பால்மை சமத்துவம் குறித்த பஹாய் விளக்கம்: ஓர் அடிப்படை ஆன்மீக உண்மை


May Lample
Program Officer at the Institute for Studies in Global Prosperity

http://www.huffingtonpost.com/may-lample/equality-of-women-and-men_b_791230.html

நான் என்றுமே பெண்கள் மற்றும் ஆன்களின் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவளாகவே இருந்துவந்துள்ளேன். பஹாய் சமய விசுவாசிகள் எனும் முறையில் சிறு வயது முதற்கொண்டே எனக்கு என் பெற்றோர்கள் போதித்து வந்துள்ள அடிப்படை கோட்பாடுகளில் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவமும் ஒன்று.

பஹாய் சமயத்தின் ஸ்தாபக அவதாரமான பஹாவுல்லா பின்வருமாறு விளக்குகிறார்: “பெண்களும் ஆண்களும் கடவுளின் பார்வையில் என்றுமே சமமானவர்களாக இருந்துவந்துள்ளனர் இனியும் அவ்வாறே இருந்துவருவர்.” பஹாய் புனித வாக்குகளில் பெண்களும் ஆண்களும் ஒரு பறவையின் இரு சிறகுகளோடு ஒப்பிடப்படுகின்றனர். ஒரு சிறகு சற்று பலவீனமாக இருந்தால் அப்பறவையால் பறக்கமுடியாது. இரு சிறகுகளும் முற்றாக முதிர்ச்சி பெறாத வரையில் அப்பறவையால் பறக்க முடியாது. அதே போன்று, பெண்களும் ஆண்களும் தங்களின் முழு ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்ளாத வரை உலகம் செழிப்புற வாய்ப்பு ஏற்படாது

என் சிறு வயதில், நான் எங்கும் சமத்துவத்தை கண்டேன் — பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளுமாக ஓடி விளையாடி விளையாட்டில் ஈடுபட்டும், வகுப்பு கலந்தாலோசனைகளில் பெண்கள் சுதந்திரமாகவும் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு வகுப்பில் சமபங்கில் பெண்களும் ஆண்களுமாக ஈடுபட்டும் இருந்தனர். பால்மை சமத்துவம் என்னுள் வெகுவாக ஊறிப்போயிருந்தபோதும், அது உண்மையில் என்ன என்பதை அப்போது நான் அறிந்திருக்கவே இல்லை என்பதை பல வருடங்களுக்குப் பிறகே உண்ர்ந்துகொண்டேன்

என் உயர்நிலை பள்ளி வகுப்புகளில் பெண்கள் முன்னனியில் இருந்தார்கள் என்பதால் மட்டும் சமத்துவம் நிலவியது என அர்த்தப்படாது என என் கல்லூரி நாட்கள் வரை எனக்கு புரியவில்லை.பெண்களும் ஆண்களும் ஒன்றாக ஓடி விளையாட்டுகளில் ஈடுபட்டனர் என்பது பெரும்பாலும் பெண்கள் இறுதியில் வேறுவழியின்றியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களுடைய திறன்கள் குறைத்தே மதிப்பிடப்படுகின்றன அல்லது கல்லூரி இறுதியாண்டில் வகுப்புகள் பால்மை அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் பட்டப்படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும் அல்லது தொழில்துறையில் ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கும் சம ஊதியம் கிடைக்கும் என்பதும் நிச்சயமல்ல.

என் குறுகிய உலகில் இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வளங்கள் மற்றும் வாய்ப்புகள் கிட்டுவதனால் மட்டும் பரந்த வெளியுலகில் உண்மை நிலவரம் அதுபோன்றதே என்பது அர்த்தல்ல என்பதை நான் உணரத்தவறிவிட்டேன். என்னைச் சுற்றிலும் பால்மை சமத்துவத்திற்கான அறிகுறிகள் தென்பட்டபோதிலும், குறிப்பாக, எல்லாருமே பெண்களும் ஆண்களும் சமமானவர்கள் எனும் அறிவோடு வளர்க்கப்பட்டிருக்கின்றார்கள் எனும் யூகத்தோடு நாம் பார்த்தபோதிலும், நமது ஸ்தாபனங்களிலும் சிந்தனாமுறைகளிலும் சமத்துவமின்மை ஆழப்பதிந்துவிட்டது என்பது எனக்கு அப்போது புரிந்தது, மற்றும் அச் சமத்துவமின்மையை எதிர்ப்பதற்கு, சமத்துவநிலை ஏன் முக்கியப்படுகிறது என்பதையும் அதை நடைமுறைபடுத்திட தேவைப்படும் புரிந்துகொள்ளல்கள் யாவை என்பதும் எனக்கு அப்போது தெளிவாகியது.

