Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘இரட்டைப் பிறந்தநாள்கள்’


மூலம்: http://www.huffingtonpost.co.uk/genevieve-seri/200-years-since-his-birth_b_18094870.html

பஹாய் சமயத்தின் ஸ்தாபகராகிய பஹாவுல்லா பிறந்த 200-ஆம் நினைவாண்டு குறித்த கொண்டாட்டங்கள் உலகத்தின் எல்லா பாகங்களிலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான, சமுதாயத்தின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பகுதியையும் உள்ளடக்கிய கொண்டாட்டங்கள் உலகின் சீர்திருத்தத்திற்காக ஒன்றுபடவும் பங்களிப்பதற்காகவும் உதவேகமுற்றுள்ளன. பஹாவுல்லாவின் செய்தி இதுதான், “இதுவே, இறைவனின் மிகச் சிறந்த சலுகைகள் மனிதர்மீது பொழியப்பட்டுள்ள நாள்; அவரது வலுமிக்கக் கிருபை எல்லாப் பொருட்களினுள்ளும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ள நாள். தங்களிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றி மீண்டும் ஒன்றிணைந்து, பூரண ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் அவரது பாதுகாப்பு, அன்புப்பரிவு என்னும் விருட்சத்தின் நிழலின் கீழ் வாழ வேண்டியது உலக மக்கள் அனைவருக்கும் கடமையாக்கப் பட்டுள்ளது ” என பஹாவுல்லா பிரகடனப்படுத்தியுள்ளார்.

200.png

பஹாவுல்லாவின் 200-ஆம் பிறந்த தினத்தை கொண்டாடுதல்

 

 

இருநூறாம் நினைவாண்டு விழா கொண்டாட்டங்கள் பஹாய் சமயத்தின் ஒரு மைய கருத்தாக்கத்தைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன – மானிடத்திற்கான சேவை. சேவை என்பது தனிநபர்கள் தன்னிச்சையாக எந்நேரத்திலும் ஆரம்பிக்கக்கூடிய ‘தற்செயல் நடவடிக்கைகள்’ மட்டுமல்ல, மாறாக அவை அண்டைப்புற மட்டத்தில் வளர்ச்சியுறும் மற்றும் அம்மக்களின் தேவைகளின்பால் கவனம் செலுத்தக்கூடிய நடவடிக்கைகளை அது குறிக்கின்றது. அவை, குழந்தைகளின் ஆன்மீக மற்றும் தார்மீக கல்வியை, இளைஞர்களுக்கான சக்தியளிப்பு, பிரார்த்தனைகளின் மூலம் மக்களை ஒன்றுசேர்க்கும் கூட்டங்கள், சேவைக்கான திறன்கள் மற்றும் திறமைகளை உருவாக்கிடும் படிப்பு வட்டங்கள் ஆகியவற்றை அவை உள்ளடக்குகின்றன. இந்த நடவடிக்கைகள் அனைவருக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ளதே அவற்றின் சிறப்பாகும் – எந்த சமயத்தை சேர்ந்தவரோ சேராதவரோ அவர்கள் அனைவருக்காகவும்.

இந்த வேகமாக வளரும் சமூகத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் உள்ளூர் அளவில், அண்டைப்புற அளவிலும் கூட நடைபெறுகவதே இதில் மனதை மிகவும் கவர்வதாக இருக்கின்றது. ‘என்றென்றும் தொடர்ந்து முன்னேறிடும் நாகரிகத்தினை மேலும் முன்னேற்றமடையச் செய்யவே மனிதரெல்லாம் படைக்கப்பட்டுள்ளனர்’ என பஹாவுல்லா கூறியுள்ளார். தங்களின் சொந்த சமூகத்தில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை உண்டுபன்னும் தனிநபர்களின் முயற்சிகளில்  இந்த உண்மை பிரதிபலிக்கப்படுகின்றது. விழாக்களுக்காகவும் இன்பத்திற்காகவும் மட்டுமின்றி — ஒரு குறிக்கோள்மிகு வழியில் மக்களை ஒன்றுதிரட்டுவது –சக்திமிக்கதாகி ஒரு சிறிய சூழலில் வெளிப்படையாக தென்படவும் செய்கின்றது.

