
கம்போடியாவில் பஹாய் சமயம் அறிமுகமாகி அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும். அதன் வளர்ச்சி இடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த பஹாய்களில் பலர் பட்டினி, நோய் மற்றும் கொல்லப்பட்டும் இறந்து போயினர். சுமார் 15 வருட காலமாக மீண்டும் ஒரு பஹாய் சமூகம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய 10,000 உறுப்பினர்கள் கொண்ட இச்சமூகம் கிபி 2000 க்குப் பிறகே சீரான மறுவளர்ச்சி கண்டது. அந்த நாட்டில் பஹாய் போதனைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பது கண்கூடு. இது எதனால் என்பதை ஆராயும்போது அந்த நாட்டு மக்கள் கெமேர் ரூஜ் அரசாங்கத்தின் கீழ் அனுபவித்த கொடுமைகளே இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது தெளிவாகும்.
சுமார் 1.3 கோடி மக்களைக் கொண்ட கம்போடியா ஏறக்குறைய 30 ஆண்டுகள் போராலும், வன்முறைகளாலும் சீரழிக்கப்பட்ட, 20ம் நூற்றாண்டில் எங்குமே நடைபெறாத அட்டூழியங்களை அனுபவித்த நாடாகும். 20 லட்சம் மக்களுக்கு மேல் பசியாலும், கொடுமைகளாலும், கொல்லப்பட்டும் மடிந்தனர். இக் கொடுமைகளுக்கு மூலகாரணமாக விளங்கியது “கெமேர் ரூஜ்” எனப்படும் ஓர் இயக்கமாகும். கம்யூனிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் நாட்டைக் கைப்பற்றி மறுசீரமைப்பு எனும் பெயரில் முதலில் கல்வி கற்றோரையும், பிரபலமானவர்களையும் கொன்றனர். அறிவுடையோரும் ஆற்றல் பெற்றோரும் அரசாங்கத்தின் எதிரிகளாக காணப்பட்டனர். எல்லாவித நூல்களும் பிரசுரங்களும் தடை செய்யப்பட்டு பிறகு அழிக்கவும் பட்டன. ஒரு முழு தலைமுறையினர் கல்வியற்றும், போர், பட்டினி, நோய் போன்றவையல்லாது வேறெதனையும் அறியாதே வளர்ந்தனர். கல்விமுறை கிட்டத்தட்ட அறவே இல்லாமலேயே போய், கோடிக்கணக்கில் மக்கள் எழுத்தறிவின்றி வாழ்ந்தனர். தற்போதுள்ள அரசாங்கம் கல்விமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் இன்றும் கல்வி பெறுவதில் சிரமத்தையே எதிர்நோக்குகின்றனர்.
கம்போடியா பெரும் குழப்பங்களைச் சந்தித்தது என்பது பொதுவாக எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந் நாட்டு மக்கள் அக்காலத்தில் குறிப்பாக என்ன நிலைக்கு ஆளாகினார்கள் என்பது பலருக்குத் தெரியாது. மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக படையெடுத்த போதுதான் கம்போடியவில் என்ன நடந்தது என்பது நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு தெரிய வந்தது. இவர்கள் கடல் மார்க்கமாகவும், நில வழியாகவும் லட்சக் கணக்கில் அகதிகளாக சென்றனர். இப்படி நில வழியாகஓடுபவர்களை தடுப்பதற்காவும் எதிரிகளை தடுத்து நிறுத்துவதற்காகவும் கம்போடியாவின் பல பாகங்களில் கெமேர் ரூஜ்ஜின் நில கன்னி வெடிகள் இன்றளவும் புதைந்த வன்னம் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும் என அவற்றை தோன்றி எடுக்க உதவி செய்யும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.
கொலை வயல்கள் – இங்குதான் கொலைசெய்யப்பட்டோர் புதைக்கப்பட்டனர்இந்த நிலவெடிகள் பதிக்கப்பட்டு 30 வருடங்களானாலும் அவை இன்றும் பல உயிர்களை பலி வாங்கியும் பலர் கால்கள் ஊனமுற்று போகவும் காரணமாக இருக்கின்றனர். கம்போடியாவுக்கு சுற்றுப்பயனிகளாக செல்வோர் பொய்க்கால்கள் பொருத்தியும் அல்லது கால்களை இழந்து குச்சிகளை ஊனிக்கொண்டு கையேந்தி பிச்சையெடுக்கும் பலரைக் காணலாம். பத்தம்பாங் நகரில் அரசியல் சார்ப்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியோடு நிலவெடிகளுக்கு பலியாவோருக்கு மருத்துவ உதவி வழங்குவற்கெனவே ஒரு மருத்துவசாலை இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
ஹிட்லரின் அரஜகத்தையும் மிஞ்சும் வகையில் கெமேர் ரூஜின் அரசியல் கைதிகள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம் ஒன்று ப்னொம் பென்ஞ் நகரில் உள்ளது. மாவ் சீ தொங் சாலைக்கு அருகில் “தொல் சிலேங் மியூசியம்” என ஓரிடம் உள்ளது. ஒரு காலத்தில் உயர்நிலைப் பள்ளியாக இயங்கிய அக்கட்டிடம் கெமேர் ரூஜ் படைகளால் அது ஒரு சிறைச் சாலையாக மாற்றப்பட்டு அரசியல் கைதிகள் பலர் இங்கு அடைக்கப்பட்டனர் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.
