ஒரு காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டினால் ஏற்பட்ட ஒரு தீக்கு ஒரு வீடு பலியாயிற்று. அவ்வீட்டின் செல்லப்பிராணியான அமான்டா எனும் நாய் அப்போதுதான் குட்டிகளை போட்டிருந்தது. வீடு தீப்பிடித்தவுடன் அங்கு பணியாற்றிய தீயனைப்பு வீரர்கள் தங்கள் கண்களையே நம்பமுடியாத ஒரு அதிசயம் நடந்துகொண்டிருந்தது. தாய் நாய் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் குட்டிகளைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது.
தாய் நாய் இங்கும் அங்குமாக ஓடி தன் குட்டிகளை ஒவ்வொன்றாக கவ்விக்கொண்டு வந்தது. அது தன் குட்டிகளின் பாதுகாப்பிற்காக தேர்ந்தெடுத்த இடம் அதைவிட அதிசயம் – ஆம் அது தேர்வு செய்தது அங்கு தீயை அனைப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீயனைப்பு வண்டிதான் அந்த நாய் தன் குட்டிகளுக்காக தெர்வு செய்த இடம்!
தன் குட்டிகள் அனைத்தும் காப்பாற்றப்படும் வரை அந்த நாய் ஓயவில்லை. அங்கிருந்த தீயனைப்பு வீரர்களுக்கு தங்கள் கண்களை நம்பமுடியவில்லை. இத்தகைய ஒரு வீரமான, புத்திசாலியான நாயை பெரும்பாலானோர் கண்டிருக்க மாட்டார்கள்!
தீயிலிருந்து தன் குட்டிகள் அனைத்தையும் காப்பாற்றிய பின், அமான்டா தன் குட்டிகளுக்கு அருகே அமர்ந்து அவற்றை தன் உடலால் மறைத்துக்கொண்டது. பார்வையாளர்கள் உடனடியாக ஒரு மிருகவைத்தியருகை அழைத்தனர். அமான்டாவும் அதன் குட்டிகளும் உடனடியாக ஒரு மிருக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. தீக்காயம் பட்ட ஒரு குட்டியைத் தவிர அமான்டாவும் அதன் குட்டிகளும் அமான்டாவின் வீரச்செயலால் நலமாக உள்ளன. வாழ்க இவ்வீரத்தாய்!
சமுதாயம் பொருளாதார மேம்பாடு காணக் காண அதோடு சேர்ந்து களவுத் தொழிலும் வளர்ந்துவருகிறது. தினசரி நாளிதழ்களைப் புரட்டிப்பார்த்தால் இங்கு திருட்டு அங்கு திருட்டு எனும் செய்திக்கு பஞ்சமேயில்லை. சில வேளைகளில் பெண்களின் கைப்பைகள் பறிக்கப்படும்போது அந்த வேகத்தில் அவர்கள் கீழே விழுந்து காயமடைவதும் உண்டு, சில வேளைகளில் மரணம் சம்பவிப்பதும் உண்டு. காரில் பயணம் செய்யும் போது கூட திருட்டு நடப்பது உண்டு. அவ்வித திருட்டை எப்படி தடுப்பது என்பது குறித்து வேடிக்கையாக பின்வரும் படம் விளக்குகிறது.
பூமியின் ஆரம்பத் தோற்றத்தின்போது அது சூரியனைப் போன்றே ஒரு தீக்குழம்பாகத்தான் தோன்றியது. பிறகு அதன் உஷ்ணம் தணியத் தணிய அது குளிர்ந்த நிலப் பரப்பாகியது. அப்போது நீர் என்பது கிடையாது ஆதலால் கடலும் கிடையாது உயிரினங்களும் கிடையாது. இ்ப்பூமியில் நீர் தோன்றியது இவ்வுலகிலிருந்தல்ல, மாறாக அது விண்கற்கள் மூலமாக பூமிக்குக் கொண்டுவரப்பட்டது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறாக பூமியில் நீர் சிறுகச் சிறுகத் தோன்றி இன்று பூமியின் மேல்பரப்பு கிட்டத்தட்ட முக்கால்வாசி நீர் நிறைந்ததாக இருக்கின்றது. அதிலும் அதில் 3 விழுக்காடு மட்டுமே தூய நீராகும். கடல்கள் தோன்றியபின் அதில் உயிரினங்கள், சிறிய அனுக்களாக தோன்றின. மனிதனும் இவ்விதமாகவே ஓர் அனுவாக முதலில் தோற்றம் கண்டிருக்கக்கூடும் மற்றும் கடலில் தோற்றம் கண்டதனால் மனிதனின் இரத்தத்தில் உப்புச் சத்தும் உள்ளது. இவ்விதமாக நீரில் தோற்றம் கண்ட மனிதனின் உடலும் ஏறக்குறைய முக்கால் வாசி நீராகும்.
நீரில் தோற்றம் கண்ட மனிதனுக்கு அந்த நீர் இன்று அத்தியாவசியமானதாக விளங்குகிறது. ஒரு மனிதன் உணவும் நீரும் இன்றி சுமார் ஐந்து நாள்கள் வரை வாழலாம், நீர் மட்டும் பருகி வந்தால் அவன் சுமார் 16 நாள்களுக்கு மேல் வாழமுடியும். நாம் உண்ணும் உணவு மெட்டாபோலிசம் ஆவதற்கு தக்க அளவு நீர் உடலில் இருக்க வேண்டும். அதனால்தான் உணவு உண்டபின் நமக்கு நீர் அருந்தவேண்டும்போல் இருக்கும். நீர் நமக்கு உணவாக மட்டும் பயன்படவில்லை. நெடுங்காலமாகவே நீர் உடல்நல மருத்துவத்திற்கும் பயன்பட்டு வந்துள்ளது. உதாரணமாக ஜலதோஷம் கண்டபோது நீர் நிறைய குடிப்பது ஜலதோஷத்திற்குக் காரணமான வைரஸ் கிருமிகளின் குவிப்பைக் கரைத்து அவற்றின் வேகத்தைக் குறைத்து விரைவில் அவை அழிந்து போக உதவுகின்றது. அது போக ஒரு மனிதன் சாதாரணமாக நாளுக்கு சுமார் இரண்டு லிட்டர் நீர் அருந்த வேண்டும் என மருத்துவம் அறிவுறுத்துகின்றது. இது உடலில் உள்ள கழிவுப்பொருள்களை அகற்றுவதற்கு மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான ஊட்டம் நமது இரத்தத்தின் மூலமாக உடலின் எல்லா பாகங்களுக்கும் சென்றிட உதவுகிறது.
