது, உலகளாவிய பஹாய் சமூகம் அதன் பயணத்தில் ஒரு புதிய கட்டத்திற்கு அதை அறிமுகப்படுத்தும் வரிசையான உலகளாவிய மாநாடுகளுக்காக ஆவலுடன் காத்திருந்தது. வரவிருக்கும் தசாப்தத்தில் சமூக மாற்றத்தைப் பேணுவதற்கான பஹாய் முயற்சிகள் எவ்வாறு மேலும் தீவிரமடையக்கூடும் என்பது குறித்துத் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் கலந்தாலோசிக்க இந்த மகத்துவம்மிக்க கூட்டங்கள் ஒரு வாய்ப்பை வழங்கிடும்.
இந்த மாநாடுகளுக்கான அவசரத் தேவையை ஆண்டின் ஆரம்ப நாட்களில் உலக நீதி மன்றம் ஒருமைக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்தும் ஒரு செய்தியில் வலுப்படுத்தியது, அதில் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது: “மனிதகுலம் இப்போது எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் குறுகிய கால சுயநலனை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த அப்பட்டமான ஆன்மீக மற்றும் தார்மீக யதார்த்தத்துடன் இணக்கம் காண்பதற்கான அதன் விருப்பத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான சோதனையாகும்: ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரே ஒரு மனித குடும்பம் மட்டுமே உள்ளது, மற்றும் அது ஒரு விலைமதிப்பற்ற தாயகத்தைப் பகிர்ந்து கொள்கிறது.”
தொடர்ச்சியான சமூக அழுத்தங்கள் மற்றும் மோதல்களின் பின்னணியில், வரவிருக்கும் மாதங்களில் மாநாடுகள் உலகெங்கிலும் பரவின, இது எண்ணற்ற மக்கள் உலகளாவிய சவால்கள் குறித்த தங்கள் அதிகரித்து வரும் அவசர உணர்வை தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த உதவியது.
உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடைபெற்ற மாநாடுகள், பஹாய்களுக்கும் அவர்களின் நண்பர்கள் மற்றும் அண்டையருக்கும் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் பரவலான சொல்லாடல்களுக்கு பங்களிக்கும் முயற்சிகள் ஆகியவற்றின் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை இந்த செயல்முறைக்குப் பங்களிக்க விரும்பும் பல நண்பர்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் வழங்கின. பல இடங்களில், சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மற்றும் அமைதியான சமூகங்களைப் பேணுவது போன்ற ஒரு முக்கிய கருப்பொருளின் மீதான விவாதத்தை மாநாடுகள் தூண்டின. இந்த விவாதங்களின் மூலம், சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முயற்சியில் அன்பின் பிணைப்புகள் மற்றும் மற்றவர்களுடனான ஐக்கியத்தின் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளோம் என உணர்தல் ஆகியவற்றின் மூலம் மனிதகுலத்தின் பரோபகார திறனில் பங்கேற்பாளர்கள் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைப் பெற்றனர்.
ஆப்பிரிக்கா முழுவதும் மாநாடுகளின் அலை பரவியது, இது தங்கள் சமூகங்களின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்க அனைத்து பின்னணிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டியது. சில இடங்களில், கூட்டங்கள் குறிப்பிட்ட கருப்பொருள்களில் கவனம் செலுத்தின. எடுத்துக்காட்டாக, மத்திய ஆபிரிக்க குடியரசில், சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் பெண்களின் பங்கை ஆராய பாங்கூய்யில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் சுமார் 500 பெண்கள் கலந்து கொண்டனர். சாட்டில் நடந்த ஒரு மாநாடு தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களை ஒன்றிணைத்து, கூட்டு சமாதானத்தை அடைவதற்கு ஒவ்வொரு நபரும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து விவாதித்தது.
உலகின் பிற பகுதிகளைப் போலவே, அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற மாநாடுகளில் இளைஞர்கள் முக்கிய பங்கு பெற்றனர். அவர்களின் கலந்துரையாடல்கள் மற்றும் கலை நடவடிக்கைகள் அமைதியை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட துடிப்பான சமூகங்களை நிர்மாணிப்பதை மையமாகக் கொண்டிருந்தன.
ஆசியா முழுவதும் மாநாடுகளில் பங்கேற்றவர்கள் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவசியமான தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவின் பண்புகள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டங்களின் ஊற்சாகமூட்டும் சூழல் மாநாடுகளைத் தொடர்ந்து உடனடியாக பல நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் ஒரு கூட்டம் மது அருந்துவதால் குடும்பங்களில் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்ட சுகாதார மேம்பாட்டு பிரச்சாரத்தை ஊக்குவித்தது.
ஆஸ்திரலேசியா முழுவதும், மாநாடுகள் கதைசொல்லல், இசை நாடகங்கள் மற்றும் பாரம்பரிய நடனம் போன்ற கலாச்சார அம்சங்களால் வளப்படுத்தப்பட்டன, அவை இணக்கமான சமூகங்களை மேம்படுத்தத் தேவையான ஆன்மீக கொள்கைகளை எடுத்துக்காட்டின.
ஐரோப்பாவில், இந்தத் துடிப்பான கூட்டங்களில் ஆலோசனைகள் தங்கள் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு ஆன்மீகக் கொள்கைகளைப் பயன்படுத்தும் திட்டங்களைப் பின்தொடர்வதில் வெவ்வேறு கண்ணோட்டங்களை இணக்கப்படுத்தின என்பதை வாழ்க்கையின் அனைத்து தரப்பு மக்களும் கண்டறிந்தனர்.
ருமேனியாவின் புக்காரெஸ்டில், ஒரு மாநாடு ஒரு சமூக விழாவி உள்ளூர் அதிகாரிகளை வரவேற்பதற்காக நகர வீதியை மூடும்படி செய்தது. கூட்டத்தில் பேசிய மேயர் க்ளோடில்டே அர்மாண்ட், “ஒரு மேயருக்கு, நீங்கள் இங்கே செய்வது தேன் கலந்த உணவின் சுவை போன்றது. ஒரு சமூக நிகழ்வை உருவாக்க இந்தத் திறந்த வெளியை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதில் நான் மகிழ்ச்சியே அடைகின்றேன்.
சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளைப் பின்தொடர்தல்
கடந்த ஆண்டு, செய்தி சேவை பஹாய் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் குறித்து பல்வேறு கதைகளை வெளியிட்டது.
கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து, பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றவர்கள் உடனடியாக நிவாரண முயற்சிகளை நோக்கித் தங்கள் கவனத்தை திருப்பினர்.
ஸாம்பியாவில், பஹாய் கல்வித் திட்டங்கள் குறித்த கலந்தாலோசனைகள் இளைஞர்களின் கல்வியுடன் தொடர்புடைய பலக்கிய சவால்களை எதிர்கொள்ள கட்டுயோலா கிராமங்களில் வளர்ந்து வரும் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஆஸ்திரிய பஹாய்களின் ஒரு முன்முயற்சி, புதிதாக வந்த குடும்பங்களுக்கு ஜெர்மன் மொழி வகுப்புகளை வழங்கியது, இது பல்வேறு மக்கள் தப்பெண்ணங்களை சமாளிக்க உதவியது.
கனடாவில், பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள், சமூகத்தின் மேம்பாட்டில் இசை எவ்வாறு உயர் அபிலாஷைகளையும் நடவடிக்கைகளையும் தூண்ட முடியும் என்பதை ஆராய்ந்தனர்.
சமூகத்தின் சொல்லாடல்களில் பங்கேற்றல்
பஹாய் சர்வதேச சமூகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள தேசிய பஹாய் சமூகங்கள் அவசர முக்கியத்துவம்மிக்க பல பிரச்சினைகள் குறித்த சிந்தனையில் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க முயல்வதையும் செய்தி சேவை அறிவித்தது.
உலகளாவிய உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த நுண்ணறிவுகளை மனிதகுல ஒற்றுமை என்னும் கொள்கை எவ்வாறு வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து பிஐசி (BIC) ஓர் அறிக்கையை வெளியிட்டது.
பருவநிலை மாற்றம் மற்றும் பெண்கள் மீதான அதன் சமமற்ற தாக்கம் குறித்த பல விவாதங்களில் பி.ஐ.சி பங்கேற்றது. பருவநிலை மீள்திறத்தைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக செயல்முறைகளுக்கு பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் அவசியம் என்னும் கொள்கையை ஒரு பிஐசி அறிக்கை எடுத்துக்காட்டியது.
இணையவழி வெறுப்புப் பேச்சைக் கையாள்வதற்காக தொழில்நுட்பத் துறை, அரசாங்கம் மற்றும் குடிமை சமூக அமைப்புகளிடையே பகிரப்பட்ட பார்வையின் அவசியத்தை வலியுறுத்தி, பி.ஐ.சியின் ஜெனீவா அலுவலகம் RightsCon உச்சிமாநாட்டில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
ஸ்டாக்ஹோம் +50-ஐ முன்னிட்டு பி.ஐ.சி ஓர் அறிக்கையை வெளியிட்டது, இது சுற்றுச்சூழல் முறிவின் மூல காரணங்கள் மீது கவனம் செலுத்தியதுடன் நடவடிக்கைக்கான கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்னிலைப்படுத்தியது.
BIC-யின் பிரஸ்ஸல்ஸ் மற்றும் அடிஸ் அபாபா அலுவலகங்கள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, ஆபிரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய பங்காண்மைகளில் ஒற்றுமை குறித்த கொள்கையை அங்கீகரிக்க அழைப்பு விடுத்தன.
பி.ஐ.சி ஒரு கலந்துரையாடல் கருத்தரங்கை நடத்தியது, இது ஒற்றுமை, நீதி, ஒத்துழைப்பு, தன்னலமின்மை மற்றும் கலந்தாலோசனை போன்ற வேலையின் எதிர்காலத்தை மீண்டும் கற்பனை செய்வது தொடர்பான சில கொள்கைகளை ஆராய்ந்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77-வது அமர்வின் உயர் மட்ட வாரத்தில், பிஐசி நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகள் மனிதகுல ஒற்றுமைக் கோட்பாட்டின் அடிப்படையில் பகிரப்பட்ட அடையாளத்தின் அவசியத்தை வலியுறுத்தினர்.
கஸாக்ஸ்தானின் அஸ்தானாவில் உலக மதங்கள் மற்றும் பாரம்பரிய மதத் தலைவர்களின் 7-வது மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து மதத் தலைவர்கள் கூடி, பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் மதத்தின் பங்கு குறித்து விவாதித்தனர்.
கிராமப்புறங்களில் இளம் சிறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் கல்வியின் பங்கை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் பி.ஐ.சி ஒரு குழு கலந்துரையாடலை நடத்தியது.
வனுவாத்துவின் தன்னாவில் இளைஞர்கள் தலைமையிலான பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றிய குறும்படத்தை பிஐசி தயாரித்தது. “Tanna: A Study in Leadership and Action,” என தலைப்பிடப்பட்ட இந்த 13 நிமிட படம் COP27-இல் (இது பருவநிலை மாற்றம் குறித்த ஒரு குழு) திரையிடப்பட்டது.
எகிப்தில் நடைபெற்ற COP27 பருவநிலை உச்சி மாநாட்டில் பல BIC அலுவலகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
யுனைடெட் கிங்டமில் உள்ள பஹாய் பொது விவகாரங்களுக்கான அலுவலகம் “In Good Faith” என்னும் புதிய போட்காஸ்ட் (podcast) தொடரை அறிமுகப்படுத்தியது, இது மதத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையிலான உறவை ஆராய்கிறது.
