காதலுக்கு கண்ணில்லை…


காலஞ்சென்ற சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய பாட்டு ஒன்று “காதலுக்குக் கண்ணில்லை காதில்லை கேளாயோ,” எனும் வரியோடு ஆரம்பிக்கின்றது. ஒரு வகையில் இது உண்மையே. வாலிப வயதில் இயற்கையின் உந்துதலுக்கு வயப்பட்ட குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயல்பாகவே ஏற்படக்கூடிய ஈர்ப்புச் சக்தி்யைக் காதல் எனக் கூறுகின்றோம். ஆனால் மிருகவியல்பான இவ்வீர்ப்புச் சக்தியை அன்பு எனக் கூறுவது தவறாகும். அன்பு திடீரென ஏற்படாது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளும் போது, அதாவது ஒருவர் மற்றவரின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டு, அக்குறைநிறைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் அக்கறையே அன்பாகும்.. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்புச்சக்தியோடு இவ்வித அன்பு சேரும்போது அங்கு உண்மையான காதல் உருவாகின்றது.

வெறும் காதல் லௌகீகமானது, எல்லைக்குட்பட்டது. அன்பு ஆன்மீகமானது. அன்பு என்பது “unconditional” அதாவது அது (நிபந்தனையற்றது) பாகுபாடு பார்க்காதது, எல்லையற்றது, எதிர்பார்ப்புகள் இல்லாதது. நல்லவர் கெட்டவர், என்னுடையது உன்னுடையது, அழகு குரூபம் என்ற பாகுபாடெல்லாம் உண்மையான அன்பிற்குக் கிடையாது. அதற்கு வயது வரம்பெல்லாம் கிடையாது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ், அன்பே உலக மகா சக்தி, அன்பே சிவம் என்பதெல்லாம் இவ்வித விதிகளுக்கு அப்பாற்பட்ட அன்பையே குறிப்பிடுகின்றன. ஆனால், இங்கு ஒரு விஷயத்தை நாம் மறுக்க முடியாது. பொதுவாக மனிதர்களுக்கிடையில் அன்பு எனும் ஒன்று இருந்தபோதும் திருமணமானவர்களுக்கிடையில் ஆன்மீக ரீதியான அன்பு என்பது உடல் சார்ந்த ஈர்ப்பு சக்தியோடு இணைந்திருக்க வேண்டும், அதாவது காதல் எனும் ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். உடலும் உள்ளமும் சேர்ந்ததே உண்மையான காதலாகும்.

பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பஹாய் உலகை வழிநடத்திய பஹாவுல்லாவின் மூத்த புதல்வரான அப்துல்-பஹா, அன்பு என்பது நான்கு விதமாக பிரிக்கப்படலாம் எனக் குறிப்பிடுகின்றார். அதாவது, கடவுள் மனிதன் மீது கொள்ளும் அன்பு, மனிதன் கடவுள் மீது கொள்ளும் அன்பு, மனிதன் மனிதன் மீது கொள்ளும் அன்பு மற்றும் கடவுள் தமது படைப்பினங்களில் வெளிப்படும் தமது சுயபிரதிபலிப்பின் மீது கொண்டுள்ள அன்பு. கடவுள் தமது படைப்பினங்களின் மீது கொள்ளும் அன்பை கருணை எனக் கூறுகின்றோம். மனின் சகமனிதன் மீது கொள்ளும் அன்பை பாசம், நேசம், காதல் என கூறுகின்றோம். தாய் தன் சேய்மீது கொள்ளும் அன்பு பாசமாகும். இது ஒரு தாய் தன் சேயின் மீது கொள்ளும் சுயநலம் கலந்த அன்பாகும். ஒரு குடும்பத்தினர் தமது பிற குடும்ப உறுப்பினர்கள் மீது கொள்ளும் அன்பும் இத்தகையதாகும். சினேகிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கொள்வது நேசமாகும். இதிலும் சுயநலம் கலந்துள்ளது. பருவமடைந்த ஓர் ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு காதலாகும். காதல் உணர்வில் காம உணர்வு கலந்தே இருக்கும். இல்லையெனில் அங்கு ‘காதல்’ பிறக்க வழியில்லை. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இது இயல்பாகவே, உள்படையான ஓர் உணர்வாகும். இவ்வுணர்வு பகுத்தறிவிற்கு உட்பட்ட ஓர் உணர்வல்ல.

