மனித வாழ்வு தன்னிச்சையானது அல்ல. அது மனிதனை சுற்றியுள்ளோரையும் சூழ்நிலையையும் உள்ளடக்கியதாகும். முழுநிறைவான தன்னிச்சை கடவுளுக்கே உரியாதாகும். மனிதன் தன் உலக வாழ்விற்கு சுற்றுச்சூழலோடு இணைக்கப்பட்டுள்ளவன் ஆவான். உதாரணமாக, 10 நிமிடங்களுக்கு காற்று மண்டலம் திடீரென காணாமல் போய்விட்டால் உயிரிணங்கள் அனைத்துமே அழிந்துவிடும். எத்தகைய ஜாம்பவான் ஆனாலும் காற்றின்றி 10 நிமிடங்களுக்கு மேல் வாழமுடியாது. நீரின்றி ஐந்து நாட்களுக்கு மேல் வாழ முடியாது மற்றும் உணவின்றி சுமார் பதினாறு நாட்களுக்கு மேல் வாழமுடியாது. ஆக மனிதன் ஒன்றும் தன்னிச்சையாக வாழ வல்லமை படைத்தவன் அல்ல. அவனை மீறிய சக்திகள் உண்டு. அவற்றுடன அவன் இணைந்தே வாழ வேண்டும். மழை, வெயில், காற்று, மண் ஆகியவற்றின் இணைப்பு அவனுக்கு அவசியமாகின்றன. இவற்றோடு அவன் ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அவன் உயிர்வாழ்வதற்கான ஆதாரங்களை வழங்குகிறது.
மனிதன் தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது தன் தாயையே முழுமையாக நம்பியிருக்கின்றான். தொப்புள் கொடியின் மூலமாக அவனுக்குத் தேவையான ஊட்டங்கள் கிடைக்கின்றன. அவனும் அதன் மூலமாக தன்னையும் தன் அவயங்களையும் வளர்த்துக்கொள்கின்றான். இதுவே முதல் இணைப்பு. பிறந்த பிறகு தன் தாயாரிடம் தாய்ப்பால் அருந்தி வளர்ச்சியடைகின்றான். வளர வளர தன் தாய்க்கு அடுத்தபடி தன் தகப்பனோடும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களோடும் இணைப்பேற்படுகிறது. அதன் மூலமாக அவன் சிறிது சிறிதாத தன்னைப்பற்றியும் தன்னைச் சுற்றிலும் உள்ளவை குறித்தும் விழிப்புணர்வு பெறுகிறான். மேலும் பல இணைப்புகள் அவனுடைய உறவினர்களின் வாயிலாக ஏற்படுகிறது. தக்க வயது வந்தவுடன் பள்ளி செல்கின்றான். அங்கு ஆசிரியர் இணைப்பின் வாயிலாக அவன் கல்வி கற்று தன் அறிவை வளர்த்துக் கொள்கின்றான். அங்கு நண்பர்களின் இணைப்பேற்படுகிறது. இந்த நட்பின் வாயிலாக அவன் சமூக விழிப்புணர்வு பெறுகிறான். தக்க வயது வந்தவுடன் ஒரு பெண்ணோடு இணைப்பு ஏற்படுகிறது. திருமணம் எனும் இணைப்பின் வாயிலாக அவன் சந்ததி வளர்கின்றது. மற்றும் வேறு பல இணைப்புகளும் அவனுக்குத் தேவைப்படுகின்றன.
இவ்விதமாக மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவனுக்கு பலவிதமான இணைப்புகள் அவசியமாகின்றன. இத்தகைய லௌகீக இணைப்புகள் இன்றி அவன் இவ்வுலகில் வாழமுடியாது. ஒரு வேளை யாருமே இல்லாத வனாந்தரத்தில் ஒரு யோகியைப் போன்று வாழமுடியும் என கூறலாம். சற்று ஆழ சிந்தித்தோமானால் அங்கும் அவன் தன்னைச் சுற்றிலுமுள்ள இயற்கையோடு இணைந்துள்ளான் மற்றும், வாழ்வதற்காக அது அவனுக்கு வாழ்வாதாரங்களை வழங்குகின்றது. மனிதன் எங்கு சென்றாலும் அவனுக்கு வாழ்வாதார இணைப்புகள் இன்றியமையாதவையாகும். அவன் முற்றிலும் தன்னிச்சையாக வாழவே முடியாது. இதன் காரணமாகவே மனிதன் சுற்றுசூழலுக்கு மரியாதை அளிக்க வேண்டும். சுற்றுச் சூழல் பாழ்பட்டால் இணைப்புகள் பாழ்பட்டு மானிடமும் பாழ்பட்டுவிடும். இன்று உலகில் அதுதான் நடக்கின்றது.