ஆனால் பஹாவுல்லா என்பார் யார்? இரான் நாட்டின் தலைநகரில், 12 நவம்பர் 1817-இல் பிறந்த பஹாவுல்லா ஷா மன்னரின் சபையில் ஒரு பிரபலமான அமைச்சரின் மகன் என்பதோடு, சிறுவயது முதல் அசாதாரன பண்புகளையும் விவேகத்தையும் வெளிப்படுத்தினார். அரசசபையில் தமது தந்தை வகித்த அதே பதவியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்டோருக்கு, நோயுற்றோர் மற்றும் ஏழைகளுக்கு உதவுவது ஆகியவற்றில் தமது நேரத்தை செலவழித்து, விரைவில் நீதியின் வாகையராகினார். அவர் மக்களின் மேம்பாட்டிற்கும் கல்விக்கும் தொடர்ந்து தம்மை அர்ப்பணித்து வந்தார்.

இக்காலத்திற்கான கடவுளின் தூதர் எனவும், கடந்தகால சமயங்களின் தீர்க்கதரிசனங்கள் அனைத்தின் நிறைவேற்றுனர் எனவும் பஹாய்களால் கருதப்படும் பஹாவுல்லா, மானிடத்தின் ஒருமையைப் பிரகடனப்படுத்தியதோடு, எல்லாருமே ஒரே கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பேணப்படுகின்றனர் என போதித்தார். ஆண் பெண் சமத்துவம், தப்பெண்ணங்களை நீக்குவது, அறிவியல், சமயம் இரண்டிற்கிடையில் இணக்கம், சர்வலோக கல்விக்கான அவசியம் ஆகிய கோட்பாடுகளை அவர் ஊக்குவித்தார். சமயங்கள் அனைத்தும் ஒரே மூலாதாரத்திலிருந்து உதித்தும், இயல்பில் அவை படிப்படியான முன்னேற்றம் காண்பவை எனவும் அவர்  விளக்கினார்; இக்காலத்திற்கான கடவுளின் போதனைகள், தற்போது முதிர்ச்சியை நோக்கி அணுகிவரும்  ஒரு மானிடத்தின் சூழலுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன. கிழக்கு தேசங்களின் அரச்ர்களும், இரான் நாட்டின் மதகுருக்களும் பஹாவுல்லாவுக்கு எதிராக முன்னெழுந்தனர்; அவர் சித்திரவதை செய்யப்பட்டார், ஏளனம் செய்யப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார். அதன் பிறகு இரான் நாட்டிலிருந்து பாக்தாத்திற்கும், பிறகு துருக்கி நாட்டிற்கும், இறுதியாக இஸ்ரேல் நாட்டின் சிறை நகரான அக்காநகரில் சிறை வைக்கப்பட்டும், அங்கேயே 1892-இல் விண்ணேற்றமும் அடைந்தார்.

பஹாவுல்லாவின் மேன்மையை குறைப்பதற்கு அவரின் எதிரிகள் முயன்று வந்த அதே வேளை, அவரது புகழும் செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகரிந்து வந்தன. அவர் இழப்பீடு ஏதுமின்றி இன்னல்கள் அனுபவித்தார்; அன்பு, அமைதி, தன்மைமாற்றம் ஆகியவை குறித்த அவரது போதனைகள் மில்லியன் கணக்கான உலகவாசிகளைச் சென்றடைந்தன. பஹாய்களும், அவர்களின் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளும் இன்று உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படலாம்.

