மனிதனுக்கு ஆன்மா என ஒன்று உள்ளதா?


மரணத்திற்குப் பின் வாழ்வு உள்ளதா?

ஆக்கம்: ஸ்டீவன் பான்கார்ஸல்

வரலாற்றுக் காலம் முதல் மறுமைவாழ்வு என்பது எண்ணிலடங்கா மக்களின் அனுபவமாக இருந்தும், அவர்கள் அவ்வாறு மரணமுற்றப்பின் மீண்டும் இம்மைக்குத் திரும்பி தங்களின் கதைகளைக் கூறியும் உள்ளனர். அவ்வாறான அனுபவங்களுள், 25 வருட கால அனுபவம் பெற்ற ஹார்வார்ட் பயிற்சி பெற்ற நரம்பியல் மருத்துவரான டாக். எபன் அலெக்ஸான்டரின் அனுபவம் மிகவும்  குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. இது வெறும் சித்தபிரமை என ஒதுக்கித்தள்ளப்பட முடியாத ஓர் அனுபவமாக இருக்கின்றது. எவ்வாறு அவரது மறுமைவாழ்வு சகலவித ஆறிவியல் விளக்கங்களுக்கும் எதிர்மாறாக உள்ளது என்பதைக் காண்பதற்கு முன், அவரது அனுபவத்தைச் சற்று ஆராய்வோம்.

தமது அனுபவத்திற்கு முன்பாக, பௌதீகமல்லாத (வஸ்துவல்லாத) ஓர் ஆவி உள்ளது என்பதை அவர் நம்பவில்லை. மேற்கத்திய மருத்துவப் பள்ளிகளில் பயின்றும், பிரபஞ்சம் குறித்த லௌகீகவாதத்தில் ஆழ்ந்திருந்த சக மருத்துவர்களால் சூழப்பட்டுமிருந்த அவர், ஆன்மா குறித்த ஒரு கருத்து நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒன்றென எண்ணினார். பெரும்பாலான “சந்தேகவாதிகள்” போன்று மறுமை வாழ்வு குறித்த கதைகளைச் சித்தபிரமைகள் அல்லது மனித கற்பனையில் உதித்தவதை எனவும் நம்பினார்.

கிருமிகளால் தோற்றுவிக்கப்பட்ட கடுமையான மூளைக் காய்ச்சலால் ஏழு நாள்கள் நினைவற்ற நிலையில் கிடந்த பிறகு அவர் தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். மறுமைவாழ்வு எனத் தெரிந்த ஒன்றினூடே அவர் ஓர் ஓளியார்ந்த பயணத்தை அனுபவித்தார். அவ்வேளை, தெய்வீகமானவையும் தெய்வீகமற்றவையுமான உலகங்களினூடே அவர் பயணித்தார்.

தமது உடலுக்குத் திரும்பி, எதிர்ப்பார்புகளுக்கு மாறாக வியக்கத்தக்க வகையில் நோயிலிருந்து குணமாகி, “சுவர்க்கத்தின் சான்று” எனும் நியூ யார்க் டைம்ஸின் #1 சிறந்த விற்பனை நூலை எழுதினார். டாக். அலெக்ஸான்டர், இம்மை வாழ்வென்பது நமது ஆன்மா பரிணமித்து வளர்ச்சியுறுவதற்கு உதவிடும் ஒரு சோதனை மட்டுமே என்பதை உறுதிப்படுத்துகின்றார். அன்பினாலும் கருணையினாலும் செயல்படுவதன் மூலமாகவே நாம் அதில் வெற்றி காண முடியும். அவர் மேலும் குறிப்பிடும் சில விஷயங்கள் பின்வருமாறு.

மறுமை வாழ்வு குறித்த அனுபவம் அத்தகைய “மெய்ம்மை” பொருந்தியதாகவும் விரிவானதாகவும் இருந்ததானது, இவ்வுலகில் ஒரு மனிதனாக வாழ்ந்திடும் அனுபவமானது, ஒப்பீட்டல் ஒரு செயற்கையான கனவு போன்று இருந்தது.

மறுமை உலகின் இழையமைப்பு தூய அன்பாகும். மறுமையில் அன்பின் ஆதிக்கம் அத்தகைய மகத்தானதாக இருந்ததானது, அங்கு தீமையின் பொதுவான பிரசன்னம் நுண்ணிய அளவே ஆகும். பிரபஞ்சத்தை அறியவேண்டுமானால், அன்பை அறிய வேண்டும்.

