பெரும்பாலும் கிராமப்புரங்களில் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்கள் இன்று சமுதாய மேம்பாட்டின் பயனாக சிறிது சிறிதாக வெளிநகர் பகுதிகள் அல்லது அது போன்ற சூழ்நிலையில் வாழ்கின்றனர். கடந்தகாலத்தில் கூட்டு வாழ்க்கை என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றியுள்ளோரோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தான். ஆனால் இன்று அது சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. தன் பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் யார் என்பது கூட தெரியாமல் வாழ்கிறார்கள். பிணைப்புகள் சிறிது சிறிதாக தோய்ந்துகொண்டிருக்கின்றன.
மனிதன் தன் வாழ்க்கை சூழ்நிலையோடு இரு விதத்தில் பிணைக்கப்பட்டுள்ளான். ஒன்று, பௌதீகம் மற்றது ஆன்மீகம். ஒன்று பொருள் சார்ந்தது, மற்றது ஆவி சார்ந்தது.
முதலாவதாக, மனிதன் தன் பிறப்பிற்கு முன் தாயின் கர்ப்பத்தில் தொப்புள் கொடியின் வாயிலாக தன் தாயோடு மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தான். அந்த கர்ப்ப உலகில் அவனுக்கு தேவைப்பட்ட ஊட்டம் அனைத்தும் அவன் தன் தாயோடு கொண்டிருந்த அந்த பிணைப்பின் வாயிலாக அவனுக்கு கிடைத்து வந்தது மற்றும் அப்பிணைப்பின் வாயிலாகவே அவன் வளர்ச்சியும் அடைந்தான். ஆனால், கர்ப்ப உலகில் தொப்புள் கொடியின் பிணைப்பு அறுபட்டால், குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிணைப்பு துண்டிக்கப்பட்டால், குழந்தை மடிந்துவிடும்; அதற்கு மாற்று கிடையாது. மேலும் கூறப்போனால், மனிதன் கர்ப்ப உலகில் எப்போதுமே தன்னிச்சையாக வாழவில்லை, வாழவும் முடியாது. கர்ப்ப உலகில் குழந்தைக்கு தன்னிச்சையென்பது இறப்பிற்கு சமமாகும்.
இரண்டாவதாக, பிறப்பிற்கு பின் தக்க வயது வந்து அக்குழந்தை தன் வாழ்வை தானே நிர்ணயித்துக்கொள்ளும் காலம் வரை தாய்க்கும் சேய்க்கும் உள்ள தொடர்பு வேறு வகைகளில் நீடிக்கின்றது. மனிதன் கர்ப்ப உலகிலிருந்து இயலுலகிற்குள் பிரவேசிக்கும் போது தொப்புள் கொடி அறுபடுகிறது. தாய்க்கும் சேய்க்கும் உள்ள பௌதீக தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால், எல்லா தாய்மார்களுக்கும் இயல்பாகவே உள்ள தாய்-சேய் இயல்புணர்வான மற்றும் ஆன்மீக ரீதியான இணைப்பு தொடர்கிறது, அது தாயன்பாக, பாசமாக வெளிப்படுகிறது. தாய் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறாள், உணவூட்டுகிறாள், குழந்தையின் நலனை பேணிப் பாதுகாக்கிறாள், அக்குழந்தைக்கு கல்வியளிக்கின்றாள். தொப்புள் கொடியின் இணைப்பைப்போல் இத்தகைய ஆன்ம இணைப்பும் அதன் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த இணைப்பு இறுக்கமாக இருக்கும் வரை குழந்தையின் உடல்நலன், மனநலன், ஆன்மநலன் யாவும் அதன் தாயின் மூலமாக பாதுகாக்கப்படுகின்றன.
தாய்க்கும் சேய்க்கும் இருக்கும் இந்த இரண்டாவது வகையான பிணைப்பைப் போன்றே மனிதன் இயலுலகோடு பிணைக்கப்பட்டுள்ளான். பௌதீக ரீதியில் அவனுக்கு தேவைப்படும் யாவும் இப்பூமியின் வாயிலாகவே அவனுக்கு கிடைக்கின்றது. உணவு, நீர், பிராணவாயு போன்றவற்றை நாம் இங்கு முக்கியமாக குறிப்பிடலாம். மனிதன் உயிரோடு இருக்கும் வரை அவன் இப்பிணைப்பிலிருந்து தப்பிக்க முடியாது. படைப்புலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஓரிடம் உள்ளது, ஆனால் அது தன்னிச்சையானது அல்ல. மனிதன் தன் சூழ்நிலையோடு, தன்னினைவில்லாமல் பிணைக்கப்பட்டுள்ளான். உதாரணமாக, காற்று மண்டலத்தை விட்டு மனிதன் பத்தே நிமிடங்கள் அகன்றால் அவன் நிலை என்னவாகும்? இதுதான் அவனுடைய மெய்ம்மை.
