பதினாறு வயதினிலே


வீடியோ

“பதினாறு வயதினிலே” எனும்போது இயக்குனர் பாதிராஜாவின், நடிகை ஸ்ரீதேவி நடித்த பதினாறு வயதினிலே 1977 திரைப்படமே ஞாபகத்திற்கு வரும். ஓர் இளம்பெண் எவ்வாறு பருவத்தின் கோளாரினால் காதல் வயப்படுகிறாள் மற்றும் அதனால் பெரும் சோதனைகளையும் சந்திக்கின்றாள் என்பதே கதை. அந்த இளம் பெண்ணின் உலகமே அவள் வாழ்ந்த கிராமந்தான். அவள் உட்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையில் அவளுக்குத் தெரிந்த வாழ்க்கையை அவள் வாழ்ந்தாள். இறுதியில், அவள் சந்தித்த சோதனைகளின் வாயிலாகத் தான் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்தப் பதினாறு வயதையும் தாண்டிய மனமுதிர்ச்சியோடு தன் வாழ்க்கைக்கு ஏற்ற முடிவைத் தேர்ந்தெடுக்கின்றாள்.  இது “பதினாறு வயதினிலே” திரைக்கதை. ஆனால், 1982ல் வேறொரு பதினாறு வயதினிலே கதை நடந்தது. அக்கதையின் முடிவும் சோகம் நிறைந்தது ஆனால், நிறைவான ஒரு வாழ்க்கையை உள்ளடக்கியது.


மோனா மஹ்முட்நிஸாட்

அந்தப் பெண்ணுக்கும் பதினாறு வயது, அவளும் காதல் வயப்பட்டிருந்தாள், இறுதியில் அவளுடைய வாழ்க்கைப் பாடத்தின் அடிப்படையில் தன் முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். ஆனால், இந்தப் பெண் கொண்ட காதல் இறைவன் மீது கொண்ட தெய்வீகமான காதலாகும். இந்தக் காதலின் பயனாக அவள் தன் உயிரைத் துச்சமாக மதித்துத் தன் காதலுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தாள். அவள் பெயர் மோனா மஹ்முட்நிஸாட். இன்று உலகம் முழுவதும் இந்தப் பெண்ணின் பெயரால் பல அறநிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆன்மீகப் பார்வைப் பெற்றுள்ளனர். மோனா தான் வாழ்க்கையின் பயனாக “இரான் நாட்டின் தேவதை” எனும் பெயரையும் அடைந்தாள்.

இரான் நாட்டின் ஷிராஸ் நகரில் பத்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்…

கைது செய்யப்பட்ட பெண்களுள் தனது பதினாறாவது வயதை அடைந்திருந்த மோனாவும் இருந்தாள். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் எனும் பேரார்வம் ததும்பும் குழந்தை முகம். அவளை எதற்காக கைதுசெய்திருந்தார்கள்? அவள் செய்த தவறுதான் என்ன? திருடினாளா? கொலை செய்தாளா? இல்லையில்லை, அதைவிட மிகவும் ‘மோசமான’ ஒரு காரியத்தைச் செய்துவிட்டிருந்தாள். ஆம், ‘செய்யக்கூடாத’ ஒரு காரியத்தை அவள் செய்துவிட்டாள். அவள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டாள். குழந்தைகளுக்குக் கடவுள் அன்பையும் ஒழுக்கத்தையும் போதித்துவிட்டாள். உலகில் இதைவிட மோசமான ஒரு குற்றத்தை யாருமே செய்ததில்லை. கொலை கொள்ளை போன்ற சாதாரண குற்றங்களைச் செய்திருந்தாலும் பரவாயில்லை. குழந்தைகளுக்கு நன்னெறி பாடம் நடத்துவதா? அது ஒரு மாபெரும் குற்றம் அல்லவா.