இதுவரையிலும் லௌகீக இணைப்புகள் குறித்து ஆய்வு செய்தோம். அவற்றிலிருந்து மானிடம் ஏதோ ஒரு வடிவமைப்பின் ஓர் அங்கமென்பது தின்னப்பட்டுள்ளது. அவ்வடிவமைப்பில் தன்னை இணைத்துக்கொள்ளாமல் அவன் வாழமுடியாது. அண்டசராசரங்களை காண்போம். அவை யாவும் ஒரே விதிமுறையின் கீழ் இயங்குகின்றன. மானிடமும் இதற்கு உட்பட்டதுதான். நாம் எங்குமே ஓடி ஒளிய முடியாது. இணைப்புகளுக்கு காரணமானது ஒரு வடிவமைப்பெனும் போது அதை உருவாக்கியது யார் எனும் கேள்வி எழக்கூடும். எல்லையற்ற அண்டசராசரங்கள் மற்றும் படைப்பினங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து சீராக இயங்க வைக்கும் இந்த சக்தி யாது? ஒரு கடிகாரத்தை எடுத்துக்கொள்வோம். அது சீராக இயங்குவதற்கு அதன் கூறுகள் சீராக இணைந்துள்ளதே காரணமாக இருக்கின்றது. இப்பிரபஞ்சத்தின் இயக்கமுறைக்கு அதே கடிகாரத்தை உதாரணமாக கொள்ளலாம். சீராக இயங்கும் கடிகாரம் தானாக உருவாகிடவில்லை என்பது நமக்குத் தெரியும். ஒரு கடிகாரத்தின் கூறுகளை ஒரு புட்டிக்குள் போட்டு எவ்வளவுதான் உலுக்கினாலும் அவை தாமாக ஒன்று சேர்ந்து ஒரு கடிகாரமாக உருவெடுக்க முடியாது. அதற்கு திறன்மிக்க வல்லுனர் ஒருவர் தேவை. கடிகாரக் கூறுகளை அவர் மட்டுமே ஒன்றுசேர்த்து கடிகாரத்தை உருபெறச் செய்யமுடியும். அதே போன்று இந்த அண்டசராசரங்கள், இப்பிரபஞ்சம் தாமாக உருவெடுத்தன என கூறுவதும் பிதற்றலாகும். ஏதோ ஓர் ஆற்றலும், வல்லமையும், பெரும் நுண்ணறிவும் மிக்க சக்தி சிருஷ்டிக்கு காரணமாக இருக்கவேண்டும். சுருக்கமாக, அச்சக்தியை கடவுள் என கூறிவிடலாம். ஆக, யாவற்றையும் படைத்த கடவுள் படைப்பு அனைத்தையும் ஒரே வடிவமைப்பின் கூறுகளாக ஆக்கியுள்ளார். இந்த வடிவமைப்பிற்கு உட்பட்டு அதோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு நாம் இயங்கும் வரை பிரச்சினை இல்லை. அதற்கு மாறாக, மனிதன் தன்னிச்சையாக இவ்வடிவமைப்புக்கு எதிராக செயல்பட முயலும் போது பிரச்சினைகள் உருவாகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடு இதற்கு நல்ல உதாரணமாகும்.
மானிடம் உட்பட படைப்பனைத்தும் ஒரே வடிவமைப்பு, ஒரே ஆற்றலுக்கு உட்பட்டவை என்பதே உட்கருத்து. அனைத்துமே இசக்தியின் கீழ் ஒன்றாக இணைந்துள்ளன. மானிடத்தின் கூறுகள் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. மனிதன் இச்சூழ்நிலைக்கு எதிர்மாறாக நடக்க முயலும் போது உலகத்தில் பிரச்சினைகள் உருவாகின்றன.
