கடவுள் சமயத் திருக்கரம் டாக்டர் முஹாஜர்


டாக்டர் முஹாஜர் மறைந்து இவ்வருடத்துடன் 43 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அவர் நினைவாக இந்தக் கட்டுரை உங்களுக்கு மீண்டு வழங்கப்படுகின்றது.

என் நினைவை விட்டகலா வியத்தகு பஹாய் போதகர்
(ஆ. ஆந்தோனிசாமி)

டாக்டர் முஹாஜர்
4 ஏப்ரல் 1923 – 29 டிசம்பர் 1979

ஒரு நாள் சில நண்பர்களுடன் போதனைப் பயணம் மேற்கொண்டபோது தென்னமெரிக்காவிலுள்ள பொலிவியா மலைத்தொடர் பகுதியில் கால் நடையாக ஒரு போதகர் பலமணி நேரம் நடந்து கொண்டிருக்கின்றார். போய்ச் சேரவேண்டிய ஊர் கண்ணில் தெரிந்தபாடில்லை. கொட்டும் மழையும் ஆரம்பித்துக்கொண்டது. அந்நேரத்தில், அசதியின் காரணமாக தரையில் உட்கார்ந்து, “வேறு வழியில்லை, எனது போதனை இலட்சியங்களை அப்ஹா உலகிற்கு கொண்டு சென்றுதான் நிறைவேற்ற வேண்டும்,” என புலம்புகின்றார். அப்படி புலம்பினாலும், இறைசேவை என்னும் பாதையில் பல்லாயிரக்கணக்கான போதனைப் பயணங்களை மேற்கொண்டுவிட்டு மங்காப் புகழுடன் மறைந்து விட்ட கடவுள் சமயத்திருக்கரம் டாக்டர் முஹாஜர் அவர்களே என்னால் மறக்க முடியாத பஹாய் போதகராவார். நினைக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகி நெஞ்சகத்தில் மறக்க முடியாமல் போதிக்கின்றவர்கள் வீரர்கள், விவேகிகள், தீரர்கள், தியாகிகள் மட்டுமல்ல நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு அந்த சுடர் விளக்குகள் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகைய தியாகச் சுடர்களில் ஒருவர்தான் டாக்டர் முஹாஜர்.

தியாகத்தின் விலாசம்

மற்றொரு சமய திருக்கரமான இனோக் ஒலிங்காவுடன் டாக்டர் முஹாஜர்

1923-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4-ஆம் தேதி ஈரான் நாட்டில் ஹஃபிசுல்லா காணுக்கும், இஸ்மாட் கானும் அம்மையாருக்கும் எழுவர் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக ரஹ்மத்துல்லா முஹாஜர் பிறந்தார். இவரது பாட்டனார்கள் பஹாய் சமயத்தை 1850-ஆம் ஆண்டிலேயே ஏற்றுக்கொண்டவர்கள். இவரது பாட்டனார்கள் புனித பூமிக்கு யாத்திரிகர்களாகச் சென்று பஹாவுல்லாவின் கருணை மழையில் நான்கு மாதங்கள் திளைத்திருந்த வேளையில் அன்பார்ந்த மாஸ்டர் அப்துல் பஹா இவர்களுக்கு ஒரு நிருபம் எழுதியபோது அவர்களை முஹாஜிரான் என அழைத்தார். அன்றிலிருந்துதான் குடும்பப் பெயர் முஹாஜிர் ஆனது.