தாயையும் சேயையும் இணைக்கும் தொப்புள் கொடி போன்றே கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ஓர் பிணைப்பு உள்ளது. அது ஓர் ஆன்மீக, உறுதிமிகு பிணைப்பாகும். ஆனால், இங்கு ஒரு வேறுபாடு உள்ளது. கர்ப்பத்தில் தாயோடு கொண்டிருக்கும் சேயின் பிணைப்பு தன்னிச்சையானதல்ல. குழந்தை என்னதான் முயன்றாலும் அப்பிணைப்பை தானே துண்டித்துக்கொள்ள முடியாது. ஆனால், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள பிணைப்பு மனிதனின் விருப்பத்தை பொறுத்த ஒன்றாகும். மனிதன் விரும்பினால் மட்டுமே அவன் அந்த ஆன்மீகத் தொடர்பில், பிணைப்பில் ஈடுபடமுடியும். இது கடவுள் மனிதனுக்கு வழங்கியிருக்கும் பல ஆற்றல்களில் ஒன்றான தன்விருப்ப ஆற்றல் குறித்ததாகும் (free-will).
இந்த இரண்டாவது வகையான இணைப்பின் வாயிலாகவே மனிதன் தன் பிறப்பின் இரகசியத்தை, படைப்பின் குறிக்கோளை. தான் யார் என்பதையும் தன் வாழ்நாளில் தான் ஆற்ற வேண்டிய மற்றும் கற்க வேண்டியவற்றை புரிந்துகொள்ளமுடியும். பஹாவுல்லா இப்பிணைப்பு குறித்து பின்வரும் திருவாக்கை வழங்கியுள்ளார்:
உயிருருவின் புத்திரனே! என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக.
அடுத்து, கடவுளோடு நாம் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது மற்றும் அவர்மீது அன்புகொள்வது எவ்வாறு எனும் கேள்வி நம் மனதில் எழக்கூடும். ஒருவரை அறவே அறிந்துகொள்ளாமல் அவர்மீது அன்பு ஏற்படுவது அறிது. கடவுள் மீது எவ்வாறு அன்பு ஏற்படும்? இதற்கு பதில், ஒரு குழந்தை தான் பிறக்கும் போதே தாய்ப்பால் குடிக்கும் ஆற்றலை இயல்பாகவே பெற்றிருக்கின்றது. இதை யாரும் குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. அதே போன்று மனிதன் தன்னை படைத்த கடவுளை அறிந்து கொள்ளும் ஆற்றலை இயல்பாகவே பெற்றிருக்கின்றான் என பஹாவுல்லா கூறுகின்றார்.
உங்கள் ஒவ்வொருவரின் உள்ளேயும் நான் எனது படைப்பை முழுமைப் பெறச் செய்துள்ளேன்; அதனால் நீங்கள், உங்களின் சுயநல ஆசைகள் என்னும் தடிப்பான திரைகளைக் கொண்டு, உங்களை மறைத்துக் கொண்டிடாதீர்; அதன்வழி, எனது கைவேலையின் சிறப்பு மனிதர்களுக்குப் பூரணமாக வெளிப்படுத்தப்படாமல் இருந்திடப் போகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனும், ஆண்டவனின் மகிமைப்படுத்தப்பட்ட அழகினைத் தானாகவே புரிந்து பாராட்ட முடிந்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் அவ்வாறே முடிந்து வரும். அத்தகைய ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லையெனில், எங்ஙனம், அவன், தன் தவறுக்குக் காரணங்கூற அழைக்கப்பட முடியும்?
தகுந்த கல்வியின் மூலம் மனிதன், கடவுளை அறிந்துகொள்ளும் ஆற்றல் உட்பட, தான் இயல்பாகவே பெற்றிருக்கும் ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ளமுடியும், கடவுளை அறிந்துகொள்ள முடியும் மற்றும் தன் படைப்பின் நோக்கத்தை தெரிந்துகொள்ளவும் முடியும். ஆனால், அது அவன் விருப்பத்தை பொருத்த ஒன்றாகும். மனிதனாக விரும்பினால் அன்றி அவன் தன் படைப்பாளரோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.