எகிப்தைத் தளமாகக் கொண்ட ஒர் இணைய செய்தி சேவையான ‘எல்சாஹா’ தயாரித்த ஒரு குறும்படம், 19-ஆம் நூற்றாண்டில் அதன் தொடக்கத்திலிருந்து இன்று வரை அந்நாட்டில் உள்ள பஹாய் சமூகத்தின் அனுபவம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கியது.
அஸர்பைஜானில் சகவாழ்வைப் பேணுவதற்கான முதல் தேசிய மாநாடு அதிகாரிகள், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்னும் கொள்கையைப் பற்றி விவாதிக்க பல்வேறு மத சமூகங்களின் பிரதிநிதிகள், குடிமை சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஒன்றுகூட்டியது.
துனிசியாவில், பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் பிரதிநிதி ஒரு தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமூகத்தில் மதத்தின் பங்கை ஆராய்ந்தார். இந்த ஆண்டு அந்த நாட்டின் பல்வேறு மத சமூகங்கள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மிகவும் அமைதியான சமூகத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.
இந்தியாவின் பஹாய் பொது விவகார அலுவலகம் பல்வேறு சமூக உரையாடல்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் என்னும் கோட்பாட்டின் பயன்பாட்டை ஆராயும் பல மன்றங்களை நடத்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பஹாய்கள் சமகால சமூகத்தில் மதத்தின் ஆக்கபூர்வமான பங்கு குறித்த உரையாடலை ஊக்குவிப்பதில் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை ஆராய்ந்தனர்.
டச்சு பஹாய் வெளியுறவு அலுவலகம் இன ஒற்றுமை குறித்த உரையாடலுக்கான அதன் பங்களிப்புகளில் ஒரு பகுதியாக பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் அது பெற்றிருந்த அனுபவங்களைப் பயன்படுத்தியது.
பல தசாப்த கால முயற்சிக்குப் பிறகு, ஸாம்பியாவில் உள்ள பஹாய் ஸ்தாபனங்கள் அந்த நாட்டில் பஹாய் கல்வி முன்முயற்சிகளின் நெடுக்கத்தைக் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவம் வரை தடையற்ற, ஒத்திசைவான அனுபவத்தை வழங்க எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை ஆராய ஒன்று கூடின.
ஆஸ்திரியாவின் பஹாய்களால் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம், பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் குறித்த சொல்லாடலுக்குப் பங்களிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பஹாய் வீராங்கனையான தாஹிரி மற்றும் ஆஸ்திரியாவின் பெண்கள் இயக்கத்தின் ஸ்தாபனர் மரியன் ஹைனிஷ் ஆகியோருக்கு இடையிலான தொடர்பை ஆராய்ந்தது.
சிலி நாட்டு பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் அனைவரின் நல்வாழ்விற்காக நகரங்களின் அபிவிருத்திக்கு வழிகாட்டக்கூடிய ஆன்மீகக் கொள்கைகளை ஆராய்ந்திட சான்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் ஒன்றுகூடினர்.
பஹாய் படிப்பாய்வுகளுக்கான சங்கம் ஏபிஎஸ் (ABS) அதன் 46-வது வருடாந்திர மாநாட்டை நடத்தியது, இது பஹாய் போதனைகள் சிந்தனை மற்றும் சொல்லாடலின் பல்வேறு பகுதிகளுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றிப் பிரதிபலித்திட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமான மக்களை ஒன்றிணைத்தது.
இந்தூரில் உள்ள தேவி அகல்யா பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி படிய்வுகளுக்கான பஹாய் இருக்கை, இயற்கை உலகத்துடன் மனிதகுலத்தை அதிக சமநிலைக்கு கொண்டுவர தேவையான கொள்கைகள் குறித்த ஒரு மன்றத்தை நடத்தியது.
ஈரானில் பஹாய்கள் மீதான அடக்குமுறை
கடந்த ஆண்டு முழுவதும், ஈரான் பஹாய்கள் மீதான துன்புறுத்தல் தீவிரமடைந்துள்ளது, இது கோடைகாலத்தில் கைதுகளின் அலை மற்றும் ரோஷன்கௌ கிராமத்தில் பஹாய் வீடுகள் வன்முறையில் அழிக்கப்பட்டதன் மூலம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்து உடனடியாக அரசாங்க அதிகாரிகளிடமிருந்து இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியஏராளமான அறிக்கைகளும் சர்வதேச ஊடகங்களால் செய்தி ஒளிபரப்பும் செய்யப்பட்ட து.
இந்த சம்பவங்களுக்குச் சில வாரங்களுக்குப் பிறகு, ஈரானிய அதிகாரிகள் தங்கள் சொந்த குடிமக்களுக்கு எதிராக அதிகரித்த வன்முறை மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியில், 10 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் ஈரானில் மீள்ச்சித்திறத்தின் சின்னங்களாகக் கருதப்படும் இரண்டு பஹாய் பெண்களுக்கு இரண்டாம் முறை கொடூரமான 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த இரு பெண்களின் ஆதரவாளர்களும் அவர்களை மீள்ச்சித்திறத்தின் சின்னங்கள் எனவும், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறைப்படுத்தப்பட்ட நபர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் எனவும், அனைத்து ஈரானியப் பெண்களுக்கும் தாய்மார்கள் எனவும் அழைத்துள்ளனர்.
வெளியீடுகள்
சென்ற ஆண்டு பல இணைய வெளியீடுகளைக் கண்டது.
உலக நீதி மன்றத்தினால் நியமக்கப்பட்ட ஒரு திரைப்படம், மிகவும் அமைதியான உலகத்தைப் பேணுவதற்குப் பங்களிக்க கடந்த நூற்றாண்டில் பஹாய் சமூகத்தின் முயற்சிகளைப் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கியது.
பஹாய் உலகம் வலைத்தளத்தில் புதிய கட்டுரைகள் சமூக நீதி பின்தொடரப்படுவதை ஆராய்ந்தன.
