Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்


12 அக்டோபர்


அம்மான், ஜோர்டான் – தொற்றுநோயின் தொடக்கத்தில், ஜோர்டானின் பஹாய் வெளியுறவு அலுவலகம் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக நடவடிக்கையாளர்களிடையில் ஊடகம் முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி எனும் ஒரு கலந்துரையாடல் தொடரை ஆரம்பித்தபோது, ​​பங்கேற்பாளர்கள் தங்கள் உரையாடலின் விளைவாக , ஓர் ஒத்திசைவான வாழ்க்கையை எப்படி வாழ்வது மற்றும் சமூக நன்மைக்கான ஆதாரமாக இருப்பது எப்படி என்பதை ஆராயும் பொது கருத்தரங்கை வழங்கும் ஒரு புதிய வானொலி நிகழ்ச்சியின் ஆரம்பத்தை எதிர்ப்பார்க்கவில்லை.

இப்போது முடிவடைந்துள்ள எட்டு வார தொடர் நிகழ்ச்சிகள், வெளியுறவுத்துறை அலுவலகத்துடன் இணைந்து ரேடியோ அல்-பலாட்டினால் தயாரிக்கப்பட்டதாகும்.

“உலகளாவிய சுகாதார நெருக்கடி உளவியல் அழுத்தங்களை தீவிரப்படுத்திய நேரத்தில் நாங்கள் ஆர்வநம்பிக்கை, மெய்நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு வர முயன்றோம்” என்கிறார் ரேடியோ அல்-பலாட்டின் தொகுப்பாளர் தக்ரீத் அல்-டாக்மி.

“இந்த நிகழ்ச்சி பல்வேறு பின்னணியிலிருந்து வரும் நேயர்களுக்கு மனித வாழ்க்கையின் ஆன்மீக மற்றும் லௌகீகப் பரிமாணங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கவும் தற்போதைய நேரத்தில் விஷயங்கள் எவ்வளவு கடினமாக இருப்பினும், எதிர்காலத்திற்கான ஆர்வநம்பிக்கை இருக்கிறது என்பதை உணரவும் ஒரு வாய்ப்பையும் வழங்கியது.”

“உடலும் ஆன்மாவும்” எனும் தலைப்பில் வானொலி நிகழ்ச்சி பரவலாக பார்வையாளர்களைச் சென்றடைந்ததுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது, நேயர்களிடையே சிந்தனைமிக்க உரையாடல்களையும் தூண்டியது.

“இந்த நிகழ்ச்சியானது ரேடியோ நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இல்லாத ஆழமான கருத்துகள் மற்றும் உயர் அபிலாஷைகளை ஆராய உதவுகிறது” என நிகழ்ச்சியின் கேள்விகேட்கும் பகுதியின் போது ஒரு நேயர் கூறினார்.

“இது கூட்டு சமுதாய விழிப்புணர்வை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது, மேலும் பொது நன்மைக்குப் பணியாற்றல், நீதி, இரக்கம் ஆகியன போன்ற நமது வாழ்க்கையின் முக்கியமான கொள்கைகளைப் பற்றி சிந்திக்க உதவுகிறது” என அவர் தொடர்ந்தார்.

வெளியுறவு அலுவலகத்தின் தஹானி ருஹி, வானொலி நிகழ்ச்சியின் எழுச்சியூட்டும் மற்றும் வசீகரிக்கும் சூழ்நிலையானது அலுவலக உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடையில் நடந்த பல நுண்ணறிவுமிகு உரையாடல்களுக்கும் தொடர்ந்து, வானொலி ஒளிபரப்புகளுக்கும் வழிவகுத்ததுடன் அவர்களிடையே நட்பின் வலுவான பிணைப்புகளையும் உருவாக்கியது என கூறினார்.

“கடந்த வருடத்தில் நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்களாகினோம்,” என அவர் கூறுகிறார். “இது நிகழ்ச்சிக்கு அதன் நட்பு மற்றும் அழைப்புவிடுக்கும் உணர்வைக் கொடுத்ததுடன், இத்திட்டம் அதற்கு வழிவகுத்த செயல்முறையின் பிரதிபலிப்பாகவும் இருந்தது.

திருமதி ரூஹி தொடர்கிறார்: நிகழ்ச்சிக்கான தலைப்புகளானவை, நம்பிக்கையை வளர்ப்பதில் மதம் மற்றும் ஊடகங்களின் பங்கு உட்பட முந்தைய கலந்துரையாடல் கூட்டங்களில் ஆராயப்பட்ட கருப்பொருள்களின் உத்வேகம் பெற்றவை என விளக்குகிறார்–சமூக ஊடகங்களில் பிளவுகளை எதிர்கொள்தல் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தல்; பல்வேறு மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதில் கூட்டு பிரார்த்தனையின் முக்கியத்துவம்; சமூகத்திற்குச் சேவை செய்யும் போது தன்னலமின்மை குறித்த கருத்தாக்கம்; பெருந்தொற்றின் போது தங்கள் சமூகங்களுக்குச் சேவை செய்வதில் இளைஞர்களின் பங்கு; மற்றும், சமூகத்தில் கலைகளின் இடம்.

நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட மிகுந்த நேர்மறையான ஆர்வத்தினால், ரேடியோ அல்-பலாட் மற்றும் பஹாய் வெளியுறவு அலுவலகம் இப்போது “வாழ்க்கை சுழற்சி” எனும் தலைப்பில் ஒரு புதிய தொடரைத் தயாரிக்கின்றன, இது குழந்தை பருவத்திலிருந்து முதிர்வு வரை வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தை ஆராயும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1540/8 அக்டோபர் 2021


நூர்-சுல்தான், கஜகஸ்தான்-தொற்றுநோய்களின் போது இன்னும் வெளிப்படையாகத் தோன்றிய சமூக சவால்களைப் பற்றி கவலைப்படுகையில், கஜகஸ்தானில் அதிகரித்து வரும் ஊடகவியலாளர்கள் சமூக முன்னேற்றத்திற்கு ஊடகங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்று தேடல் கேள்விகளைக் கேட்கின்றனர்.

இந்த வளர்ந்து வரும் ஆர்வத்திற்கு விடையிறுப்பாக, அந்த நாட்டின் பஹாய் வெளியுறவு அலுவலகம் அதிக ஒத்திசைவான சமுதாயத்தை உருவாக்கும் பரந்த சூழலில் பத்திரிகையின் நெறிமுறை மற்றும் தார்மீகப் பரிமாணங்களைப் பற்றிய ஆழமான விவாதங்களுக்கு.பத்திரிகையாளர்களை ஒன்றுகூட்டுகிறது,

“நம் சமுதாயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம்? அது ஒற்றுமைப்படுவதை நாம் காண விரும்பினால், ஒற்றுமைக்குப் பங்களிக்கும் திறனுடைய ஓர் ஆக்கபூர்வ சக்தியாக ஊடகத்தின் பங்கை கற்பனை செய்வோம், ”என்கிறார் பஹாய் வெளியுறவு அலுவலகத்தின் இயக்குனர் லியாசாத் யங்கலியேவா.

அவர் மேலும் கூறினார்: “பத்திரிகையாளர்கள் சமுதாய மாற்றத்திற்குப் பெரிதும் பங்களிக்க முடியும். ஆனால், ஒவ்வொரு மனிதனின் மேன்மையைக் கருத்தில்கொள்ளும் மனித இயல்பு பற்றிய ஒரு புதிய கருத்தாக்கம் தேவை.”

கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் மனிதர்களின் ஆன்மீக இயல்பை புறக்கணிப்பது அல்லது நிராகரிக்கும் போக்கானது எவ்வாறு மக்கள் துல்லியத்தை விட உணர்ச்சியூட்டலை அதிகமாக ஆதரிக்கின்றனர் என்னும் பொதுவான கருத்துக்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்ந்தனர், இது,பிரசுரிக்கப் படுபவற்றிற்கான பொறுப்பை அவற்றின் ஆசிரியர்களைவிட பார்வையாளர்களின் மீதே அதிகமாக சுமத்துகிறது.

ஒரு பதிவரான இலியாஸ் நுகுமனோவ், இந்தப் பார்வைக்கு சவாலிட்டார். தார்மீகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஊடக வெளியீடுகளின் தேவையைப் பற்றி பேசினார்: “என் அனுபவத்தில், ஒன்றிணைக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இடுகைகளின்பால் பல மக்கள் ஈர்க்கப்படுவதுடன், பிரிக்கின்ற அல்லது உணர்ச்சியூட்டும் கதைகளைவிட அவற்றின்பால்தான் அதிகம் ஈர்ப்புறுகின்றனர்.