மறுமையுலகில் தொடர்புகள் அனைத்தும் தொலையுணர்வு (டெலிபதி) மூலமாகவே நடைபெறுகின்றன. வார்த்தைகள் அங்கு தேவைப்படாது அல்லது ஒருவரின் தன்னகத்திற்கும் அவரைச் சுற்றி நடப்பவற்றிற்கும் இடையில் பிரிவு என்பது கிடையாது. மனதில் தோன்றும் கேள்விகள் யாவும் டெலிபதி மூலமாகவே பதிலளிக்கப்படும்.

ஆன்மீக உலகு குறித்த பிறர் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார் என வினவப்பட்டபோது, நீங்கள் விலைமதிப்பற்றவர், நீங்கள் கற்பனையே செய்திட முடியாத அளவிற்கு எல்லையற்ற அன்பு செலுத்தப்படுகின்றீர்கள். நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள், தனியாக விடப்படுவதில்லை. கடவுளின் நிபந்தனையற்ற, முழுநிறைவான அன்பு எந்த ஆன்மாவையுமே புறக்கணிப்பதில்லை.

சந்தேகமின்றி அன்பே அனைத்திற்கும் அடித்தலமாகும். அது ஓர் அருவமான, ஆழங்காண முடியாத அன்பல்ல. ஆனால், அது தினசரி எல்லாரும் அறிந்த, ஒருவர் தமது மனைவியை அல்லது கணவனை, குழந்தையை, அல்லது செல்லப்பிராணியைப் பார்க்கும் போது ஏற்படும் அன்பாகும். அதன் தூய வடிவத்தில், அதிசக்திமிகு தோற்றத்தில், அது பொறாமையோ தன்னலமோ அற்ற, நிபந்தனையற்ற அன்பாகும்.

மெய்ம்மைகளுள் எல்லாம் இதுவே மெய்ம்மையும், இருக்கக்கூடிய, இனி இருக்கப்போகும் அனைத்தின் மையத்திலும் வாழ்ந்தும் சுவாசிக்கவும் செய்யும் அறிந்திடவே முடியாத பேரொளி மிக்க உண்மைகளுளெல்லாம் உண்மையாகும். அதை அறிந்துகொள்ளாத எவருமே, தாம் யார் என்பது குறித்த துல்லியமான புரிந்துகொள்ளலை அடையவே முடியாது, மற்றும் தமது செய்கைகளில் அதை வெளிப்படுத்திடவும் முடியாது.

இப்போது நம்பகத்தன்மை குறித்து சிறிது பேசுவோம். பிறர் அனுபவித்த “மரண வாசல் அனுபவத்திற்கும்” இந்த அனுபவத்திற்கும் என்ன குறிப்பிடத்தகும் வேறுபாடு? கடுமையான மூளைக் காய்ச்சலினால் அவர் நினைவிழந்திருக்கையில், எபன் மூளையின் நவ-புறனிப் பகுதி, முற்றிலும் செயல்பாடு இழந்திருந்தது. ஆகவே, அவர் இந்த அனுபவத்தை அடைந்தார் என்பதற்கான அறிவியல் ரீதியான விவரம் கிடையாது. பொருண்மையாக, அவர் தமது நூலில், மரண வாசல் அனுபவத்திற்கு வழங்கப்படும் நடைமுறையான விளக்கங்களுக்கு தமது அனுபவத்தை ஒட்டி ஒன்பது வெவ்வேறு மறுப்புரைகளை வழங்குகிறார்.

மேற்கொண்டு விவரத்திற்கு: http://www.spiritscienceandmetaphysics.com/harvard-neurosurgeon-confirms-the-afterlife-exists/#sthash.5hx1Qfpo.dpuf