சிறுவயதில் தாய்ப்பாலுடன் கடவுள்மீது அன்பையும் சேர்த்து அவளின் தாயார் ஊட்டியிருந்தார். மோனாவுக்கு வயதாக ஆக, இந்த அன்பு சற்றும் குறையாமல் மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தது. அவள் தன் குடும்பத்தாரின் மீது மட்டும் அவள் பாசம் கொள்ளவில்லை. உலகையே நேசித்தாள். தன் வழியில் குறுக்கிட்டோர் அனைவர் மீதும் அன்பு செலுத்தினாள். நன்கு பழக்கமானோரைத் திடீரெனக் கண்டால் கண்களில் நீர் வழிய அவர்களை ஓடிச்சென்று கட்டிக்கொள்வாள்.  பள்ளியில் அவள் அருகே இருந்தாலே போதும் என நினைக்கும் ஒரு சிநேகிதிகள் கூட்டம் அவளை எந்நேரமும் சுற்றியிருக்கும். இத்தகைய நற்பண்புகளால் “ஷிராஸ் நகரத்தின் தேவதை” எனும் பெயரும் அவள் பெற்றிருந்தாள். கல்விகேள்விகளில் தனிச்சிறப்பு, கலைத்திறன்கள், இனிமை நிறைந்த குரல்வளம் ஆகியவற்றை அவள் இயல்பாகவே பெற்றிருந்தாள். வயதுக்கு மீறிய விவேகமும் கடவுள் பக்தியும் அவளிடம் பரிபூரணமாகக் குடிகொண்டிருந்தன. மானிடத்திற்கு சேவை செய்யவேண்டும் எனும் அவளின் அவாவிற்கு எல்லையே இல்லை.

மோனா உலகையே நேசித்தாலும், எல்லோரையும் விட அவள் அதிகம் நேசித்த ஒருவர் இவ்வுலகில் இருந்தார். அது அவளுடைய தந்தை. தந்தை, மகள் இருவருக்குமிடையில் இருந்த உறவு ஒரு மிகவும் விசேஷமான உறவு. தன் தந்தையின் கண்களை ஆழ்ந்து உற்று நோக்கி காதுகளால் கேட்க முடியாத, வார்த்தைகளுக்கு இடமில்லாத ஓர் உரையாடலில் மோனா ஈடுபடுவாள். மோனாவின் தந்தையும் மக்களின் சேவையில் சற்றும் சளைத்தவர் அல்ல. பலவிதமான சேவைகளில் அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தவராவார். ஒரு காலத்தில் தமது பிறந்தகத்தை விடுத்து வேறொரு நாட்டிற்குச் சேவைச் செய்திட சென்றார். அங்குதான் அவரின் இரு பெண்களும் பிறந்தனர். அரசியல் நிலைமை சரியில்லாத நிலையில் அவர் தமது குடும்பத்தினரோடு மீண்டும் தமது தாயகத்திற்குத் திரும்பினார்.

மோனாவின் கடவுள் பக்தி அவள் குடும்பத்தினரின் சமய நம்பிக்கையின் பலனாக ஏற்பட்டதாகும். அவர்கள் தங்களின் தேசத்தின் அதிகாரபூர்வச் சமயத்தைச் சார்திருக்கவில்லை. கடவுள் அவதாரங்களின் வரிசையில் ஆகக் கடைசியாகவும், கோடிசூர்யப் பிரகாசராய் உலகில் தோன்றிய கடவுளின் அவதாரமான பஹாவுல்லாவின் நிழலை அவர்கள் சரனடைந்திருந்தனர். பாரம்பரியத்தைச் சாராத நம்பிக்கைகள் எப்போதுமே பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் பரவாயில்லை, மாறாக, அத்தகைய சிறுபான்மை நம்பிக்கையினர் தங்களுக்கென சொந்த நம்பிக்கைகளைப் பெற்றிருக்கும் உரிமையை இழந்து பெரும்பான்மைச் சமூகத்தினரின் நம்பிக்கையினை அவர்களும் பற்றிக்கொள்ளவேண்டுமென நெருக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தவறினால் கொடுங்கோண்மைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது சமயங்களின் வரலாற்றில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் விஷயமாகும்.