சமத்துவம் குறித்த நமது புரிந்துகொள்ளலில் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, பெண்களை ஆண்களின் நிலைக்கு மேம்படுத்திடும் ஒரு கருத்திலேயே அது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு விளைவுகள் உண்டாகும். ஒன்று, ஆண்கள் மேம்பாடு கண்டுவிட்டனர் எனும் எண்ணம்; அவர்கள் இப்போது உள்ளபடி முழுமை பெற்ற நிலையில் இருக்கின்றனர் என்பது. இரண்டு, இந்த கருத்து இருபாலரின் இடையே போட்டா போட்டியை உருவாக்கிவிடும், அதாவது, ஆண்களிடம் அதிகாரம் உள்ளது மற்றும் அவர்கள் அதை பெண்களுக்காக சிறிது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது (அல்லது பெண்கள் ஆண்களைவிட அதிக அதிகாரம் பெற போராட்டம் நடத்த வேண்டும்). இது இருபாலரிடையேயும் தேவையற்ற ஓர் இருமைப்பிளவை உருவாக்கிவிடும். சமத்துவத்தை புரிந்துகொள்ள லௌகீக அளவைகளை பயன்படுத்துவது பெண்களையும் ஆண்களையும் பெரும்பாலும் ஓர் குறுகிய எல்லைக்குள் அடக்கிவிடும்.

நமது தனித்தன்மையை பொருத்தவரை, வெளித்தோற்றத்திற்கும் மேல் வேறு விஷயங்கள் உள்ளன என்பதை கண்டுகொள்வதானது மனித இயல்பு மற்றும் சமத்துவம் என்றால் என்ன என்பது குறித்த நமது அறிவை மேலும் விசாலப்படுத்திடும். பரோபகாரம், அன்பு மற்றும் கருணை போன்ற ஆன்மீகப் பண்புகளை வெளிப்படுத்திடக் கூடிய தனிமனிதனின் உள்ளாற்றலில் வீற்றிருக்கும் அடிப்படையான மனித தனித்தன்மைக்கு பால், இனம், குடிநிலை அல்லது பௌதீக அல்லது சமூக வேறுபாடுகள் கிடையாது. மனிதர்கள் அனைவரிடமும் உள்வீற்றிருக்கும் ஆன்மீக இயல்பை கண்டுகொண்டு அவர்களின் தனித்தன்மை குறித்த எல்லா அம்சங்களின் வாயிலாக ஆன்மீக களிப்புணர்வு அடைவது சாத்தியப்படுகிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே பெளதீக ரீதியில் வேறுபாடுகள் உண்டு மற்றும் அவர்கள் இருவரும் உலகை நுகரும் முறையின் மீது இவ்வேறுபாடுகள் தாக்கம் செலுத்துகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருந்தபோதும் சாரத்தில், அவர்களை வரையறைக்கும் பண்புகளிலும் உள்ளாற்றல்களிலும் அவர்கள் வேறுபாடுகள் அற்றவர்கள். குறுகிய முறையில் சில குறிப்பிட்ட பௌதீக அல்லது சமூக தனிப்பண்புகளோடு அடையாளப்படுத்திக்கொண்டு அவற்றை ‘அகம்’ குறித்த நமது புரிந்துகொள்ளலின் நடுமையமாக கொள்வது பெண்கள் மற்றும் ஆண்கள் மீது பேரழிவு மிக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே நிலவும் சமத்துவமின்மையை அகற்றிடவும் ‘அகம்’ பற்றிய புரிந்துகொள்ளலை மேம்படுத்திக்கொள்ளவும் கல்வி ஒரு வழியாகும். உலகம் முழுவதும், தங்கள் குழந்தைகள் அவர்களின் உண்மை இயல்பை விளங்கிக்கொள்ள பஹாய் பெற்றோர்கள் அவர்களுக்கு கல்வியளிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். பெண்கள் இப்போதும் கூட பாகுபாட்டிற்கு உட்பட்டிருக்கும் நாடுகளில் கூட, தங்கள் பெண்பிள்ளைகள் கல்வி பெறுவதை உறுதிபடுத்திடுவதன் வழி இப் பஹாய் கோட்பாட்டை செயல்படுத்திடும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு மட்டுமே கல்வியளிக்க முடியும் எனும் சூழ்நிலையில், குடும்பத்தின் முதல் ஆசிரியை எனும் முறையில் தங்கள் பெண் குழந்தையையே பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஆன்களும் பெண்களும் சம நிலையில் சமூக மேம்பாடு குறித்த அச்செயற்பாட்டில் பங்கேற்க இயலும் வரை சமூக மேம்பாடு அடையப்படவே முடியாது என பஹாய் திருவாக்குகள் விளக்குகின்றன. மேலும், பெண்களின் சமத்துவத்தை மேம்படுத்தும் கடமை ஆண்களுக்கும் உண்டு, ஏனெனில் அவர்களின் விதி பெண்களின் நலனோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் பெண்களின் மேம்பாடு பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல மற்றும் அதனை அடைவது ஆண்களின் முழு பங்கேற்பையும் பரிந்துரையையும் சார்ந்துள்ளது. “உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகள் இருக்கின்றன; சமய ரீதியிலும் சமூகத்திலும் அவர்கள் முக்கிய அம்சங்களாவர். பெண்கள் தங்களின் அதி உயர்ந்த நிலையை அடைவதிலிருந்து தடுக்கப்படும் வரை, ஆண்கள் தங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள பெருமையை அதுவரை அடையவே முடியாது.