ஆன்மாவுக்கு மருந்து


 • உங்களின் குறைபாடுகளை பிறரின் ஆற்றல்களோடு ஒப்பிடாதீர்
 • உங்கள் வாழ்க்கையை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளாவிடில் வேறு ஒருவர் சொந்தமாக்கிக்கொள்வார்
 • கிடைத்த வாய்ப்புகளை மாற்றும் முடிவு நமதல்ல, ஆனால் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வது நம் கையில் உள்ளது
 • பிறர் நம்மைப் பார்ப்பதற்காகவின்றி உலகை நாம் பார்ப்பதற்காகவே மலை உச்சியை அடைய நினைக்க வேண்டும்.
 • நமது குறைபாடுளை நாம் அங்கீகரிப்பதே அவற்றை வெற்றிகொள்வதற்கான முதல் படி
 • சௌகரியமே சாதனையின் எதிரி.
 • உன்னை யார் என்ன சொன்ன போதும் நீ அவரோடு உண்ண வேண்டியதில்லை, வாழவேண்டியதில்லை அல்லது ஒன்றாகப் படுக்கவேண்டியதில்லை.
 • இழப்பை எதிர்கொள்ள விரும்பாதபோது இருக்கும் அனைத்தையுமே இழக்க நேரிடும்
 • உங்கள் உணர்வுகளைப் பாதிக்க பிறருக்கு வாய்ப்பளிக்காதீர். உங்கள் உணர்வுகள் உங்களுடையவை, அவற்றுக்கு நீங்களே சொந்தக்காரர்.
 • வெற்றி உங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது, ஆனால் தோல்வி உங்களுக்கு உலகையே அறிமுகப்படுத்துகிறது.
 • இளம் வயதில் விளையாட்டுத் தனமான செயல்கள் இல்லாவிடில், முதிய வயதில் பின்னோக்கிப் பார்த்து சிரிப்பதற்கு எதுவுமிருக்காது.
 • எதற்கும் விளக்கங்கள் கூறி நேரத்தை வீணாக்காதீர்கள், மனிதர்கள் தங்களுக்கு விருப்பமானதை மட்டுமே செவியுற விரும்புவர்.
 • முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதே, ஏனெனில் இரண்டாம் முறை தோல்வியுறும்போது குறை சொல்வதற்கு நாவுகள் பல இருக்கும்.
 • உலகை மாற்றிட பலர் நினைப்பர், ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர் எவரும் கிடையாது.
 • உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இருக்கப்போவது உங்களுடனேயே, ஆகவே உங்களை வாழ்க்கையை முடிந்த அளவு சுவாரஸ்யமாக்கிக்கொள்ளுங்கள்

வாழ்வும் மரணமும்


(draft)

இப்பூமியில் வாழ்ந்து காலம் கனிந்தவுடன் உடலைவிட்டு உயிர் பிரியும்போது மரணம் சம்பவித்துவிட்டது எனக் கூறப்படும். உலகில் எதற்காக வாழ்கிறோம், உடல் என்றால் என்ன? உயிர் என்றால் என்ன? உடல் தூலப்பொருளால் ஆனது, உயிர் சூக்ஷ்மம் அல்லது ஆவியாகும். தூலப்பொருளுக்கு அழிவுண்டு ஆனால் ஆவியினால் உருவான ஒன்றை அழிக்க முடியாது. உடலிலிருந்து ஆவி பிரிந்தவுடன் உடல் மண்ணோடு மண்ணாகின்றதென்பது நமக்குத் தெரியும். ஆனால் சூக்ஷ்ம உடலாகிய ஆவி அல்லது ஆன்மா என்னவாகின்றது? இறப்பிற்குப் பின் அதன் நிலை என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு பஹாய் திருவாக்குகளிலும் பிற மூலங்களிலும் பல குறிப்புகளைக் காணலாம். அவற்றில சிலவற்றை இப்போது காண்போம்.

ஆன்மாவின் தோற்றம்:

கடவுளின் ஆன்மீக உலகங்களில்தான் ஆன்மாவின் ஆரம்பம் உள்ளது. அது பொருள் மற்றும் பெளதீக உலகம், ஆகியவற்றைவிட மேம்பட்டது. இந்த ஆன்மீக உலகங்களிலிருந்து ஆன்மாவானது தாயின் கர்ப்பத்தில் கரு உருவாகும்போது சேர்ந்து, ஒருவரின் வாழ்வு ஆரம்பமாகிறது. ஆனால் இச்சேர்க்கை பெளதீக நிலையில் ஏற்படும் ஒன்று அல்ல. ஆன்மா ஒன்று உடலில் நுழைவதும் இல்லை; அதைவிட்டு வெளியேறுவதும் இல்லை. மேலும் பெளதீக நிலையில் எவ்வித இடத்தையும் நிரப்புவதும் இல்லை. ஆன்மா பொருள் உலகோடு சேர்ந்ததல்ல. ஒரு கண்ணாடிக்கும் அதில் ஓர் ஒளி பிரதிபலிப்பதற்கும் இடையே உள்ள தொடர்புக்கு ஒப்பானது ஓர் ஆன்மாவிற்கும் உடம்பிற்கும் உள்ள தொடர்பு. கண்ணாடியில் தோன்றும் ஒளி அதனுள் இருப்பதில்லை. அது வெளியே உள்ள ஓர் ஒளியூற்றிலிருந்து வருகிறது. இதைப் போலவே, ஆன்மாவும் உடலின் உள் இருப்பதில்லை. உடலோடு அதற்குத் தனிப்பட்ட சிறப்பானதோர் தொடர்பு இருக்கிறது. அவை சேர்ந்து மனித உயிர் ஒன்றினைத் தோற்றுவிக்கின்றன.