பஹாய் உலக செய்தி சேவை ரஷ்ய மொழியிலும் கிடைப்பதற்கு வழிசெய்யப்பட்டது, இம் மொழி ஆங்கிலம் மற்றும் தளத்தின் பிற மூன்று மொழி பதிப்புகளுடன் இணைந்தது.
ஒரு சிறிய ஆவணப்படம் அஃப்னான் நூலகத்தையும், பஹாய் நம்பிக்கை மற்றும் பிற பரவலாக இணைக்கப்பட்ட தலைப்புகள் தொடர்பான 12,000-க்கும் மேற்பட்ட கருபொருள்களின் சிறந்த தொகுப்பையும் கண்ணோட்டமிட்டது.
பஹாய் வழிபாட்டுத் தலங்கள்
கடந்த ஆண்டில், பஹாய் கோயில்கள் அவற்றுக்கு அருகிலுள்ள சமூகங்களின் பக்தித் தன்மைக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பது குறித்த கதைகளை செய்தி சேவை வெளியிட்டது. இந்தக் கோயில்கள் தங்கள் சக குடிமக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க மக்களை ஊக்குவித்து வருகின்றன. வழிபாட்டுத் தலங்களின் செய்திகளில் காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் பப்புவா நியூ கினியில் கோயில்கள் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்த கதைகளும், பனாமாவில் பஹாய் கோயில் அர்ப்பணத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவும் அடங்கும்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில், குவிமாடத்திற்கான எஃகு மேல்கட்டுமானத்தின் நிறைவு உட்பட, பஹாய் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானம் தொடர்ந்து முன்னேறி வந்தது.
பப்புவா நியூ கினியில் வளர்ந்து வரும் பஹாய் வழிபாட்டுத் தலம் — வழிபாடு மற்றும் சேவை ஆகியவற்றின் ஒன்றியத்தைப் பிரதிநிதிக்கின்றது — அந்தக் கோவில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக ஒரு நெசவு திட்டத்திற்கு உதவ அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு உத்வேகமூட்டியது.
பனாமாவில் உள்ள பஹாய் வழிபாட்டுத் தலம் திறக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அப்துல்-பஹா நினைவாலய கட்டுமானம்
அந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பின்னடைவு ஏற்பட்ட போதிலும், அதன் கட்டுமானத்தில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டது. ‘அக்கா பார்வையாளர்கள்’ மைய பணிகளின் ஆரம்பம் இந்த ஆண்டின் மற்றொரு மேம்பாடாகும்.
கித்தாப்-இ-அஃடாஸ் என்னும் அதிப்புனித நூலில் பஹாவுல்லா இரண்டு இடங்களை பஹாய்களின் புனித யாத்திரைக்கான இடங்களாக அருளியுள்ளார். ஒன்று பாரசீகத்தின் ஷிராஸ் நகரில் உள்ள பாப் பெருமானாரின் இல்லம். இவ்வில்லம், இரான் புரட்சிக்குப் பிறகு 1979-இல் மதவெறியர்களால் அழிக்கப்பட்டது. மற்றது, இராக் நாட்டின் பாக்தாத் நகரில் உள்ள, பஹாவுல்லா பத்து வருடகாலம் வாழ்ந்த இல்லம். உலக பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இந்த இல்லம், 2013-இல் அழிக்கப்பட்டது (https://news.bahai.org/story/961/). அவ்விரு இடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன, ஆனால் எதிர்காலத்தில் அவை மீண்டும் அதே இடங்களில் பேரொளியுடன் அமைக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பாப் பெருமானார் இல்லத்தின் முழு உருவ மாதிரி. சில நியூ சீலாந்து பஹாய்களால் தயாரிக்கப்பட்டது
அத்திருத்தலங்கள் வெறும் கற்களாலும் காரைகளாலும் மரங்களாலும் ஆனவையல்ல, அவை புனித ஆவியின் வெளிப்பாடுகள்.
ஹைஃபா நகர் கார்மல் மலை மீது உள்ள பாப் பெருமானாரின் நினைவாலயம்
அருள்ஜோதியரான பஹாவுல்லாவின் மறைவிற்குப் பிறகு, அவரது மூத்த மகனாராகிய அப்துல்-பஹா, மேலும் இரண்டு இடங்களைப் புனித யாத்திரைக்கான மையங்களாக அறிவித்தார். அவை பாப் பெருமானார், பஹாவுல்லா இருவரின் இளைப்பாறல் தலங்கள், அவ்விருவரின் சன்னதிகள்.
பாஹ்ஜியில் உள்ள பஹாவுல்லாவின் நினைவாலயம்
புனிதப் பயணிகள் பாப் பெருமானாரின் சன்னதிக்கு விஜயம் செய்யும் போது சிலர் முதலில் அச்சன்னதியைச் சுற்றி வலம் வருவர், வேறு சிலர் உள்ளே சென்று அவரது திருவாசலில் தலை வைத்துத் தங்கள் பணிவை வெளிப்படுத்துவர். பிறகு, அத்திருவிடத்தினுள் அமர்ந்து பிரார்த்தனை செய்வர். அங்கு நம்பிக்கையாளர்கள் இப்படித்தான் பிரார்த்திக்க வேண்டுமெனும் முறைகள் ஏதும் கிடையாது. ஆனால் பஹாவுல்லா அறிவித்த இடங்களில் கூறுவதற்காக அவர் சில பிரார்த்தனைகளையும் நிருபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். சன்னதியின் உள்ளே இயல்பாகவே கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை முறைகள் உள்ளன. காலனிகளை வெளியே கழற்றிவைத்துவிட்டு சப்தமின்றி உள்ளே நுழைதல், நுழைந்தவுடன் பிரார்த்தனைகளை உரக்கக் கூறாமல் இருத்தல்; பிரார்த்தனைக்குப் பிறகு முன்னோக்கிய முகத்துடன் பின்னோக்கி நடக்க வேண்டும், என்பன போன்ற சில நடைமுறைகள்.