இரான் நாட்டின் சிறுபான்மை பஹாய் சமூகத்தினர் தங்கள் சமயத்தின் தோற்றத்திலிருந்து இத்தகைய கொடுங்கோண்மைகளுக்கு ஆளாகியே வந்துள்ளனர். இருபதிலிருந்து முப்பதாயிரம் விசுவாசிகள் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்காகத் தங்களின் உயிரைக் கடவுளின் பாதங்களில் மனமுவந்து அர்ப்பணித்துள்ளனர். மோனாவின் குடும்பத்தினரும் இதற்கு விதிவிலக்கல்ல.

பஹாய்களின் புனிதஸ்தலங்களுள் ஒன்றான பாப் அவர்களின் இல்லம் 1980களின் ஆரம்பத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. சிறுபான்மையினரான பஹாய்களைத் தங்கள் வழிக்குக் கொண்டுவந்திடும் சமயவாத அரசாங்கத்தின் முயற்சிகளுள் இதுவும் ஒன்றாக இருந்தது. நல்ல வேளையாக மோனாவின் குடும்பத்தினர் அதற்கு முன்பாகவே அத்தலத்திற்கு விஜயம் செய்து தங்கள் புனிதயாத்திரையை நிறைவு செய்திருந்தனர். ஒரு நாள் தன் தந்தையாரோடு பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளைக் காணச் சென்றிருந்த மோனா, தன் இல்லம் திரும்பியதும் தன் தாயை விளித்து, “அம்மா, நான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமா,” எனக் கேட்டாள். அதற்கு மோனாவின் தாயார், “இதென்ன திடீர் ஆசை,” எனக் கூறினார். அதற்கு மோனா, “அம்மா இன்று பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளிடையே நடந்து வந்துள்ளேன். என் காலனிகளில் அந்த இல்லத்தின் புனித மண் பதிந்துள்ளது. அதனால்தான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமாவென கேட்டேன்,” என்றாள். பிறகு கண்களின் நீர் வழிய தன் அறைக்குள் சென்று அன்றைய அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினாள்.

பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அதிகரித்த போது, தனக்கும் தன் தந்தைக்கும் கடவுளின் விதி என்னவாக இருக்கும் என்பது குறித்து மோனாவுக்கு பலவிதமான எண்ணங்கள் தோன்றின. ஒருநாள் தானும் தன் தந்தையும் தங்களின் நம்பிக்கைக்காக கொல்லப்படப்போகின்றார்கள் என ஒரு கனவு கண்டாள். அதன் பிறகு மோனாவிடமிருந்த நற்பண்புகளோடு வேறொரு நற்பண்பும் சேர்ந்துகொண்டது, அது ‘பயமின்மையாகும்’.

இரான் நாட்டின் பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுங்கோண்மைகள் சிறிது சிறிதாக அந்நாட்டு பாடசாலைகளையும் சென்றடைந்தது. குழந்தைகள்கூட தங்கள் நம்பிக்கைக்காக துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். ஒரு முறை சமய நம்பிக்கைக் குறித்து மோனாவின் வகுப்பினர் கட்டுரை எழுதிட பணிக்கப்பட்டனர். சமய நம்பிக்கைச் சுதந்திரம் பறிக்கப்படுவதை மனதில் வைத்து மோனா ஒரு கட்டுரை எழுதினாள்.