இந்த கெமேர் ரூஜ் அராஜகத்தின் மேலும் ஒரு அடையாளமாக “கில்லிங் ஃபீல்ட்ஸ்” எனப்படும் கொலைவயல்கள் உள்ளன. கெமேர் ரூஜினரின் கைகளில் உயிரிழந்தோர், புதைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட குழிகளுக்கு இப் பெயர் வைக்கப்பட்டது. கம்போடிய தலைநகருக்கு அருகில் செங் எய்க் எனப்படும் இடத்தில் இத்தகைய குழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. கம்போடியா முழுவதும் ஆங்காங்கே உள்ள இக் குழிகளில் கிடந்த மனித எலும்புக்கூடுகள் இன்று அவ்விடங்களிலேயே மக்களின் பார்வைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பெரியவர்கள் மட்டும் இன்றி குழந்தைகளும் இந்த தொல் சிலேங் சிறையில் உயிரழந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பங்கள் பிரிக்கப்பட்டு மறுகல்வி எனும் பெயரில் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.
இன்றைய நிலையில் நாடு சற்று மோசமான நிலையில் இருந்தாலும், அதன் கடந்த கால வரலாறு மகோன்னதம் மிக்கதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேல் “துன்லே சாப்”எனப்படும் பெரும் ஏரியின் கரையோரங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மாபெரும் நகரமே இந்த அங்கோர் வாட் ஆகும். “அங்கோர்” என்றால் நகரம் மற்றும் “வாட்” என்பதன் அர்த்தம் விஹாரம் அல்லது கோவில் என்பதாகும். அதாவது கோவில் நகரம் என இதனை கூரலாம். அதன் உச்சநிலையில் அங்கோர் நகரம் சுமார் 10லட்சம் மக்களைக் கொண்டிருந்த ஒரு பெரும் நாகரிகமாக விளங்கியது. ஐரோப்பா கண்டம் நாகரிகத்தின் விடிவெள்ளியைக் கூட எட்டிப் பிடிக்காத நிலையில் கம்போடிய நாட்டில் 10 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் நகராக, சிறந்த நீர்ப்பாய்ச்சலும், சாலை போக்குவரத்து வசதிகளும் நிறைந்த ஒரு நகராக அங்கோர் விளங்கியது. இதன் மன்னர்களில் தலையாய மன்னனாக 7வது ஜெயவர்மன் எனும் ஒரு மன்னன்
விளங்கினான். இவன் காலத்தில் அங்கோர் புகழின் உச்சத்தில் இருந்தது. தற்போதைய கெமேர் மொழிக்கான அஸ்திவாரத்தை அமைத்தவன் இந்த அரசனே. இந்த அங்கோர் நகரத்தில் கோவில்கலிலேயே தலைசிறந்ததும் மிகப் பெரியதுமாக அங்கோர் வாட் கோவிலே விளங்கியது. தற்போது அங்கோர் கோவில் ஒரு புத்த கோவிலாக மாறியிருந்தாலும் அது ஒரு விஷ்ணு ஆலயமாகவே ஆரம்பத்தில் கட்டப்பட்டது. அங்கோர் வாட்டில் இன்றும் இந்து தெய்வங்களின் வடிவங்கள் அதன் சுவற்றில் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அங்கோர் வாட்டிற்கு அருகில் உள்ள அங்கோர் தோம்மில் சிவலிங்க சிலைகள் இன்றும் உள்ளன. இந்த அங்கோர் தோம் நான்கு முகங்களான சிலைகளைக் கொண்ட கோவிலைக் கொண்டது. இந்த நான்கு முக சிலைகள் பிரம்மாவின் உருவங்கள் என ஒரு காலத்தில் எண்ணப்பட்டதுண்டு ஆனால் அவை 7வது ஜெயவர்மனின் உருவங்களே என இப்போது அடையாளங் காணப்பட்டுள்ளது. கம்போடியா முழுவதும் நூற்றுக்கணக்கில் இவை போன்ற பல கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கம்போங் தோம் அருகில் உள்ள சம்போர் பிரேய் கொக் எனும் இடத்தில் அங்கோரைவிட பழமை வாய்ந்த பல பாழடைந்த கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் அங்கு கல்கி விஷ்ணு யாஷாவிற்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளதுதான். விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகிய கல்கியின் இந்த உருவச் சிலை இன்று பிரான்ஸ் நாட்டில் உள்ளது. ஆனால் கோவில் சிதைந்த நிலையிலிருந்து சீரமைப்பு பெற்று வருகிறது.
சுருங்கக் கூறப்போனால் ஒரு பெரும் நாகரிகத்தைக் கொண்டிருந்த நாடாக கம்போடியா ஒரு காலத்தில் விளங்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் மக்கள் மிகச் சிறந்த கலைஞர்களாக, சிற்பிகளாக இருந்துள்ளனர். தென்கிழக்காசிய கலாச்சாரம், கலைகள் கம்போடியாவிலிருந்தே உதித்தவை என்பதிலும் சந்தேகமில்லை.