பால்மை சமத்துவத்திற்காக செயல்படும்போது, அதை ஒரு நடைமுறையான கருத்தாக கொள்ளாமல், ஓர் அடிப்படை கோட்பாடாக கருதும்போது, அது ஓர் அவசரத்தேவையாக பின்தொடரப்படுவதும் சரி சமத்துவத்தின் இறுதி இலக்கின் நிலையும் சரி அவை இரண்டும் ஓர் ஆழ்ந்த மாற்றத்திற்கு உள்ளாகும். மேலும், இந்த புரிந்துகொள்ளல் பெண்ணும் ஆணும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டுகொள்ளவும் உதவிடும்.

இருந்தும், பெண்கள் இன்று எதிர்நோக்கும் பாகுபாடு நோயுற்றிருக்கும் ஓர் உலகின் பல நோய்க்குறிகளுள் ஒன்றாகும். பல சமகால சமூக ஸ்தாபனங்கள், கட்டமைப்புகள் மற்றும் செயற்பாடுகள் சமத்துவமின்மையை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன மற்றும் இச் செயற்பாடுகளில் செயல்படும் மக்கள் கட்டுப்பாடுகளையும் அரசியல் சவால்களையும் எதிர்நோக்குகின்றனர்.

இத்தகைய சவால்களை வெற்றிகொண்டு பால்மை சமத்துவம் உண்மையாகவே செயல்படுத்தப்படுவதை காண தற்போது நிலவும் உலக நிலைமையை நீட்டித்துக்கொண்டிருக்கும் உலகின் சமூக அமைப்புமுறைகள் மற்றும் உலக கண்ணோட்டங்களுக்கு பின்தாங்கலாக இருக்கும் யூகங்களை நாம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஒற்றுமை மற்றும் நீதியை மேம்படுத்திடும் வகையில் ஸ்தாபனங்களையும் சமூக வழக்கங்களையும் நாம் மறுகட்டமைப்புக்கு உட்படுத்திடவும் வேண்டும். குடும்பம், சமூகம், காரியாலயங்கள் மற்றும் பொது ஸ்தாபனங்கள் குறித்த சூழ்நிலையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கிடையிலான உறவுகள் மறுவறையரை செய்யப்பட வேண்டும். இந்த ஒவ்வொறு உறவுகளும் பரிணாம வளர்ச்சி கண்டுவரும் மானிடத்தின் பொது ஆன்மீக இயல்பின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்படவும் வேண்டும். இது நிறைவேற்றம் காண, ஒரு புதிய சமூக கட்டமைப்பை உருவாக்கு தேவைப்படும் ஆன்மீக கோட்பாடுகளை அமல்படுத்திட அவர்கள் ஒன்றாக செயல்பட வேண்டும் மற்றும் இக்கட்டமைப்பு அமைதி, நீதி, கூட்டு மேம்பாடு ஆகியவற்றால் தனிச்சிறப்பு பெற்றிருக்க வேண்டும்.