வெறும் காதலைப் பொருத்தமட்டில் அது பல காரணங்களின் அடிப்படையில் ஏற்படக்கூடும். ஒரு வகையான காரணத்தைத் தமிழ் சினிமாப் படங்களில் காணலாம். அதில் காதல் வயப்படும் ஆண் வாலிப முறுக்கு மிக்கவராகவும், நல்ல உயரம் மற்றும் அழகுமிக்கவராகவும் இருப்பார். பெண்ணைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. அவர் உலக அழகி போன்று இருக்கவேண்டும். இல்லையென்றால் காதல் ஏற்பட வழியில்லை. குட்டையாக, கருப்பாக, சாதரமான பெண்களுக்கெல்லாம் தமிழ்ப் படங்களில் காதலுக்கு வழியில்லை போலும். வாலிப வயதைத் தாண்டியவர்களுக்குச் சினிமாப் படங்களில் வாழ்க்கை என்பதே இல்லை எனும் விதத்தில் படங்களின் ஹீரோக்களின் மீதே கவனம் மையப்படுத்தப்படுகின்றது. அதாவது, சினிமாவைப் பொருத்த மட்டில் அழகற்றவர்களுக்கு வாழ்க்கையே கிடையாதது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. “உண்மைக் காதல்” எனும் வார்த்தைகளை வேறு அவ்வப்போது நாம் இச்சூழலில் செவிமடுக்கின்றோம். அவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்னவென்பது தெரியுமா என்பது கேள்விக்குறியே. இப்படிப்பட்ட காதல் குறித்து சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய பாட்டின் வரிகளை எழுதியவர் இன்னொரு வார்த்தையையும் சேர்த்து எழுதியிருக்கலாம், அதாவதுகாதலுக்குக் கண்ணில்லை, காதில்லை என்பதோடு “மூளையும்” இல்லை என்று எழுதியிருக்கலாம்.

இப்படி இந்த சினிமா காதலைத் தினசரி நமது தொலைக்காட்சியிலும், வீடியோக்களிலும் காணும் இளவயதினர் மனதில் எவ்வித எண்ணங்கள் பதிகின்றன? அவர்கள் அறியாமல் அவர்களின் மனங்கள் எவ்வித பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன என்பது பொதுவாக அறியப்படவில்லை. இவ்வேளையில் Insidious” எனும் ஆங்கில வார்த்தை ஞாபகத்திற்கு வருகிறது. சிறு குழந்தைகள் இவ்வித சினிமாக்களைப் பார்க்கும் போது அவர்களின் மனங்களில் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை கருத்துகள் எத்தகையவையாக இருக்குமெனத்  தெரியவில்லை. மனித வாழ்விற்கு அஸ்திவாரமான அக அழகு, அதாவது மனித நற்பண்புகள் பற்றி அறிந்துகொள்வதற்குப் பதிலாக அவர்கள் புற அழகு குறித்தே பெரும்பாலும் தெரிந்துகொள்கின்றனர். முளைத்து மூன்று இலை விடுவதற்குள் இ்ப்போதெல்லாம் காதல் செய்யவும் நமது சிறார்கள் கிளம்பிவிடுகின்றனர். பிற்காலத்தில் தங்கள் சிறு வயதில் தாங்கள் அடைந்த அனுபவங்களின் அடிப்படையில் அவர்களின் வாழ்கையை அமைத்துக்கொள்ளவும் முயல்கின்றனர். இதன் விளைவு என்ன? முதல் கோணல் முற்றும் கோணல்.