ஆன்மாவும் உடலும்

ஆன்மா உடல் இவற்றினிடையே ஒரு மிகச் சிறப்பான தொடர்பு உண்டு. இவ்விரண்டின் இணைப்பால் மனிதப்பிறவி உண்டாகிறது. இத்தொடர்பானது வாழ்வின் இறப்புவரை நீடித்து நிற்கிறது. இது முடிவடையும் போது உடல் மண்ணின் புழுதிக்கும், ஆன்மா இறைவனின் தெய்வீக உலகிற்குமாக ஒவ்வொன்றும் தாம் தோன்றிய இடத்திற்கே திரும்பிவிடுகின்றன. தெய்வீக இராஜ்ஜியத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டு, கடவுளின் சாயல் மற்றும் பிரதிபிம்பமாக உண்டாக்கப்பட்டு, ஆன்மீக நற்பண்புகள் மற்றும் தெய்வீக இயல்புகளை அடைந்திடும் ஆற்றலும் பெற்றுள்ள ஆன்மா உடலிலிருந்து பிரிந்தபின் நித்தியகாலமும் வளர்ச்சி அடைகிறது.

இறப்பிற்குப் பின் ஆன்மாவின் நிலை

“…ஆத்மா உடலைவிட்டுப் பிரிந்த பின்பும் அது, காலங்கள் நூற்றாண்டுகள் ஆகியவைகளின் புரட்சிகளோ இவ்வுலகின் மாற்றங்களோ, தற்செயல் நிகழ்ச்சிகளோ மாற்ற இயலாத ஸ்திதியிலும், நிலையிலும், இறைவனின் முன்னிலையை அடையும் வரை தொடர்ந்து வளர்ச்சிப் பெற்று வரும் என்ற உண்மையினை நீ அறிவாயாக. ஆண்டவனின் இராஜ்ஜியம், அவரது மாட்சிமை, அவரது அரசாட்சி, அதிகாரம் ஆகியவைகள் நிலைத்திருக்கும் வரை அதுவும் நிலைத்திருக்கும். ஆண்டவனின் அடையாளங்களையும் அவரது இயல்புகளையும் வெளிக்கொணர்ந்து, அவரது அன்பு கருணை, வள்ளன்மை ஆகியவைகளை வெளிப்படுத்தும்.”(பஹாவுல்லா)

மரணத்தின் புதிர்

“மனிதனுடைய பெளதீக மரணம் மற்றும் அவனுடைய திரும்புதல் ஆகியவற்றின் புதிர்கள் வெளிப்படுத்தப்படவில்லை, இன்னும் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளன. இறைவனுடைய நேர்மைத்தன்மையின் சாட்சியாக! அவை வெளிப்படுத்தப்படுமாயின் சிலருக்கு அழிந்துபோகும் அளவிற்கு, அச்சத்தையும் துன்பத்தையும் அவை வருவிக்கும், ம
ற்றவர் இறப்பினை விரும்பி, தங்கள் முடிவினை விரைவுபடுத்துமாறு, ஒரே உண்மையான கடவுளிடம் – அவரது மகிமை மேன்மைபடுத்தப்படுமாக – ஓயாத ஏக்கத்துடன் வேண்டிக்கொள்ளும் அளவிற்கு மகிழ்ச்சியால் நிரப்பப்படுவர்.”
(பஹாவுல்லா)

கடவுளை அறிந்துகொள்வதின் நன்மை

“ஒரே உண்மையான இறைவனை – அவரது மகிமை மேன்மைபடுத்தப்படுமாக – அறிந்து கொள்வது என்ற மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக் கனியைச் சுவைத்துள்ளோர் சம்பந்தமாக, மறுமையில் அவர்களது வாழ்க்கை நாம் வருணிக்க முடியாதவாறு இருக்கின்றது. உலகங்கள் அனைத்தின் தேவரான இறைவனிடம் மட்டுமே, அதைப் பற்றிய மெய்யறிவு உள்ளது.”(பஹாவுல்லா)

இவ்வுலக வாழ்வின் நோக்கம்

“மனிதன் தன்னுடைய மனித வாழ்வின் ஆரம்பத்தில் கர்ப்ப உலகில் கருவாக இருந்தான். அங்கு மனித வாழ்வெனும் மெய்ம்மைக்கான தகுதியும், பேறும் பெற்றுக் கொண்டான். இவ்வுலகிற்கான சக்திகளும் திறன்களும் அவனுக்கு அந்த வரம்புக்குட்பட்ட நிலையில் வழங்கப்பட்டன. இவ்வுலகில் அவனுக்குக் கண்கள் தேவைப்பட்டன, அவற்றை அவன் மற்றதிலிருந்து இயல்திறமுறையில் பெற்றுக் கொண்டான். அவனுக்குச் செவிகள் தேவைப்பட்டன. அவன் தனது புதிய வாழ்விற்கு ஆயத்தமாகவும் தயார்படுத்திக் கொள்ளும் வகையிலும், அவற்றை அங்குப் பெற்றுக் கொண்டான். இவ்வுலகில் தேவைப்படும் திறன்கள் அவனுக்குக் கருவுலகில் வழங்கப்பட்டன.”(பஹாவுல்லா)