இச்செயல்பாட்டின் ஓர் ஆங்கமாக இக்கருத்துக்களை கலந்தாலோசனை செய்திடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படத்தப்பட வேண்டும். மக்கள் பால்மை சமத்துவம் பற்றிய பிரச்சினைகள் குறித்த தங்கள் எண்ணங்களையும் கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொள்வதற்கு ஊக்குவிப்பாக “சமத்துவத்தை உருபெறச்செய்தல்” எனும் ஒரு வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைப்பதிவு ‘Institute for Studies in Global Prosperity (ISGP)’,எனும் ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்ட, “பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை நோக்கி முன்னேறுதல்” எனும் ஒரு சாசனத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது.

பெண்கள் உரிமைக்காக போராடிய தாஹிரி


தாஹிரி அல்லது குர்ராத்து’ல்-அய்ன் பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களுள் முன்னோடி அவதாரமான பாப் அவர்களின் பதினெட்டு சீடர்களில் ஒருவராவார். உலகில் பெண்களின் உரிமைக்காக போராடியோர் பட்டியலில் முதன்மையாக இருப்போரில் இவரும் ஒருவர். பாப் அவர்களின் சிஷ்யை எனும் முறையில் பாரசீக அரசினால் இவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இறந்தவுடன் அவருடைய பிறப்பு விவரங்கள் அழிக்கப்பட்டன.இவர் 1817 – 1820க்குள் பிறந்தவராக இருக்கக்கூடும்.

தம்மை திருமணம் செய்துகொண்டால் தாஹிரியை விடுதலை செய்வதாகக் கூறும் நாஸிரிட்டின் ஷா – நாடகத்தின் ஒரு காட்சி

பாரசீக நாட்டு பெண்களுக்கு அக்காலத்தில் எவ்வித சுதந்திரமும் கிடையாது. சிறுவயதிலேயே திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டு பிள்ளைகள் பெறுவது கனவனுக்கு சேவை செய்வது தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. முதலில் அவர்களைப் பெற்ற தந்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும் பிறகு அவர்களின் கனவர்களுக்குக் கீழ்ப்படிந்தும் வாழ்வது அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது. சதா கருப்பு நிற சடோர் அல்லது முகம் உட்பட உடல் முழுவதையும் மூடியிருக்கும் ஒரு வித ஆடையை அவர்கள் அனிந்திருப்பார்கள். அவர்களின் முகங்களை அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் யாரும் பார்க்கமுடியாது. கல்வியறிவுக்குக் கூட அவர்களுக்கு வழியில்லை.

இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த தாஹிரி சிறுவயது முதற்கொண்டே தனிசிறந்து விளங்கினார். அவருடைய அறிவாற்றலைக் கண்ட அவருடைய தந்தை “இவள் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தாள், அவன் என் குடும்பத்தின் மீது ஒளிவீசச் செய்து, எனக்குப் பிறகு என் வாரிசாகி இருப்பான்”, என்றார்.