“உலகிலுள்ள ஒளிமிகு வார்த்தைகளுள் “சுதந்திரம்” எனும் வார்த்தையே பேரொளி மிக்க வார்த்தையாகும். மனிதன் என்றும், இன்றும், இனி என்றென்றும் சுதந்திரத்தையே விரும்புவான்.  ஆனால், அவனிடமிருந்து சுதந்திரம் பறிக்கப்படுவது ஏன்? மனிதனின் பிறப்பிலிருந்து அவனுக்குச் சுதந்திரம் இல்லாமல் போவது ஏன்? ஆரம்பத்திலிருந்தே வலிமைமிக்க ஆனால் அநீதியான மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக பலவிதமான அடக்குமுறைகளையும் கொடுங்கோண்மைகளையும்  பயன்படுத்திவந்துள்ளனர்…”

“இச்சமூகத்திற்கான எங்கள் குறிக்கோள்களை வெளிப்படுத்திடவும்; நான் யார் என்பதையும் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், என் சமய நம்பிக்கையை பிறருக்கு தெரிவிப்பதற்கும் எங்களுக்குச் சுதந்திரமளிக்க ஏன் மறுக்கின்றீர்கள்; என் கருத்துக்களை பத்திரிக்கைகளுக்கு எழுதவோ வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அதுபற்றி பேசுவதற்கோ எனக்கு சுதந்திரம் கொடுப்பீர்களா? ஆம், தன்னிச்சையென்பது ஒரு தெய்வீகக் கொடையாகும், அது எங்களுக்கம் உரியாதாகும், ஆனால் அதை எமக்கு மறுக்கின்றீர்கள். ஒரு தனிநபர் பஹாய் எனும் முறையில் என்னை சுதந்திரமாகப் பேச விடுவீர்களா? ஒரு புதிய வெளிப்பாடு தோன்றியுள்ளது, ஒரு பிரகாசமிகு புதிய நட்சத்திரம் உதித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள ஏன் மறுக்கின்றீர்கள். உங்கள் கண்களை மறைக்கும் தடித்தத் திரைகளை அகற்றுவீர்களா?”

“ஒரு வேளை எனக்கு சுதந்திரம் இருக்கவே கூடாது என நீங்கள் நினைக்கின்றீர்கள் போலும். கடவுள் மனிதனுக்கு இந்தச் சுதந்திரத்தை வழங்கியுள்ளார். அவர்தம் சேவகராகிய நீங்கள் அதை என்னிடமிருந்து பறிக்க முடியாது. கடவுள் எனக்கு பேச்சு சுதந்திரத்தை வழங்கியுள்ளார். ஆகவே, “புனிதராகிய பஹாவுல்லாவே மெய்யராவார்”. கடவுள் எனக்குப் சொல் சுதந்திரம் வழங்கியுள்ளார். ஆகவே, “கடவுள் வெளிப்படுத்தியுள்ள அந்த ஒருவர் பஹாவுல்லாவே ஆவார்! அவரே பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் அவரது திருநூலே நூல்களுக்கெல்லாம் தாய் நூலும் ஆகும்.”

வெளிப்படையான இக்கட்டுரையின் விளைவாக மோனா அதுவரை பள்ளியில் பெற்றிருந்த சிறிதளவு பேச்சு சுதந்திரத்தையும் இழந்தாள்.

சாதாரணமாக நம் ஒவ்வொருவருக்கும் நமது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது தெரியாது. அனுமானிக்கலாம் ஆனால், நிச்சயமாக எதையும் கூற முடியாது. மோனாவுக்கோ தன் எதிர்காலம் என்னவாகும் என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. அவள் கண்ட ஒரு கணவின் வாயிலாக தன் எதிர்காலம் என்னவாகும் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. இரான் நாட்டின் பஹாய்கள் பலரைக் கொள்ளைக்கொண்ட கொடுங்கோண்மைகள் ஒரு நாள் மோனாவின் இல்லத்திற்கும் வந்துக் கதவைத் தட்டின……

தொடர்ந்து கதையை வீடியோவில் காணவும்…

தொடர்பு கொண்ட பிற பதிவுகள்

பாப் அவர்கள்
பஹாவுல்லா
வெண்பட்டாடை (தாஹிரியின் மரணம்)
பாஹிய்யா காஃனும்
ஸைனாப்