“ஆகவே, இவ்வுலகில், அவன் மறுமையிலுள்ள வாழ்விற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இராஜ்ஜியத்தின் உலகத்தில் அவனுக்குத் தேவைப்படுகின்றவற்றை அவன் இங்குப் பெற வேண்டும். இம்மண்டல வாழ்விற்குத் தேவைப்படும் சக்திகளை அவன் கருவுலகில் எவ்வாறு தயார்படுத்திக் கொண்டானோ, அவ்வாறே தெய்வீக வாழ்விற்கான இன்றியமையாத சக்திகள் இவ்வுலகிலேயே இயல்திற முறையில் பெற்றுக் கொள்ளப்படவேண்டும்.”(பஹாவுல்லா)

ஆன்மாவின் தன்மை

“ஆத்மாவின் தன்மையினைப் பற்றித் தாங்கள் எம்மிடம் கேட்டிருக்கிறீர். ஆத்மாவானது ஆண்டவனின் ஓர் அடையாளம்; ஒரு விண்ணுலக இரத்தினக்கல். அதன் மேன்மையினைக் கல்வியில் மிகச் சிறந்த மனிதர்களும் புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர். அதன் மர்மத்தினை ஒருவரது புத்தி எத்துணை கூர்மையாக இருப்பினும், தெளிவுப் படுத்த வழியே கிடையாது என்பதை மெய்யாகவே அறிவீர்களாக. சிருஷ்டி கர்த்தாவின் உயர்வினை ஒப்புக் கொள்வதில் படைப்புப் பொருட்கள் அனைத்திலும் அதுவே முதன்மையானது. அவரது ஒளியினை அறிந்து கொள்வதிலும், அவரது மெய்ம்மையினைப் பற்றிக் கொள்வதிலும் அவர் முன்னிலையில் தலை குனிந்து பூஜிப்பதிலும் அது முதன்மையானது. அது ஆண்டவனிடத்தில் விசுவாசத்துடன் இருக்குமாயின் அவரது ஒளியினைப் பிரதிபலித்து, இறுதியில் அவரிடமே திரும்பிச் செல்லும். இருப்பினும் தனது சிருஷ்டி கர்த்தாவிடம் கொள்ளும் விசுவாசத்தினில் தவறுமாயின் அது தான் என்னும் அகங்காரத்திற்கும், உணர்ச்சிக்கும் அடிமையாகி, இறுதியில் அவற்றின் ஆழத்தில் மூழ்கி விடும்.”(பஹாவுல்லா)

ஆன்மா உடலைவிட்டுப் பிரியும் போது…

“ஓர் ஆத்மா உடலை விட்டுப் பிரியும் வேளையில் உலக மனிதர்களின் வீண்கற்பனைகளில் இருந்து தூய்மைப் படுத்தப்பட்டிருக்குமாயின் அது பேறு பெற்றதாகும். அப்படிப்பட்ட ஆத்மா அதன் படைப்போனின் விருப்பத்திற்கிணங்கவே வாழ்ந்து, இயங்கி மிக உயரிய சொர்க்கத்தினுள் பிரவேசிக்கும். விண்ணுலகக் கன்னிகளும் மிக உயர்வான மாளிகைகளின் வாசிகளும் அதனைச் சுற்றி வலம் வருவர். இறைவனின் தீர்க்கதரிசிகளும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அதன் உறவை நாடுவர். அவர்களுடன் அவ்வாத்மா தங்குதடையின்றிச் சம்பாஷித்து அது எல்லா உலகங்களிலும் தேவராகிய ஆண்டவனின் பாதையில் சகித்துக் கொண்டவைகளை எல்லாம் அவர்களுக்கு எடுத்துரைக்கும்.”(பஹாவுல்லா)

“இருப்பினும் நாத்திகர்களின் ஆன்மாக்கள், கடைசி மூச்சு விடும் வேளையில் அவர்களது கவனத்தை ஈர்க்காதிருந்த நற் செயல்கள் அனைத்தும் நினைவிற்கு வரும். தங்களது நிலையினை எண்ணி வருந்துவர். இறைவனின் முன்னிலையில் பணிவு காட்டுவர். இதற்கு யாமே சாட்சியம் கூறுகிறோம். உடலை விட்டுத் தங்களது ஆத்மாக்கள் பிரிந்த பின்பும் தொடர்ந்து அவ்வாறே செய்து வருவர்.”(பஹாவுல்லா)