அக்காலத்தில் பாஹ்ரேய்ன் தீவுகளில் ஒன்றில் வாழ்ந்த ஷேய்க் அஹ்மத் என்பார் புது அவதாரம் ஒன்று விரைவில் தோன்றவிருப்பதை தமது ஆன்மீக அறிவினால் உணர்ந்து அதை தம்மைச் சுற்றியுள்ளோருக்கு போதித்தும் வந்தார். தமக்குப் பிறகு தமது போதனைகளை தொடர்ந்து உலக மக்களுக்கு அறிவுறுத்திட சையிட் காஸிம் என்பாரை தமது வாரிசாக நியமித்தார். அவ்வேளையில்தான் தாஹிரி சையிட் காஸிம் பற்றி கேள்விப்பட்டு அவர் வாழ்ந்த கர்பலா நகருக்கு தமது கனவர் மற்றும் தகப்பனாரின் விருப்பத்திற்கு எதிராக சையிட் காஸிமோடு தொடர்பு கொண்டு அவரை சந்திக்கவும் சென்றார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக தாஹிரி அங்கு சென்றடைவதற்கு முன்பாக சையிட் காஸிம் மரணமுற்றிருந்தார். அங்கு சென்ற பிறகு பாப் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய படைப்புகளையும் தாஹிரி படித்துணர்ந்தார். அதன் பிறகு பாப் அவர்களின் போதனைகளை மிகவும் வன்மையுடன் தாம் சென்றவிடங்களில் எல்லாம் போதித்தார்.

1848ம் ஆண்டிற்கு முன்பே பாப் அவர்கள் தமது போதனைகளுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவ்வேளையில் படாஷ்ட் எனும் இடத்தில் பாப் அவர்களின் முக்கிய சீடர்கள் பலர் அவ்வருட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாநாடு பாப் அவர்களின் சமயம் ஒரு சுதந்திரமான சமயம் மற்றும் சிறைவாசம் அனுபவித்த பாப் அவர்களை எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்மாநாட்டின்போதுதான் தாஹிரி எனும் பெயர் அவருக்கு பஹாவுல்லா அவர்களால் வழங்கப்பட்டது. மாநாட்டின் ஒரு நாளின்போது தாஹிரி பாப் அவர்களின் சமயத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த சம உரிமையை அங்கு கூடியிருந்தோருக்கு திடுக்கிம் வகையில் வெளிப்படுத்தினார். அவர் அங்கு கூடியிருந்த ஆண்களின் முன்னிலையில் தமது முகத்திரையை திடீரென அகற்றினார். இன்னமும் பழைய சம்பிரதாயங்களில் மூழ்கியிருந்த பல பாப்யிக்கள் மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அச்செய்கையை கண்டு பொறுக்க முடியாமல் பாப் அவர்களின் சமயத்திலிருந்தே விலகினர். அதில் பெரிதும் திடுக்கிட்டிருந்த ஒருவர் தமது கழுத்தை சொந்தமாகவே அறுத்துக் கொண்டார். உலகிலேயே பெண்கள் உரிமையை முதன் முறையாக பரைசாற்றியவர் தாஹிரியே ஆவார். இச்சம்பவம் நடக்கும் வேளையில் எலிஸபெத் கேடி ஸ்டேன்டன் எனும் பெண்மனி செனெக்கா போல்ஸ் மாநாட்டிற்கு பெண்களின் உரிமை குறித்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தும் “Declaration of Sentiments” எனும் அறிக்கையை எழுதிக்கொண்டிருந்தார்.

தாஹிரி அம்மையார் சிறிது காலத்திற்குள் தமது நம்பிக்கைக்காக மரணதண்டனை வழங்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன் ,”நீங்கள் என்னை கொல்வதற்கு விரும்பலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்க முடியாது.” என கூறியவாறே கொல்லப்பட்டார். தாஹிரியின் வாழ்க்கை மற்றும் அவருடைய வைரியம் இன்றும் பல கவிதைகளுக்கும், நாடகங்களுக்கும் மற்றும் உலகளாவிய கருத்துக்களுக்கும் உற்சாக உணர்வை அளிக்கின்றது. அவர் பாரசீக நாட்டில் மட்டும் பிரபலமாக இருக்கவில்லை. மாறாக, அவர் பாக்கிஸ்தான், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக இருந்தார். பெண்கள் உரிமைக்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்தவரான தாஹிரி பற்றி கேள்விப்பட்ட ஆஸ்த்திரியா நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் தாயார், “பாரசீக நாட்டின் பெண்களுக்காக தாஹிரி தமது உயிரை எதற்காக தியாகம் செய்தாரோ அதே காரியங்களை நான் ஆஸ்த்ரிய நாட்டின் பெண்களுக்கு செய்வேன்,” என்றாராம்.

பிரான்ஸ் நாட்டின் ‘Journal Asiatique’ எனும் 1866ம் ஆண்டு பிரசுரத்தில் தாஹிரி குறித்து பின்வருமாறு கூறப்படுகிறது: “பாரசீக நாட்டில் அதிகாரமே இல்லாத அபலைகளாக அந்த நாட்டு பெண்கள் அனைவரும் இருக்கையில், ஒரு பெண் அதுவும் அரசாங்கத்தையும் மக்களையும் தங்கள் ஆற்றலின் கீழ் அவர்கள் எண்ணிக்கையினாலும் முக்கியத்துவத்தினாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மதகுருக்கள் வாழும் காஸ்வின் போன்ற ஒரு நகரில், எவ்வாறு ஒரு பெண் இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சமயப்பிரிவை உருவாக்கியிருக்க முடியும்? பலரை வியக்கச் செய்துள்ள ஒரு முக்கிய கேள்வி இதுவே ஆகும்…” இந்திய நாட்டின் தலை சிறந்த பெண்மனிகளுள் ஒருவரான சரோஜினி நாயுடு அவர்கள், தாஹிரி பற்றி நன்கு அறிந்திருந்து அவருடைய கவிதைகளையும் ஒரு இரான் நாட்டு நண்பரின் வாயிலாக பெற்றிருந்தார்.

தாஹிரி கொல்லப்படுவதற்கு முன், அதற்கு முதல் நாள் அவர் பாரசீக அரசனான நாஸ்ரிட்டின் ஷா-வின் முன்னிலைக்கு விசாரனைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அதற்கு முன்பாகவே ஷா மன்னன் தாஹிரி பற்றி கேள்விப்பட்டிருந்தான். அவருடைய ஆற்றலை பற்றி அறிந்திருந்த மன்னன் தாஹிரி பாப் அவர்களின சமயத்தை விடுத்து மறுபடியும் ஷீயா மார்க்கத்தை தழுவினால் அவரை தமது அரண்மனையில் பெண்கள் பகுதியில் ஒரு முக்கிய அதிகாரியாக நியமிப்பதாகவும், ஏன், அவரை தமது மனைவியாகவும் ஆக்கிக்கொள்வதாக கூறினான். ஆனால் அதற்கு தாஹிரி:

அரசு, செல்வம் ஆட்சி உமக்கே உரியதாகட்டும்
தேசாந்திரமும், ஏழை ‘தர்வேஷ்’ ஆவதும் பேரபாயமும் எனதாகட்டும்
அந்த நிலை நல்லதென்றால், அது உமக்காகட்டும்
இந்த நிலை தீயதென்றால், நான் அதற்காக ஏங்குகின்றேன்; அது எனதாகட்டுமாக!

அதைப் படித்த ஷா மன்னன் இத்தகைய ஒரு பெண்ணை வரலாறு இது வரை நமக்கு வெளிப்படுத்தியதில்லை என்றானாம்.

ஷா மன்னன் தாஹிரியை நேரில் கண்டபோது, “நீ ஏன் பாப் அவர்களில் விசுவாசியாக இருக்கவேண்டும்?” என கேட்டானாம். அதற்கு தாஹிரி ஏறக்குறைய பின்வருமாறு பதிலளித்தாராம்:

நீர் வழிபடுவதை நான் வழிபடவில்லை
நான் வழிபடுவதை நீர் வழிபடவில்லை
நீர் வழிபடுவதை நான் வழிபடப்போவதில்லை
நான் வழிபடுவதை நீரும் வழிபடப்போவதில்லை
உமக்கு உமது சமயம், எனக்கு எனது சமயம்.

தாஹிரி கொல்லப்பட்டாலும் அவர் ஆரம்பித்து வைத்து பெண்கள் உரிமை போராட்டம் தொடர்ந்து மேலும் வலுவடைந்தே வந்துள்ளது, மேலும் பெண்கள் முழு சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து வலுவடையும்.