இப்போதனைகள் சிலருக்காக மட்டும் வந்த போதனைகள் அல்ல, அல்லது இருநூறாம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் அதன் சொந்த நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் உரியவையுமல்ல. அது உரையாடல்கள், உடனுழைப்பு, எல்லாரின் வலிமைகளிலிருந்தும் பயன் பெற கற்றுக்கொள்வதற்குமான வாய்ப்பாகும்எல்லாவிடங்களிலும், ஒவ்வொரு மட்டத்திலும், வாழ்க்கையின் செயல்முறைகள் நாம் ஒன்றுபடுவதைச் சார்ந்துள்ளன, பிரித்திடுவதிலல்ல. “மனித இனத்தின் ஒற்றுமை வலுவாக நிலைநாட்டப் படாதவரையில் அதன் நலமும், அமைதியும், பாதுகாப்பும் அடையவே முடியாதவையாகும்,” என பஹாவுல்லா குறிப்பிடுகின்றார். ஒற்றுமைக்கான இச்செய்தியும் அதனை அடைவதற்கான செயல்திட்டமும் போர்களைத் தவிர்ப்பது, அல்லது ஒருவருக்கு ஒருவர் நயத்துடன் நடந்துகொள்வதற்கும் மேற்பட்ட ஒன்றாகும். அது மிகவும் உயர்ந்த நிலையிலான செயல்பாட்டிற்கான ஓர் அழைப்பாகும். பஹாய் சமூகத்தைப் பொறுத்தவரை, நமது குடும்பங்களில், அண்டையர்கள், சக ஊழியர்கள், நண்பர்கள் ஆகியோரிடமே இவை அனைத்தும் ஆரம்பிக்கின்றன.

மேலும் தகவலுக்கு: bahai.org

Read Full Post »


bahji8196

பஹாய் சமயத்தின் ஒன்பது முக்கிய புனித நாள்களுள், பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, அவருக்கு முன்னோடியாக விளங்கிய பாப் பெருமானார் இருவரின் பிறந்த நாள்களும் அடங்கும். இவ்வருடமான கி.பி. 2017 பஹாவுல்லாவின் பிறப்பு குறித்த 200-வது நினைவாண்டாகும். அதே போன்று கி.பி. 2019 பாப் பெருமானார் பிறப்பின் 200-வது நினைவாண்டாகும். இவ்விருவரின் பிறந்தநாள்களைப் பற்றி குறிப்பிடுகையில், அவை இரண்டும் ஒன்றே, அவை ஒன்றாகவே கொண்டாடப்பட வேண்டுமென பஹாவுல்லா வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமிய நாள்காட்டியைப் பின்பற்றிவந்த பஹாய்களுக்கு இதில் சிரமம் ஏதும் கிடையாது. ஏனெனில், பாப் பெருமானார் முஹாரம் முதல் நாள் பிறந்தார், பஹாவுல்லா முஹாரம் இரண்டாம் நாள் பிறந்தார். அப்பிறந்தநாள்கள் இரண்டையும் ஒன்றாக இரண்டுநாள்களுக்குக் கொண்டாடுவதில் பிரச்சினை கிடையாது. ஆனால், ஆங்கில நாள்காட்டியான, கிரெகோரிய நாள்காட்டியைப் பின்பற்றும் நாடுகளில் இந்த இரட்டைப் பிறந்தநாள்களை ஒன்றாகக் கொண்டாட இயலாது. ஏனெனில், பாப் பெருமானார் ஆங்கில நாள்காட்டிக்கு இணங்க அக்டோபர் 20-ஆம் தேதியும், பஹாவுல்லா நவம்பர் 12-தேதியும் பிறந்தனர். இதன் காரணமாகவே, சென்ற வருடம் (2015) வரை இவர்களின் பிறந்தநாள்கள் பெரும்பாலான நாடுகளில் வெவ்வேறாகக் கொண்டாடப்பட்டு வந்தும், பஹாய் உலகம் அது குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமலும் இருந்தது. ஆனால், சென்ற வருடம் பஹாய்களின் தலைமைத்துவமான உலக நீதிமன்றம், இதற்கு ஒரு தீர்வைக் கண்டது. அது என்னவென பார்ப்பதற்கு முன் அதற்கு முன்பாக பஹாய் பஞ்சாங்கம் குறித்த சில முக்கிய விஷயங்களைப் பரசீலிப்போமாக.

நாள்கள்

பஹாய் நாள்கள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து அடுத்த நாள் சூரிய அஸ்தமனத்தோடு முடிகின்றன. ஆதலால் நாள்களின் ஆரம்பம் சூரிய அஸ்தமன நேரத்தைச் சார்ந்துள்ளன. நாளுக்கு நாள் இது சிறிது வேறுபடும்.

