ஹைஃபா நகரின் பஹாய் பூங்கா


இஸ்ரேல் நாட்டில் உள்ள பஹாய் புனிதஸ்தலங்களுள் இரண்டு மிகவும் முக்கியமானவையாகும். பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களான பாப், பஹாவுல்லா இருவரும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இரு இடங்களும் பஹாய்களால் புனிதஸ்தலங்கள் என கொண்டாடப்படுகின்றன. உலகம் முழுவதிலிமுள்ள பஹாய்கள் இவ்விடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டிடவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.பஹாவுல்லா அவர்கள் 1892ல் தமது விண்ணேற்றத்திற்குப் பிறகு ஆக்கோ நகரில் பாஹ்ஜி எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். பாப் அவர்கள் 1850ம் ஆண்டு அரசாங்கத்தால் மரண தண்டனைக்கு உட்படு்த்தப்பட்டு 750 இராணுவ வீரர்களின் துப்பாக்கி இரவைகளுக்கு இரையாக்கப்பட்டார். இவரின் நல்லுடல் அவருடைய மரணத்திற்குப் பின் அவர் கொல்லப்பட்ட நகரமான தாப்ரீஸ் நகருக்கு வெளியே இருந்த ஒரு மதகில் வீசியெரியப்பட்டது. அதன் நோக்கம் பாப் அவர்களின் உடல் மிருகங்களுக்கு இரையாக வேண்டும் என்பதே ஆகும். ஷீயா மதப்பிரிவினரிடையே கடவுளின் அவதாரங்கள் குறித்து ஒரு நம்பிக்கை உள்ளது. அதாவது, கடவுளின் அவதாரங்களின் உடலை மிருகங்கள் தீண்டமாட்டா என்பது அவர்களின் நம்பிக்கையாகும். பாப் அவர்கள் கடவுளின் அவதாரம் என ஏற்க மறுத்த அரசாங்கம் அவரை ஏமாற்றுக்காரர் என நிரூபிப்பதற்காக அம் மதகில் அவருடைய உடலைக் கிடத்தி மிருகங்களுக்கு இரையாக்க நினைத்தனர். ஆனால், பாப் அவர்களின் மரணத்திற்குப் பின் நல்லிரவில் அவருடைய நம்பிக்கையாளர்கள் சிலர் அவருடைய உடலை மீட்டு ஒரு பட்டு நெசவாலையில் ஒளித்து வைத்தனர். இவ்விதமாக அவருடைய உடல் சுமார் 60 வருட காலங்கள் இங்கும் அங்குமாக ஒளித்து வைக்கப்பட்டு இறுதியில் அப்துல் பஹா அவர்களின் வழிகாட்டலில் ஹைஃபா நகருக்கு கொண்டுவரப்பட்டு அங்கு கார்மல் மலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய புனித உடலைத் தாங்குவதற்காக பர்மாவில் உள்ள பஹாய் நம்பிக்கையாளர்கள் சுமார் ஒரு டன் எடையுடைய பளிங்குக் கல்லினால் ஆன ஒரு கற்சவப்பெட்டியை செய்து ஹைஃபா நகருக்கு அனுப்பி வைத்தனர். பாப் அவர்களின் உடல் இதில் வைக்கப்பட்டு பின் கார்மல் மலை சதுக்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு மாடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்புனித மாடத்தைச் சுற்றிலும் இன்று மனதை மயக்கும் பூங்காக்களும் படித்தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன மற்றுமற் யூனெஸ்கோவினால் (UNESCO) உலக மரபுச்செல்வஸ்தலங்களின் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாப் அவர்களின் நல்லடக்கத் திருமாடத்தையும் அதைச் சுற்றிலுமுள்ள கண்ணக் கவரும் பூங்காக்களையும் படித்தளங்களையும் கீழ்க்காணப்படும் இணைப்பின் வழி காணலாம்.

ஹைஃபா நகரின் பஹாய் பூங்கா