கல்கி தோன்றிவிட்டார்


கல்கி அவதாரம் குறித்து பரவலான அவாத்தூண்டல் ஏற்பட்டுள்ளதை இவ்வலைப்பதிவை தினந்தோறும் நாடி வரவோரிலிருந்து காணமுடிகிறது. அதற்கான காரணம் பெரும் சிக்கலானதல்ல. இன்றிருக்கும் உலக நிலை மக்கள் மனதில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியும், இது எங்கு சென்று முடியும் என்பது குறித்தும் கேள்விகள் எழக்கூடும். அதற்கான பதில்களை பஹாவுல்லா நூறாண்டுகளுக்கு முன்பே வழங்கிச் சென்றுள்ளார். பஹாய் சமயத்தை ஆராய்வோர் அவற்றைக் கண்டிப்பாகக் கண்டுகொள்வர்.

இவ்வலைப்பதிவு நிச்சயமாகவே பஹாய் சமயத்தை பிரச்சாரம் செய்வதெனும் குறுகிய நோக்கம்கொண்டு அமைக்கப்பட்டதல்ல. இருக்கும் சமயங்களுக்கிடையில் வேறொரு புதிய சமயத்தை உட்புகுத்தி, சமய ரீதியிலான பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா அவதரிக்கவில்லை. மாறாக, கடவுளின் சமயம் ஒன்றே ஒன்றெனவும், தற்போது உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் அந்த ஒரே சமயத்தின் வெவ்வேறு அத்தியாயங்களே எனவும் அவர் போதிக்கின்றார். உலகம் ஐக்கியம் பெறுவதற்கான காலம் கனிந்துவிட்டதென அவர் எடுத்தியம்பியுள்ளார். இவ்வுண்மையை உலக மக்கள் அறிந்துகொண்டு உலக ஐக்கியத்திற்கான அடித்தலத்தை பஹாவுல்லா விசேஷமாக இக்காலத்திற்கென வழங்கியிருக்கும் போதனைகளப் பின்பற்றுவதன் வாயிலாக அமைத்துக்கொள்ள முடியும்.

இன்று உலகம் ஆன்மீகம், ஒழுக்கநெறிமுறை ஆகியவற்றின் சீரழிவினால் பெரும் அழிவுப்பாதையில் தலைதெறிக்கச் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறியின் சீரழிவு சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை பெரிதும் பாதித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நிலையை திசைதிருப்புவது எவ்வாறு? அதற்கான வழிவகைகளை அரசாங்கங்களும் மக்களும் அறிந்துள்ளனரா? அரசாங்கங்களும் அரசியல் தலைவர்களும் இதற்கு என்னதான் தீர்வு என தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இருக்கின்ற சமயங்கள் அனைத்தும் உலகப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்கிட சக்தியற்றிருக்கின்றன. ஆனால், 1863-இல் தாம் இக்காலத்திற்கான ஒரு பேரவதாரம் என தம்மை உலகறிய அறிவித்துக் கொண்ட பஹாவுல்லா நாம் வாழும் இவ்வுலகின் வழிகாட்டுதலுக்காகவும் சீர்திருத்தத்திற்காகவும் தாம் கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இக்காலத்திற்கான அவதாரம் என அறிவித்துள்ளார். அவ்வாறு பிரகடனப்படுத்திய போதிலும், மக்கள் தம்மையும் தமது போதனைகளையும் தன்னிச்சையாக ஆய்வு செய்த பிறகே தம்மைக் குறித்த ஒரு முடிவிற்கு வரவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக நிலைமை குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

உலகம் பிரசவவேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது; நாளுக்கு நாள் அதன் கலவரம் அதிகரித்து வருகின்றது. அதன் முகமோ கீழ்ப்படியாமை, அவநம்பிக்கை ஆகியவற்றின்பால் திருப்பப்பட்டுள்ளது. அதன் அவலநிலை அத்துணை மோசமடையவிருப்பதனால் அதனை இப்பொழுது பகிரங்கப்படுத்துவது பொருத்தமுமன்று, சரியுமன்று. அதன் முறைகேடான நடத்தை நெடுங்காலத்திற்குத் தொடரும். அக்குறிப்பிட்ட நேரம் வந்ததும், மனித இனத்தின் அங்கங்களையே நடுக்கமுறச் செய்யக்கூடியதொன்று திடீரெனத் தோன்றும்; அப்பொழுதுதான், தெய்வீகக்கொடி அவிழ்த்துப் பறக்கவிடப்படும்; விண்ணுலக இராப்பாடி அதன் இன்னிசையை ஒலித்திடும்.