“மக்கள் தங்கள் வேறுபாடுகளைத் தாண்டி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தத் தூண்டும் கதைகளால் ஈர்க்கப்படுகிறார்கள்”

பத்திரிகையாளர்களை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வழிநடத்தும் ஆன்மீகக் கோட்பாடுகளுடன் மனித இயல்பு பற்றிய கேள்விகள் பிணைக்கப்பட்டுள்ளன எனவும் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.

“ஒரு பத்திரிகையாளராக இருப்பதற்கு ஒருவர் தொடர்ச்சியாகத் தம்மை மேம்படுத்திக்கொள்வது தேவையாகும். அவர் மிகவும் நெறிமுறையுடனும் கனிவாகவும் தப்பெண்ணத்தை எதிர்த்துப் போராடுவதும் மக்கள்பாலும் நாம் கருத்தில்கொள்ளும் பிரச்சனைகள்பாலும் அதிக மரியாதையுடன் இருக்க வேண்டும்” என ‘ஸ்டெப்பி’ என்னும் ஊடக வெளியீட்டின் ஆசிரியர் டேனல் கோஜேவா கூறினார். .

“இது நமது பொதுவான மனிதத்தன்மை குறித்த கேள்வி,” எனத் தொடர்ந்து கூறினார், “ஒரு சிறந்த பத்திரிகையாளராக இருப்பதற்கு ஒரு சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்.”

வெளியுறவுத்துறை அலுவலகம் இந்த விவாதங்களின் போட்காஸ்ட் அத்தியாயங்களை தயாரித்து வருகிறது, இந்த யூடியூப் சேனலில் அதை ரஷ்ய மொழியில் காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1539/8 அக்டோபர் 2021


BIC ஜெனீவா, 5 அக்டோபர் 2021, (BWNS) – ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் உணவளிக்க போதுமான அளவு உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், உணவு அமைப்புகள் மனிதகுலம் முழுவதற்கும் உணவு பாதுகாப்பு வழங்குதலில் போதாக்குறையுடன் இருப்பது எப்படி?

இந்தக் கேள்வியை ஆராய்வதற்காக, பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஜெனீவா அலுவலகம் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய உணவு முறைகள் உச்சமாநாட்டின் போது ஒரு விவாதத்தை நடத்தியது- இது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட 1996-க்குப் பின்னர் நடைபெறும் முதல் பெரிய உணவு உச்சமாநாடு ஆகும். 

இந்த நிகழ்ச்சி குறிப்பாக உணவு உற்பத்தி பற்றிய விவாதங்களில் விவசாயிகளை நடுமையத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தைப் பார்த்ததுடன், ஐ.நா. உணவு முறை உச்சமாநாட்டிற்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதர், உலக உணவு பாதுகாப்புக் குழுவின் செயலாளர், கேர் (CARE) இன்டர்நேஷனலில் அறிவு மேலாண்மை மற்றும் கற்றல் இயக்குனர், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பிரதிநிதிகள்,  அத்துடன் தொடர்புடைய அனுபவம் கொண்ட பஹாய் உத்வேக அமைப்புகளையும் உள்ளடக்கியிருந்தது.

“அதிகரித்து வரும் ஆதாரங்கள், கிராமப்புற உற்பத்தித் துறை சார்ந்த மேம்பாடுகள் உள்ளூர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் மக்களை பெரிதும் சார்ந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன- இது பெருந்தொற்றின் போது முன்னெப்போதையும் விட வெளிப்படை ஆகிவிட்டது,” என ஜெனீவா அலுவலகத்தின் பிரதிநிதியான சிமின் ஃபஹண்டேஜ் கூட்டத்தில் கூறினார்.

அவர் மேலும் கூறினார்: “இருப்பினும், உணவு அமைப்புகள் மற்றும் கொள்கை உருவாக்க செயல்முறைகள் குறித்த உயர்மட்ட உரையாடல்களில் பெரும்பாலும் அவர்களின் குரலோ அனுபவமோ காணப்படவில்லை.

“விவசாயக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்பு பற்றிய முடிவுகளில் பெரும்பாலானவை பொதுவாக நடைமுறையில் கொள்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை வடிவமைக்கும் கிராமப்புற அமைப்புகள் மற்றும் உள்ளூர் மெய்நிலைகளுக்கும் வெளியே வெகு தொலைவில் எடுக்கப்படுகின்றன.” 

பஹாய் போதனைகளின் அடிப்படையில், திருமதி ஃபஹண்டேஜ் தொடர்ந்து விளக்கினார். மாற்றத்தை அடைவதற்கு, சமூகத்தில் விவசாயிகளின் பங்கு பற்றிய புதிய கருத்தாக்கங்கள் தேவை. “நாம் விவசாயிகளை ‘மனித சமூகத்தின் முதல் செயலூக்க முகவராக’ அரவணைத்து, சமூகங்களின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கேள்விகளை விவசாயிகளிலிருந்து ஆரம்பிக்க அனுமதித்தால் எவ்வித புதிய சாத்தியக்கூறுகள் உருவாகலாம் என கற்பனை செய்து பாருங்கள்?”

இந்த அடிப்படையில், விவசாயிகள் மற்றும் சமூகங்களின் உணவு உற்பத்தி பற்றி உள்ளூர் மட்டத்தில் உருவாக்கப்படும் அறிவு உணவு மற்றும் விவசாயம் பற்றிய சர்வதேச கொள்கைகளுக்கு எவ்வாறு அறிவூட்ட முடியும் என்பதைக் குழு உறுப்பினர்கள் ஆராய்ந்தனர்.

கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் விரிவான அனுபவம் கொண்ட பஹாய் உத்வேக அமைப்பான FUNDAEC-இன் பிரதிநிதியான எவர் ரிவேரா, ஒவ்வொரு மனிதனின் மேன்மையையும் பார்க்கும் மற்றும் பாரபட்சம் மற்றும் தந்தைமனப்பான்மைக்கு எதிராக ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் மனித இயல்பு பற்றிய ஆழமான புரிதலுடன் குறுகிய மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்தாக்கங்கள் குறுகிய மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்தாக்கங்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை விவரித்தார்.  

திரு. ரிவேரா மேலும் விளக்கி, மக்கள் தங்கள் சமூகங்களின் நல்வாழ்வுக்குப் பங்களிக்கும் திறனை வளர்ப்பதற்கான, குறிப்பாக உணவு தன்னிறைவு நோக்கத்தை கொண்ட முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் FUNDAEC-இன் அணுகுமுறையை விவரித்தார்.

“விவசாயிகளின் ஆழமான பாரம்பரிய அறிவு மற்றும் நவீன அறிவியலின் சிறந்த நடைமுறைகளை ஈர்க்கும் அணுகுமுறைகளை FUNDAEC ஊக்குவிக்கிறது. இது உணவு உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்தவும், கூட்டு நல்வாழ்வை ஆதரிக்கும் சமூக கட்டமைப்புகள் மற்றும் புதிய அமைப்புகளை உருவாக்கவும் விவசாயிகளுக்கு உதவுகிறது.

“ஒருவர் மற்றவருடன் ஒத்துழைத்து ஆதரவளிக்கும் சிறு விவசாயிகள் குழுக்களை நிறுவுதல், அனைவரையும் அணுமதிக்கும் ஒரு கிராம களஞ்சியத்தை உருவாக்குதல், விவசாய நடைமுறைகளில் மாற்றங்கள் மற்றும் விவசாய பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதில் தேவையற்ற இடைத்தரகர்களை அகற்ற விளைபொருட்களை விநியோகித்தல் ஆகியவை இதில் அடங்கும்.”

மண் அரிப்பு, பெரிய அளவிலான காடழிப்பு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற சுற்றுச்சூழல் சீரழிவின் சில பெரிய சவால்களின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தையும் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்துரைத்தன. ஐ.நா. உணவு முறை உச்சமாநாட்டிற்குச் சிறப்புத் தூதரான டாக்டர் மார்ட்டின் ஃப்ரிக் கூறுகையில், “இந்தத் தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட, உணவு முறைகள் மூலம் அல்லாமல் வேறு எந்த வழியும் இல்லை. மனித கண்ணியத்தையும் … அதிகார சமநிலையின்மையும் குறித்துரைப்பதால் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும்.