“அவன் பாவிகளை மன்னித்து அவர்களது தாழ்வான நிலையினை நிந்திக்கச் செய்யலாகாது; ஏனெனில் இறுதியில் தன் நிலை எவ்வாறு இருக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. எத்தனை முறை ஒரு பாவி மரணத்தறுவாயில் இருக்கும்போது, நம்பிக்கையின் சாராம்சத்தினைப் பெற்று நிலையான நீரினைப் பருகி விண்படையினரின் முன்னிலைக்கு உயர்ந்திருக்கின்றான்! மற்றும் எத்தனை முறை பக்தியுடைய ஒரு நம்பிக்கையாளன் தனது ஆத்மாவின் பிரிவு நேரத்தில் நரகத்தீயில் விழுமளவு மாற்றம் அடைந்திருக்கின்றான்!”(பஹாவுல்லா)

புரியாத புதிர்களை மறுமையில் அறிந்துகொள்வோம்

“இந்த லெளகீக உலகில், எந்தப் புதிர்களைப் பற்றி மனிதன் கவனமில்லாமல் இருக்கின்றானோ, அவற்றை அவன் விண்ணுலகில் கண்டுபிடிப்பான், மெய்ம்மையின் இரகசியத்தை பற்றி அவன் அங்கு அறிவிக்கப்படுவான்: அப்படியென்றால் தான் நெருங்கி பழகியவர்களை அவன் இன்னும் எவ்வளவு அதிகமாக அடையாளங்காணவோ, கண்டுபிடிக்கவோ முடியும். சந்தேகமின்றி தூய்மையான கண்ணைக்கொண்டு, உட்பார்வைகளைக் கொண்டிருக்கும் சலுகையைப் பெற்ற புனித ஆன்மாக்கள் ஒளிகளின் இராஜ்ஜியத்தில் எல்லா புதிர்களைப் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வோர் உயர்வுமிக்க ஆன்மாவுடைய மெய்ம்மையினைப் பார்க்கும் வெகுமதியை நாடுவார்கள். மேலும் அவர்கள் அவ்வுலகில் இறைவனுடைய பேரழகினை வெளிப்படையாகக் கண்ணுறுவார்கள். அவ்வாறே, கடந்த மற்றும் சமீபத்திய காலங்கள் ஆகிய இரண்டினையும் சார்ந்த இறையன்பர்கள் அனைவரும் விண்ணுலகக் கூட்டத்தினரின் சந்நிதானத்தில் இருப்பதை அவர்கள் காண்பார்கள்.”(பஹாவுல்லா)

“எல்லா மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாடும், தனிச்சிறப்பும் இயற்கையாகவே, அவர்கள் இந்த லெளகீக உலகிலிருந்து பிரிந்து சென்றபிறகு, உணரப்படும். ஆனால் இது (தனிசிறப்பு) இடம் சம்பந்தமானதல்ல; ஆன்மா மற்றும் மனசாட்சி சம்பந்தமானதாகும். ஏனெனில் இறைவனுடைய இராஜ்ஜியமானது நேரம் மற்றும் இடம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அது வேறோர் உலகம் வேறொரு பிரபஞ்சம். ஆனால் புனித ஆன்மாக்களுக்காகப் பரிந்துரைப்பு எனும் பரிசு வாக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் தெய்வீக உலகங்களில் ஆன்மீக அன்பிற்குரியவர்கள் (நம்பிக்கையாளர்கள்) ஒருவரை ஒருவர் அடையாளங்கண்டு (ஒருவரோடு ஒருவருக்கான) இணக்கத்தை – ஆன்மீக இணக்கத்தை நாடுவார்கள் என்பதனை நீங்கள் நிச்சயமாகவே அறிவீர்களாக. அதுபோலவே ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தப்படும் அன்பானது இராஜ்ஜியத்தின் உலகத்தில் மறக்கப்படாது. அவ்வாறே, நீங்கள் லெளகீக உலகில் வாழ்ந்த வாழ்க்கையை (அங்கே) மறக்க மாட்டீர்கள்.”(பஹாவுல்லா)