அனைத்தையும் உருவாக்கியுள்ள இறைவன் தம்மை முழுமையாக பிரதிபலிக்கும் ஆற்றலை மனிதனுக்கு மட்டுமே வழங்கியுள்ளார். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு இதுவே அர்த்தமாகும். ஆனால் மனிதன் இவ்வுண்மையை முதலில் உணரவேண்டும். உணர்ந்து இறைவன்பால் தன் முகத்தைத் திருப்பி அவரோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்ட பிறகே மனிதன் கடவுளின் பன்புகளை வெளிப்படுத்திட இயலும்.
அப்படியானால் கடவுளோடு நாம் எப்படி ஓர் உறவை, ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது?
ஒரு குழந்தைக்கும் அதனை பெற்றெடுத்த தாய்க்கும் இடையே ஓர் இணைப்பு, ஓர் உறவு இயல்பாகவே ஏற்படுகின்றது. ஆனால், மனிதனுக்கும் அவனை படைத்த கடவுளுக்கும் இடையே அத்தகைய உறவு இயல்பாக ஏற்பட வழியில்லை. இவ்வுறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆற்றல் மனிதனிடம் உட்படையையாக மட்டுமே உள்ளது. மனிதன் தன் அறிவாலும் தன் சுய முயற்சியாலும் அத்தகைய ஆற்றலை மேம்படுத்திக்கொண்டு கடவுளோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது கடவுளின் விதி. அதை மனிதனால் மாற்றிட முடியாது. இதுதான் கடவுளின் சோதனை என்கின்றோம். கடவுளை உண்மையாக நேசிப்பவரிடமிருந்து மற்றவர்களை இது பிரித்துக்காட்ட உதவுகின்றது.
மனிதன் தன் உலக வாழ்வின்போது ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய பிணைப்புகளுள் அவன் சகலத்தையும் படைத்தவரான தன் படைப்பாளரோடு ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்பே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும், தனி மனித வளர்ச்சியிலிருந்து உலக மேம்பாடு அனைத்திற்கும் இந்த உறவின் வலுவே தீர்வாக இருக்கின்றது, இருக்கவும் வேண்டும்.
மனித அறிவிற்கு அப்பாற்பட்ட கடவுளை மனிதன் நெருங்க முடியாது. அவனுக்கு அந்த ஆற்றல் கிடையாது .எவ்வளவுதான் அழகு படைத்திருந்தாலும் ஓர் அழகிய சித்திரம் தன்னை வரைந்த சித்திரக்காரனை அறிந்துகொள்ளமுடியாது. அதே போன்று ஓர் அழகிய சிற்பம் தன்னை உருவாக்கிய சிற்பியை அறிந்துகொள்ள இயலாது. அதே போன்று மனிதனும் தன்னைப் படைத்த கடவுளை நேரடியாக தெரிந்துகொள்வது இயலாததாகும். இதன் காரணமாகவே கடவுள் தம்மை முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய தெய்வ அவதாரங்களை படைத்துள்ளார் மற்றும் காலத்திற்கு காலம் உலகை உய்விக்க அவர்களை பூமிக்கு அனுப்பியும் வைக்கின்றார். இவர்கள் அனைவரும் காலத்திற்கு காலம் உலகில் தோன்றி தம் மூலமாக மனிதன் கடவுளை அறிந்துகொள்ள உதவுகின்றனர் மற்றும் கடவுள் மனிதனுக்காக விதித்துள்ளவற்றை வெளிப்படுத்தவும் செய்கின்றனர். இத்தகைய வெளிப்பாட்டின வாயிலாக மனிதன் ஆன்மீக வளர்ச்சியுற முடியும் மற்றும் உலகில் ஒரு புதிய நாகரிகமும் தலையெடுத்திட முடியும். ஆனால், இம் மேம்பாடு மனிதன் கடவுளின் அவதாரங்களின் வாயிலாக இறைவனோடு ஓர் இணைப்பை ஏற்படுத்திகொள்ளும் போது மட்டுமே நிறைவேறும். இந்த இணைப்பே எல்லா இணைப்புகளிலும் நித்தியமான இணைப்பாகும்.