முஹாஜிருக்கு ஒன்பது வயது இருக்கையில் தெஹ்ரான் நகருக்கு இவரது பெற்றோர்கள் குடிபெயர்ந்தனர். இவரது தெஹ்ரான் இல்லத்தில் சமய சிறு விளக்கக் கூட்டம் இடைவிடாது நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளராக திரு. புஃருட்டானும் மற்ற பிரபல பஹாய் ஆசிரியர்களும் கலந்து கொள்வர். முஹாஜிருக்கு பதினைந்து வயதிருக்கையில் அவரது தந்தையார் மாரடைப்பினால் காலமானார். முஹாஜிர் பதினாறு வயது பருவத்தில் தமது நெருங்கிய தோழர்களான ஹூஷ்மன்ட் பாத்தியாஸம், டாக்டர் அபாஸியன், கடிமி முதலிய நண்பர்களுடன் உதயத்தை வென்றவர்கள் எனும் சரித்திர நூலின் பிரசித்திப்பெற்ற இடங்களான மாஃகு சிறைச்சாலையையும், இதர புனித இடங்களையும் சுற்றிப்பார்த்து சமயத்தினுள் தம்மை இறுக்கமாக இணைத்துக் கொண்டார். 1944-இல் தெஹ்ரான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாணவராக தம்மை பதிந்து கொண்டார். 1946-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1950-ஆம் ஆண்டு ஜூலை வரை 45 மாத கால போதனைத் திட்டத்தை ஷோகி எஃபெண்டி ஈரானிய பஹாய்களுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் பல பஹாய்கள் அயல் நாடுகளுக்கு, குறிப்பாக, அராபிய நாடுகளில் முன்னோடிகளாகச் சேவையாற்றினர். அப்படி முன்னோடியாகப் பயணத்தை தொடங்கும் நம்பிக்கைாளர்களுக்கு முன்னோடிக் குழுவின் செயலாளராகச் சேவையாற்றிய முஹாஜிர் அம்முன்னோடிகளின் பிரியாவிடையின்போது அவர்களுக்கு விருந்தளிப்பார். அப்படி விருந்தளித்த நிகழ்ச்சி ஒன்றின்போது அராபிய நாட்டிற்கு முன்னோடியாச் செல்லவிருந்த திரு கோல்மாமுடியா என்பார் தம்மிடம் கித்தாப்-இ-அக்டாஸ் திருநூல் இருந்தால் நன்மையாக இருக்கும் என்றார். மறுநாள் கொட்டும் வெண்பனி குளிரில் பஸ்நிலையத்தில் அவர் தமது பயணத்தை தொடங்கியபோது முஹாஜிர் அவரைச் சந்தித்து தம்மிடம் இருந்த ஒரே பஹாய் நூலான அக்டாஸை பரிசளித்து, “இது என்னிடம் இருப்பதை விட ஒரு பஹாய் முன்னோடியிடம் இருப்பதுதான் சிறந்தது” என்றார். குறிப்பாக, பஹாய் முன்னோடிகளின் தேவையை முன்னறிந்து தீர்த்து வைப்பதில் முஹாஜர் அக்கறை காட்டி வந்தார்.

இல்வாழ்க்கை

1951-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் நாள் ஈரான் என்ற மங்கை நல்லாலை மனைவியாகக் கரம்பிடித்தார். கடவுள் சமய திருக்கரம் அலி புஃருட்டான் அவர்களின் திருநிறைச் செல்விதான் குமாரி ஈரான். திருமணம் முடிந்த சில மாதங்களில் தமது மருத்துவக் கல்வியை முடித்து பட்டம் பெற்றார். ஷோகி எஃபெண்டியிடமிருந்து ஆசியும், அனுமதியும் கிடைத்த பிறகுதான் திருமணமே நடந்தது.

சேவைப்பாதையில்

1953-இல் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள் பத்து வருட உலகத் திட்டத்தை ஆரம்பித்தார். அந்தத் திட்டத்தின் கீழ் எந்த நாட்டிற்காவது முன்னோடியாக செல்ல வேண்டும் என டாக்டர் முஹாஜிர் பெரும் ஆவல் கொண்டார். இந்தோனீசியாவின் மெந்தாவாய் தீவுகளுக்கு ஒரு முன்னோடியை அனுப்புவதற்கு சரியான போதர் தேவை என அப்போதைய ஆஸ்திரேலியா தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் திரு கோல்லிஸ் ஃபெதர்ஸ்டன் ஈரான் நாட்டு முன்னோடிக் குழுவிடம் தெரிவித்தார். அதையறிந்து டாக்டர் முஹாஜர் அக்குழுவிடம் தமது ஆவலை வெளிப்படுத்தினார். தற்போதுதான் திருமணம் ஆகியுள்ளது, இளம் மனைவி என காரணம் சொல்லி அக்குழு அந்த ஆவலுக்குத் தடை விதித்தது. மனம் தளராத முஹாஜர் ஈரான் தேசிய சபையை சந்திக்க முடிவெடுத்தார். ஆத்மீக சபையை சந்திக்க ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த இரவில் கனவொன்று கண்டார். தெஹ்ரான் வீதியொன்றில் பஹாவுல்லா ஓர் அழகிய கம்பளத்தின் ஒரு முனையை தமது தோளில் சுமந்தவாறு நடப்பதை முஹாஜர் கண்டவுடன் ஓடிச் சென்று கம்பளத்தின் மறுமுனையை தனது தோளில் சுமந்தார். அப்போது, திவ்யபேரழகர் பஹாவுல்லா திரும்பிப்பார்த்து புன்முறுவலுடன் “எமது சுமையை சுமப்பதில் நீர் எமக்கு உதவியதில் யாம் மகிழ்ச்சியடைந்தோம்,” என மொழிந்தார். அந்தக் கனவைக் கண்ட பிறகு தமது இலட்சியக் கனவு எப்படியும் நிறைவேறிவிடும் என்பதில் உறுதியாக இருந்தார். மறுநாள் ஆத்மீக சபை தனது அனுமதியை வழங்கியது. மெந்தாவாய் தீவைப் பற்றி ஒன்றுமே அறிந்திராத நிலையில் உற்றாரும் பெற்றோரும் கண்ணீர் மல்க பிரியாவிடை கூற, 1954-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்து கடுங்குளிர்கொண்ட ஒரு பிற்பகலில் தமது இளம் மனைவியுடன் தெஹ்ரான் விமான நிலையத்தில் தமது பயணத்தைத் தொடங்கி, பாகிஸ்தானின் கராச்சி வழியாக ஜாக்கார்த்தா சென்றடைந்தார். பல சிரமங்களுக்குப் பிறகு அவருக்கு மெந்தாவாய் தீவில் அரசாங்க மருத்துவர் வேலை கிடைத்தது.