உடலைவிட்டுப் பிரிந்தபின் ஆன்மாவின் நிலை

“உடலைவிட்டுப் பிரிந்தபின் ஆத்மாவின் நிலை சம்பந்தமாக மேலும் தாங்கள் என்னைக் கேட்டிருந்தீர்கள். ஒரு மனிதனின் ஆத்மா ஆண்டவனின் வழியில் சென்றிருக்குமாயின், அது நிச்சயமாக அன்பரின் ஒளியின்பால் திரும்பி அவரால் ஒன்று சேர்த்துக் கொள்ளப்படும் என்பதனை மெய்யாக நீங்கள் அறிந்து கொள்வீர்களாக. ஆண்டவனின் மெய்ம்மைத் தன்மை சாட்சியாக! அது, எந்த எழுதுகோலும் விளக்கவோ எந்த நாவும் வர்ணிக்கவோ இயலாத நிலையினைச் சென்றடையும். ஆண்டவனின் சமயத்தின்பால் விசுவாசத்தோடு இருந்து அவரது வழியில் அசையாத வலுவுடன் நிற்கும் ஓர் ஆத்மா மேலுலகை எய்தியதும், எல்லாம் வல்லவர் படைத்துள்ள உலகங்கள் அனைத்தும் அவர் மூலம் பயன் பெறும் அளவு அத்துணைச் சக்தியினைப் பெறும்.”(பஹாவுல்லா)

குரங்கிலிருந்து மனிதன்…


சமயம் மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் எனக் கூறுகின்றது, ஆனால் அறிவியலாளர்களோ மனிதன் குரங்கின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் என வாதிடுகின்றனர். நடத்தையைப் பொறுத்த மட்டில் மனிதன் குரங்கின் சாயலைக் கொண்டுள்ளான் எனப் பிசகாமல் கூறலாம், ஆனால் அவன் மெய்நிலையைய் பொறுத்தமட்டில் அவனை அவ்வாறு கூற இயலாது. ஆவியின் புத்திரனே! யான் உன்னை உயர் பண்பினனாய்ப் படைத்துள்ளேன், இருந்தும் நீயே உன்னைத் தாழ்த்திக் கொண்டு ள்ளாய். எதற்காக நீ படைக்கப்பட்டாயோ அதன்பால் உயர்வாயாக, என பஹாவுல்லா கூறுகின்றார்.

சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் 1980களில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘ஐடா’ எனப் பெயர் சூட்டப்பட்ட குரங்கு போன்ற உருவுடைய புதைபடிமம் (fossil) ஒன்றை மறு ஆய்வு செய்த அறிவியலாளர்கள் அப்படிமம் குரங்கினம் மற்றும் மனித இனத்தை இணைக்கும் ஒரு வகை உயிரினமாக இருக்கக்கூடும் என அறிவித்துள்ளனர்.

ida darwinus
ida darwinus

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனும் வாதம் நீண்டகாலமாகவே நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், குரங்கு இனத்திலிருந்து மனித இனம் எப்போது பிரிந்தது, ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ (மனிதனின் அறிவியல் ரீதியான பெயர்) இனம் எப்போது ஆரம்பித்தது என்பது போன்ற கேள்விகளுக்கான பௌதீக ரீதியான தடயங்கள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பல வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் சுமார் மூன்று அடி உயரமுள்ள குரங்கு போன்ற ஆனால் இருகாலின உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ‘லூசி’ என பெயர்கூட சூட்டப்பட்டது.

lucy
lucy

3 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த இந்த லூசியின் உடலமைப்பைப் பொருத்தவரை, அதன் தலை குரங்கினத்திற்கு சற்று ஒத்திருந்தும், அதன் உடல் வாகு இருகாலி மனிதனைப் போன்றும் உள்ளது மற்றும் இந்த லூசி ஒரு பெண் ஆவாள்.

பிற்காலத்தில் ஐடா மற்றும் லூசியிலிருந்து உதித்த மனிதன் பல மனிதப் பிரிவுகளாகி இறுதியில் ‘ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்’ ஆனான் என்பது அறிவியலாய்வு கருத்து. இடையிடையே பல மனித இனப் பிரிவுகள் காலமாற்றத்திற்கு உட்பட்டு அழிந்துவிட்டன, உதாரணமாக ‘நியாண்டர்த்தல்’ மற்றும் ‘ஆஸ்த்ராலோபித்திக்கஸ்’ மனிதப்பிரிவுகள்.

இங்கு இவற்றை விவரிப்பதன் நோக்கம் தற்போது மனிதவியல் வல்லுனரிடையே நிலவும் ‘குரங்கிலிருந்துதான் மனிதன் பிரிந்துதித்தான்’ எனும் கருத்தை வலியுறுத்துவதற்காகவோ, சில சமய நம்பிக்கையாளர்கள் கூறுவது போன்று மனிதன் சுமார் 6000 வருடங்களுக்கு முன்புதான் தோன்றினான் என்பதை வலியுறுத்துவதற்காகவோ அல்ல.

