Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘பேரழிவுகள்’


பள்ளிக்கூடங்களில் காணப்படும் சரித்திர பாடநூல்களைப் பார்க்கும் போது இந்த வருடம் இந்த சண்டை நடந்தது அந்த வருடம் அந்த சண்டை நடந்தது, அதில் அவ்வளவு பேர்கள் அழிந்தனர் இதில் இவ்வளவு பேர்கள் அழிந்தனர் என்பதுதான் சரித்திரமோ எனும் ஒரு பொதுவான எண்ணம் உருவாகக்கூடும். இதன் காரணம் உலக வரலாறு இது நாள் வரை இத்தகைய போர்களாலும் அழிவுகளாலும் நிறைந்துள்ளதுதான் காரணம்.

அப்துல்-பஹா அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், முதலாம் உலக யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்பே அப் போர் குறித்து முன்கூறியுள்ளார், அது மூளப்போவதற்கான காரணங்களையும், அதாவது பால்டிக் நாடுகள் குறித்த பதட்டநிலையை, எடுத்துக்காட்டியுள்ளார். முதலாம் உலக யுத்தம் உலக வல்லரசுகள் பெரும்பாலானவற்றை உள்ளடக்கிய ஒரு போராகும். இப்போர் “போர்களை முடிவுக்குக் கொண்டுவரும் போர்,” என அழைக்கப்பட்டது. அப்போது இருந்த ஐரோப்பிய நாடுகள் பல தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. சில நாடுகள் அரசியல் கூட்டுசேர்ந்திருந்தன. இந்த அரசியல் குட்டையில் நடந்த ஒரு சம்பவத்தில் 28 ஜூன் 1914ல் கேவ்ரிலோ பிரின்சிப் எனப்படும் போஸ்னிய-செர்பியனான மாணவன் ஒருவன் ஆஸ்த்திரிய நாட்டு அரசகுடும்பத்தினர் ஒருவரை கொலை செய்துவிட்டான். அக்கொலையில் செர்பியாவுக்கு சம்பந்தம் உண்டென நம்பிய ஆஸ்த்திரிய-ஹங்கேரி நாடு செர்பியாவின் மீது போர் தொடுக்க, அதில் ரஷ்யாவும் தனக்கு பாதகம் வரக்கூடாதென நினைத்து போர்க் குட்டையில் தானும் விழுந்து பிறகு ஐரோப்பாவே ஒரு மாபெரும் மயானமாகி உலகம் முழுவதும் ஆங்காங்கு சண்டைகள் நடந்தன.

ww1 trench sccene

ww1 trench sccene

அந்த மாணவன் எதற்காக கொலை செய்தானென தெரியாது. வெறும் சந்தேகமே முதலாம் உலக யுத்தம் நடப்பதற்கு மூலகாரணமாகியது. இ்ந்த யுத்தத்தில் 8 மில்லியன் ஐரோப்பிய இராணுவ வீரர்கள் மடிந்தனர், 7 மில்லியன் வீரர்கள் கைகால்களை இழந்தனர், 15 மில்லியன் பேர்கள் மோசமான காயமடைந்தனர். இறுதியில் வட்டியோடு முதலும் போய் அதுபோதாதென்று சற்று வயிற்றுப்போக்கும் போன கதையாகியது. முதலாம் உலக யுத்தம் பொதுவாக 1919ம் ஆண்டு வெர்சேல்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முடிவிற்கு வந்ததாக கூறுகிறார்கள்.

இதன் பிறகு இரண்டாம் உலக யுத்தம் குறித்து அப்துல்-பஹா குறிப்புகள் காட்டியுள்ளார். 1 செப்டம்பர் 1939ல் ஜெர்மனி நாடு போலாந்து நாட்டின் மீது தொடுத்த போரோடு இந்த இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தது. இந்த போருக்குப் பிறகு இடது-இயக்கம் (movement of the left) தலைதூக்கும் எனவும் அவர் முன்கூறினார்.