இந்தியாவில் விவாகரத்து எனும் வார்த்தை அபூர்வமானது ஆனால், இன்று அங்கும் 2 – 5 விழுக்காடு திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மலேசியா போன்ற நாடுகளில் 10 – 20 விழுக்காடு திருமணங்கள் முறிந்து விடுகின்றன. அமெரிக்காவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அங்குப் பாதிக்குப் பாதி திருமணங்கள் பொசுங்கிப் போய்விடுகின்றன. பல மேற்கத்திய நாடுகளில் திருமணம் செய்துகொள்வது கூட குறைந்து “companionate marriage” எனும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் முறை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒருவரை ஒருவர் பிடிக்காது போகும்போது அவரவர் வழியே போய்க்கொள்ளலாம். அமெரிக்காவில் ஒரு பழமொழி (அல்லது புதுமொழி?) உண்டு. அதாவது, “ஒரு காலத்தில் பெற்றோர்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தன. ஆனால், இன்று குழந்தைகளுக்கு நிறைய பெற்றோர்கள் இருக்கிறார்கள்,” என்பது. இத்தகைய விளைவுகளினால் திருமணம் என்றாலே ஒரு விதமான பீதி (phobia) ஏற்படுகின்றது.

ஒரு காலத்தில் இத்தகைய பிரச்சினைகள் இல்லைதான். விவாகரத்து என்பது ஒரு கெட்ட வார்த்தையாக இருந்தது. ஆனால் அதற்காக அந்தத் திருமணங்களும் இக்கலாத்திற்குச் சரியென கொள்ளமுடியாது. காரணம், கடந்தகாலங்களில் ஆண்கள் சாம்ராஜ்யம் நடந்தது. கவன் வைத்ததே சட்டம் மற்றும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் (அல்லது கள்ளனானாலும் கணவன் மற்றும் புல்லனானாலும் புருஷன்?), கணவனே கண் கண்ட தெய்வம் என்றெல்லாம் போதனை வழங்கப்பட்டது. அந்தக் காலத்திற்கு இதெல்லாம் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று பெண்களும் ஆண்களுக்குச் சரி நிகர் சமமாக வாழ்கின்றனர், வேலைக்குச் செல்கின்றனர், சமூக விவகாரங்களில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இந்த நிலைக்குத் தங்களை ஈடுபத்திக்கொள்ள முடியாத ஆண்களாலும், அதே வேளை தங்களுக்குக் கிடைத்துள்ள இப்புதிய சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படு்த்திக் கொள்ளாத பெண்களாலும் திருமணங்கள் முறிந்து போகின்றன.

இதற்கு முடிவுதான் என்ன?

பஹாய் திருமொழிகளில் ஒரு குறிப்பு உண்டு, “மனிதனை விலைமதிப்பற்ற இரத்தினங்கள் நிறைந்த ஒரு சுரங்கமாகக் கொள்வாயாக. கல்வி மட்டும் தனியே அதன் பொக்கிஷங்களை வெளிக்கொணரச் செய்து மனிதர்கள் அதன் வாயிலாக பயனடையச் செய்ய முடியும்,” என்பது ஏறக்குறைய அதன் கருத்து. இ்ங்குக் கல்வி என்பது தெய்வீகப்ண்புகள் பற்றிய ஆன்மீகக் கல்வியைக் குறிக்கின்றது. சிறு வயதிலேயே இத்தகைய கல்வியை வழங்குவதன் மூலம் நமது குழந்தைகள் சரியான உட்பார்வைகள் பெற்று, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக இத்தகைய கல்வி சிறு வயதிலேயே வழங்கப்பட வேண்டும். வளர்ந்து வாலிப வயதை அடைந்த பிறகு இதைச் சரி செய்ய நினைப்பது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும். இன்று உலகம் முழுவதும் பஹாய்கள் தங்கள் நண்பர்களோடு சேர்ந்து இத்தகைய கல்வியைத் தங்களைச் சுற்றியுள்ள குழந்தைகளுக்கு வழங்கிட முயன்று வருகின்றனர். குழந்தைகள் நற்பண்புகள் பற்றி தெரிந்துகொண்டும் தங்கள் ஆன்மீக ஆற்றல்களை அப்போதிருந்தே வளர்த்துக் கொள்ளவும் ஆரம்பிக்கின்றனர். தனிநபர் மற்றும் உலக பிரச்சினைகள் உடனே தீர்க்கப்பட முடியாதவை. சிறுக சிறுகவே இது மாற்றப்பட முடியும். ஆனால், அதற்கான முயற்சிகள் இப்பொழுதிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும்.