இந்த பிரச்சினைகளை ஆராயும் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதால், BIC-யின் ஜெனீவா அலுவலகம் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கருப்பொருள்கள் பற்றிய அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1538/8 அக்டோபர் 2021


அடிஸ் அபாபா, எத்தியோப்பியா, 1 அக்டோபர் 2021, (BWNS) – பஹாய் சர்வதேச சமூகத்தின் (BIC) அடிஸ் அபாபா அலுவலகம் சமீபத்தில் விஞ்ஞானிகள், சமய சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது சமூக அமைப்புகளை, காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களுக்கு அறிவியல் மற்றும் மதத்தின் நுண்ணறிவுகள் எவ்வாறு அறிவூட்ட முடியும் என்பதை ஆராய ஒன்றுகூட்டியது.

“இறுதியில், சுற்றுச்சூழல் நெருக்கடியின் மையத்தில் ஒரு ஆன்மீக நெருக்கடி உள்ளது” என அடிஸ் அபாபா அலுவலகத்தின் சாலமன் பெலே கூறுகிறார்.

டாக்டர் பெலே, சுற்றுச்சூழல் பற்றிய சொல்லாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்ட போதிலும், குறிப்பாக 26-வது ஐக்கிய நாடுகள், COP 26 என அழைக்கப்படும், காலநிலை மாற்ற மாநாட்டிற்கு முன்னதாக நவம்பர் மாதத்தில், விஞ்ஞானம் மற்றும் மதம் இரண்டும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு ஒரு பயனுள்ள விடையிறுப்பை எவ்வாறு விளைவுத்திறத்துடன் வழிநடத்த முடியும் என்பதில் குறிப்பாக கவனம் செலுத்தும் சில கலந்துரையாடல் தளங்கள் உள்ளன என தொடர்ந்து விளக்குகிறார்.

அவர் மேலும் கூறுகிறார்: “நாம் அனைவரும் — ஒவ்வொரு நபர், நிறுவனம் மற்றும் நாடும் — சுற்றுச்சூழலின் பாதுகாவலர்கள். பிரச்சனையின் அளவானது, ஐக்கியப்பட்ட நடவடிக்கையை அவசியமாக்குகிறது, இந்த நடவடிக்கையானது, இருக்கின்ற சிறந்த அறிவியல் ஆதாரங்களால் அறிவூட்டப்படுவதுடன், நீதி மற்றும் மனிதகுல ஓருமை போன்ற ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.

இந்தக் கூட்டமானது, சுற்றுச்சூழலுக்கான சொல்லாடலுக்குப் பங்களிப்பதற்கான அடிஸ் அபாபா அலுவலகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். மேலும் இவ்வொன்றுகூடல் அனைத்து ஆப்பிரிக்க தேவாலய மாநாடு (AACCP) மற்றும் ஐக்கிய மத முன்முயற்சி (URI) உடன் இணைந்து நடத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் நெருக்கடிக்கான தீர்வுகளை சமுதாயத்தின் எந்த ஒரு முறைமையில் மட்டுமே காண முடியாது என குழுவினர் விவாதித்தனர். “அறிவியல் மட்டும் போதாது அல்லது பொருளாதார தீர்வுகள் மட்டும் போதாது” என தென்னாப்பிரிக்க சமய சமூகங்களின் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் (SAFCEI) உறுப்பினர் பிரான்செஸ்கா டி காஸ்பரிஸ் கூறினார்.

“சமயத்திற்கு இதில் ஒரு மிக முக்கிய பங்கு உள்ளது,” என அவர் தொடர்ந்தார். ஏனென்றால், இது இதயங்களுக்கும் மனதிற்கும் இடையிலுள்ள தொடர்பாகும், மற்றும் அது ஆக்ககர செயலை ஊக்குவிக்கும் சக்தி கொண்டது.

அடிஸ் அபாபா அலுவலகத்தின் பிரதிநிதியான அதீனோ எம்போயா, தனிநபர் மற்றும் கூட்டு வாழ்க்கையின் புதிய வடிவங்களை உருவாக்க மதம் எவ்வாறு ஒரு சக்தியாக இருக்க முடியும் என்பதை விவரித்து, பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ” பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளோரே வளங்களின் சமமற்ற விநியோகத்தினாலும் பாதிக்கப்படுவது, செல்வம் மற்றும் வறுமைக்கு இடையிலான நீண்ட இடைவெளி குறித்த சவால்களில் ஒன்றாகும்.

தொடர்ந்து அவர், “நமது பொருளாதார மாதிரிகள் பூமி மற்றும் அதன் அனைத்து மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, மானிடத்தின் ஒருமை போன்ற மதத்தால் வழங்கப்படும் ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,” என்றார்.

சுற்றுச்சூழல் விஞ்ஞானியும் சர்வதேச சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவருமான ஆர்தர் டால், காலநிலை நீதி மற்றும் சமுதாய மேம்பாடு பற்றிய விவாதங்களுக்கு அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் குறித்த பஹாய் கொள்கையின் இன்றியமையாமையை முன்னிலைப்படுத்தினார். “மோசமடைந்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடியானது வளர்ந்து வரும் நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் குறுகிய கால லௌகீக ஆதாயத்திற்கான குறுகிய பார்வையால் இயக்கப்படுகிறது.”

“சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கு, புதிய தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி நம்மைப் பற்றியும், உலகில் நமது நிலை பற்றியும் ஒரு புதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இயற்கையுடனான நமது உறவு மற்றும் சமுதாயத்தைப் பராமரிக்கும் உறவுகளின் முழுமையான மறுசீரமைப்பு. இதைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது’

“காலநிலை மாற்றம், நம்பிக்கை மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு” என்னும் தலைப்பிலான இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அடிஸ் அபாபா அலுவலகம் பல்வேறு சமூக நடவடிக்கையாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமய சமூகங்களுடன் சேர்ந்து, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளின் சமூக மெய்நிலைக்குள், விவசாயம், கிராமப்புற பராமரிப்புத்திறம், இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகள் தொடர்புடைய கருப்பொருள்களை ஆராயத் திட்டமிட்டுள்ளது.

கதையை இணையத்தில் படிக்க அல்லது மேலும் புகைப்படங்களைப் பார்க்க, news.bahai.org -ஐப் பார்வையிடவும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1537/

நதீராவின் அழகான கதை


இது நதீரா வாசுவின் கதை. பிறக்கும் போதே ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பெர்பெக்டா Osteogenesis Imperfecta (OI) என்னும் அரிய மரபணு கோளாறுடன் பிறந்த நதீரா 27 செப்டம்பர் 2021-இல் இந்நுறையீரல் பிரச்சினைகளின் காரணமாக மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன் இவ்வுலகத்திற்காகத் தன்னைப் பற்றிய பின்வரும் கதையை எழுதினார். முடியாது என்னும் சொல்லுக்கே இடமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்த நதீராவின் ஆன்மா கடவுளின் ஆசிகளை நிச்சயமாக பெற்றிடும்.

என் பெயர் நதீரா. நான் பிறக்கும் போதே ‘நொறுங்கும் எலும்புகள்’ என அழைக்கப்படும் ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பெர்பெக்டா Osteogenesis Imperfecta (OI) என்னும் அரிய மரபணு கோளாறுடன் பிறந்தேன். OI-இல் பல வகைகள் உள்ளன, ஆனால் எனக்கு ஏற்பட்டது அதன் மிகக் கடுமையான வடிவமாகும். நான் பிறக்கும்போதே பல மருத்துவ சிக்கல்களுடன், என் உடலில் அங்காங்கே பல எலும்பு முறிவுகளுடன் பிறந்தேன். என் தாயின் வயிற்றில் இருக்கும்போதே சில எலும்பு முறிவுகள் ஏற்பட்டு அவை குணமாகிவிட்டிருந்தாலும், எக்ஸ்ரே மூலம் எனது இந்த முழு குழப்பமான அமைப்பு வெளிப்பட்டிருந்தது. யாரோ என்னை நொறுங்க நொறுங்க அடித்துவிட்டிருந்தது போலிருந்தது. அது தவிர, என் நுரையீரலும் போதுமான வளர்ச்சியடையவில்லை. அதன் விளைவாகச் சில கடுமையான சுவாசப் பிரச்சினைகள் எனக்கு எற்பட்டன. மருத்துவர்கள் என்னை வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என என் பெற்றோரிடம் தெரிவிப்பதற்கு முன் நான் 22 நாட்கள் ICU இன்குபேட்டரில் இருக்கவேண்டி இருந்தது,  என்னைச் சற்று சுகமாக வைத்திருந்து வரப்போகும் மோசமான நிலைக்கு (என் மரணத்திற்குத்) தயாராக, என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என மருத்துவர்கள் கூறினர். இருப்பினும், நான் இன்றுவரை உயிருடன்தான் இருக்கின்றேன், வரும் ஏப்ரல் 2021-இல் 29 வயதாகப் போகிறது, இன்னமும் உயிருடன்தான் இருக்கிறேன்.