நம்பிக்கையாளர்கள் பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கு விஜயம் செய்யும் போது, சிலர் நேரே அவரது சன்னதியின் உட்புறம் சென்று பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஈடுபடுவர். அதற்கும் மேற்பட்டு சன்னதியைச் சுற்றியுள்ள அழகிய தோட்டங்களுக்கு வருகையளித்து அமைதியாகத் தியானம் செய்தல் மற்றொரு நடவடிக்கையாகும். இங்கு அழகு என்பது ஓர் ஆன்மீகப் பண்பாகும். அது இவ்வுலகிலும் ஆன்மீக இராஜ்யங்களிலும் ஒரு பொக்கிஷம் போன்ற மெய்மையாகும். இவ்வழகை வெளிப்படுத்தவே பஹாய் புனிதத் தலங்களில் அழகிய, மனதைக் கவரும் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சன்னதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் வட்டவடிவமான நான்கு கால்வட்டங்கள் கொண்ட ஹராம்-இ-அஃடாஸின் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் தடத்தின் வழி சன்னதியைச் சுற்றி வலம் வருதல் மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். இத்தடத்தின் வழி விண்ணவ திருக்கூட்டத்தினரும் வலம் வருவர் என்பது ஐதீகம். சிலர் பாஹ்ஜி மாளிகையைச் சுற்றி அதன் அருகிலேயே உள்ள நடைபாதையின் வழியும் சன்னதியை வலம் வருவர். இவ்வலம் வருதல் குறித்த ஒரு கதையைப் பார்ப்போம்:
அக்காநகரில் இருந்த ஹாஜி முஹம்மது-தாஹிர்-இ-மல்மிரி, சுக்-இ-அப்யாத் அருகே உள்ள நபில்-இ-அஸாம் -இன் அறைக்கு அடுத்த ஒர் அறையில் வசித்து வந்தார். இவர்களின் அறைகள் வீதியில் செல்வோரைக் காணும்படி அமைந்திருந்தன. சில வேளைகளில் பஹாவுல்லா பாஹ்ஜியிலிருந்து அக்காநகருக்கு வந்துவிட்டு இவ்விருவரின் அறைக்கு வெளியே இருந்த வீதியின் வழி பாஹ்ஜி மாளிகைக்குத் திரும்பிச் செல்வார்.
அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்வை ஹாஜி முஹம்மது-தாஹிர்-இ-மல்மிரி எழுதுகின்றார்:
புனிதப் பேரழகர், அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக, பாஹ்ஜி மாளிகைக்குச் செல்லவிருந்த மாலையில், புனிதப் பரிபூரணர் எங்கள் வீட்டைக் கடந்து செல்வதைக் காண அன்று காத்திருந்தோம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. பஹாவுல்லா ஒரு வெள்ளைக் கழுதையின் மீது சவாரி செய்து எங்கள் அறைகளுக்கு முன்னால் செல்வதைக் கண்டோம். பஹாவுல்லா எங்கள் பார்வையில் இருந்து மறைந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து பாஹ்ஜி மாளிகைக்குச் சென்று அதைச் சுற்றி வலம்வந்துவிட்டு வீட்டிற்குத் திரும்புவோம் என நபில் பரிந்துரைத்தார். மிகுந்த ஆர்வத்துடன் நானும் அதற்கு ஒப்புக்கொண்டு, நாங்கள் இருவரும் உடனடியாகப் படிக்கட்டுகளில் இறங்கி ஓடி, ஐம்பது அடிகள் தூரத்திலிருந்து அவர் பின்னால் வேகமாக நடந்து பாஹ்ஜி மாளிகையைச் சென்றடைந்தோம். பாஹ்ஜி மாளிகைக்குள் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தை வெளியில் இருந்து எங்காளால் பார்க்க முடிந்தது.
புனிதப் பரிபூரணர் மாளிகைக்குள் சென்றதும், மாளிகையை வலம் வருவதற்காகக் கட்டிடத்தை நோக்கி நடந்தோம். ஆனால் நாங்கள் சற்று நெருங்கி வந்தபோது, மாளிகையின் சுவர்களைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் மக்கள் நிரம்பியிருந்ததைக் கண்டோம். மாளிகையின் நான்கு பக்கங்களிலும் கூட்டம் கூடியிருந்தது, அவர்களின் முணுமுணுப்பையும் அவர்களின் சுவாசத்தையும் எங்களால் செவிமடுக்க முடிந்தது. அந்த மாளிகையை வலம் வருவதற்காக அக்காநகரிலிருந்து யாரும் வரவில்லை என்பதும், நாங்கள் இருவரும் அனுமதியின்றி அங்கு சென்றிருந்தோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும், நடைபாதையில் நடப்பதற்கு இடமில்லாததால், நாங்கள் சற்றுப் பின்வாங்கி, மாளிகையிலிருந்து சுமார் முப்பது அடிகள் தொலைவில் மாளிகையைச் சுற்றி வலம் வந்தோம். நாங்கள் மாளிகையைச் சுற்றி வரும்போது நாங்கள் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் கட்டிடத்தின் நான்கு பக்கங்களிலும் மக்கள் கூட்டம் இருப்பதை எங்களால் உணர முடிந்தது. இறுதியில், நாங்கள் மாளிகையின் வாயிலுக்கு எதிரே தரையில் விழுந்து வணங்கிவிட்டு, அக்காநகருக்குத் திரும்பினோம்.
நாங்கள் வீட்டிற்கு வந்ததும், அன்றிரவு நாம் தூங்க வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நபில் பரிந்துரைத்தார். இரவு முழுவதும் நான் பலமுறை தேநீர் தயாரித்தேன், நபில் கவிதைகள் புனைந்து கொண்டிருந்தார். கவிதைகளுக்குப் பிறகு, நாங்கள் இருவரும் பஹாவுல்லாவைப் பின்தொடர்ந்து பாஹ்ஜி மாளிகைக்கு சென்றதையும், நாங்கள் மாளிகையைச் சுற்றி வலம் வரும்போது எல்லா தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் விண்ணவ திருக்கூட்டத்தினர் மாளிகைக்கு வெளியே கூடியிருந்து தங்கள் பிரபுவின் அரியணையை வலம் வந்ததையும் நபில் எழுதினார். நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்ததையும் நான் தேநீர் தயாரித்ததையும் அவர் கவிதையில் வடித்திருந்தார்.