பஹாய் வருடம்

பஹாய் வருடமானது தலா பத்தொன்பது நாள்கள் கொண்ட, பத்தொன்பது மாதங்கள் அடங்கிய, அல்லது 361 நாள்களையும், சில சந்திர வருட அம்சங்களையும் உள்ளடக்கிய சூர்ய அல்லது சௌர வருடமாகும். அதாவது, ஆங்கில கிரெகோரிய வருடத்தைப் போன்று அது 365.242 நாள்கள் கொண்டதாகும். (இஸ்லாமிய வருடத்திற்கு 354.37 நாள்கள் மட்டுமே) கூடுதலாக வரும் 4 நாள்கள் (சாதாரண வருடம்) அல்லது 5 நாள்கள் (லீப் வருடம்) பஹாய் வருடத்திற்குள் உபரி நாள்களாகச் சேர்க்கப்படுகின்றன. பஹாய் வாரங்கள் இப்போது இருப்பதைப் போன்று ஏழு நாள்கள் கொண்டவை. இவற்றுக்கும் மேற்பட்டு, 19 பஹாய் வருடங்கள் ஒரு ‘வஹீட்’ (unique) எனவும், பத்தொன்பது வஹீட்கள் ஒரு ‘குல்-இ-ஷே’ (All-things) எனவும் பாப் பெருமானார் வகுத்துள்ளார். பஹாய் சகாப்தம் ஆரம்பித்த கி.மு.1844 முதல் சென்ற வருடம் (2016) மார்ச் மாதம் வரை 9 வஹீட்கள் கழிந்துள்ளன.

பஹாய் வருடப் பிறப்பு

அதிப் புனித நூலாகிய கித்தாப்-இ-அஃடாஸில் பஹாய் வருடப் பிறப்பு எப்பொழுது நிகழ வேண்டும் என்பதை பஹாவுல்லா வரையறுத்துள்ளார். பஹாய் வருடம் வெப்பமண்டல (Tropical) வருடமாகும். இது பூமி, சூரியன், இராசிகள் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. சூரியன் ஒவ்வொரு இராசியாகக் கடந்து மேஷ இராசிக்குள் பிரவேசிக்கும் அத்தருணம் பஹாய் வருடப் பிறப்பாகும். இந்த நேரம் சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாக நிகழ்ந்தாலும் அந்த நாளே வருடப் பிறப்பாகும் அல்லது அது சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நிமிடம் கழித்து நிகழ்ந்தால் அதற்கு அடுத்த நாளே புது வருடத்தின் முதல் நாளாகும். (இந்த நாளே ஆங்கிலத்தில் ‘Vernal Equinox’ எனவும் பஞ்சாங்கத்தில் ‘விஷுவ தினம்’ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது சம பகல், சம இரவு உடைய நாளும், இளவேனிற்காலத்தின் முதல் நாளும் ஆகும்.) இதன் காரணமாக, பஹாய் வருடப் பிறப்பானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம், தேதிகள் 19-லிருந்து 22 வரை  இந்த விசுவ தின கணிப்பிற்கு ஏற்பவே நிகழும். (2017-இல் மார்ச் மாதம் 19-ஆம் தேதி சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து மார்ச் 20-ஆம் தேதி சுரிய அஸ்தமனம் வரை நவ்-ருஸ் (பஹாய் வருடப் பிறப்பு) கொண்டாடப்பட்டது.

zodiac2

இந்த விஷுவம் எப்பொழுது நேருகின்றது என்பது உலகின் வெவ்வேறு பகுதிகளில் அந்தந்த நேரத்திற்கு ஏற்பவே நிகழும். ஆதலால், பஹாய் தலைமைத்துவமான உலக நீதிமன்றம், விஷுவம் நிகழும் நேரத்தைக் குறிப்பதற்கு பஹாவுல்லாவின் பிறந்தகமான பாரசீகத்தின் தெஹரான் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆதலால், தெஹரான் நகரை மையமாக வைத்து, அதற்கு ஒப்ப விஷுவம் கணக்கிடப்படுகின்றது.