இதுவரை என் வாழ்நாள் முழுவதும், எனக்கு சில சிறிய எலும்பு முறிவுகளும் இரண்டு மோசமான முறிவுகளும் ஏற்பட்டிருந்தன, அது எனக்கு மிகவும் தெளிவாக நினைவிருக்கின்றது. எனக்குக் கடுமையான எலும்பு முறிவு ஏற்படும் போதெல்லாம் அது குணமாவதற்கு மற்றவர்களைவிட எனக்கு அதிக காலம் எடுக்கும் என்பதால் நான் சில மாதங்கள் படுக்கையில் கிடக்கவேண்டியிருந்து பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பேன்.

எலும்பு முறிவுகளைத் தவிர, என் இளமை காலத்தில் சுவாசப் பிரச்சினைகள் காரணமாக எண்ணிலடங்கா முறைகள் என்னை மருத்துவமனை கொண்டுசெல்ல வேண்டியிருந்தது. இலேசான இருமல் மற்றும் சளியும் கூட என்னை மருத்துவமனை வரை கொண்டு சென்றிடும். பொதுப் பள்ளியில் நான் இடம் பெறுவது சற்று எட்டாத கனியாக இருந்தது. என் அம்மா என் கல்விக்காக, இறுதியில் என்னை ஏற்றுக்கொள்ளும் ஒரு பள்ளிக்காக, எனது உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருந்தது. அவர் அடுத்த 11 வருடங்கள் ஒவ்வொரு நாளும் என்னுடன் பள்ளிக்குச் சென்றார்

பள்ளி வாழ்க்கையும் எனக்குக் குறிப்பாக சுலபமான ஒன்றாகவே இல்லை. வலிகளையும் வேதனைகளையும் பொறுத்தக்கொண்டு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், என்னைச் சுற்றியுள்ள சகாக்களின் கொடுமை பேச்சுகள் மற்றும் தனிமை, பெரும்பாலான நேரங்களில் தனியாகவும் தனிமையிலும் இருக்க வேண்டிய நிலை. என்னைச் சுற்றியுள்ளவர்களின் பொறாமையும் மனக்கசப்பும் எனக்குப் பெரும் தனிமை உணர்வை ஏற்படுத்தியது. எனக்கு மிகச் சில நண்பர்களே இருந்தனர். யாரையும் உண்மையாக நம்ப முடியவில்லை. ஏனெனில், பல ஆண்டுகளாக எனக்குப் பின்னால் புறம்பேசுதலும்  சச்சரவுகளும் என்னைத் தொடர்ந்தே வந்தன. உண்மையில், வருடங்கள் செல்லச் செல்ல அது நிற்காமல் மோசமாகிக் கொண்டே போனது. அதனால், நான் மேலும் மேலும் தனிமையில் உழன்றேன். உலகத்திற்கு எதிரான ஒரு தொடர்ச்சியான போரில் நான் ஈடுபட்டிருப்பதைப் போன்றிருந்தது. அது பெரும் சோர்வுண்டாக்குவதாக இருந்தது. எனக்குள் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்த போராட்டத்தைப் பலரும் அறிந்திருக்கவில்லை என நான் நினைக்கிறேன். ஏனெனில், நான் அதைக் காட்டிக்கொள்ளமால் நன்றாகவே சமாளித்தேன். புன்னகையுடனும் சிரிப்புடனும் இந்தக் கடுமையான உணர்ச்சிகளை நான் மறைத்து வந்தேன். ‘வகுப்புக் கோமாளியாக’ இருந்திட முயன்று, மற்றவர்களைச் சிரிக்க வைத்தேன். வீட்டில் இருக்கும் போது, நான் பெருஞ்சோர்வு, கடுங்கோபம், எனக்கு நானே தீங்கு விளைவித்துக்கொள்ளும் தருணங்கள், தற்கொலை சிந்தனைகள் போன்றவற்றைக் கொண்டிருப்பேன். மருத்துவ ரீதியான தீவிர மனவுளைச்சலுடன் போராடினேன். என் வாழ்க்கையின் பிற்பகுதி வரை நான் இதை உணராமலேயே இருந்தேன். இன்றுவரை இன்னமும் அதனுடன் போராடி வருகின்றேன்.

‿︵‿︵ʚ˚̣̣̣͙ɞ・❉・ ʚ˚̣̣̣͙ɞ‿︵‿︵

என் தாயாரின் அன்பும் பெரும் தியாகமுந்தான்:
என்னை எப்போதும் விடாமல் முன்னேற வைத்த ஒன்றாகும்.

என்னுடைய கடினமான பயணத்தின் போது என் தந்தையும் என் தாயுமே எனக்கு வலிமைமிக்கத் தூண்களாக இருந்தனர். அத்துடன் நிச்சயமாக, கடவுளும் பஹாய் சமயத்தின் மீதான என் வலுவான நம்பிக்கையும் இதில் அடங்கும். என் சமயத்தின் திருவாக்குகளைப் படித்து, மனமுருகி பிரார்த்திப்பது இந்த கடினமான காலங்களில் எனக்கு நிம்மதியையும் ஆறுதலையும் அளித்து வந்தது.

‿︵‿︵ʚ˚̣̣̣͙ɞ・❉・ ʚ˚̣̣̣͙ɞ‿︵‿︵

வேகமாக முன்னோக்கிப் பார்க்கையில், நான் பள்ளித் தேர்வுகளில் மிகச் சிறப்பாகச் செய்தேன், ஜோகூர் மாகானத்திலேயே மிகச் சிறந்த மாற்றுத் திறனாளி மாணவியெனும் விருதைப் பெற்றேன், பல்கலைகழகம் சென்று, நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ இளங்கலை பட்டப்படிப்பை முடித்தேன், என் பட்டப்படிப்பின் இறுதி வருடத்தில், பலமுறை படிப்புதவி நிதிக்கு முயன்ற பிறகு, இறுதியில் யாயாசான் சைம் டார்பியிலிருந்து (Yayasan Sime Darby) விசேஷ தேவைகள் நிதியத்திலிருந்து படிப்புதவி நிதி எனக்குக் கிடைத்தது.

இன்று, நான் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட, ‘பூரணமான பூரணமின்மை’ (Perfectly Imperfect) என்னும் ஒரு கவிதை புத்தகத்தின் ஆசிரியர்; மாற்றுத் திறனாளி பெண்களுக்கான அழகு போட்டியில் மிஸ் அமேஸிங் மலேசியா (Miss Amazing Malaysia) 2020/2021-இல் இறுதிப் போட்டியாளராக இருக்கிறேன்; மிகவும் மதிக்கப்படும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் மனிதவள நிர்வாகியாக வீட்டிலிருந்தவாறு பணிபுரியும் அதே வேளை,  வக்காலத்து மற்றும் மாடலிங் வகையில் (advocacy and modelling) சமுதாயத்திற்கான எனது பிரதியுபகாரமாக சிறிது நேரத்தை ஒதுக்க முயன்று வருகின்றேன்.

ஆதலால், எங்குமுள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு அல்லது மனநல சுகாதார சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு, இதுவே உங்களுக்கான எனது செய்தியாகும்:

உங்களை ஒதுக்கிவைத்துக் கொண்டிருக்காதீர். தைரியத்துடன் இருங்கள். துணிச்சலுடன் இருங்கள். உங்கள் சுக மண்டலத்திலிருந்து (comfort zone) வெளியே வாருங்கள். உலகம் சில நேரங்களில் மிகவும் கொடூரமான இடமாக இருக்கும் என எனக்குத் தெரியும். ஆனால் அதில் கவனம் செலுத்தாமல் இருக்க முயலுங்கள். அந்த எதிர்மறையில் நீங்கள் எவ்வளவு குறைவாக கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களைச் சுற்றி நிறைய நன்மைகளும் உள்ளன என்பதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். நீங்கள் அந்த நேர்மறையில் கவனம் செலுத்தி, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை இலக்காகக்கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. நீங்கள் அந்த நோக்கத்தை அடையாளம் கண்டு அதை நிறைவேற்றுவதற்கு முயலவேண்டும். பஹாய் திருவாக்குகள், “உங்கள் மெய்நம்பிக்கை எந்த அளவோ அந்த அளவையே உங்கள் சக்திகளும் ஆசீர்வாதங்களும் சார்ந்திருக்கும்” என கூறுகின்றன. ஆதலால், நீங்கள், என்னால் முடியவில்லை என கைவிட நினைக்கும் ஒவ்வொரு முறையும் அந்தத் திருவாக்கை மனதில் கொள்ளுங்கள்.