இவ்விதமாக நீர் நமக்கு இன்றியமையாததாகவும் உடல்நலத்தைப் பேணக்கூடியதாகவும் இருக்கின்றது. இன்று நீர்மருத்துவம் எனும் ஒரு வகை மருத்துவம் பிரபலமாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் முன்பாக 1.5 லிட்டர் நீரைக் குடிக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் விட்டு விட்டு குடிக்கலாம். குடித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் சில முறை சிறுநீர் கழிப்பு ஏற்படும். இது காலப்போக்கில் பழக்கமாகிவிடும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நீர் குடிக்கப்பட வேண்டும். அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு எதையும் குடிக்கவோ உட்கொள்ளவோ கூடாது. மதுவருந்தும் பழக்கம் உள்ளவர்கள் முன்தினம் மதுவருந்தியிருந்தால் நீர்மருத்துவம் செய்யக்கூடாது. குடிக்கப்படும் நீர் சுத்தமானதாக இருக்கவேண்டும். குறைந்தபட்சம் குழாய் நீரை நன்கு கொதிக்கவைத்துப் பருகலாம்.
ஒரு நாளுக்கு நாம் சுமார் 2 லிட்டர் நீராவது பருக வேண்டும். இது மருத்துவர்கள் கூறும் ஆலோசனை. ஆனால், காலையில் எழுந்தவுடன் 1.5லிட்டர் நீர் குடிப்பது நாம் தினசரி குடிக்கும் நீருக்குச் சமமானதல்ல. அதன் பயன் முற்றிலும் வேறானதாகும். பொதுவாக நீரின் பயன்கள் பின்வருமாறு:
நீர் உடல் வெப்பத்ததை தனக்குள் ஈர்த்து அதை வெளியேற்ற உதவுகின்றது.
நீர் ஓர் சர்வரீதியான கரைப்பான் (solvent) ஆகும். பெரும்பாலான வஸ்துக்கள் நீரில் கரையும் தன்மை கொண்டவையாகும். உடலுக்குத் தேவையற்ற வஸ்துக்கள் கரைந்து வெளியேற்றப்படுகின்றன.
நீர் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. நீர் உடல் அமைதிக்கு ஏதுவானதாகும் (உதாரணமாக குளிப்பது)
நீர் உடலில் உள்ள விஷப்பொருள்களை சிறுநீர், வியர்வை, மூச்சு ஆகியவற்றின் மூலம் அகற்றுகின்றது.
நீர்மருத்துவம் பல நோய்களைக் குணப்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. உதாரணமாக, முகப்பருக்கள், ஜலதோஷம், மனச்சோர்வு, தலைவலி, வயிறு சார்ந்த சில பிரச்சனைகள், மூட்டுவலி, தசைவலி, மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகள்.
உடலை அழுத்தங்களிலிருந்து தளர்வுறச் செய்யவும் பொதுவான உடல்நலத்தைப் பேணவும் நீர் உதவுகிறது.
சிலவிதமான வலிகளிலிருந்து நிவாரணம் பெறவும் நீர்மருத்துவம் உதவுகிறது.
நீர்மருத்துவத்தின் மூலம் தீர்க்கப்படும் வாய்ப்புள்ள சில நோய்கள் பின்வருமாறு:
இரத்த அலுத்தம்: சுமார் 4 வாரங்களில் அலுத்தம் தனியும்
புற்றுநோய்: நோயின் தீவிரம் 4 வாரங்களில் சற்று தனியும் வாய்ப்புள்ளது.
Constipation: 1 day
Acidity: 2 days
Diabetes: 7 days
BP & Hypertension: 4 weeks
Cancer: 4 weeks
Pulmonary TB: 3 months
நீர்மருத்துவம் (hydrotherapy) என்பது ஒரு மாற்று மருத்துவமுறையாகும். இதை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். நீரை முறையாக தினசரி அருந்துவது மனித வாழ்நாள்களை அதிகரிக்கின்றது. இந்த எளிய முறையை அவரவர்க்கு ஏற்ற வகையில் பின்பற்றலாம். இருந்தபோதும் நோய் ஏதாவது கண்டவர்கள் இதை ஆரம்பிப்பதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நலமாகும்.
நீர் மருத்துவம் குறித்து மேலும் விவரம் பெற விரும்புபவர்கள் “hydrotherapy” என தேடல் செய்து வேண்டிய விவரங்களை வலைத்தலங்களிலிருந்து பெறலாம்.
பின்வரும் கட்டுரை கடமை எனும் வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன மற்றும் அதன் கருத்தாக்கம் குறித்த விளக்கமாகும்.
குறிப்புகள்: ஐரா வில்லியம்ஸ்
ஐரா வில்லியம்ஸ் பஹாய் புனித நிலத்திற்கு மேற்கொண்ட புனிதப்பயணத்தின்போது கடவுள் சமயத் திருக்கரமான புஃருட்டானுடனான சந்திப்பு குறித்த அனுபவங்கள்.
திரு புஃருட்டான் அவர்களின் உலக வாழ்வின் இறுதி நிமிடங்களின் தனிச்சிறப்பான வர்ணனை… உண்மையில் வியக்கத்தக்க ஒன்றாகும்.
பஹாய்கள் எக்காரியத்தில் ஈடுபட்டிருந்தபோதிலும் கடவுள் அவர்களுக்குச் சோதனைகளை அவ்வப்போது அனுப்பிக்கொண்டுதான் இருப்பார். அதேபோன்று எங்கள் அனுபவங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், சில காலம் சென்றவுடன் இச்சோதனைகள் யாவும் ஆனந்தமான அனுபவங்களாக நமது நினைவில் பதிந்துவிடும்.
நான் கண்ட மற்றும் அனுபவித்த யாவும் என் ஆன்மாவில் ஆழப்பதிந்திருந்தன. காலம் நேரம் ஆகியவற்றைக் கடந்த ஒரு நிலையில் நான் இருந்தேன். நான் 100 – 150 வருடங்களுக்கும் அப்பால் சென்று, காலங்கள் கடந்த பிறகே புரிந்துகொள்ளக்கூடிய முக்கியத்துவம் கொண்ட, அக்காலத்திலிருந்து இன்றுவரையிலான பஹாய் சமூகத்தின் வளர்ச்சியை என் மனக்கண்ணால் அங்கு கண்டேன்.
