ஆன்மீக மெய்நிலை


ஆன்மீக மெய்நிலை

வாழ்க்கையின் நோக்கம் என்ன? மனிதனின் மெய் இயல்பு யாது? சோதனைகளும் தீமையும் இந்த உலகில் ஏன் தோன்றுகின்றன? மரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டா? இத்தகைய கேள்விகள் வரலாறு முழுவதும் மனிதகுலத்திற்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளன. ஏனெனில், மனிதகுலம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உண்மையைத் தேடி அலைகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நோக்கத்தைத் தேடுவதானது மேலும் அதிகரிப்பு கண்டுள்ளது. ஏனெனில் ஒன்று மற்றொன்றோடு போரிட்டுக் கொண்டிருக்கும் எதிர்மாறான சித்தாந்தங்கள் தங்களது ஆற்றல்களை இழந்துவிட்டன. சர்வாதிகார ஆட்சியும், கம்யூனிஸ ஆட்சியும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. கட்டுப்படுத்தப்படாத ஜனநாயகச் சிந்தனையோ மனிதனின் சுதந்திரத்திற்குப் பேருதவிகள் வழங்கிட்ட போதிலும், அந்தச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தப்படாத பெரும் பொருளாசையின் விளைவாகப் பேராசையாக நிலைதாழ்ந்திடச் செய்யபட்டுவிட்டது. மற்ற கலாச்சாரங்களின் நன்மைகள் அவற்றின் சொந்தமாதிரியான சர்வாதிகாரத்தை கொண்டுள்ளன. அதிகப்பட்சம், இந்தக் கலாச்சாரங்களின் நன்மைகள் மேற்கத்திய பண்புகளுக்கு எதிராக வெறுமனே ஒரு தற்காப்பை உருவாக்கிக்கொள்வதே ஆகும்.

உண்மையை அறியவேண்டும் எனும் மனித ஜீவனின் தாகத்தைச் சமயமும் ஞானமும் பாரம்பரியமாக பூர்த்தி செய்தன. ஆயினும் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தின் முன்னே தன் செல்வாக்கினைக் காப்பாற்றுவதற்குச் சமயம் இப்போது போராடுகிறது. ஞானமோ காலப்பொறுத்தமெனும் வலையில் சிக்குண்டுவிட்டது.

படைப்புலகத்தை ஆராயும் அறிவியலைப் பொறுத்த வரையில், அதன் சாதனைகளும் ஒளிமயமான உட்திறன்களும் இந்த நூற்றாண்டின் ஆரம்பக்காலத்தில் பெரும் கற்பனைகளைத் தூண்டிய போதிலும், இக்காலத்துச் சமுதாயத்தின் நோய்களுக்கேற்ற மருந்தினை அவை வழங்கவில்லை. மாறாக மற்ற பிரச்சினைகளை அவை உருவாக்கியுள்ளன. மனித சமுதாயம் அர்த்தமும், நோக்கமும் கொண்ட ஒரு தெளிவான தூரநோக்கைக் கொண்டிருக்கவோ, தெளிவற்ற அதன் வருங்காலத்தை வழிநடத்த ஒரு நன்நெறி திசைகாட்டியைக் கொண்டிருக்கவோ இல்லை.

இச் சூழ்நிலையில், பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் போதனைகள் ஒரு புது ஒளியினை வழங்குகின்றன. மனிதகுலம் எதிர்நோக்கும் ஆன்மீகப் பிரச்சினைகளுக்கான விடைகளை பஹாவுல்லாவின் பல தொகுக்கப்பட்ட எழுத்துக்கள் வழங்குகின்றன.

