உலகில் ஏன் இத்தனை புரட்சிகளும் போராட்டங்களும் நடக்கின்றன?


சமீபகாலமாக உலகின் பல பகுதிகளுக்கு பரவியுள்ள எதிர்ப்புக் கூட்டங்கள் சற்று மனதை ஆச்சரியப்படவே வைக்கின்றன. திடீரென ஏன் இத்தனை உணர்வெழுச்சி? திடீர் காரணங்கள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடக்கப்போகின்றது என்பதற்கு வெளிப்படையான அறிகுறிகளும் இல்லை. ஆனால், உலக சரித்திரத்தை சற்று ஆராய்வோமானால் இத்தகைய எதிர்ப்புகள் நிகழ்வது பல நூற்றாண்டுகளாகவே அவ்வப்போது நிகழ்ந்துள்ளன என்பது தெளிவு. ஒரே காரணத்திற்காக அன்றி அவை பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கு பஞ்சம், போர், சமயங்கள், அரசியல் என பல மூலகாரணங்களைக் கூறலாம்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ரோம் நகரில் ஒரு போராட்டம் நடந்தது. இது அடிமைகளால் நடத்தப்பட்ட ஒரு போராட்டம். அடிமைகளுக்கு தலைவனாக விளங்கிய ஸ்பார்ட்டகஸ் அடிமைத்தனத்திற்கு எதிராக ரோம் நகரின் பிரபுக்களுக்கு எதிராக நடத்திய போராட்டம் இது. போராட்டம் பல விதமாக சென்று இறுதியில் ஸ்பார்ட்டகஸ் தமது வீரர்களோடு போர்க்களத்தில் மரணம் அடைந்தார் என ரோம் சரித்திரம் கூறுகிறது. அதே போன்று 1381ல் இங்கிலாந்தில் நடந்த உழவர் புரட்சி அந்த நாட்டில் நடந்த ஒரு முக்கிய புரட்சியும் வருங்காலத்தில் பெரிதும் பேசப்படும் ஒரு புரட்சியாகவும் அமைந்தது.பிறகு பிரான்ஸ் நாட்டில் (1789-1799) நடந்த புரட்சியை குறிப்பிடலாம். இப்புரட்சியில் மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சி முறைக்கு சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் இவை யாவும் ஆங்காங்கே தனித் தனியாக நடந்த புரட்சிகள். உலகளாவிய நிலையில் நிகழ்ந்தவை அல்ல.

19ம் நூற்றாண்டு தொடங்கி 20ம் நூற்றண்டில் கடுவேகத்துடன் செயல்பட்டு உலக அரசர்கள் பெரும்பாலோர் தங்கள் இராஜ்ஜியங்களை இழந்து நடுத்தெருவில் நின்றது மட்டுமல்லாமல் தங்கள் உயிரையும் இழக்கச் செய்தது ஓர் உலக அளவிலான புரட்சி. ரஷ்ய நாட்டின் போல்ஷெவிக் புரட்சியில் அந்த நாட்டு மன்னரும் அவர்தம் குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது ஞாபத்திற்கு வரும். இதன் பின்னர் கம்யூனிச புரட்சியில் பல உலக நாடுகள் கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் தங்கள் அரசாங்கங்களை அமைத்துக்கொண்டன பிறகு அவையும் 20ம் நூற்றாண்டின் இறுதியில் அடித்த ஒரு புரட்சிப் புயலில் வேரோடு சாய்ந்து போயின. இப்போது மத்திய கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் இந்த புரட்சிப் புயல் அடிக்கத் துவங்கியுள்ளது. உலகத்தில் ஏற்பட்ட பல புரட்சிகளின் கணக்கிலடங்கா பட்டியலை இங்கு காணவும்:

இவ்விதமாக உலகில் காலங்காலமாக மக்கள் புரட்சிகள் என்பன தொடர்ந்தாற்போல் நடந்துவந்துள்ளன. இவ்விதமான புரட்சிகள் மனித இயல்பின் ஓர் அங்கமா அல்லது இதற்கு ஏதோ உள் காரணம் உள்ளதா எனும் கேள்வி எழுகின்றது. இதற்கு சுலபமாக பதில் காண்பது என்பது சற்று இயலாததாகும். இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும்; சமூக-பொருளாதார காரணங்கள் மற்றும் அரசியல் காரணங்களைக் கூறலாம். இவைகூட சூழ்நிலைகளைப் பொருத்தே ஏற்படுகின்றன. நடப்பில் உள்ள அரசாங்கம் வலுவிழந்து எதிர்ப்பு சக்திகள் வலுவடையும்போதும் இவ்வித புரட்சிகள் நிகழவும் வாய்ப்பேற்படுகின்றன. ஏற்கணவே கூறியது போன்று இதற்கு சுலபமான பதில் கிடையாது. மூல காரணங்களை காண்பதற்கு முன் மனிதன் என்பவன் யார், அவன் எதற்காக இப்பூமியில் உலவி வருகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும்.

இரான் நாட்டில் 1844ல் துவங்கிய பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமான பஹாவுல்லா மனிதனின் படைப்பு குறித்து பிரார்த்தனை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்:

என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி.

அதாவது மனிதனின் நடுநோக்கம் தன் படைப்பின் உண்மையை அறிந்து அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இத்திருவாக்கின் அர்த்தமாகும். கடவுள் தமது படைப்பில் ஒவ்வொரு ஜீவராசியையும் அதனதன் விதத்தில் படைத்தார் ஆனால், மனிதனை மட்டும் அவர் தமது சாயலில் படைத்துள்ளார் என விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டின் ஜெனசிஸ் அத்தியாயத்தில் காண்கின்றோம். அதாவது மனிதனுக்கு கடவுளின் எல்லா தெய்வீகத் தன்மைகளையும் பிரிதிபலிக்கும் ஆற்றல் உள்ளது என்பது இதன் பொருள். பஹாவுல்லா பின்வருமாறு கூறுகிறார்:

“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியாலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிராகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினை பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்பு பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”

இதை அறியாமலும் அத்தகைய ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளாமலும் மனிதன் வாழும் போது அவன் மிருக நிலையிலேயே செயல்படுகிறான்.

பஹாய் திருவெளிப்பாடு 1844ல் முதலில் உண்டாகியது. அவ்வெளிப்பாட்டின் விளைவாக உலகத்தின் சமநிலை நிலைகுலைவிற்கு ஆளாகியிருப்பதாக பஹாவுல்லா கூறுகிறார்:

இம்மாபெரும், இப் புதிய உலக அமைப்பின் அதிர்வு மிக் தாக்கத்தின் மூலம் உலகின் சமநிலை நிலைகுலையச் செய்யப்பட்டுள்ளது. மனித குலத்தின் சீரான வாழ்வு இத் தனிச் சிறப்புடடைய இவ்வற்புதமிக்க அமைப்பு முறையின் மூலமாக மகத்தான மாற்றத்ததிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பஹாவுல்லாவின் சமயத்தின் நோக்கம் உலகத்தை ஒரே உலக அரசாங்கத்தின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவதாகும். அதற்கான முதிர்ச்சி நிலையை மனிதன் அடைந்துவிட்டான், அவனுடைய பௌதீக ரீதியான பரிணாம வளர்ச்சி ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இனி அவன் ஆன்மீக ரீதியில் தனது படைப்பின் குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும். இதற்கான கல்வி முறைகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், மனிதன் இனியும் அறியாமையில் வாழ்ந்து வந்தால் என்ன நடக்குமோ அதுதான் இன்று உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றது.