‿︵‿︵ʚ˚̣̣̣͙ɞ・❉・ ʚ˚̣̣̣͙ɞ‿︵‿︵

தனது உலக வாழ்க்கையின் இறுதி நிமிடங்களில், அவரின் நுறையீரல் விரைவாக சக்தியிழந்து வருகிறது என்பதை உணர்ந்த மருத்துவர்கள், சுவாச உதவிக் கருவிகளை அகற்றிட முடிவெடுத்து அதை நதீராவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதற்கு நதீராவின் பெற்றோர் அதற்கான முடிவை நதீராவிடமே விட்டுவிட தீர்மானித்து, அவ்வாறே மருத்துவர்களிடமும் தெரிவித்தனர். மருத்துவர்கள் தங்கள் முடிவை நதீராவிடம் தெரிவித்த போது, சிறிதும் அசராமல், அதை எப்போது செய்வீர்கள் எனக் கேட்டு, அதை இப்போதே செய்யலாமா என ஆர்வத்துடன் வினவினாராம். எனக்குப் பிரச்சினை இல்லை, விடைபெற நான் தயார் என்றார். கருவிகள் அகற்றப்பட்டவுடன் தன் பெற்றோருடன் இறுதிவிடை பெறும் போது, என்னால் நீங்கள் மகிழ்சி அடைகிறீர்களா எனக் கேட்டாராம். இவ்வாறாக, சிறிது காலமே வாழ்ந்து பெரிது பெரிதாக செயல்கள் புரிந்து இளைஞர்களுக்கு ஓர் உதாரணமாக வாழ்ந்துச் சென்றார் நதீரா.8 அக்டோபர் 2021


ரெய்க்ஜாவிக், ஐஸ்லாந்து-கித்தாப்-இ-அக்டாஸ் திருநூல் முதன்முறையாக ஐஸ்லாந்தியில் வெளியிடப்பட்டுள்ளது, இது ஒரு முழு மக்களுக்கும் பஹாவுல்லாவின் அதிப் புனித நூல் கிடைப்பதற்கு வகை செய்கிறது.

ரெய்க்ஜாவிக், ஐஸ்லாந்து-கித்தாப்-இ-அக்டாஸ் திருநூல் முதன்முறையாக ஐஸ்லாந்தியில் வெளியிடப்பட்டுள்ளது, இது ஒரு முழு மக்களுக்கும் பஹாவுல்லாவின் அதிப் புனித நூல் கிடைப்பதற்கு வழி செய்கிறது.

“இது ஐஸ்லாந்து பஹாய்களின் நீண்ட நாள் கனவின் நிறைவேற்றமாகும்” என்கிறார் ஐஸ்லாந்து பஹாய் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் ஹால்டார் தோர்கெயர்சன். “அப்துல்-பஹா மறைவின் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் இது மிகப்பெரிய சாதனையாகும்.”

கித்தாப்-இ-அக்டாஸ் என்பது பஹாவுல்லாவின் சட்டப் புத்தகமாகும், இது முதன்முதலில் 1873-இல் அரபு மொழியில் எழுதப்பட்டது. அப்போது, பஹாவுல்லா அக்காநகர சிறையில் இருந்தார்.

தமிழில் கித்தாப்-இ-அக்டாஸ் திருநூல்

கித்தாப்-இ-அக்டாஸ் அறிமுகத்தில் உலக நீதிமன்றம் எழுதியது: “பஹாவுல்லாவின் திருவாக்குகளைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், கிடாப்-இ-அக்தாஸ் தனித்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. ‘உலகம் முழுவதையும் புதிதாக உருவாக்குதல்’ என்பது அவரது செய்தியில் அடங்கியுள்ள கோரிக்கையும் சவாலுமாகும், மேலும் கித்தாப்-இ-அக்டாஸ் பஹாவுல்லா எழுப்ப வந்த எதிர்கால உலக நாகரிகத்திற்கான ஒரு சாசனமும் ஆகும்.

கித்தாப்-இ-அக்டாஸின் முதல் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு 1992-இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இது பஹாவுல்லா மறைந்து நூறாம் நினைவாண்டை குறித்தது. அதன் பின்னர் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்புகள் வந்தவன்னமாக இருக்கின்றன.

உரையை தட்டச்சு செய்து, வெளியீட்டிற்தகு தொகுப்பைத் தயாரிக்க உதவிய ஜெஃப்ரி பெட்டிபீஸ், ஐஸ்லாந்திய மொழிபெயர்ப்பை உருவாக்கும் முயற்சி எவ்வாறு ஒரு முக்கியத்துவமிக்க முயற்சியாக இருந்தது என்பதை விளக்குகிறார்.

“ஐஸ்லாந்தியர்களுக்கு எங்கள் மொழியை மிகவும் முக்கியமாகும்,” என அவர் கூறுகிறார். “ஒலிநயம் மற்றும் உருவகம் போன்ற கவிதைக் கூறுகளைப் பயன்படுத்தும் அதே வேளை, இந்த மொழிபெயர்ப்பு அர்த்தங்களின் துல்லியத்தையும் பராமரிக்கின்றது.”

திட்டத்தின் முன்னணி மொழிபெயர்ப்பாளரான எட்வர்ட் ஜான்சன், புதிய வெளியீட்டின் முக்கியத்துவம் குறித்து பிரதிபலிக்கிறார்: “பஹாவுல்லாவின் திருவாக்குகள் மனிதகுலத்திற்கு ஒரு புதிய வகையான மொழியை வழங்குகின்றன – அஃதாவது, ஆன்மீக மெய்நிலையைப் பற்றிய அகப்பார்வையைக் கொடுக்கும் மொழி.”

கடவுள் திருவாக்கு ஒருவரின் சொந்த மொழியில் கிடைக்கும்போது அது இதயத்தில் ஓர் ஆழமான விளைவை உண்டாக்குகின்றது. இது வெளிப்பாட்டின் புதிய வடிவங்கள் மற்றும் கருத்துகளால் நிரப்பப்பட்ட ஒரு கடலுக்குள் ஈர்க்கப்படுவது போன்றதாகும். காலங்காலமாக ஐஸ்லாந்து இலக்கியத்தில் இது போன்ற ஒன்று என்றுமே இருந்ததில்லை.

https://news.bahai.org/


புதிய ஆய்வு சமூக வாழ்க்கையில் ஆன்மீகக் கொள்கைகளின் பயன்பாட்டை ஆராய்கிறது

8 அக்டோபர் 2021


இந்தூர், இந்தியா – இந்தியாவின் இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டுக்கான ஆய்வுகளின் பஹாய் இருக்கை மற்றும் உலகளாவிய செழுமைக்கான ஆய்வுக் கழகம் (ISGP) இணைந்து வெளியிட்ட ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை, சமூகங்கள் மனிதகுலத்தின் ஒற்றுமை மற்றும் இயற்கையுடன் மனிதகுலம் ஒன்றோடொன்று இணைந்திருத்தல் போன்ற கொள்கைகளை பொது நன்மைக்காக பங்களிக்க எப்படி பயன்படுத்துகின்றன என்பதை ஆராய்கிறது.

ஆர்வநம்பிக்கை மற்றும் மீள்ச்சித்திறம்: சமூக வாழ்க்கைக்கு ஆன்மீக கோட்பாடுகளின் பயன்பாடு என்னும் தலைப்பில், நகர்ப்புற முறைசாரா குடியேற்றங்களின் சூழலில் நீர் தொடர்பான சவால்களை நிர்வகிப்பதில் வலுவான சமூக ஆதரவின் வலையமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் இது ISGP-யின் தொடர் ஆராய்ச்சி பிரசுரங்களின் ஒரு பகுதியாகும். இவை ‘நடைமுறையிலிருந்து அகப்பார்வை பற்றிய அவ்வப்போதான ஆவணங்கள்’ என அழைக்கப்படுகின்றன.

இந்தத் தொடர் வெளியீடுகள் குழுக்கள், சமூகங்கள் மற்றும் அமைப்புகளாக வெளிப்படும் வடிவங்களை ஆராய்கின்றன. அவை எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்கவும் சமுதாய மேம்பாட்டுக்குப் பங்களிக்கவும் அவற்றின் தினசரி வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு ஒன்றிணைக்கும் மற்றும் ஆக்கபூர்வமான கொள்கைகளைப் பயன்படுத்தவும் முனைகின்றன.