பண்டைய சமயங்களில் பொதிந்துள்ள ஆழமான உண்மைகளையும் நன்மைகளையும் பஹாவுல்லா புதுப்பிக்கின்றார். ஓர் உலக சமுதாய அமைப்பு முறை தோன்றவிருக்கும் கட்டத்தில் மனித குலம் நின்று கொண்டிருக்கின்றது. அதன் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் அறிவியல் விஞ்ஞானம் ஆகியவற்றுக்குச் சாதகமான குரலில் இவர் இந்த உண்மைகளை வழங்குகின்றார். படைப்புலகை வெல்லக் கூடிய ஒரு கருவியை விஞ்ஞானம் வழங்கியுள்ள போதிலும், மனித இனம் ஒரே ஒரு சிறகை மட்டும் கொண்ட பறவையைப் போல் ஆகிவிட்டது.. இறுதியில், இந்தப் பறவை பறக்கவியலாமல், மண்ணாசை எனும் சகதியில் மூழ்கிவிடும். வேறொரு நிலையில் இயங்கும் மெய்மைத்தன்மை ஒன்று இருக்கின்றது என பஹாவுல்லா உறுதியாகக் கூறுகின்றார். ஆன்மீகத் தன்மைதான் அது. மனிதகுலம் எனும் பறவை சிறகடித்துப் பறக்கச் செய்திடுவதற்கான மற்றுமொரு சிறகை இது வழங்கிடும். இந்தத் தன்மையானது ஐம்புலன்களுக்கும் எளிதில் புலப்படாது. இருந்தபோதிலும், இந்த ஆன்மீகத் தன்மையினை அறிந்துகொள்வதானது, மூட நம்பிக்கை, கண்முடித்தனமான நம்பிக்கை அல்லது பகுத்தறிவுக்கு உட்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படவில்லை.

படைப்புலகின் மீது ஆதிக்கம் செய்யும் விதிகளை அறிந்து அவற்றைப் பயன்படுத்தும் முறைகளை ஸ்தாபிக்கக்கூடிய ஒரு முறையான ஆய்வு மற்றும் கணிப்புமுறையினை விஞ்ஞானம் வழங்குகின்றது. இதைப் போலவே ஆன்மீகத்தன்மையை ஆட்கொள்ளும் விதிகளாவன கண்டறிந்துகொள்ளக் கூடியவை என பஹாவுல்லா விளக்குகின்றார். ஆன்மீக ஆற்றல்களின் விளைவுகளை அத்தகைய ஆற்றல்கள் படைப்புலகில் வெளிப்படுத்தக்கூடியவைகளில் இருந்து அறிந்திடலாம். ஆன்மீக விதிகளின் செல்வாக்கினை அனுபவங்களின் வாயிலாக சோதிக்கலாம். மற்றும் கட்டுக்கோப்பான செயல்களின் வாயிலாக செயல்படுத்தலாம்.

பௌதீக விதிகளை அறிந்துகொள்வதற்கு எப்படி விஞ்ஞானம் மூலாதாரமாக இருக்கின்றதோ, அதைப் போலவே உண்மையான விஞ்ஞானம் முறையானதும், வெற்று சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் துறந்திட்ட ஓர் உண்மை சமயத்தின் ஆன்மீகத் தன்மையின் விதிகளை அறிந்திட வகைசெய்வதற்கு மூலதரமாக விளங்கும். ஆன்மீகத் தன்மையைப் பற்றிய அறிவு தொடர்ச்சியாக வரும் தெய்வீக ஆசான்களின் வாயிலாக மனித குலத்திற்கு வந்து சேரும் என பஹாவுல்லா விளக்குகிறார். இவர்கள் உலத்தின் மாபெரும் சமயங்களின் ஸ்தாபகர்களாவர்.

சுய வளர்ச்சி, சமூகத்தின் ஒழுங்கமைப்பு மற்றும் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக இந்த அறிவை செயல்திட்டமாக முறையான வகையில் செயல்படுத்தும் வழிமுறைதான் ஆன்மீகத் தன்மை அடைதல் என்பதற்குப் பொருளாகும். ஆன்மீகத் தன்மை சம்மந்தப்பட்ட பஹாவுல்லாவின் போதனையானது பெரும் எண்ணிக்கையில் அடங்கிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது. இவைகளில் மனிதனின் இயற்கைத் தன்மை, ஆன்மாவின் வளர்ச்சி, ஆன்மீக வாழ்வு, படைப்புத் தன்மைக்கும் ஆன்மீகத் தன்மைக்கும் உள்ள உறவு, ஆன்மாவின் முன்னேற்றம் மற்றும் மனித குலத்தின் ஆன்மீக கல்விக்கான வழிமுறைகள் ஆகியவை அடங்கும்.