இங்கு பஹாய் நம்பிக்கையாளர்களின் கடமை, பஹாவுல்லாவின் போதனைகளை உலகிற்கு எடுத்துரைப்பதே ஆகும். அதற்கு மேல் எவ்வழி செல்வதன்பது அவரவரின் சுயத்தேர்வாகும். குறைந்த பட்சமாக பஹாவுல்லாவின் போதனைகளை உலகம் அறிந்துகொண்டால், அவசியம் நேரும் போதோ தீர்வுகள் தேவைப்படும்போதோ எங்கு திரும்புவது எனும் கேள்விக்கு இடமிருக்காது.

பஹாவுல்லா பெரும் செல்வந்தராகப் பிறந்தபோதும், அவர் இறுதியில் சிறைச்செய்யப்பட்டும், சங்கிலிகளால் பிணைக்கப்பட்டும், தமது செல்வங்கள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில், தமது தாயகத்திலிருந்து நிரந்தரமாக நாடுகடத்தப்பட்டார். அவர் தாம் உலகிற்கு வெளிப்படுத்திய நற்செய்தியின் பிரதிபலனாக தாம் அனுபவித்த துன்பங்கள் குறித்து பின்வருமாறு கூறுகின்றார்:

புராதன அழகானவர்(பஹாவுல்லா), மனித இனம், அதன் அடிமைத்தளையிலிருந்து விடுதலைப்பெற வேண்டும் என்பதற்காகவே, அவர் சங்கிலியினால் பிணைக்கப்படுவதற்கு இணங்கி இருக்கின்றார்; உலகனைத்தும் உண்மையான சுதந்திரம் பெறக்கூடும் என்பதற்காகவே, அவர், அதி வலுமிக்கக் கோட்டையினுள் கைதியாக்கப்படுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். உலக மக்கள் எல்லையிலாக் களிப்புற்று, மகிழ்ச்சியினால் நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக அவர் கடுந்துன்பமெனும் கிண்ணத்தை அடிமண்டிவரை உலரச் செய்துள்ளார். இதுவே இரக்கமும், அதி கருணையும் மிக்க உங்களது பிரபுவின் அருளிரக்கமாகும். இறைவனின் ஒருமைத்தன்மையில் நம்பிக்கையுடையோரே, நீங்கள் மேன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக யாம் இழிவுப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொண்டோம். நீங்கள் வளம் பெற்றுத் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவே யாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்திட்டோம். உலகனைத்தையுமே புதுப்பிக்க வந்துள்ள அவரை, எவ்வாறு, இறைவனுடன் பங்காளிகளாகச் சேர்ந்துள்ளவர்கள் மிகப்பாழடைந்த நகரங்களுள் ஒன்றினில் வற்புறுத்திக் குடியிருக்கச் செய்துள்ளனர் என்பதைப் பாருங்கள்!

பஹாவுல்லா தமது சமயத்தின் நோக்கம் குறித்தும் தற்போது உலகில் நிகழ்ந்துவரும் குழப்பங்கள் குறித்தும் உரைத்துள்ளார்:

கடவுள் சமயத்தின் நோக்கம்

மேன்மைமிகு திருவுருவானவர் மொழிகின்றார்: மனிதரின் குழந்தைகளே! இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கம்: மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும். அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர். இதுவே நேர்வழி; நிலையான, அசைக்கவியலாத அஸ்திவாரத்தைக் கொண்டுள்ளது. எவையெல்லாம் இவ் வஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளனவோ, இவ்வுலகத்தின் மாற்றங்களும் தற்செயல் நிகழ்வுகளும் அவற்றின் பலத்தைப் பாதிக்கவோ, எண்ணற்ற நூற்றாண்டுகளின் புரட்சிகள் அதன் அமைப்பினை வலுவிழக்கச் செய்யவோ இயலாது. 