மெந்தாவாய் தீவினிலே

அந்தக் காலத்தில் மெந்தாவாய் தீவுகளின் ஜனத்தொகை 25,000ம்-தான், நாகரிகக் காற்று வீசாத பிரதேசம் அது. காட்டுவாசிகளே அங்கு நாட்டுவாசிகள், பண்டமாற்று வியாபாரமே நடைமுறை வாழ்க்கை. வசதிகளற்ற அந்த வனாந்திரத்தில்தான் முஹாஜர் சமயப்பணியாற்றினார். அவரை அங்கு “துவான் டாக்டர்” என்றுதான் அழைப்பார்கள். காட்டுக்குச் சென்றால் வீடு வந்து சேர பல நாட்கள் ஆகும். ஒற்றையடிப் பாதையும், காட்டு மரங்களடர்ந்த சூழலும், படகுப் பயணங்களுமே அவரது அன்றாட காட்சிகள். ஒருமுறை தமது மனைவி சுகவீனமடைந்தும் கூட தாம் அறிந்திராத நிலையில் நடுகாட்டில் போதித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் சென்ற பிறகுதான் அவருக்குச் செய்தி கிடைத்து திரும்பி வந்தார். அத்தகைய பயணங்களின்போதுதான், அமாத்தா சினாங்கா எனும் படகோட்டி சி பாய் பஜெட் என்னும் கிராமத்தில் சமயத்தை ஏற்றுக்கொண்டார். அவர்தான் மெந்தாவாய் தீவின் முதல் பஹாய் நம்பிக்கையாளராவார். அன்றைய தினமே 25 நண்பர்கள் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டனர். படிப்பறிவற்ற அப்பகுதியில் சமயத்தை ஏற்றுக்கொள்ள விரும்புவோரை முஹாஜர் தங்களது கைகளை மட்டுமே உயர்த்த சொல்வார். படிப்படியாக முஹாஜர் மெந்தாவாய் மொழியான இந்தோனீசிய மொழியை நன்கு கற்று அம்மொழியிலேயே சமயத்தைப் போதிக்கலானார்.

கடிதப் போக்குவரத்து, தபால் சேவை என்பதெல்லாம் இங்கு மிக அரிது. கப்பல் தீபா எனும் தபால் கப்பல் மாதம் ஒரு முறை அங்கு வந்து தபால்களை பட்டுவாடா செய்யும். அப்படித்தான் அவரது கடிதங்கள் வந்தன. 1957-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷோகி எஃபெண்டி இவருக்குத் கடவுள் சமய திருக்கரம் எனும் நிலையை வழங்கிய செய்தி கூட இவருக்கு மிகத் தாமதமாகத்தான் கிடைத்தது. அந்தச் செய்தி கிடைத்தவுடன் அந்த மாபெரும் பட்டத்தை சுமக்க தமக்கு தகுதி உள்ளதா என நினைத்து நீர் மல்கிய கண்களுடன் பல மணி நேரம் பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார். இப்படி சமயப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அகால மரணமடைந்தார் என்னும் சோகச் செய்தி பஹாய் உலகை உலுக்கியது. அந்த சோகத்திற்கிடையில் பாதாகாவலரது வேண்டுகோளுக்கிணங்க ஒரு வட்டார பஹாய் மாநாடு ஜாக்கார்த்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதிநேர எதிர்ப்பு காரணமாக அம்மாநாடு கடைசி நிமிடத்தில் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டது.