இரட்டைப் பிறந்த நாள்கள்

இப்பொழுது, இரட்டைப் பிறந்த நாள்களை ஒன்றென எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றிய பிரச்சினைக்கு வருவோம். பின்வரும் பொருண்மைகளைக் காண்போம்:

  • இரண்டு பிறந்தநாள்களும் ஒன்றே என பஹாவுல்லா கூறியுள்ளார்
  • பஹாய் வருடம் சௌர (Solar) வருடமாகும்; புனித நாள்கள் இவ்வருடத்தின்படியே அனுசரிக்கப்படும்
  • சௌர வருடத்திற்குள் சந்திர வருட அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும்
  • அப்துல்-பஹாவும், ஷோகி எஃபெண்டியும் இதற்கான தீர்வை உலக நீதிமன்றத்திடமே விட்டுவிட்டனர்.

சந்திர வருட அம்சங்கள்

பாப் பெருமானார் அக்டோபர் 20-ஆம் தேதி பிறந்தார். இதற்கு சமமான இஸ்லாமிய தேதி முஹராம் முதல் நாளாகும். மேலும் சந்திர வருட கணக்கின்படி, மாதங்கள் அமாவாசையன்று (புது நிலவின் தோற்றம்) ஆரம்பிக்கின்றன. அப்படி பார்க்கும் போது பாப் பெருமானாரின் பிறப்பு அவ்வருட நவ்-ருஸ்-சிலிருந்து எட்டாவது அமாவாசையன்று நிகழந்தது. அதே போன்று பஹாவுல்லாவின் பிறப்பு முஹாரம் இரண்டாவது நாளில், நவ்-ருஸ்ஸிலிருந்து எட்டாவது அமாவாசைக்கு அடுத்த நாள்  நிகழ்ந்தது. இரண்டு பிறந்த நாள்களும் ஒன்று மற்றதைத் தொடர்ந்து வருகின்றன. இப்பொழுது இரட்டைப் பிறந்தநாள்களின் சந்திர வருட அம்சங்களை சௌர வருடத்திற்குள் எவ்வாறு சேர்ப்பது:

  1. பாப் பெருமானாரும், பஹாவுல்லாவும் முறையே முஹாரம் முதல் நாளிலும் இரண்டாம் நாளிலும் பிறந்தனர்
  2. பிறப்புகள் நவ்-ருஸ்-சிலிருந்து எட்டாவது அமாவாசையன்றும் அதற்கு அடுத்த நாளும் நிகழ்ந்தன.
  3. பஹாய் வருடம் சௌர வருடமாகும்
Fluctuations-8th-new-moon-after-naw-ruz
மாறி மாறி வரும் இரட்டைப் புனித
நாள்கள்

மேற்கண்ட மூன்று பொருண்மைகளின் அடிப்படையில் உலக நீதிமன்றம் ஒரு தீர்மானத்திற்கு வந்தது. இஸ்லாமிய நாள்காட்டியின் முஹாரம் மாதத்தைக் கருத்தில் கொள்ளாமல், எட்டாவது அமாவாசையை மட்டும் கருத்தில் கொண்டு, நவ்-ருஸ்ஸிலிருந்து எட்டாவது அமாவாசை முதல் மற்றும் இரண்டாம் நாள்களில் இரட்டைப் பிறந்த நாள்கள் கொண்டாடப்படும் என உலக நீதிமன்றம் அறிவித்தது. இது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத மத்தியிலிருந்து நவம்பர் மாத மத்தி வரை மாறி மாறி வரும். சந்திர வருடம் சௌர வருடத்திற்கு சுமார் 10.9 நாள்கள் குறைவு என்பதே இதற்கான காரணமாகும். இதன் மூலமாக சௌர வருடத்தில் இரட்டைப் பிறந்த நாள்களின் சந்திர அம்சங்களை சிறிதும் இடையூறின்றி உலக நீதிமன்றம் இணைத்து விட்டது.

Read Full Post »