Man's evolution
Man’s evolution

மனிதனின் தோற்றம் மற்றும் அவனுடைய பரிணாம வளர்ச்சி குறித்து பஹாய் எழுத்தோவியங்களில் பல குறிப்புகளைக் காணலாம். இவற்றோடு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒப்பிட்டுப்பார்த்து பஹாய் எழுத்தோவியங்கள் இவ்விஷயம் குறித்து என்ன விளக்கமளிக்கின்றன, இந்த இரண்டும் எந்த அளவுக்கு ஒத்துப்போகின்றன என்பதை காணலாம். ஒரு முக்கிய பஹாய் போதனை சமயமும் அறிவியலும் ஒன்றாக கைகோர்த்துச் செல்லவேண்டும் என்பதாகும். அறிவியல் என்பது வஸ்துக்கள் குறித்த உண்மை பற்றிய ஆய்வாகும்; சமயம் ஆன்மீக உண்மைகள் குறித்ததாகும். ‘உண்மை’ என்பது ஒன்றுதான் எனும்போது இந்த இரண்டு அறிவுப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதற்கு அடிப்படையே கிடையாது.

மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து அப்துல்-பஹா என்ன கூறுகிறார் என்பதை இப்போது பார்ப்போம்:

…தற்போது காணப்படும் இக் கோளம் திடீரென தோன்றிவிடவில்லை என்பது தெளிவு; ஆனால்… பல கட்டங்களைச் சிறுக சிறுக கடந்து தற்போதுள்ள இப்பூரண நிலையெனும் அலங்காரத்தைப் பெற்றுள்ளது. …

… மனிதன், தாயின் கர்ப்பத்தில் உள்ள கருவைப் போன்று, தனது தோற்றத்தின் ஆரம்பத்திலும் இவ்வுலகின் மடியிலும், சிறுக சிறுக வளர்ந்து மேம்பாடடைந்து, இந்த அழகுடனும் பூரணத்துவத்துடனும், இந்த ஆற்றலுடனும் வலிமையுடனும் … ஓர் உருவநிலையிலிருந்து வேறோர் உருவநிலைக்கு மாறியுள்ளான் … ஆரம்பத்தில் அவனுக்கு இந்த சௌந்தரியமும் அழகும் நளினமும் கிடையாது, மற்றும் அவன் சிறுக் சிறுகவே இந்த வடிவத்தையும், இந்த உருவத்தையும், இந்த அழகையும், இந்த நளினத்தையும் அடைந்தான். …

… இவ்வுலகில், ஆரம்பம் முதல் இந்த தோற்றத்தை, வடிவத்தை, மற்றும் நிலையை மனிதன் அடையும்வரை அவன் படைப்பு வெகு நீண்ட காலமுடையதாகும்… ஆனால், மனிதனின் படைப்பின் ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு தனிப்பட்ட உயிரினமாவான். …[மனித உடலில்] மறைந்துவிட்டதாக கூறப்படும் சில உறுப்புக்கள் உண்மையிலேயே மனிதனுக்கு இருந்திருந்தன என ஒப்புக்கொண்டாலும் அது அவ்வுயிரினத்தின் நிலையற்றதன்மை மற்றும் மூலமில்லாமையை நிரூபிக்கவில்லை. ஆகக்கூடிய வகையில் உருவம், வடிவமைப்பு, மற்றும் மனிதனின் உடலுருப்புக்கள் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளன என்பதையே அது நிரூபிக்கின்றது. மனிதன் என்றுமே ஒரு வெகு தனிப்பட்ட உயிரினம், மனிதன், அவன் மிருகமல்ல.

ஆகவே, பஹாய் கருத்துக்கள் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் கருத்துக்களோடு ஒரே ஒரு விஷயம் தவிர மற்றெல்லாவற்றிலும் ஒத்திருக்கின்றன. அதாவது, மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை என்பது. கோடி வருடங்களுக்கு முன் அவன் பார்ப்பதற்கு நீண்ட வாலுடைய குரங்கைப்போன்று இருந்திருக்கலாம், அவன் மரத்திற்கு மரம் தாவியிருக்கலாம், அவனுடைய மரபனுக்கள் குரங்குகளுடையதோடு வெகுவாக ஒத்திருக்கலாம், ஆனால், மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை. அவன் ஓர் அனுவாக இவ்வுலகில் தோன்றியதிலிருந்து, நீரிலிருந்து நிலத்திற்கு மாறி சென்றதிலிருந்து, இன்றுவரை, அவன் அரிதான, ஓர் ஆன்மாவைப் பெற்ற, மானிடப் பிறவியே ஆவான். ஓர் உயிரினம் மற்றோர் உயிரினத்தை தோற்றத்திலும் மரபனுக்கள் வாயிலாகவும் ஒத்திருப்பதால் அவை இரண்டும் ஒன்றுதான் என முடிவு செய்யமுடியாது. குரங்கு குரங்குதான் மனிதன் மனிதன்தான்.