மனதில் நிற்கும் மற்றும் தனிச்சிறப்பானதும், எனக்கு ஆன்மீகப் பாடமாகவும் காந்தத்தின் ஈர்ப்புச் சக்திமிக்கதாகவும், அதன் பிறகு என் வாழ்விற்கு ஒளியாகவும் அமைந்த பஹாய் புனிதஸ்தலத்திற்கான என் புனிதயாத்திரையின் முக்கிய தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பஹாய்களுக்குத் திருவொப்பந்த தினமான 26 நவம்பரில் அது நடந்தது. அன்று எங்கள் குழு ஆக்கா நகர் சென்றது. அங்கு பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் சிறைவைக்கப்பட்டிருந்த ஆக்கா சிறைச்சாலையைக் கண்டோம்; பஹாவுல்லா கித்தாப்-இ-அக்டாஸ் எனப்படும் அதிப்புனித நூலை வெளிப்படுத்திய அப்புட் இல்லத்திற்குச் சென்றோம் மற்றும் வேறு பல பஹாய் புனித இடங்களுக்கும் சென்றோம். என் மனம் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டும் அத்தருணங்கள் யாவும் மனதில் ஆழப்பதிந்தும் இருந்தன.
ஆனால், இவ்விஜயங்கள் யாவும் அன்றைய தினத்தை முழுமைபெறச் செய்யவில்லை. அன்று மாலை புனிதப்பயணிகளுக்கான வரவேற்பு மையத்தில் கடவுள் சமயத்திருக்கரமான திரு புஃருட்டானுடனான ஓர் சந்திப்பு நிகழவிருந்தது. கூட்டம் மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது அவருடனான எங்களின் முதல் சந்திப்பாகும். அவரை முதன் முதலில் புனிதப்பயணத்தின் முதல் தினமான 24 நவம்பரன்று கண்டேன். அவர் அன்று அற்புதமானதோர் உரையை வழங்கி அடிக்கடி எங்களை வந்து சந்திப்பதாகவும் வாக்குறுதியளித்துச் சென்றார். அதற்கு முன் அவருடைய முதுமை காரணமாக இரண்டு நாளுக்கு ஒரு முறை மட்டுமே அவர் புனிதப்பயணிகளைச் சந்தித்தார். சமயத்தைப் போதிப்பது குறித்து உரையை தாம் வழங்கவிருப்பதால் அவர் புதன்கிழமையன்று எங்களை எங்கள் குடும்பத்தோடு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், கூட்டத்திற்காக காத்திருந்த எங்களுக்கு அன்று திரு புஃருட்டான் உரை நிகழ்த்திட வரப்போவதில்லை எனக் கேள்விப்பட்டவுடன் எங்கள் ஏமாற்றம் எப்படியிருந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துபாருங்கள். அப்போது, அவர் எங்களை முதன் முதலில் வந்து கண்டபோது முகம் மிகவும் வெளுத்து பலவீனமாகவும் இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அவருடைய சக்தி அவரைவிட்டு சிறிது சிறிதாக விலகுவதாக தோன்றியது. அவர் உடல்நலன் காரணமாகவே வரமுடியவில்லை என நான் நினைத்துக்கொண்டேன். (திரு புஃருட்டான் அப்போது தமது 98 வயதைத் தாண்டியிருந்தார்)
எங்களுடன் இருந்த பல புனிதப்பயணிகள் திரு புஃருட்டான் வரவில்லை என கேள்விப்பட்டவுடன் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளுக்குத் திரும்பினர், ஆனால் நாங்கள் சிலர் மட்டும் அவர் ஒரு வேளை வந்து உரை நிகழ்த்தக்கூடும் எனும் எதிர்ப்பார்ப்பில் அங்கேயே காத்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாக அவர் வருகின்றார் எனும் செய்தி வந்தபோது நாங்கள் பெருமகிழ்வெய்தினோம். அத்தனிச்சிறப்பு மிகுந்த மனிதர் அரைக்குள் நுழைந்தபோது அவர் அங்கு வர எத்தகைய முயற்சி செய்துள்ளார் என்பது தெளிவாகியது. பார்ப்பதற்கு அவர் மிகவும் முகம் வெளுத்துப்போய் கண்ணாடி போன்று தோன்றினார். அவர் அதுமுதற்கொண்டு இவ்வுலகத்தைத் துறந்துவிட்டார் என தோன்றியது. இருந்தபோதிலும் அவர் தமது பலவீனத்தை பொருட்படுத்தாமல் மேடை சென்று உரையாற்றவாரம்பித்தார்.
அன்று அவர் உரை கடவுளின் சமயத்தைப் போதிக்கும் கடமை குறித்து நிகழ்த்தப்பட்டது. அவர் முதலில் மேற்கண்ட பஹாவுல்லாவின் திருவாக்கைப் படித்தார்:
“கூறுவீராக: பஹாவின் மக்களே, இறைவனின் சமயத்தைப் போதிப்பீராக; ஏனெனில் இறைவன் ஒவ்வொருவருக்கும் தனது சமயத்தைப் பிரகடனஞ் செய்யும் கடமையை விதித்து, அதனைச் செயல்களிலெல்லாம் மிகப் போற்றுதலுக்குரிய செயலாகக் கருதுகின்றார். சமயத்தைப் போதிக்கும் அவர், எல்லாம் வல்லவரான, கிருபையாளரும் மேன்மைமிகு பாதுகாவலருமான இறைவனிடத்தில் திட நம்பிக்கை கொண்டிருக்கும் போதுதான், அத்தகையச் செயல் ஏற்புடையதாகும். மேலும், மனிதர்களின் சொல்லாற்றலின் மூலமாகத்தான் அவரது சமயம் போதிக்கப்படவேண்டுமே அல்லாது பலாத்காரத்தை மேற்கொள்வதன் மூலமாக அல்லவென்று அவர் கட்டளையிட்டுள்ளார். இவ்வாறுதான் அதி மேன்மைப்படுத்தப்பட்ட, சர்வவிவேகியான அவரது இராஜ்யத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.”