புனிதத் திருவுருவானவர் நபிலின் கவிதைகளைப் பெற்றுக்கொண்டு, எங்கள் இருவருவரின் பெயரில் ஒரு நிருபத்தை வெளிப்படுத்தினார். அதில் மாளிகைக்கான எங்களின் புனித யாத்திரையை கருணையுடன் ஏற்றுக்கொண்டு நபிலுக்கு புல்புல் (இராப்பாடி) என்னும் பெயரையும் எனக்கு பஹ்ஹாஜ் (களிப்பு நிறைந்தவர்) என்னும் பெயரையும் வழங்கியிருந்தார்.
தடத்தின் வழி பாஹ்ஜி மாளிகையை வலம் வரும்போது இன்றைய யாத்ரீகர் ஒருவர் தமது அனுபவத்தை விவரிக்கின்றார்.
பாஹ்ஜி யாத்ரீகர் வரவேற்பு மையத்திலிருந்து சற்று தூரத்திலிருந்த கோல்லின்ஸ் வாசலை நோக்கி நடந்தேன். பொண்மாலை நேரம், மனதை அமைதிப்படுத்தும் நிசப்தம், அவ்வப்போது கேட்கும் பறவைகளின் ஒலி, இதமளிக்கும் இளம் தென்றல், ஹராம்-இ-அஃடாஸ் என்னும் திருவிடத்தின் விளிம்பின் ஓரத்தைச் சுற்றிலும், கோல்லின்ஸ் வாசலுக்கு முன்னாலிருந்து ஆரம்பிக்கும் வெள்ளை சரளைகளால் இடப்பட்ட ஒரு நடைபாதை. நடையின் வேகத்தைக் குறைப்பதற்கும், சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கும் தியானத்துடன் நடப்பதற்காகவும் திட்டமிடப்பட்ட நடைபாதை. மனதை ஒருநிலைப் படுத்திக்கொண்டு நிதானித்து நடக்க ஆரம்பித்தேன். நடக்கும் போது இயல்பாகவே பக்தி மனப்பான்மை நம்மை வந்தடையும். தடத்தில் இடப்பட்ட கற்களின் மீது கால்கள் பதிவதால் உண்டாகும் சரக் சரக் என்னும் ஓசை மனதிற்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது. பாதுகாவலர் இத்தகைய சரளைகளைக் கொண்ட பாதையை ஏன் உண்டாக்கினார் என்பது இப்போது மனதிற்குப் புரிகிறது. மேலான எண்ணங்கள் மனதில் உதிக்கின்றன. பஹாவுல்லாவைப் பற்றிய எண்ணங்கள், அவர்மீது கரைபுரண்டோடும் அன்பு, அல்லது காதல் எனவும் சொல்லலாம். பாதையின் இருபுறமும் மரங்களும் செடிகளும் நம்மை வரவேற்பதைப் போன்றிருக்கின்றது. பக்திப் பெருக்கினால் கண்களில் நீர் வழிகின்றது. ‘காதலாகிக் கசிந்து கண்ணீரும் மல்கியே’ என்பார்களே அதைப் போன்று. மனதில் ஒருவித இன்பமும் சூழ்கின்றது. சிறிது தூரம் நடந்தவுடன் சூழ்நிலையின் காரணமாக திடீரென என்றோ கேட்ட ஒரு பாடல் மனதில் தோன்றுகின்றது. ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா’ என்னும் பாடல். இவ்விடமல்லவா சுவர்க்கம் என எண்ணுவோம். சுமார் மூன்றரை கிலோமீட்டர்கள் கொண்ட அந்தப் பாதையில் நேரம் போவது தெரியாமல் தியானத்துடன் நடப்போம். திடீரென கனவு கலைந்தது போன்று, கோல்லின்ஸ் வாசலுக்கு முன் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருப்பது தெரிகின்றது. மீண்டும் ஒரு முறை சுற்றி வரலாமா என்னும் எண்ணம் தோன்றுகின்றது. ஆரம்பித்த இடத்திற்கு எதிரே, கோல்லின்ஸ் வாசலுக்கு உட்புறமாக உலகின் போக்கிஷம் போன்ற அருட்பேரழகர் பள்ளிகொண்டிருக்கும் சன்னதி. அதை நோக்கி சரளைகளின் மீது நடந்து அத்திருத்தலத்தைப் பயபக்தியுடன் அணுகுவோம். படிகளைக் கடந்து உள்ளே கால் பதிவது தெரியாமல் மெல்ல நடந்து சென்று தலைத்திருவாசலில் சிரம் பதித்துப் பக்திப் பெருக்கினால் கண்ணீர் வழிய பிரார்த்திப்போம். நமக்குப் பின்னால் தங்கள் முறைக்காகப் பலர் நிற்பது தெரிகின்றது. அவர்களுக்கு வழிவிட எழுந்துநின்று, அமைதியாக, உடலைத் திருப்பாமல் முன்னோக்கியவாறு பின்னால் மெல்ல நடந்து சென்று, அங்குள்ள அறைகளுள் ஒன்றில் அமர்ந்து பஹாவுல்லாவின்பால் நமது அன்பைப் பிரார்த்தனைகளாக வெளிப்படுத்துவோம், நமது சொந்த வேண்டுகோள்களையும் பிரார்த்தனைகளின் மூலம் வெளிப்படுத்துவோம். நண்பர்களின் பிரார்த்தனை வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்கு அதுவே தருணம். போதிய நேரம் கழித்து, அறைக்கு வெளியே வந்து அதே முன்னோக்கிய நடையுடன் பின்னால் சென்று, சன்னதிக்கு வெளியே வருவோம்.