“பல மக்கள் ஆன்மீக நம்பிக்கைகளின்பால் ஆழ்ந்த அர்ப்பணத்துடன் இருக்கிறார்கள் என்பது இன்று நாம் பார்க்கும் ஒரு விஷயமாகும், மற்றும் அவர்களின் நம்பிக்கையானது, அவர்கள் நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை வாழவும் மற்றும் அவர்களின் சமூகங்களின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் ஒரு சக்திவாய்ந்த உந்துசக்தியாகும்” என உதவி பேராசிரியர் மற்றும் பஹாய் நாற்காலியின் தலைவரான அராஷ் ஃபாஸ்லி கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகிறார்: “இந்த யோசனையானது, அபிவிருத்தி குறித்த கல்வி இலக்கியத்தில் போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை, ஆதலால், பல சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் இந்த ஊக்குவிப்புக்கான மூலாதாரங்களிலிருந்து பயன்பெற முடியவில்லை.”

இந்தக் கட்டுரை மேலும் விரிவாக விவரிக்கிறது: “மனித வாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் ஆன்மீக, கலாச்சார மற்றும் மத அம்சங்களைக் கணக்கிடத் தவறுதல், சமுதாயம் மனிதகுலத்தின் செழுமை மற்றும் பொதுநலனை தடுத்திடும் என  பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் அதிகரிக்கும் அளவில் அங்கீகரிக்கின்றனர்.”

இருக்கை மற்றும் ISGP-க்கு இடையிலான உடனுழைப்பு அபிவிருத்தி குறித்த சொற்பொழிவுக்குப் பங்களிக்கும் அவை ஒவ்வொன்றின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

பஹாய் இருக்கை, மனித செழுமையானது லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் விளைவாகும் எனக் கருதும் ஒரு கண்ணோட்டத்தில் வளர்ச்சித் துறையில் இடைநிலை ஆராய்ச்சி மற்றும் புலமையை ஊக்குவிக்க ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்டது.

ISGP என்பது 1999-இல் ஸ்தாபிக்கப்பட்ட பஹாய் போதனைகளின் உத்வேகம் பெற்ற ஓர் இலாப நோக்கற்ற ஆராய்ச்சி மற்றும் கல்வியல் அமைப்பாகும். ISGP-யின் நோக்கங்களில் ஒன்று, மற்றவர்களுடன் சேர்ந்து–பரிணமித்து வரும் முறைமைகள் எனும் தொடர்பில் அறிவியலும் மதமும்–நாகரிகத்தின் மேம்பாட்டில் ஆற்றக்கூடிய நிரப்பமளிக்கும் பங்கு, மற்றும் மனிதகுலத்தின் வாழ்க்கைக்குத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் ஆகும்.

இந்தத் தாள் ISGP இணையதளத்தில் கிடைக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1535/21 செப்டம்பர் 2021


சாவோ செபாஸ்டியோ, பிரேசில், 21 செப்டம்பர் 2021, (BWNS) – ஆகஸ்ட் மாதத்தில் பிரேசிலின் சாவோ செபாஸ்டினோவில் உள்ள ஓர் இளைஞர் குழு, குப்பைகள் சிதறிக்கிடந்த உள்ளூர் நதியை எப்படி சுத்தம் செய்வது என ஆராய்ந்தபோது, அவர்கள் மனதில் அதைவிட பெரிய கேள்விகள் எழுந்தன.

“நாம் ஆற்றை சுத்தம் செய்தால், அதில் மீண்டும் குப்பைகள் உண்டாவதை எவ்வாறு தடுக்க முடியும்?” என விலா டோ போவா அண்டைப்புறத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்காக, இளைஞர்கள் பஹாய் கல்வித் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் அவர்கள் பெற்றுவரும் அகப்பார்வைகளின்பால் கவனத்தைத் திருப்பினர். இந்த கல்வித் திட்டங்கள் சமுதாய மெய்நிலையை பகுப்பாய்வு செய்வதற்கும் தங்கள் சமூகங்களின் தேவைகளை அடையாளம் கானவும் தங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்யவும் தேவைப்படும் திறனாற்றலை உருவாக்குகின்றன.

“நாம் இந்த சுத்தப்படுத்துதலுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறினார்.

இளைஞர்களிடையே உரையாடல்கள் மடிப்பவிழ்கையில், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், தங்கள் அண்டைப்புறத்தின் பொதுநலனுக்குப் பங்களிக்கும் உள்ளூர் முயற்சிகளிலிருந்து கிடைக்கும் பரந்த அகப்பார்வைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு செய்திமடல் சிறந்த வழியாகும் எனும் முடிவுக்கு வந்தனர்.

Vila do Boa – Só Notícia Boa (நல்ல கிராமம் – நற்செய்தி மட்டும்) என்ற தலைப்பில், செய்திமடலின் பெயர் “போவா” என்ற சொல்லின் பயன்பாடு ஆகும், இது “நல்லது” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

“செய்தித்தாள்களில் மோசமான செய்திகளே அதிகமாக உள்ளன; வன்முறை மற்றும் சோகமான விஷயங்கள். எனவே, நேர்மறையான மற்றும் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஒரு யோசனை உதித்தது. அது, அண்டைப்புற மக்களுக்கு நம்பிக்கையை அளித்து இதில் பங்கேற்ப்பதற்கு அவர்களுக்கும் அழைப்புவிடுத்தது” என குழுவின் உதவியாளரான மார்லீன் செய்தி சேவையுடனான (BWNS) ஒரு நேர்காணலில் கூறினார்.

சுத்தம் செய்வதற்கான திட்டங்கள் உருவாகத் தொடங்கிய அதே வேளை, மேலும் சவால்மிக்க கேள்விகள் தொடர்ந்து எழுந்தன. இந்த அளவான குப்பைகளை எப்படி சேகரிப்போம்? மேலும், வீசப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மரச்சாமான்கள் போன்ற அனைத்தையும் அகற்றுவதற்காக, அவற்றைப் பிரதான சாலைக்கு நாங்கள் எவ்வாறு கொண்டுசெல்லக்கூடும் எனும் கேள்விகளை இளைஞர்கள் ஆரம்பத்திலேயே கேட்டனர்.

எவ்வாறாயினும், இளைஞர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதிலைப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகவில்லை. ஒரு நகராட்சி அதிகாரி, குடிநீர் வசதி பற்றிய ஒரு நிகழ்வில் இளைஞர்களின் தாய்மார்களிடமிருந்து இத்திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, அவ்விளைஞர்களின் முன்முயற்சியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இளைஞர்களைச் சந்திக்க முன்வந்தார்.

அந்த இளைஞர்களுடனான சந்திப்பால் உற்சாகமுற்ற அந்த அதிகாரி, உதவிக்கு உடனடியாக லாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்தார்; மேலும் இளைஞர்களுக்கு பல அடையாள பலகைகளை வழங்கினார்; வர்ணத்தால் ஆன அவை ஆற்றின் அருகே வைக்கப்பட்டு, அப்பகுதியை குப்பைகளற்ற பகுதியாக்கிட மக்களை ஊக்குவித்தன.

இதற்கிடையில், முதல் செய்திமடல் தயாரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள 120-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வண்டைப்புறத்தில் உள்ள இளைஞர்களுள் ஒருவரான நிக்கோல், குடும்பங்களுடன் நிகழ்ந்த உரையாடலின் அனுபவத்தைச் சுருக்கமாக விவரித்தார், “நாம் நல்ல விதைகளை விதைத்தால், அவற்றிலிருந்து நல்ல விஷயங்கள் வளரும்.”

துப்புரவு நாளன்று, இந்த முயற்சியை ஆதரிக்கும் இளைஞர்களின் அர்ப்பண உணர்வானது, நகராட்சி தொழிலாளர்களை ஆற்றை தாண்டி மற்ற பகுதிகளுக்கும் தங்கள் முயற்சிகளை விரிவுபடுத்த ஊக்குவித்தது, இதன் விளைவாக 12 டன் குப்பை அகற்றப்பட்டது.

“முகமூடி அணிந்து வெப்பத்தில் வேலை செய்வது கஷ்டமாக இருந்தது, ஆனால் இந்த திட்டம் எங்கள் அண்டைப்புறத்தில் மேலும் வலுவான நட்புகளை உருவாக்கியது” என விலா டோ போவாவைச் சேர்ந்த இளைஞர் எஸ்ட்ராஸ் கூறினார்.