அதன் பிறகு திரு புஃருட்டான் அவர்கள் ‘கடமை’ எனும் வார்த்தையின் அர்த்தம் குறித்த தமது புரிந்துகொள்ளலைப் பகிர்ந்துகொண்டார். அதற்கு உதாரணமாக ஒரு கதை சொன்னார். அக்கதை ரஷ்ய நாட்டை 2வது நிக்கோலாய் ஸார் மன்னன் ஆண்ட போது நடந்ததாகும். ஒரு நாள் நிக்கோலாய் தமது அரண்மனையை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அங்கு காவலுக்கு இருந்த ஒரு காவலாளியைக் காண நேர்ந்தது. அக்காவலாளி மிகவும் சோர்ந்து முகம் சிவந்தும் வீங்கியும் இருந்தான். நிக்கோலாய் அவன் அருகே சென்று அவனுக்கு என்ன நோய் என வினவினான். அதற்கு அந்த காவலாளி தனக்கு மலேரியா நோய் கண்டுள்ளது எனக் கூறினான். அதற்கு நிக்கோலாய் அக்காவலாளிக்கு தனி கவனிப்பு தேவைப்படுகிறது என கூறி அவனை இல்லம் செல்லுமாறு கூறினான். ஆனால் அக்காவலாளி தன் மேலதிகாரியின் அனுமதியின்றி தான் வீடு திரும்ப முடியாது எனவும் அரண்மனையை தன் கடைசி மூச்சு உள்ள வரை காவல் காக்கவேண்டும் எனக் கூறினான். அதற்கு நிக்கோலாய் அக்காவலாளிக்குப் பதிலாக தானே அங்கு காவல் புரிவதாகவும், காவலளியின் தலைவனிடம் தான்தான் அக்காவலாளியை வீடு செல்லக் கூறியதாகவும் அக்காவலாளி தன் கடமையை செவ்வனே செய்துள்ளான் என தெரிவிப்பதாகவும் கூறினான். ‘கடமை’ எனும் வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் என திரு புஃருட்டான் கூறினார். நான் இன்று இங்கு வரவேண்டியது என் கடமையாகும் ஆகவே நான் வந்தேன். நமக்கு ஒரு கடமை விதிக்கப்பட்டிருந்தால் அது கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறினார்.
திரு புஃருட்டான் அவர்கள் ரஷ்ய நாட்டில் வாழ்ந்து கல்வி கற்றார் மற்றும் ரஷ்ய மொழியைப் பேசுவதிலும் ரஷ்ய மொழி பேசுபவர்களையும் மிகவும் விரும்புவார் என்பது பலருக்குத் தெரியும். நல்ல வேளையாக ரஷ்ய மொழி பேசும் அணைவரும் அங்கு கூடியிருந்தனர். அவர் அக்கதையைக் கூறியபோது அவர் சில வார்த்தைகளை, குறிப்பாக ‘கடமை’, ‘பொருப்பு’ ஆகிய வார்த்தைகளை அவ்வப்போது ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தார். அவர் தமது உரையை முடித்தவுடன் அவர் ரஷ்ய மொழி பேசும் புனிதப்பயணிகள்பால் சென்று: “நண்பர்களே, நான் கூறியது உங்களுக்குப் புரிந்ததா,” என வினவினார். ‘கடமை’ மற்றும் ‘பொருப்பு’ என்பது என்னவென இப்போது புரிந்ததா எனக் கேட்டார்.
ஏறத்தாழ இவ்வார்த்தைகளே அவர் இவ்வுலகவாழ்வின் இறுதியில் பேசிய வார்த்தைகளாகும். அதன் பிறகு அவர் சில நிமிடங்களில் காலமானார். அவர் எங்கள் கண் முன்னாலேயே தாம் மிகவும் நேசித்த புனிதப்பயணிகளின் கைகளிலேயே அமைதியாகவும் கௌரவத்துடனும் விண்ணேற்றம் அடைந்தார். அவரின் வாழ்வும் மறைவும், எனக்கு உண்மையான சேவகம், திருவொப்பந்தத்தில் உறுதிப்பாடு, கடவுளின் சமயத்தின்பால் விசுவாசம் ஆகியவற்றுக்கான உதாரணங்களாக விளங்கின. அவர் தமது வாழ்க்கையின் வாயிலாகவே கடமை என்றால் என்ன என்பதைக் காண்பித்து அதை நமது கடைசி மூச்சு உள்ள வரை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதையும் எடுத்துக்காட்டினார்.
பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு ஒற்றுமையை மையமாகக் கொண்டது. கடவுள் ஒருவரே, சமயங்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளன மற்றும் மனிதர்கள் யாவரும் ஒரே குடும்பத்தினர் எனும் முப்பெரும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த ஒற்றுமை பேணப்படும்.
பஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்கள் சச்சரவு மற்றும் சண்டைகளில் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளார், ஏனெனில், அவை இன்று வழக்கிலுள்ள கட்சிசார்ந்த அரசியலின் கூறுகளாகும். எந்த நாட்டில் வாழ்ந்த போதும் பஹாய்கள் அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர்.
மேலோட்டமாகப் பார்க்கையில், பஹாய்கள் தங்களின் சர்வலோக கோட்பாடுகளின் மேம்பாட்டிற்காக பலதரப்பட்ட அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருப்பார்கள் என சிந்திக்க தோன்றும். ஆனால், அது முற்றிலும் தவறாகவே இருக்கும். பஹாய்கள் சமுதாயத்தின் நலனுக்காக தங்கள் பங்கை ஆற்றிட ஊக்குவிக்கப்படுகின்றனர். அவற்றுள் ஒன்று தங்களின் குடிமைக் கடமைகளை நிறைவேற்றுவதாகும்.
ஆகவே, சமுதாயத்திற்குச் சிறந்த முறையில் தொண்டாற்றிட முடியும் என தாங்கள் கருதுவோருக்கு அவர்கள் போதுத் தேர்தல்களில் இரகசிய முறையில் வாக்களித்திடும் சுதந்திரம் உண்டு.
பஹாய்கள் அரசியல் சார்பற்ற அரசாங்க நியமனங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா்ல, அவர்கள் எந்த அரசியல் கட்சியோடும் தங்களை அடையாளப்படு்த்திக்கொள்ளக்கூடாது அல்லது எந்த அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது.
மனிதகுலத்தின் ஒற்றுமையைப் பேணுவதே மக்களும் தேசங்களும் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் சவால் எனும் ஓர் அடிப்படை பஹாய் நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். உண்மையான சமூக அபிவிருத்தி என்பது மனித நாகரிகத்தின் இப்புதிய கட்டத்தின் (மனிதகுலத்தின் ஒற்றுமையின்) மேம்பாட்டையே சார்ந்திருக்கின்றதென பஹாவுல்லா போதிக்கின்றார். “மனிதகுலத்தின் பொதுநலம், அதன் அமைதி, பாதுகாப்பு ஆகியவை அதன் ஒற்றுமை உறுதியாக ஸ்தாபிக்கப்படும்வரை அடையப்படவே முடியாது.”
அவற்றின் சாரத்தின் சர்வலோகத்தன்மை வாய்ந்த பிரச்சனைகளுக்குக் கட்சி சார்ந்த மற்றும் பிரிவிணையை இயல்பாகக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் தீர்வுகளை வழங்கிட முடியாதென்பது பஹாய் போதனையாகும். தேசிய, இன, கலாச்சார அல்லது சித்தாந்த ரீதியான இ்ப்போதைய அரசியல் சாதனங்கள் எதுவுமே எல்லைக்குட்பட்டவை மற்றும் தனிப்பட்டவையாகும்.