இங்கு ஒரு வியப்பு யாதெனில், இத்திருவிடத்தில் பயபக்தியும், பணிவும் எக்கிருந்துதான் நம்மை வந்தடைகின்றது என்பது தெரியவில்லை. பிற யாத்ரீகர்களிடம் உரையாடும் போது, நடக்கும் போது, கூட்டத்தில் இருக்கும் போது, நாம் வேறொரு பிறவியாகின்றோம். இல்லம் திரும்பினாலும் இதே தோரணையைக் கடைப்பிடிக்க வேண்டுமெனும் மனவுறுதி உண்டாகின்றது.
புனித இடங்களை வலம் வருதல் ஒரு பக்தியும் அன்பும் சார்ந்த நடவடிக்கையாகும். அது புனிதத் திருவுருக்களின்பாலான ஒரு தனிநபரின் பணிவு, கீழ்ப்படிதல் மற்றும் ஆராதனையைக் குறிக்கின்றது. அது ஒருவர் அவர்களை முற்றிலும் சார்ந்திருப்பதன் அடையாளம். இதே செயல் இயற்கையிலும் நிகழ்கின்றது. ஒரு துணைக்கோள் ஒரு கிரகத்தைச் சுற்றி வலம் வருகின்றது, அது ஈர்ப்புச் சக்தியினால் சுற்றுப்பாதையில் நிலைப்படுத்தப்படுகின்றது. அது அக்கிரகத்திலிருந்து தோன்றுகின்றது, அதன் இருப்பு அந்த கிரகத்தையே சார்ந்துள்ளது. அவ்விரண்டிற்கும் இடையில் ஒரு விசேஷ உறவு உண்டு: ஒன்று யஜமானராகவும் மற்றது ஊழியனாவும் செயல்படுகின்றது.
வான்கூவர், கனடா – வான்கூவரில் அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கை, இசை எவ்வாறு உன்னத உணர்வுகளைத் தூண்டிவிடுவதுடன் தங்கள் சகாக்களுக்கு ஆறுதலையும் உத்வேகத்தையும் அளித்திடக்கூடும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் உருவாக்கும் பாடல்கள், தங்கள் சொந்த அனுபவங்களையும் அவர்கள் நண்பர்களின் அனுபவங்களையும் கொண்டு, வளர் இளம் பருவ இளைஞர்கள் தங்கள் ஆன்மீக அடையாளம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கும் திறனைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால், அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்திக்கும் கதைகளை ஆராய்கின்றனர்.
சமூகத்திற்குச் சேவை செய்யும் இளைஞர்களின் திறனை வளர்ப்பதற்கும் அவர்களின் கலை வெளிப்பாட்டை வளர்ப்பதற்கும் பஹாய் கல்வித் திட்டங்களில் உள்ள கருத்துகளை ஆராயும் இந்த இளைஞர்களின் முன்முனைவில் இருந்து இந்த முயற்சி எழுகிறது.
பஹாய் சமூகத்தின் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான உயர் அபிலாசைகளையும் செயல்களையும் இசை எவ்வாறு ஊக்குவிக்கும் என்பதை ஆராய்கின்றனர்.
பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான உயர் அபிலாசைகளையும் செயல்களையும் இசை எவ்வாறு ஊக்குவிக்கும் என்பதை ஆராய்கின்றனர்.
உலகத்தைப் பற்றிய ஒருவரின் புரிதலை வடிவமைக்கும் மொழியின் ஆற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், இளைய பங்கேற்பாளர்கள் தங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தவும், நுகர்வியல் (consumerism) சார்ந்த எதிர்மறை தாக்கங்களை எதிர்க்கும் திறனை வலுப்படுத்தவும் இந்தத் திட்டங்கள் உதவுகின்றன என்பதை இந்தத் திட்டங்களின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் கவனித்துள்ளனர்.
இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களில் ஒன்று, லௌகீகவாதத்தின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் யோசனையை ஆராய்கிறது: அதை கவனமாகக் கேட்கவும்:
(பாடலின் மொழிபெயர்ப்பு)
இன்பத்துக்காக வாழச் சொல்லும் குரல் பொழுபோக்கை நாடுதல், அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுத்தல் இவற்றைக் கணித்திட நமக்கு அர்த்தமுள்ள ஏதேனும் அவசியம் உண்மையைச் செவிமடுக்கும்போது, அதுவே உண்மையான பொக்கிஷம்
தனது அண்டைப்புறத்தில் உள்ள இளைஞர் குழுக்களை வழிநடத்தும் தினுக் கூறுவதாவது: “இளைஞர்கள் எதிர்கொள்ளும் போப் (pop) கலாச்சார இசையிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. அங்கு ஆத்திரமூட்டும் கூற்றுகளை வெளியிடுவது அதிகம். அதற்கு நேர்மாறாக, இளைஞர்கள் தங்களை முன்னணியாளர்களாகக் காண உதவும் இசையை உருவாக்க விரும்பினோம்.
“ஓர் இளைஞன் யாரோ ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதைக் கவனித்து, அந்தச் சூழ்நிலையில் அவர்கள் என்ன தேர்வுகள் செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்கும் பாடல்களில் ஒன்று இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.”
மதிய உணவுக்கான நேரம் மணி அடிக்கிறது நான் என் நண்பர்கள் ஒன்றுகூடுவதைப் பார்க்கிறேன் அப்போது ஒருவர், தனியாக நிற்பதைப் பார்க்கின்றேன் அவரிடம் நான் இதுவரை பேசியதில்லை சென்று அவரிடம் வணக்கம் சொல்லவா நான் அவரிடம் அக்கறை காட்ட விரும்புகிறேன் நான் என்ன செய்ய போகின்றேன் என என் நண்பர்கள் என்னைப் பார்க்கின்றனர் என்பது எனக்குத் தெரியும்
இம்முயற்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஷாடி, கேட்பவர் மீது செல்வாக்கு செலுத்தும் இசையின் ஆற்றலைப் பற்றிப் பேசுகிறார், “பல மாதங்களினூடே நீங்கள் யாரிடமாவது எதிர்மறையான மொழியைக் கொண்ட இசையை வாசித்தால், அவர்களும் அப்படியே பேசத் தொடங்குவார்கள்.”
ஒரு பங்கேற்பாளரான ஜேசன், பிரபலமான இசையில் உள்ள எதிர்மறையான செய்திகளால் அவரது சகாக்கள் சிலர் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரிக்கின்றன என கூறுகிறார். “பின்னர், நீங்கள் எதிர்மறை இசையின் மேலேமொரு அடுக்கைச் சேர்க்கிறீர்கள், அவர்கள் அவ்வார்த்தைகளை உச்சரிக்கும்போது, அது அவர்களுக்கு உதவாது, அதைப் பார்ப்பதற்கும் உண்மையில் வருத்தமாக இருக்கிறது.”
அவர்கள் உருவாக்கும் பாடல்கள் அவர்களின் சொந்த அனுபவங்களையும் அவர்கள் நண்பர்களின் அனுபவங்களையும் பயன்படுத்துகின்றன. வளரிளம் பருவ இளைஞர்கள், தங்களின் சொந்த ஆன்மீக அடையாளம் மற்றும் சமுதாயத்திற்குப் பங்களிப்பதற்கான அவர்களின் சொந்த ஆற்றல் குறித்து மேன்மேலும் அதிக விழிப்புணர்வுகொள்ள ஆரம்பிக்கும் போது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்த கதைகளை அப்பாடல்கள் ஆராய்கின்றன.
நேர்மறையான, உற்சாகமளிக்கும் இசையைக் கேட்பது ஒருவர் மீதும் அவரது நடத்தையிலும் மிகவும் மாறுபட்ட விளைவைக் கொண்டிருக்கிறது, இது மனித ஆவியின் மீது இசை செலுத்தும் தனித்துவமான சக்தியை எடுத்துக்காட்டுகிறது என ஷாடி குறிப்பிடுகிறார்.
இளைஞர் குழுக்களின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான ஆலியா, இந்த முயற்சியின் வாயிலாக வெளிவரும் பாடல்களை, “நேர்மறையான மதிப்புகளை நிலைநிறுத்தும் பாடல் வரிகளைக் கொண்ட… இசை குறித்த பயன்படுத்தப்படாத ஓர் பகுதி… கேட்பதற்கு குளிர்ச்சியாக இருப்பதுடன், நாம் அடையாளம் காணக்கூடிய விஷயங்களையும் கொண்டுள்ளது” என வர்ணிக்கின்றார்.
இந்த முயற்சி ஒரு கூட்டுப் பாடல் எழுதும் அணுகுமுறையைக் கொண்டது. “பாடல்கள் எந்த ஒரு நபருக்கும் சொந்தமில்லை” என்கிறார் ஷாடி.
பல்வேறு வகையான இசை அனுபவங்களைக் கொண்ட பங்கேற்பாளர்கள், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரண்டு தொடர்ச்சியான வார இறுதிகளில் ஒன்றுகூடி வெவ்வேறு ஆன்மீகக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் பாடல்களை உருவாக்குகிறார்கள்.
அனைவரும் வெவ்வேறு அளவிலான இசை அனுபவங்களைக் கொண்டுள்ள பங்கேற்பாளர்கள், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரண்டு தொடர்ச்சியான வார இறுதிகளில் கூடுகின்றனர். இந்த அமர்வுகளில், அவர்கள் கலந்தாலோசனை, சேவையின் முக்கியத்துவம் மற்றும் உண்மையான நட்பின் தன்மை போன்ற ஆன்மீகக் கருத்துக்கள் மீது பிரதிபலிக்கின்றனர். அவர்கள் தங்கள் அண்டைப்புறங்களின் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்தும் விவாதிக்கின்றனர். இந்தச் சந்திப்புகள் இளைஞர்கள் உருவாக்கும் பாடல்களுக்கு உத்வேகம் ஊட்டுகின்றன.
வான்கூவரில் உள்ள முன்முயற்சி உலகெங்கிலும் உள்ள பலவற்றில் ஒன்றாகும், அங்கு பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்குபெறும் மக்கள், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையையும் செயலையும் ஊக்குவிக்கும் இசையின் ஆற்றலைப் பற்றி கற்றுக்கொள்கிறார்கள்.
பஹாய் பயிற்சிக்கழகங்களுடன் நெருக்கமாகச் செயல்படும் இதேபோன்ற முன்முயற்சிகளைப் பற்றி செய்திச் சேவை முன்பு அறிவித்துள்ளது. ஈக்வடோரில், தொடர் கருத்தரங்குகள் சமூக மாற்றத்தைப் பற்றிய பாடல்களைத் தூண்டின. இதற்கிடையில், நியூசீலாந்தில் உள்ள இளைஞர்கள் குழு, தார்மீகக் கருத்துகளைப் பற்றிய அவர்களின் புரிதலை இசை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து வருகிறது. மேலும், ஸாம்பியாவில், லுண்டா மக்களின் மேம்பாட்டு முயற்சிகளில் இசை இன்றியமையாத அங்கமாக உள்ளது.
உலகத்தைப் பற்றிய ஒருவரின் புரிதலை வடிவமைக்கும் மொழியின் ஆற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், இளைய பங்கேற்பாளர்கள் தங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தவும், நுகர்வியல் சார்ந்த எதிர்மறை தாக்கங்களை எதிர்க்கும் திறனை வலுப்படுத்தவும் இந்தத் திட்டங்கள் உதவுகின்றன என்பதை இந்தத் திட்டங்களின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் அவதானித்துள்ளனர்.