மற்றோர் இளைஞரான கேப்ரியல், இந்தத் திட்டத்திற்கு வழிவகுத்த பஹாய் கல்வித் திட்டங்கள் பல இளைஞர்களைப் பல ஆண்டுகளாக தங்கள் அண்டைப்புறங்களுக்கு சேவை செய்யத் தூண்டியது என்பதை விவரித்தார். “மேன்மேலும் அதிகமான இளைஞர்கள் அவர்கள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதைக் கற்கின்றனர், மற்றும் தங்கள் சமூகத்திற்கு உதவுவதன் மூலம் அதிக நோக்க உணர்வைப் பெறுகின்றனர். நட்பு, சேவை மற்றும் ஒற்றுமையின் மூலம் இப்படித்தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறோம்.

பிரேசில் பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரான லீயெஸ் வொன் செக்கஸ் கவால்கண்டி மேலும் விவரித்து, இந்த முயற்சிகள் சமூகத்தின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யவும் அண்டைப்பகுதியினர் இடையே கூட்டு விருப்பாற்றலைப் பேணவும், இப்பகுதிவாசிகள் மற்றும் நகராட்சிக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியத்தை எவ்வாறு திறந்துமுள்ளன என்பதை விளக்கினார்.

“சமுதாய தன்மைமாற்றத்திற்கு தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களிடையே ஒற்றுமை உருவாக்கப்படுவதைக் கோருகின்றது. நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி எதிர்ப்பு மற்றும் போரில் இல்லை. அது ஒற்றுமையில் உள்ளது. இதுதான் தன்மைமாற்றத்தின் சக்தி.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1534/17 செப்டம்பர் 2021


பாக்கு, அஜர்பைஜான், 17 செப்டம்பர் 2021, (BWNS) – அஜர்பைஜானில் தேசிய நிலையிலான பிரச்சினைகளை ஆராயும் ஒரு புதிய வீடியோ கலந்துரையாடல் திட்டம் நாட்டின் பஹாய் வெளியுறவு அலுவலகத்தால் துவங்கப்பட்டுள்ளது.

அந்த அலுவலகத்தின் ரமஸான் அஸ்கர்லி, “சொல்லாடல் டிவி” என தலைப்பிடப்பட்ட இந்தத் திட்டம், அஜர்பைஜானி பஹாய் சமூக முயற்சிகளின் ஒரு பகுதியாக சமூக ஊடகத் தளங்களில் வெளியிடப்படுகிறது என விளக்குகிறார்.

“பல ஆண்டுகளாக, ஒரு நீண்ட காலத்திற்கு தொடர்ந்து ஒரு தலைப்பைக் குறித்துரைக்கும் சில சமூகத் தளங்களே இருப்பதை நாங்கள் கவனித்தோம். அதனால்தான், ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவம், சமூகத்திற்கு சேவை செய்யும் திறனாற்றலை உருவாக்குவதில் தார்மீகக் கல்வியின் பங்கு, சமூகத்தில் ஊடகங்களின் பங்கு, மற்றும் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் போன்ற தலைப்புகளின் தொகுப்பை மீண்டும் பார்வையிடும் ஒரு கலந்துரையாடல் திட்டத்தை உருவாக்க முடிவு செய்தோம்” என அவர் கூறுகிறார்.

அஜர்பைஜானில் உள்ள பலர் இணையதளத்தில் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், வீடியோ திட்டத்திற்கான வெளியீடாக சமூக ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என திரு. அஸ்கர்லி தொடர்ந்து விளக்குகிறார். ஆனால், இந்தப் பரிமாற்றங்கள் ஒன்று மற்றொன்றுடன் தொடர்பில்லா பல துணுக்குகளாக உள்ளன. இதனால், எந்த ஒரு தலைப்பின் மீதும் சிந்தனா பரிணாம வளர்ச்சியைக் காண்பது கடினமாக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் கூறுகிறார்: “இந்தத் திட்டத்தை உருவாக்குவதன் மூலம், பல்வேறு சமூக முன்னணியாளர்ககள் பிரச்சினைகளை ஆழமாக ஆராய ஒரு கலந்துரையாடல் தளத்தை வழங்குவோம் என நம்புகிறோம். இதன் மூலம், காலப்போக்கில் சிந்தனை எவ்வாறு விரிவடைகிறது என்பதை மக்கள் பார்க்க முடியும்.”

பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த பஹாய் கொள்கை மீதான சமீபத்திய நிகழ்ச்சியில், ஒரு கவிஞரான அடிலே நசார், இந்த முயற்சிக்குத் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்: “இணைய தளங்களில் சமத்துவம் பற்றிய சொற்பொழிவை ஊக்குவிப்பது இந்த முக்கிய கொள்கையின் புரிதலை வலுப்படுத்த பெரிதும் பங்களிக்கும். தாஹிரியின் (பஹாய் வரலாற்றின் ஆரம்பத்தில் ஒரு முக்கிய நபர்) ஓர் அபிமானி என்னும் முறையில், அவர் ஆதரித்த போதனைகள் மேலும் மேலும் பேசப்பட வேண்டும்.”

தேசிய கலாச்சார சங்கத்தின் தலைவரும், அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் குறித்த ஒரு அத்தியாயத்தில் விருந்தினராக கலந்து கொண்ட ஃபுவாட் மம்மடோவ் கூறுகிறார்: “இந்த முன்முனைவு நமது சமூகத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாகும்.

இத்தலைப்புகளிலான உரையாடல்கள் பெரும்பாலும் கல்வி மட்டத்தில் மட்டுமே ஆராயப்படுகின்றன,” என டாக்டர் மம்மடோவ் தொடர்ந்தார், “ஆனால் இந்தத் திட்டம் இந்த கலந்துரையாடல்களில் மேலும் பலரைச் சேர்ப்பதற்கு உதவும்.”

திட்டத்தின் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, இந்த முன்முனைவு போர் மற்றும் முரண்பாட்டைக் கடந்து செல்வதற்கான மனிதத் திறனை மறுக்கும் மனித இயல்பு பற்றிய பாழான அனுமானங்களுக்கு சவாலிட இயலுமென வெளியுறவு அலுவலகம் நம்புகிறது என திரு. அஸ்கர்லி விளக்குகிறார்.

அவர் பின்வருமாறு கூறுகிறார்: “ஊடகங்களில் பரப்பப்படும் பல செய்திகள் மனிதர்களின் தாழ்ந்த இயல்பை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் வரும் உரையாடல்கள் மக்களின் ஆன்மீக இயல்பை முன்னிலைப்படுத்த முடியுமென நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், நமது சமூக மேம்பாட்டிற்கான நடவடிக்கையை ஊக்குவிக்கின்றோம்

“சொல்லாடன் தொலைக்காட்சியின்” நிகழ்ச்சிகளை இந்த யூடியூப் சேனலில் காணலாம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1533/


டைட்டானிக் கப்பலின் மறக்கப்பட்ட ஆனால் “பிழைத்துவந்தவர்”

(இக்கட்டுரை 2012’இல் எழுதப்பட்டது)

04/12/2012 10:26 am ET Updated Dec 06, 2017
https://www.huffpost.com/entry/abdul-baha_b_1419099

கதைகள் அனைத்திலும், மிகவும் அசாதாரனமான  ஒரு கதை ஓர் அறுபத்தெட்டு வயதுடைய பாரசீகரைப் பற்றியது. இவர் உண்மையில் அக்கப்பலில் போகவேண்டியவர் ஆனால் போகவில்லை.

அப்பாஸ் எஃபெண்டி – அப்துல்-பஹா அல்லது “கடவுளின் சேவகர்” என அறியப்பட்டவர். இவர் ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில், ஒரு தத்துவ ஞானி, அமைதிக்கான தூதர், இயேசுவின் மறுவருகை எனவும் நாளிதழ்களால் பாராட்டப்பட்டிருந்தார். அவரது அமெரிக்க அன்பர்கள் டைட்டானிக் கப்பலில் பிரயாணம் செய்வதற்காக அவருக்கு பல ஆயிரம் டாலர்களை அனுப்பி, பெரும் படாடோபத்துடன் (டைட்டானிக் கப்பலில்) பிராயணம் செய்திட வேண்டினர். ஆனால் அவரோ அதை மறுத்து, அப்பணத்தை தர்ம காரியங்களுக்கு வழங்கினார்.

“நான் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டேன், ஆனால் என் மனம் அதற்கு இடங்கொடுக்கவில்லை,” என அவர் பின்னர் கூறினார்.

அதற்கு மாறாக, அப்துல்-பஹா மிகவும் அடக்கமான SS செட்ரிக் கப்பலில் நியூ யார்க்கிற்கு பயணம் மேற்கொண்டார். நியூ யார்க் நகரின் எல்லா முக்கிய நாளிதழ்களும் ஏப்ரல் 11-இல் அவரது வருகை பற்றியும் அதைத் தொடர்ந்த ஐக்கிய அமெரிக்காவில் அவரது ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரையிலான பிரயாணங்கள் பற்றியும் எழுதின. “கிழக்கத்திய உடையில்” தோன்றிய இந்தத் தலைப்பாகை அனிந்த வெளிநாட்டவர் முதல் பக்க செய்தியினராக விளங்கினார்.