detroyed church

detroyed church

20 மில்லியன் இராணுவ வீரர்களும் 40 மில்லியன் பொது மக்களுமாக இந்த இரண்டாம் உலக யுத்தத்தில் சுமார் 60 மில்லியன் பேர்கள் மடிந்தனர். இந்த இரண்டாம் யுத்தத்தில்தான் அனு ஆயுதமும் முதன் முதலாக ஜப்பானின் ஹிரோஷிமா-நாகாசாக்கியில் பயன்படுத்தப்பட்டு ஜப்பான் அடக்கப்பட்டது. வெற்றிகரமாக ஜெர்மனி ஆரம்பித்த இந்த யுத்தம் இறுதியில் அந்த நாடு இரண்டாக பிளவுபடவும், யுத்தம் ஆரம்பிக்கவும் பல மில்லியன் உயிர்கள் மடியவும் காரணமான ஹிட்லர் இறுதியில் தற்கோலை புரிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு யுத்தங்களினாலும் ஏற்பட்ட நன்மை யாதெனில், “லீக் ஆஃப் நேஷன்ஸ்” என ஆரம்பித்த உலக நாடுகளின் கூட்டு பிறகு இரண்டாம் உலக யுத்தத்தோடு இனி வரக்கூடிய போர்களை தடுப்பதற்கு “ஐக்கிய நாடுகள்” என உதயமாயிற்று. குறைந்த பட்ச ஆற்றல் கொண்டதாயினும் ஐ.நா. தன்னால் இயன்ற நன்மைகளை செய்தே வருகின்றது.

அப்துல்-பஹா அவர்கள் உலகில் ஏற்படக்கூடிய சிற்றமைதி குறித்து பேசுகையில், இவ்வுலகில் போர்கள் பெரும்பாலும் 20ம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஒரு முடிவிற்கு வந்துவிடும் என கூறியுள்ளார். மானிடம் தனது பால பருவத்தைத் கடந்து தற்போது தனது முதிர்ச்சி நிலையை அடைந்துகொண்டிருக்கின்றது. இவ்வளவு காலமாக போரை அனுபவித்த மக்கள் இனி அமைதியை அனுபவித்துதான் பார்க்கட்டுமே!

பாரசீக உடையில் எட்வர்ட் ஜி பிரௌன்

பாரசீக உடையில் எட்வர்ட் ஜி பிரௌன்

பஹாவுல்லாவை சந்தித்த கிழக்கியலாளரான எட்வர்ட் ஜி. பிரௌன் என்பவரிடம் பஹாவுல்லா பின்வருமாறு கூறியுள்ளார்:

“…தாங்கள் ஒரு சிறைக்கைதியையும் தேசப்பிரஷ்டியையும் சந்திக்க வந்துள்ளீர். நாம் விரும்புவது உலக்ததின் நன்மையும், தேசங்களின் சந்தோஷமுமே; இருந்த போதும், கைதுறுதலுக்கும், நாடுகடத்துலுக்கும் தகுதியான சச்சரவையும் தேசத் துரோகத்தையும் தூண்டுபவராக எம்மை அவர்கள் கருதுகின்றனர். …தேசங்கள் அனைத்தும் சமயத்தில் ஒன்றாகி, மனிதர்கள் அனைவரும் சகோதரர்களாவதும், மனிதர்களின் மைந்தர்களிடையேயுள்ள பாசம், ஒற்றுமை ஆகியவற்றின் பந்தங்கள் பலப்படுத்தப்படுவதும்; சமயத்தின் வேற்றுமை ஒழிய வேண்டும், இன வேற்றுமைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதும்… இதில் என்ன தீங்கு உள்ளது?… என்றாலும் அது அவ்வாறே இருக்கும். இந்த பலனற்ற சச்சரவுகள், இந்த அழிவுமிக்க போர்களும் மறைந்துவிட்டு, மாபெரும் அமைதி வரும்… ஐரோப்பாவிலுள்ள உங்களுக்கும் இது தேவை அல்லவா? இயேசு இது குறித்துதானே முன்கூறியுள்ளார்? …என்றாலும் உங்கள் மன்னர்களும் ஆட்சியாளர்களும், மனித குலத்தின் சந்தோஷத்திற்கு உகந்தவற்றின் மீது அல்லாது, மனித இனத்தின் அழிவிற்கான வழிமுறைகளின் மீது தங்கள் பொக்கிஷங்களை அளவின்றிச் செலவு செய்வதை யாம் காண்கிறோம்… இந்த சச்சரவுகளும், இந்த இரத்தம் சிந்துதலும் முரண்பாடுகளும் நீங்கி, மனிதர்கள் அனைவரும் ஒரே உறவினர்கள் போலும், ஒரே குடும்பத்தினர் போலும் இருக்க வேண்டும்… ஒரு மனிதன் தன் தேசத்தை நேசிப்பவன் என்பதில் பேருமை கொள்ளவேண்டாம், மாறாக அவன் தன் இனத்தை நேசிப்பவன் என்பதில் பெருமை கொள்ளட்டும்…”

மேலும் விபரங்களுக்கு: http://bci.org/prsamy

Read Full Post »