அரசியல்சார்பின்மை எனும் பஹாய் கோட்பாடு பஹாய்கள் முற்றிலும் சமூக மற்றும் நெறிமுறைகள் சார்ந்த பொதுப் பிரச்சனைகளில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைத் தடுத்திடவில்லை. பார்க்கப்போனால், இனசமத்துவம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற பல சமூக பிரச்சனைகளில் பஹாய்கள் முன்னணியிலிருந்த சேவையாற்றி வந்துள்ளனர்.
அரசியலில் ஈடுபடக்கூடாது எனும் கோட்பாடு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் எனும் பஹாய் போதனையோடு நம்பிக்கை செயற்பாடு ஆகிய இரு ரீதியிலும் வெகு நெருக்கமான ஒன்றாகும்.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு என்னேரத்திலும் விசுவாசமாக இருக்கவேண்டும், மற்றும் கீழறுப்பு போன்ற செயல்களில் முற்றாக ஈடுபடக்கூடாது என பஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்களுக்குப் போதிக்கின்றார். ஆட்சி மாறும்போது, வரக்கூடிய புதிய அரசாங்கத்திற்கு பஹாய்கள் அதே விதமான கடமை உணர்வோடு, தங்களின் விசுவாசத்தை, அரசியலில் ஈடுபடாமை எனும் கோட்பாட்டிற்கிணங்க வழங்கிடவேண்டும்.
பஹாய் தேர்தல் முறை
(இருபத்தொரு வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பஹாய் சமூகத்தின் தேர்தல் முறைகளில் பங்கேற்கலாம். பஹாய் தேர்தல்களில் வேட்பாளர் நியமணம் கிடையாது மற்றும் பிரச்சாரங்கள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன. சமூகத்திற்குச் சிறந்த முறையில் சேவையாற்றிட முடியும் என தாங்கள் நினைக்கும் ஒருவருக்கு அல்லது பலருக்கு பஹாய்கள் பன்மைமுறையில் பிரார்த்தனையோடு வாக்களிப்பார்கள். இவ்விதத்தில் அதிகமான வாக்குகளைப் பெறும் ஒருவர் அல்லது பலர் தாங்கள் தேர்வுசெய்யப்பட்ட பதவிகளில் கடவுள் விசுவாசத்துடன் சேவையாற்றுவார்கள்.)
“பெண்களும் ஆண்களும் கடவுளின் பார்வையில் சமமானவர்களாகவே இருந்துவந்துள்ளனர் இனி என்றென்றும் அவ்வாறே இருந்தும் வருவர்” – பஹாவுல்லா
பஹாய்களுக்குச் சமத்துவமும் ஆற்றலடைதலும் இன்றியமையா ஆன்மீக கோட்பாடுகளாகும். “மானிட உலகு இரு இறக்கைகளால் ஆனது: ஆண் மற்றும் பெண்.” இவ்விரு இறக்கைகளும்… வலுவில் சமமதிப்பும் அதிகாரமும் அடையும்போது, (மனுக்குலத்தின்) பறக்கும் ஆற்றலானது வெகு மேம்பாடு அடைந்தும் தனிச்சிறப்பும் பெறும்.
இத்தகைய அழுத்தந்திருத்தமான வாக்குமூலங்களினால், உலகளாவிய பஹாய் சமூகம் அதன் 160 ஆண்டுகளுக்கு முன்பான ஆரம்பத்திலிருந்து பெண்கள் உரிமையின் மேம்பாடு குறித்த இயக்கத்தின் முன்னணியில் இருந்து வந்துள்ளது மற்றும் இதன் பயனாக பல பஹாய் பெண்மணிகள் பிரமிப்பூட்டும் பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்டவர்களாகவும், பலதரப்பட்ட தொழில்களின் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களுள் சிலரைக் கீழே காண்போம்.
(இக்கட்டுரை, மாஹ்வாஷ் மற்றும் பாஃரிபா போன்று உலகம் முழுவதும் நியாயமற்ற முறையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. அவர்களின் மனவுறுதி, உளவலிமை, மற்றும் உற்சாகம் நம் எல்லோருக்கும் ஒரு நல்ல உலகை உருவாக்கும்.)
தாஹிரி
தாஹிரி(கி.பி.1817-1852), ஈரான் நாட்டின் தலைசிறந்த பாவலர் மற்றும் கல்விமான்களில் ஒருவராவார். இவர் பஹாய் இயக்கத்தின் ஆரம்பகாலத்தின் 18 சீடர்களுள் ஒருவரும் ஆவார். இவர் தமது நம்பிக்கைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு முன், “நீங்கள் என்னை எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் கொலை செய்யலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்கவே முடியாது,” எனக் கூறி உயிர்விட்டார். இவர் உலகளாவிய நிலையில் பெண்கள் வாக்குரிமை குறித்த முதல் உயிர்த்தியாகியாகக் கருதப்படுகிறார்.
***************************************
கேரொல் லொம்பார்ட்
இவர் கேரோல் லொம்பார்ட் (1908-1942) எனப்படும் ஹாலிவூட்நடிகையாவார். 1930களில் இவரே பெரிதும் பெயர் பெற்றிருந்த நடிகையாவார் மற்றும் “screwball comedy” எனப்படும் ஒருவகை காமெடி வகையின் முன்னோடியும் ஆவார். இவர் கணவர் அக்காலத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்த ஹாலிவூட் நடிகரான கிளார்க் கேபிள் ஆவார். மற்றொரு காமெடியாளரான லூசில் போல் என்பவரின் “ஐ லவ் லூசி” எனும் தொடருக்கு இவரே தூண்டலளித்தார். இவருக்கு 33 வயதாகிய போது போர்க்கால நிதி (சுமார் 2 மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்பட்டது) வசூல் ஒன்றின் போது விமான விபத்தொன்றில் காலமானார். அதிபர் பிராங்க்லின் ரூஸவெல்ட், இரண்டாம் உலக யுத்தத்தில் தன் நாட்டிற்காக உயிர்விட்ட முதல் பெண்மணி இவரே ஆவார் எனக் கூறினார். இவரின் மறைவுக்குப் பிறகு அமெரிக்க ‘அதிபரின் சுதந்திர விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. இவர் ஐக்கிய அமெரிக்க பஹாய் சமூகத்தில் ஓர் அங்கத்தினராகவும் இருந்தார்.