நியூ யர்க் டைம்ஸ் அவரது பணி “தப்பெண்ணங்களை அகற்றுவது” என அறிவித்தது… தேசியம், இனம், மதம் ஆகியவற்றின் தப்பெண்ணங்கள்.” அக்கட்டுரை அவரை நேரடியாக மேற்கோள் காட்டுகிறது: “மனித உலகின் ஒருமைக்கான பதாகையை உயர்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இதன்மூலம் பிடிவாத சூத்திரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் முடிவுக்கு வரக்கூடும்.”

பத்திரிகைகள் அவரை ஒரு தீர்க்கதரிசி என குறிப்பாக ஒரு “பாரசீக தீர்க்கதரிசி” என அடிக்கடி அழைத்தன, (ஒலிபெயர்ப்பு!). ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவரது உரையைத் தொடர்ந்து, ஒரு தலைப்பில், பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: “தீர்க்கதரிசியானவர் தாம் ஒரு தீர்க்கதரிசியல்ல எனக் கூறுகிறார்.” அவர் தீர்க்கதரிசி விஷயத்தைத் தொடர்ந்து மறுத்து வந்தாலும், அப்துல்-பஹா உண்மையில் அப்போதைய ஆரம்பகால பஹாய் சமயத்தின் தலைவராக இருந்தார்.

SS செட்ரிக் கப்பல்

அனைத்து மதங்களின் ஒற்றுமையில் வேரூன்றிய தனது தந்தை பஹாவுல்லாவினால் 1800-களின் நடுப்பகுதியில் நிறுவப்பட்ட சமயத்தை அவர் போதித்தார். அந்த நேரத்தில் அமெரிக்காவில் சில நூறு பஹாய்கள் மட்டுமே இருந்தன; இன்று 150,000 பேர் உள்ளனர். ஒவ்வொரு நாளும், மாதத்திற்கு மாதம், அமெரிக்கா முழுவதும் (பெரும்பாலும் ஆயிரக்கணக்கில்) அவரது உரையைச் செவிமடுக்க கூட்டம் திரண்டது. யூத ஆலயங்களில் அவர் கிறிஸ்துவைப் புகழ்ந்தார். தேவாலயங்களில் அவர் முகமதுவின் போதனைகளைப் புகழ்ந்தார். அவரது பயணங்கள் முழுவதும் ஆண்ட்ரூ கார்னகி, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் மற்றும் கஹ்லில் ஜிப்ரான் போன்ற மேதைகள் அவரது தோழமையை நாடினர்.

அப்து’ல்-பஹா எவ்வாறு பலருக்கு உத்த்வேகமூட்ட முடிந்தது – மேற்கத்திய கலாச்சாரத்திற்கு வெளிப்படுத்தப்படாத, கிழக்கிலிருந்து அறியப்படாமல் இருந்த இந்த நபர், தமது மதத்திற்காக சுமார் 40 ஆண்டுகள் சிறையில் கழித்தார், அவர் பள்ளி சென்றவரும் இல்லை.

சொல்வது மட்டுமின்றி, அவர் என்ன செய்தார் என்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். “அவர் தமது இரவு உணவு மேஜையில் பாரசீக, ஜோரஸ்தரர், யூதர், கிரிஸ்துவர், மற்றும் இஸ்லாமியரை ஒன்று சேர்த்த ஒரே மனிதராவார்” என நியூயார்க் டிரிப்யூன் நாளிதழின் கேட் கேர்வ் (அவரது காலத்தின் லிஸ் ஸ்மித்) எழுதினார். பின்னர் அதே செய்தியில், அவரது நிருபர் முத்திரையின்றி, கீழ் கிழக்கு பக்கத்தில் போவரி மிஷனுக்கு அப்துல்-பஹாவின் விஜயத்தைப் பற்றி விவரிக்கப்படுகிறது – அங்கு அவர் தனிப்பட்ட முறையில் 400 வீடற்ற ஆண்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கினார்.

போவரி இல்லம்

தமது அமெரிக்க விஜயம் முழுவதிலும் அவர் உரையாற்றிய எல்லா இடங்களும் அனைத்து இன மக்களுக்கும் திறந்தே இருக்க வேண்டும் என வலியுறுத்தியதன் மூலம் இனவாரியாக பிரித்தல் எனும் சமூக முறையை ஒதுக்கித் தள்ளினார். அந்நேரத்தில் அது மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. 57-வது தெருவில் உள்ள கிரேட் நார்த்தர்ன் ஹோட்டலின் (இப்போது பார்க்கர் மெரிடியன்), மேலாளர் தமது கட்டிடத்திற்குள் எந்த கறுப்பர்களையும் அனுமதிக்க வன்மையாக மறுத்துவிட்டார்.

“ஒரு கருப்பின நபர் என் ஹோட்டலுக்குள் நுழைவதை மக்கள் பார்த்தால், எந்த மரியாதைக்குரிய நபரும் அதில் காலடி எடுத்து வைக்கமாட்டார்,” என அவர் கூறினார். எனவே, அப்து’ல்-பஹா அதற்கு பதிலாக அவரது அன்பர்களுள் ஒருவரின் வீட்டில் ஒரு பல்லின விருந்தை ஏற்பாடு செய்தார். பல வெள்ளையர்கள் கறுப்பர்களுக்குச் சேவை செய்தனர் – அந்த நேரத்தில் அது ஒரு கீழறுக்கும் அபாயகரமான கருத்தாகும்.

மனிடரிடையில் மட்டுமே தோல் நிறம் முரண்பாட்டிற்கான ஒரு காரணமாக இருக்கின்றது என அப்துல்-பஹா ஒருமுறை குறிப்பிட்டார். “விலங்குகள், அவற்றுக்கு பகுத்தறிவோ புரிதலோ இல்லை என்னும் போதிலும், அவை வர்ணங்களை மோதலுக்குக் காரணமாக ஆக்குவதில்லை. பகுத்தறிவு உள்ள மனிதன் மட்டும் ஏன் முரண்பாட்டை உருவாக்க வேண்டும்?”

அப்துல்-பஹாவின் உரைகள் பார்வையாளர்களை ஒரு தீவிர எளிமையுடன் ஊடுருவின. அவர் அமெரிக்கர்கள் இன்னும் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு கழித்தும் போராடி வரும் கருத்துக்களை அன்று முன்வைத்தார்: உண்மையான இன நல்லிணக்கம் மற்றும் பாலின சமத்துவத்திற்கான தேவை; அதீத செல்வம் மற்றும் வறுமையை ஒழித்தல்; தேசியவாதம் மற்றும் மதவெறியின் அபாயங்கள்; மற்றும் உண்மையை சுயாதீனமாகத் தேடுதல் குறித்த வலியுறுத்தல். அவை ஒவ்வொன்றும் 2012-லும் எதிரொலிக்கின்றன அல்லவா?

டைட்டானிக் கப்பல்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது நாடு முழுவதும் பரவிய அவரது ஒற்றுமைக்கான திருப்பணி, காந்தி, தலாய் லாமா மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் செய்திகளுடன் கொண்டாடப்பட வேண்டும்.

ஐந்தாவது அவென்யூ மற்றும் 10-வது தெருவில் உள்ள நியூயார்க்கின் சர்ச் ஆஃப் அசென்ஷனில் – அமெரிக்காவில் அவரது முதல் பொது உரையில் – அப்துல்-பஹா கலை, விவசாயம் மற்றும் வர்த்தகத்தில் அமெரிக்காவின் லௌகீக முன்னேற்றத்தை பாராட்டினார். ஆனால் நமது ஆன்மீக திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனும் ஓர் எச்சரிக்கையுடனேயே அதைச் செய்தார்.

கடலுக்கடியில் உடைந்து சிதைந்து மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பல்

“மனிதனுக்கு இரண்டு இறக்கைகள் அவசியம். ஓர் இறக்கை பௌதீக சக்தியும் லௌகீக நாகரீகமும்; மற்றது ஆன்மீக சக்தியும் தெய்வீக நாகரீகமும் ஆகும். ஓர் இறக்கையுடன் பறக்க முடியாது.”

இந்த சொற்பொழிவை அவர் 14 ஏப்ரல் 1912’இல் ஆற்றினார். அன்று அதே நாளில் டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதியது.