மனிதன் பிறக்கும் போது இயல்பாக பல ஆற்றல்களை உள்ளடக்கியே பிறக்கின்றான். பஞ்சேந்திரியங்கள் எனப்படும் ஐம்புலன்கள் வெளி ஆற்றல்களாகும் மற்றும் பகுத்தறிவு என ஒட்டுமொத்தமாக அழைக்கப்படும் உள் ஆற்றல்கள் ஐந்து உள்ளன. அவையாவன, கற்பனை, சிந்தனை, புரிந்துகொள்ளுதல், ஞாபகம் மற்றும் பொதுப்புலன் எனப்படுவது. இது தவிர மனிதனும் வேறு பல ஆற்றல்களும் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளன.
பஹாய் திருவாக்குகளில் பின்வரும் வாசகம் ஒன்றை காணலாம்:
“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்ம்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிரகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினைப் பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்ம்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்புப் பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”
இதன் காரணமாகவே மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து கொள்ளும் இயல்திறத்தோடு பிறக்கின்றான். மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள ஆற்றல்களிலேயே தன் படைப்பாளரை அறிந்துகொள்ளும் ஆற்றலே மகத்தான முக்கியத்துவம் கொண்டதாகும். ஒரு குழந்தை பிறக்கும் போது எவ்வாறு குறிப்பிட்ட சில இயல்திறன்களோடு பிறக்கின்றதோ, அவ்வாறே அது சில ஆன்மீக ஆற்றல்களுடனும் பிறக்கின்றது. குழந்தைக்கு பால்குடிக்க யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை. பால்குடிப்பது இயல்பான ஒன்று. குழந்தை பிறந்தவுடன் அது இயல்பாகவே பால் குடிக்கும். அதே போன்று கடவுளை, தன்னை படைத்தவரை, அறிந்துகொள்ளும் திறனை மனிதன் இயல்திறமாக பெற்றுள்ளான். ஆனால் பால்குடிக்கும் திறன் போன்று இத்திறன் தானாக வெளிப்படுவதில்லை. அது தக்க கல்வி மூலம் மேம்படுத்தப்பட, பயிற்றுவிக்கப்பட வேண்டும், மற்றும் அது மனிதனின் சுயவிருப்ப ஆற்றலையும் பொருத்த ஒன்றாகும். மனிதன் விரும்பி ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவன் தன்னை படைத்தவரை கண்டுகொள்ளவும் வழிபடவும் முடியும். இது கடவுள் வகுத்துள்ள ஒரு மர்மமான விதி.
கடவுளை அறிந்துகொள்ளும் இயல்திறத்தோடு மனிதனுக்கு அன்பு செலுத்தும் இயல்திறமும் உள்ளது. பால்குடிக்கும் ஆற்றல்போன்று இந்த அன்பு செலுத்தும் ஆற்றலை அவனுக்கு யாரும் கற்றுத் தர வேண்டியதில்லை. இந்த ஆற்றல் எங்கும் எப்போதும் எதற்கும் எதன்மீது வேண்டுமானாலும் வெளிப்படும், அதற்கு கட்டுப்பாடு கிடையாது. நல்லதோ கெட்டதோ அது எதை வேண்டுமானாலும் விரும்பும். மண்ணாசை, பெண்ணாசை, பொண்ணாசை ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். அதே போன்று கடவுள் மீது பக்தி கொள்ளவும் முடியும். இது கடவுள் மீது கொள்ளும் ஆசையாகும்.
மனித இதயமே அன்புணர்வின் மையம் என பஹாய் திருவாக்குகள் குறிப்பிடுகின்றன. அதே வேளை தன்னைப் படைத்தவரை அறிந்து அன்புகொள்ளவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதும் பஹாய் போதனையாகும். பஹாவுல்லாவின் பின்வரும் பிரார்த்தனையின் வாயிலாக இதை அறிந்துகொள்ளலாம்:
என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. இத்தருணம் என் பலவீனத்திற்கும் உந்தன் வல்லமைக்கும், என் வறுமைக்கும் உந்தன் செல்வாக்கிற்கம் சாட்சியம் கூறுகிறேன். ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவரும் தாங்களன்றி வேறெவருமிலர்.
அதாவது மனித படைப்பின் நோக்கமே மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து அவர் மீது அன்பு செலுத்த வேண்டும், மற்றும் அவர் வழியில் நடக்கவேண்டும் என்பதாகும். ஆனால், இந்த நோக்கம் நிறைவேறுவதும் மனிதனின் சுயவிருப்ப ஆற்றலை பொருத்த ஒன்றாகும். மனிதன் தானாக விரும்பி இதில் ஈடுபடவேண்டும். இம்முயற்சிக்கு முறையான ஆன்மீக கல்வி பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், அன்பு செலுத்தவே படைக்கப்பட்டுள்ள மனித இதயம் கடவுளின்பால் திசை திருப்பப்படாவிட்டால் அது வேறு விஷயங்களிலும் திசை திரும்பும் மற்றும் அவற்றின் மீது ஆழ்ந்த பற்றும் கொள்ளும். அன்பு செலுத்தும் ஆற்றல் ஒரு கொடி போன்றது. அதற்கு முறையாக ஒரு கொம்பை ஊண்றி வைத்தால் அது அந்த கொம்பின் மீது படரும். அவ்வாறு செய்யாவிடில் அருகில் எது இருக்கின்றதோ அதன் மீதே அக்கொடி படர்ந்துவிடும். இங்கு பொருளாசை, மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை, அதிகார ஆசை ஆகியவற்றை குறிப்பிடலாம். கடவுள் பக்தியற்ற இதயம் வேறு எதை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும். இத்தகைய ஆசைகள் குறித்து பஹாய் திருவாக்குகளில் பின்வருமாறு காணலாம்:
கருத்தின்மை மற்றும் உணர்வெழுச்சியின் மைந்தர்களே!
உங்கள் இதயங்களில் என்னைத் தவிர வேறு ஒருவர் மீதான அன்பை ஆலயிக்க செய்துள்ளீர்கள், அதனால் என் இல்லத்தில் என் எதிரி நுழைந்திட அனுமதித்து என் நண்பனை வெளியேற்றியுள்ளீர்கள்.
அதாவது நாம் கடவுள் மீது அன்பு செலுத்திட தவறினால் அந்த அன்பு வேறு பக்கம் திரும்பிவிடும். அவை தீய ஆசைகளாகவும் இருக்கலாம். கடவுள் பக்தி அல்லது கடவும் பயம் உள்ள உள்ளம் இத்தகைய ஆசைகளில் பற்று வைக்காது.
கடவுள் மீது நாம் அன்பு செலுத்துவது எப்படி? கடவுளின் படைப்பினங்களின் மீது செலுத்தப்படும் அன்பே கடவுள் மீது நாம் காட்டக்கூடிய அன்பாகும். பிறருக்காக நாம் செய்யும் சேவைகள், நமது நற்செயல்கள் அனைத்தும் இதன் அடிப்படையில் அமைந்தால் அதுவே கடவுளின் மீது நாம் கொள்ளும் அன்பின் வெளிப்பாடாகும். இதனால்தான் உலகெங்கிலும் உள்ள பஹாய்கள், தாங்கள் வாழும் இடங்களிலெல்லாம் பலவிதமான சேவைகளில் ஈடுபடுகின்றனர். முக்கியமாக, குழந்தைகளுக்கு கல்வி, ஆன்மீக கல்வி, வழங்கும் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். சிறு வயதிலேயே குழந்தைகள் தங்கள் பிறவியின் நோக்கத்தை புரிந்துகொண்டால் அவர்கள் அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்களுக்கும் உலகுக்கும் பயன்தரும் வாழ்க்கையை வாழலாம். இந்த உலகமும் அதன் வாயிலாக சிறுக சிறுக சீர்திருத்தம் பெறும்.