சேவைப்பாதைக்கு புதிய திறப்பு

கடவுள் சமய திருக்கரம் என்னும் ரீதியில் சேவைப்பாதையில் செல்ல வேண்டியிருந்ததால் அவர் தமது மனைவியுடன் மெந்தாவாய் தீவை விட்டு புறப்பட வேண்டியதாயிற்று. அப்பொழுது மெந்தாவாய் தீவில் 9,000 பஹாய்களுடன், எட்டு பஹாய் பள்ளிகளும் இருந்தன. புனித பூமியில் தங்கி சமயத்தை நிர்வகித்து வந்த கடவுள் சமயத்தின் திருக்கரங்கள் மெந்தாவாய் தீவை விட்டு உலக ரீதியில் சேவையாற்றுமாறு முஹாஜரை வலியுறுத்தினர். அதன் காரணமாகவே அவர் இந்தோனீசிய எல்லைகளை விட்டகன்றார்.

மலாயாவுடன் நெருக்கம்

“இருக்கின்ற பஹாய் சமூகங்களிலேயே ஓர் அழகிய ஆபரணமாகத் திகழவல்ல சமூகத்தைத் தெரிவு செய்யும் பொறுப்பை முஹாஜரிடம் விட்டிருந்தால் அவர் மலேசியாவைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்,” என ஒரு முறை அவரது மனைவி ஈரான் கூறியுள்ளார். 1961-ஆம் ஆண்டு ஆரம்பத்தில்தான் அவருக்கு மலேசியாவைப் பற்றி அணுக்கமாக தெரிந்திருக்கின்றது என்பதை அவரது டைரியின் 13 பிப்ரவரி என்னும் நாள்செய்தி காட்டுகின்றது. சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய பஹாய் மாநாடுகளின்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக இவர் மலாயா வரத்தொடங்கினார். இவரது பயணத் தோழராக வந்தது மலேசியாவின் முதல் நம்பிக்கையாளரான யான் கீ லியோங்தான். மலேசியாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு போன பெருமை டாக்டர் முஹாஜரையே சாரும். முன்னறிவிப்பு ஏதுமின்றி முஹாஜர் மலேசியா வருவார். இருபெரும் உத்திகளை டாக்டர் முஹாஜர் எப்போழுதுமே தமது ஆயுதமாகக் கையாண்டு வந்தார். ஒன்று, நண்பர்களை ஊக்குவித்து மலேசியாவின் குறிக்கோள்களை உயர்த்திக்கொண்டே போனார். மற்றொன்று, அயல்நாடுகளில் முன்னோடிச் சேவையின்பால் தண்பர்களது கவனத்தை ஈர்த்தார். உதாரணத்திற்கு, ஒன்பது வருட திட்டத்தில் 63 புதிய உள்ளூர் சபைகளை ஸ்தாபிக்கும் குறிக்கோளைத் தாண்டி 93 உள்ளூர் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இதையறிந்த முஹாஜர் அந்த குறிக்கோளை 135 ஆக மாற்றி மலேசியாவைப் புகழேனியின் உச்சிக்கு உயர்த்தினார். இவரது ஊக்குவிப்பால் ஒருமுறை தேசிய சபை உறுப்பினர்கள் முன்னோடிகளாக சேவை செய்ய முன்னெழுந்ததால் எதிர்பாராத இடைத்தேர்தல் வந்தது.

இறுதி நேரம்

1979-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி ஒரு பஹாய் மாநாட்டிற்காகத் தென்னமெரிக்கா போய்ச் சேர்ந்த வேளையில்தான் டிசம்பர் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை குயிட்டோ சென்றடைந்தார். மறுநாள் சனிக்கிழமை பஹாய் நிலையத்தில் பயணபோதகர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய டாக்டர் முஹாஜர் 1980-ஆம் ஆண்டினை பயணபோதனை ஆண்டாக அறிவித்து 10,000 புதிய ஆன்மாக்களை சமயத்தின்பால் ஈர்க்கும் இலட்சியத்தையும் அறிவித்தார். அந்நேரத்தில்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்குள்ள அமெரிக்கானா அட்வெண்டிசா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பாட்டார். சிகிச்சை பலனளிக்காமல் போகவே காலை மணி 11.20-க்கு அப்ஹா இராஜ்ஜியத்திற்குச் சிறகடித்து பறந்துவிட்டார்.

மிதமிஞ்சிய துக்கத்தையோ, மிதமிஞ்சிய மகிழ்ச்சியையோ அப்படி அப்படியே விவரித்து விடுவதற்கு நமது சொந்த மொழிகூட ஒத்துழைப்பு நல்குவதில்லை. சேவை என்னும் ஆடையையே தமது நிரந்தர ஆடையாகத் தரித்திருந்த இப்போதகரின் மறைவு ஏற்படுத்தியது சொல்லொன்னா துயரம். இருப்பினும் ஆண்டுகள் பல ஆனாலும், நமது நெஞ்சம் விட்டகலா போதகர் முஹாஜரே ஆவார்.