***************************************
டோரதி நெல்சன்
டோரதி நெல்சன் (பிறப்பு 1928) ஐக்கிய அமெரிக்காவின் பெடரல் நீதிபதி ஒருவராவார். இவர் ஐக்கிய அமெரிக்க இடையீட்டு நீதிமன்றங்களை ஆரம்பித்து அவற்றை பரவலாக்கியதன் மூலம் பிரபலம் ஆனார். இவர் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முதல் சட்டத்துறை பேராசிரியராவார். 1969ல் இவர் அதன் பெண் முதல்வராக நியமிக்கப்பட்டதன் வாயிலாக முக்கிய அமெரிக்க சட்டப்பள்ளி ஒன்றின் பெண் முதல்வர் எனும் தனிச்சிறப்படைந்தார். ஐக்கிய அமெரிக்காவின் பஹாய் நிர்வாக சபையின் உறுப்பினர்களுள் இவரே நீண்டகாலம் சேவையாற்றியவராவார்.
***************************************
ஸாங் சின்
ஸாங் சின் எனும் பெயர் கொண்ட இவர் 1965ல் பிறந்தவராவார். தொழிற்சாலை ஒன்றின் முன்னாள் ஊழியரான இவர், தற்போது பீச்சிங் நகரின் மிகப் பெரிய ‘ரியல் எஸ்டேட்’ மேம்பாட்டாளராக விளங்குகிறார் மற்றும் இவர் ‘போர்ப்ஸ் (Forbes)’ வெளியீட்டில் உலகின் அதிசக்திவாய்ந்த பெண்களுள் ஒருவர் எனவும் அதில் “உலகின் 10 இலட்சக்கோடீசுவரப் பெண்களுள் ஒருவரெனவும்” பிரபலமடைந்துள்ளார். இவர் சமீபத்தில் நியூஸ்வீக் மாதவெளியீட்டில் “சீனாவின் இலட்சக்கோடீஸ்வரப் பெண்புலிகளின் எழுச்சி” எனும் தலைப்பில் முன்பக்கத்தில் தோற்றம் கண்டார். இவர் தமது நீதி, சமத்துவம் மற்றும் வணிகஒழுக்கத்திற்கு பெயர் போனவராகவும் விளங்குகிறார். இவரின் CNN பாஃரீட் ஸாக்காரியாவுடனான பேட்டியை</a> இங்கு கானலாம். இவரும் இவர் கணவரும் 2005ம் வருடத்திலிருந்து பஹாய் சமயத்தை ஏற்று சேவையாற்றி வருகின்றனர்.
***************************************
பாட்ரீஷியா லோக்
நல்ல விழிப்புணர்வும், இரக்கமனப்பான்மையும் மிக்க பாட்ரீஷியா லோக் (1928-2001) மேக்கார்த்தர் வாரியத்தின் ஜீனியஸ் விருதைப் பெற்றவராவார். இவர் அது வரை கீழடக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பூர்வக்குடியினர் மொழிகளையும் கலாச்சாரங்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படைச் சேவைகளுக்காக இந்த விருதைப் பெற்றார். 2005ம் வருடம் இவர் ஐக்கிய அமெரிக்காவின் ‘தேசிய பெண் பிரபலங்களின் கூடத்தில்’ சேர்க்கப்பட்டார். இவர் பூர்வகுடியினரால் நடத்தப்படும் 17 கல்லூரிகளை ஸ்தாபிக்க உதவியுள்ளார். இவர் ஐக்கிய அமெரிக்க பஹாய்களின் தேசிய நிர்வாக சபையில் பலகாலம் சேவையாற்றியுள்ளார்.
***************************************
மில்டிரெட் மொட்டாஹாடி
மில்டிரெட் மொட்டாஹாடி (1908-2000) நுன்சீனப்பீங்கான் வணிகச் சபை ஒன்றின் இணை ஸ்தாபகரும், வணிகத்துறை, வடிவமைப்பு மற்றும் சமுதாயத்தொண்டில் ஓர் உலகளாவிய இயக்குனர்களுள் ஒருவராகவும் இருந்தார். இவரின் சீனப்பீங்கான் வடிவமைப்புக்கள் அமெரிக்க வெள்ளை மாளிகையை அலங்கரித்தும் மூன்று அதிபர்களின் பதவியமர்வுச் சடங்குகளிலும் பங்குபெற்றுள்ளன. ஐக்கிய நாடுகளின் ஆரம்ப சாசனக் கையொப்பச் சடங்கில் இவரும் கூடியிருந்தார். இவரின் உலக அமைதி மற்றும் மேம்பாடு குறித்த முன்னோட்ட ஈடுபாட்டை இவர் பெண்கள் கல்விக்காக, குறிப்பாக 50க்கும் மேற்பட்ட வருடங்களுக்கும் முன் இந்தியாவில், ஆற்றிய சேவையில் காணலாம். இவர் பஹாய்களின் அனைத்துலக பஹாய் வாரியத்தில் அதன் பிரதிநிதியாகப் பலகாலம் சேவையாற்றியுள்ளார்.
***************************************
லேய்லி மில்லர்
லேய்லி மில்லர்-மியூரோ (பிறப்பு 1972), நியூஸ்வீக் மாத இதழினால் 150 பெண் தலைவர்களுள் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார். இவர் இக்கட்டுரையில் ஆரம்பத்தில் காணப்படும் தாஹிரி அம்மையாரின் பெயரில் தாஹிரி நீதி மையம்” எனும் ஒரு ஸ்தாபனத்தின் ஸ்தாபகராகவும் அதன் CEO ஆகவும் பணியாற்றி வருகின்றார். இச் சேவைக்காக இவர் ‘2012 Diane Von Furstenberg மக்கள் குரல் விருதைப்’ பெற்றார். இந்த நீதி மையம் வன்முறைகளிலிருந்து தப்பிவரும் குடியேறிகளுக்குப் பாதுகாப்பளிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இவர் வாஷிங்டன் போஸ்ட்டின் ‘Excellence in Non-Profit Management’ விருதையும் பெற்றுள்ளார்
***************************************
மாஹ்வாஷ் & ஃபாரிபா
மாஹ்வாஷ் (1953) மற்றும் பாஃரிபா (1963) இருவரும் பஹாய்கள் என்பதனாலும், அவர்கள் அரசாங்க கல்வி நிலையங்களில் இடம் மறுக்கப்பட்ட பஹாய் மாணவர்களுக்கென மறைமுகமாக உருவாக்கப்பட்ட BIHE எனப்படும் பஹாய் உயர்கல்வி நிலையங்களின் தலைமைத்துவத்தில் சேவையாற்றினர் என்பதனாலும் கைது செய்யப்பட்டு மிகவும் கொடுரமான 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஈரான் அரசாங்கம் இந்த BIHE கல்வி ஸ்தாபனத்தை அழிக்க முயன்று வந்தாலும் இந்த கல்வி ஸ்தாபனம் இன்று ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உட்பட உலகம் முழுவதுமுள்ள பல பல்கலைக்கழகங்களினால் ஆங்கீகரிக்கப்பட்டுள்ளது.