உலக சீர்திருத்தத்திற்கு கலந்தாலோசனை அவசிம்

உலகத்தின் மதத் தலைவர்களும் அதன் மன்னர்களும், இக் காலத்தைச் சீர்த்திருத்தவும், அதன் பாக்கியத்தை மறுசீரமைப்பதற்காகவும் ஏகமனதாக எழுவார்கள் என்பதே எமது நம்பிக்கையாகும்.அதன் தேவைகள் சம்பந்தமாக ஆழ்ந்து சிந்தித்த பின், அவர்கள், கூட்டாகக் கலந்தாலோசித்து, அக்கறையுடன் கொண்ட ஆழ்ந்த யோசனையின் மூலம், நோயுற்று, கடுந் துன்பத்தில் இருக்கும் உலகத்திற்குத் தேவையான சிகிச்சை அளித்திடட்டும். அதிகாரம் படைத்தோர், எல்லாக் காரியங்களிலும், நிதானத்தைக் கையாளவேண்டியது கடமையாகின்றது. எவை நிதானத்தின் எல்லையைக் கடக்கின்றனவோ அவை நன்மை பயக்கும் சக்தியை இழந்திடும். உதாரணமாக, சுதந்திரம், நாகரிகம் ஆகியவற்றைக் கவனியுங்கள். புரியுந்திறன் கொண்டுள்ள மனிதர் எவ்வளவுதான் அவற்றைக் குறித்து அனுகூலமான கருத்தினைக் கொண்டிருப்பினும், அவை, வரம்பு மீற விடப்படுமாயின், அவை மனிதரில் மிக மோசமான தாக்கத்தைத் தான் உண்டு பண்ணும்…. இறைவா, மனிதர் மத்தியிலுள்ள ஆட்சியாளர்கள், விவேகிகள், கற்றோர் முதலியோரின் கடுமுயற்சிகளின் விளைவாக உலக மனிதர்கள் தங்களுக்கு நன்மை பயக்கவல்லவற்றைக் கண்டிட வழிகாட்டப் படுவராக.

உலகம் தற்போது தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது

எத்தனை காலந்தான் மனித இனம் தனது தவறான வழியில் பிடிவாதமாக இருந்திடும்? எத்தனை காலந்தான் அநீதி தொடர்ந்திடும்? எத்தனை காலந்தான் மனிதரிடையே ஒழுங்கின்மையும் குழப்பமும் ஆட்சி செலுத்திடும்? எத்தனை காலந்தான் முரண்பாடு சமுதாயத்தின் வதனத்தைக் கிளர்ச்சியுறச் செய்திடும்? நம்பிக்கையின்மை என்னும் காற்று, அந்தோ, எல்லாத் திசைகளிலிலிருந்தும் வீசிக்கொண்டு இருக்கின்றது; மனித இனத்தைப் பிளவுறச் செய்து வேதனைப்படுத்திடும் மாறுபட்ட கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வரவிருக்கும் கொந்தளிப்புகள், பெருங்குழப்பங்கள், ஆகியவற்றின் அறிகுறிகள் இப்பொழுது காணப்படுகின்றன; ஏனெனில், வழக்கிலிருக்கும் அமைப்புமுறைகள் வருந்தத்தக்கக் குறைபாடு உடையனவாகத் தோன்றுகின்றன. உலக மக்களை விழிப்புறச் செய்திடவும், அவர்களின் நடத்தை தங்களுக்கு நன்மை செய்யவல்லதாய் ஆவதற்கு உடன்படவும், அவர்களின் நிலைக்குப் பொருத்தமானதனைச் சாதித்திட உதவிடவும் ஆண்டவன், அவரது ஒளி உயர்வு பெறுமாக, அருள் பாலித்திட நான் வேண்டிக் கொள்கின்றேன்.