இந்தத் தொகுப்பில் முக்கியமான இந்த போதனைகளைச் சம்பந்தப்பட்ட பஹாய் எழுத்துக்களில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சிலவற்றைத்தான் வழங்கமுடியும்.. இதன் நோக்கம் ஆன்மீகத் தன்மை தொடர்பான பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஓர் அறிமுகம் வழங்குவதே ஆகும். மனிதகுலத்தின் ஆன்மீகத் தாகத்தைத் தீர்த்திடும் பஹாவுல்லாவின் அர்ப்பணிப்பான பஹாய் எழுத்துக்களை ஆர்வங் கொண்ட வாசகர் மேலும் ஆராய்ந்திட தூண்டப்படுகின்றார்.

எளிதாகப் பயன்படுத்துபவதற்கென இந்த நூல் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, மேலும் பல சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், அது தொடர்பான விஷயத்தை விவரிப்பதற்கு பஹாய் எழுத்துக்களிலிருந்து பொறுக்கு மணிகள் வழங்கப்பட்டுள்ளன. எல்லா பகுதிகளுக்கும் எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன; அதற்கான மூல நூல்களின் விபரம் இந்த நூலின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மூல வாசகத்தில் இந்த பகுதிகளைக் கண்டறிய இது உதவும். ஒரு சுருக்கமான முன்னுரை இந்த நூலின் ஒவ்வொரு பகுதியையும் அறிமுகம் செய்யும். வழங்கப்படும் பகுதிகள் யாவும் வெவ்வேறு நயங்களைக் கொண்டுள்ளன. இதன் காரணம் யாதெனில், இந்த நூல் ஐந்து மூலாதாரங்களிளிருந்து வாசகங்களைத் தொகுத்துள்ளது — இவை பஹாவுல்லாவின் எழுத்துக்கள், அவருடைய முன்னோடியான பாப் அவர்காளின் எழுத்துக்கள், மற்றும் பஹாய் சமயத்தின் தொடர்ச்சியான அதிகாரத் தலைமைத்துவங்கள் ஆகியோரின் எழுத்துக்கள்: அப்துல் பஹா, ஷோகி எஃபென்டி மற்றும் உலக நீதி மன்றம் ஆகியவை. இவற்றின் நயம் வேறுபட்டு இருந்த போதிலும், இதன் சாரம் சம்மந்தப்பட்ட பகுதிகளைப்பற்றி பஹாவுல்லாவின் போதனைகளின் தெளிவான பிரதிபலிப்பை வழங்குகின்றன.

“எமது வார்த்தைகளெனும் சமுத்திரத்தில் உங்களை மூழ்கச் செய்வீர்களாக” என்று பஹாவுல்லா மனித குலத்தை அழைக்கின்றார், “அதன் வழி அதன் இரகசியங்களை நீங்கள் அறிந்திடக் கூடும்” ஆவலோடு தேடும் ஒவ்வொருவரும், இச்சமுத்திரத்தின் ஆழங்களை அடைய தன்னை தூண்டிக்கொண்டு முயற்சிக்கவேண்டும் என்று பஹாவுல்லா உற்சாகம் அளிக்கின்றார். இதன் வாயிலாகத் தன் தேடும் ஆவலின் அளவிற்கேற்பவும், தான் செய்யும் முயற்சிகளுக்கேற்பவும், அவன் வெகுமதிகளைப் பெறக் கூடும். இந்தப் போதனைகளில், ஆன்மா, சமுதாயம், மற்றும் மனிதனின் நோக்கத்தைப் பற்றி பஹாவுல்லா ஒரு புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அறிவினை வழங்குகின்றார்.