***************************************
எல்ஸீ ஆஸ்டின்
எல்ஸீ ஆஸ்டின் (1908-2004) சமூகவுரிமை இயக்கங்களில் ஒரு முன்னோடியாக சேவையாற்றியவர். 1930ல் இவர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கராவார் மற்றும் அதைத் தொடர்ந்து அவர் ஒஹாயோ மாநிலத்தின் உதவி அட்டர்னி-ஜெனரலாக சேவையாற்றினார். இவர் தமது சேவைக்காலத்தை பொதுச் சேவையிலேயே கழித்தார் மற்றும் பெண்கள் நடவடிக்கைகள் திட்டம் ஒன்றை ஆப்பிரிக்காவில் தாம் உருவாக்கிய ஐக்கிய அமெரிக்க தகவல் ஸ்தாபனத்தின் மூலம் செயல்படுத்தினார். இருதய நோயால் மரணமுற்ற இவருக்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் உகாண்டா நாட்டு பஹாய் வழிபாட்டு இல்லங்களில் நினைவாஞ்சலிகள் நடத்தப்பட்டன.
***************************************
மரீ இராணியார்
மாட்சிமை பொருந்திய ரோமானியா நாட்டின் அரசியார் (1875-1938), இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணியார் மற்றும் ரஷ்ய நாட்டின் ஸார் மன்னர் 2வது அலெக்ஸாண்டரின் மகள் வழி பேத்தி ஆவார். இவரே அரச பரம்பரையினருள் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்ட முதல் ராணியார் ஆவார்.முதலாம் உலக யுத்தத்தின் போது இவர் நோய் மற்றும் காயம் பட்டவர்களுக்கு சேவையாற்றிட செஞ்சிலுவைத் தாதியாக பணிபுரிந்தார். முதலாம் உலக யுத்தத்தில் தமது நாடு இழந்த பிரதேசங்களை இவர் ரோமானியா நாட்டின் பிரதிநிதியாக வேர்சேய்ல்ஸ் சென்று மீட்டுத் தந்தார்.
“வாய்மையே எல்லா மனித நற்பண்புகளுக்கும் அஸ்திவாரமாகும். -பஹாவுல்லா-“
பொய் சொல்வதென்பது இன்று ஒரு சாதாரண செயலாகிவிட்டது. உலகம் செயல்படுவதே பொய்களின் அடிப்படையில்தான் எனக் கூறலாமோ என்று தோன்றுகிறது.
சினிமாப் படங்களில் கற்றுக்கொள்ளப்படும் விஷயங்கள் பல பொய்யானப் பண்புகளை மனதில் தோற்றுவிக்கின்றன. விளம்பரதாரர்கள் வியாபாரத்திற்காக பொய்களுக்கு பலவித அலங்காரங்கள் செய்வித்து அவற்றை தங்கள் பொருள்களுக்கு அனிவித்து சந்தையில் அவிழ்த்துவிட்டுள்ளனர். அரசியல் ரீதியில் சில போர்கள் கூட உண்மைக் காரணத்தை மறைத்து பொய்க் காரணங்களின் அடிப்படையில் தொடுக்கப்படுகின்றன. இப்படி உலகில் எங்கு பார்த்தாலும் பொய்யே பல நிலைகளில் பிரதானமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் விளம்பரப் பொய்களைப் பார்க்கும் சிறார்கள் மனதில் அவை ஆழப்பதிந்து தவறான பண்புகளைப் பதிக்கின்றன. சில வேளைகளில் பெற்றோர்களும் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” எனும் கூற்றுக்கு இணங்க குழந்தைகள் பொய் சொல்லக் கற்றுக்கொள்வதற்கு மூலகாரணமாக இருக்கின்றார்கள். குழந்தைப்பருவத்தில் கற்றுக்கொள்ளப்படும் பழக்கங்கள் பசுமரத்தாணி போன்று வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைத்திருக்கும்.
ஒரு நண்பரைச் சந்திக்கின்றோம், “எப்படி இருக்கின்றீர்கள்,” என வினவுகிறோம், அதற்கு அவர் “நன்றாக இருக்கின்றேன் என்பார்.” மற்ற ஒருவரை சந்திக்கின்றோம், சாப்பிட்டீர்களா என வினவுகின்றோம், அதற்கு அவர் “ஓ சாப்பிட்டாயிற்றே,” என்பார். “கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள்,” என ஒருவரை அழைப்போம், அதற்கு அவர் “நீங்க முன்னுக்கு போங்க நான் பிறகு வரேன்” என்பார். “ஏன் ஒரு மாதிரியாக இருக்கின்றீர்கள்,” எனக் கேட்டால் “ஒன்றுமில்லையே, நன்றாகத்தானே இருக்கின்றேன்,” என்பார்கள். உன்னிப்பாக கவனித்தால், இவை யாவும் வழக்கமாக ஒரு பேச்சுக்காக சொல்லப்படும் பதில்களே தவிர அவற்றில் பெரும்பாலும் உண்மையிருக்காது. நன்றாக இருக்கிறேன் என்பவர் நன்றாக இருக்கமாட்டார், சாப்பிட்டாயிற்று எனக் கூறுபவர் ஒரு வேளை சாப்பிட்டிருக்கமாட்டார், போங்க வரேன் என்பவர் வரப்போவதில்லை. ஒன்றுமில்லை என்பவர் மனதில் ஆயிரம் போராட்டங்கள் நிறைந்திருக்கும்.
வேறு ஒரு விதமான பொய்யும் உள்ளது. நாம் எதை அல்லது எவற்றைப் பார்க்க நினைக்கின்றோமோ அவை அப்படியே தத்ரூபமாக நமது கண்ணுக்கத் தெரியும். உதாரணமாக வர்ணங்களை எடுத்துக்கொள்வோம். எந்த வர்ணம் நம் மனதில் பதிந்துள்ளதோ அந்த வர்ணமே பார்க்குமிடங்களிலெல்லாம் தோன்றும். அதே போன்றுதான் ஒரு மனிதரிடத்தில் நாம் பார்க்க விரும்பும் விஷயங்கள் மட்டுமே நமது கண்களுக்கு பளிச்சென்று தெரியும். அந்த மனிதரிடம் ஆயிரம் நல்ல விஷயங்கள் நிறைந்திருக்கும் ஆனால், அவர் எப்போதோ செய்த ஒரு சிறு தவறு மட்டுமே அத்தருணம் மனதிற்குத் தோன்றும். சில நேரங்களில் இல்லாத ஒன்றுகூட இருப்பதாகத் தொன்றும். சொல்லாத ஒன்று சொல்லப்பட்டதாகத் தோன்றும். முக்கியமாக கனவன் மனைவிக்கிடையே இத்தகைய “பார்வைக் குறைவுகள்” இருப்பின் அக் குடும்பத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
இப்படி நமக்கு விருப்பமானவற்றை மட்டுமே நாம் பார்க்கவும் சொல்லவும் விரும்புவதன் காரணமென்ன? ஒருவர் சாப்பிடவில்லையென்றால் அதை அவ்வாறே சொல்வதற்கென்ன அல்லது உடல்நலம் குறைவாக இருந்தால் அதை அப்படியே வெளிப்படுத்துவதில் என்ன தவறு? ஒருவரிடம் உள்ள நல்லவற்றை பார்க்காமல் அவரிடம் இருக்கும் ஒரு தவறு மட்டுமே நம் கண்களுக்குத் தெரிவதன் காரணமென்ன?
இந்த உலகம் முழுவதிலுமுள்ளோரைப் பார்க்கையில் பொய் சொல்வதற்கு மிகச் சுலமான ஒருவர் இருக்கின்றார் என்றால் அது நாம்தான். தனக்குத் தானே பொய் சொல்வது மிகவும் எளிதாகும். ஏனெனில் தனக்குத் தானே பொய் சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், அதே பொய்யைப் பிறரிடம் சொல்லும்போது சற்று கவனமாக இருப்பது அவசியப்படுகின்றது.
பொய் சொல்வதைப் பொருத்தவரை நாம் பிறரிடம் சொல்லும் பொய்யைவிட நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் பொய்யே அதிகமாகும் மற்றும் கேட்டை விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
இப்போது தனக்குத்தானே எவ்வாறு பொய் சொல்லக்கூடும் என்பதைப் பார்ப்போம். ஒரு காரியம் செய்யவேண்டியுள்ளது ஆனால், மறந்துவிட்டது; பரவாயில்லை நாளைக்கு அதைச் செய்யலாம், அதற்குள் என்னவாகிவிடப் போகின்றது என தனக்குத் தானே கூறிக்கொள்வது; குடும்ப நிலை கஷ்டமாக இருக்கும் போது பிறரிடம் அதைக் காட்டிக்கொள்ளாமல் பகட்டாக நடந்துகொள்வது; யாராவது நம்மைப்பற்றி ஒரு உண்மையைச் சொல்லும் போது உடனே எதிர்வாதம் செய்து அது உண்மையல்ல என வாதிடுவது; தினசரி நமது வாழ்வில் செய்யவேண்டிய முக்கியமானவற்றைச் செய்யாமல் ஏதாவது காரணத்தை முன்னிட்டு தள்ளிப்போட்டு ஒன்றுமே நடக்காதது போன்றிருப்பது. நமது தவறுகளை நமக்கு நாமே ஒப்புக்கொள்ளாமல் அவற்றை நியாயப்படுத்துவது என்பன போன்ற பல சூழ்நிலைகள் தனக்குத்தானே பொய்சொல்லிக்கொள்வதன் உதாரணங்களாகும்.
தனக்குத்தானே பொய்சொல்லும்போது நமக்கே தெரியாமல் பல பின்விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். “எச்சூழ்நிலையிலும் நமக்கு நாமே பொய் சொல்லிக்கொள்ளவே கூடாது. தனக்குத்தானே பொய் சொல்லிக்கொண்டும் அதை நம்பிக்கொள்ளவும் செய்பவன் தனக்குள் அல்லது தன்னைச் சுற்றிலும் அடங்கியுள்ள உண்மையை உணர்ந்துகொள்ள முடியாமல் தன்பாலும் மற்றவர்பாலும் மதிப்பிழந்து போகும் நிலையை அடைவான். மதிப்பிழந்தவன் அன்பு செலுத்தும் ஆற்றலை இழந்துவிடுவான்; உணர்வெழுச்சிக்கு அடிமையாகி பண்படாத இன்பங்களில் ஆழ்ந்துவிடுவான்; மிருகத் தனமான கெட்ட பழக்கவழங்கங்களுக்கு அடிமையாவான். இவை யாவும் ஒருவன் தனக்குதானேயும் பிறரிடமும் வழக்கமாக பொய் சொல்லும் பழக்கத்திற்கு ஆளாவதன் பின்விளைவுகளாகும். தனக்குத் தானே பொய் சொல்லுபவன் வெகு விரைவின் மனம் புண்பட்டுப்போவான். இப்படி மனம் புண்படுவது அவ்வாறு புண்படுவோர் மனதுக்கு இதமாக இருக்கும். சிலர் இல்லாத ஒன்றை கற்பனையாக உருவகப்படுத்திக்கொண்டு யாருமே ஒன்றும் செய்யாதபோதும் தன்னை யாரோ கேவலப்படுத்திவிட்டதாக தனக்குத் தானே ஒன்றை உருவாக்கிக்கொண்டு, பொய்சொல்லியும் அப்பொய்யை வெகு கவர்ச்சியாக்கி, மடுவை மலையாக்கிவிடுவார். அது அவருக்கும் தெரியும், ஆனால் அவர் தாமே அதனால் புண்பட்டும் அப்புண்படுதலில் ஆழ்ந்தும் அதனால் களிப்புணர்வடைந்தும், இறுதியில் உண்மையான பழியுணர்வையும் அடைவார்.”
இதிலிருந்து, “பொய்” எனும் வார்த்தைக்கு நமக்குத் தெரிந்ததைவிட பல அர்த்தங்கள் உண்டென்பதை நாம் கண்டுகொள்ளவேண்டும். நமக்குத் தெரியாத அர்த்தங்கள் தெரிந்தவற்றைவிட மிகவும் ஆபத்தானவையாக இருக்கலாம். ஆகவே எச்சூழ்நிலையிலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திட வேண்டும். அதற்காக, எல்லாச் சூழ்நிலைகளிலும் உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. தேவைப்படும் போது உண்மையும் இல்லாமல், நிச்சயமாகப் பொய்யும் பேசாமல், நிலைமையைச் சமாளிக்கும் திறமையை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
குடும்பப்பெண்களின் ஒரு முக்கிய பணி சமையல் செய்வது மற்றும் திரண்டுவிட்ட பாத்திரங்களை சுத்தமாக கழுவுவது. பின்வரும் குறும்படம் பாத்திரங்களை எப்படி நன்கு கழுவுவது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இதில் கற்றுக்கொள்வதற்கு நிறையவே உள்ளது.