விதிவிலக்கு
பாஹிய்யா நாக்ஜவானி
விதிவிலக்கென்பது ஒரு சலுகையைக் குறிக்கின்றது. பொதுவாகவே விருப்பமில்லாத மற்றும் சுமையான ஒரு செயலை ஆற்றுவதிலிருந்து விலக்களிக்கப்படுவதையே ஒரு சலுகையெனக் கூறலாம். இதுவே ஒரு விதிவிலக்கில் உள்ளடங்கிக் கிடக்கும் எண்ணமாகும்: அது சலிப்பு தரும் கடமை ஒன்றிலிருந்து விதிவிலக்களிக்களிக்கப்படும் சலுகையாகும்.
நாம் எல்லாருமே சலுகைகளை விரும்புகிறோம். வீட்டுப்பாடம் செய்வதிலிருந்து குழந்தைகள் விதிவிலக்கை விரும்புகின்றனர். உதாரணமாக, உடல் நலமற்றோ அல்லது நீண்ட காலத் துன்பத்தால் உடல் நலிவுற்றோ இருக்கும்போது, எங்கோ யாரோ அது குறித்து அறிவிக்கப்படுகிறார் என்பது மனதுக்கு இதமளிக்கின்றது; சமூகம் ஒருவருடைய சம்பளத்தைக் குறைக்காது அவர் வேலை செய்வதிலிருந்து விலக்களிப்பது; அதாவது, ஒரு முறை மருத்துவரால் வேலைவிலக்குச் சான்றளிக்கப்படும்போது, ஒருவர் மருத்துவக் காப்புறுதியும் சமூகக் காப்புறுதியும் பெற வாய்ப்புப் பெறுகிறார் என்பது. இராணுவச் சேவையிலிருந்து விதிவிலக்குப் பெறுவது பெரிதும் களிப்பு தரும் ஒன்று. அதேபோல் வருமான வரி விதிவிலக்குக் குறித்து சொல்லவே தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், எல்லா சூழ்நிலைகளிலும், விதிவிலக்கு தரும் சலுகையானது ஏதோ ஒரு சிறப்புப்பலன் அடையப்பட்டுள்ளதென்பதையே குறிக்கின்றது; ஓர் மாற்றுவழி அளிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.
ஒரு கடமையை நிறைவேற்றுவதிலிருந்து மக்களை விடுவிக்கும் தனிப்பட்ட மற்றும் விதிவிலக்கைக் கோருவதுமான சூழ்நிலைகள் இருக்கக்கூடும் என்பதை நமது சமூகம் ஏற்க வேண்டும் என்பதை நாம் விரும்புகிறோம். ஒரு மாபெரும் சமூகத்தில் ஊர்பேர் தெரியாது போவதிலிருந்து பாதுகாப்புத் தரும், விதிவிலக்கை அனுமதிக்கும் சட்ட விதிமுறைகளை நாம் மதிக்கின்றோம்; விதிவிலக்குகள் தனிமனித உரிமைகளை வலியுறுத்துகின்றன. சிறப்புக் கவனம் அளிக்காமலும் சட்டத்தைத் துர்பிரயோகம் செய்வதிலிருந்தும் அவை நம்மைப் பாதுகாக்கின்றன.
அதே வேளை, ஒரு சலுகையும் துர்ப்பிரயோகம் செய்யப்படலாம். அது ஒருவருக்குத் தேர்வு செய்யும் உரிமையை மட்டுமல்லாமல் மக்களிடையே ஒரு சாராருக்குத் தனிச்சிறப்பையும் சேர்க்கின்றது: அதாவது இவர் இதைச் செய்யலாம், அவர் இதைச் செய்யமுடியாது என்பன போன்றவை.
தனிச்சிறப்பை உண்டாக்கும் எதுவுமே அதனோடு தப்பெண்ணங்களை, மனிதரால் உருவாக்கப்பட்ட இல்லாத வேறுபாடுகளை, உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தன்னோடு சுமந்துவரும். அது சலுகைகளை மட்டும் அளிக்கவில்லை ஆனால், அவற்றைச்சுற்றி சந்தேகமான யூகங்களையும் உருவாக்குகின்றது: நான் உனக்கு இந்த விதிவிலக்களித்தேனானால் அவ்விதிவிலக்கு தேவைப்படுமளவுக்கு நல்லதொரு காரணம் இருக்க வேண்டும். காரணங்கள் சுமத்தப்படாமலும் அவை வேண்டப்படுபவையாகவும் இருக்க வேண்டும். சலுகைகள் சிறப்புச் சூழ்நிலைகளை மட்டும் அனுமதிக்கவில்லை ஆனால் அவை தவறான முறைகளில் பயன்படுத்தப்படும் சூழ்நிலைக்கும் இட்டுச் செல்லக்கூடியன. உகந்த சூழ்நிலைகளிலும், சரியான காரணங்களுக்காகவும் சலுகைகளாவன அத்தியாவசியமாக இருப்பதைப் போலவே, தவறான சூழ்நிலைகளில் அவை பெரும் பாதகம் விலைவிக்கக்கூடியனவாகவும் இருக்கின்றன.
ஒரு விதிவிலக்கென்பது ஓர் உண்மையான சலுகையாக இருப்பதற்கு, அதைப் பெறக்கூடியோர் அச் சலுகையை நன்கு உணரவேண்டும். இல்லாவிடில், அவ்விதிவிலக்கு வேறெதுவுமாக மாறக்கூடிய அபாயமுள்ளது. அது ஒரு தடைவிதிப்பாக மாறிடக்கூடிய அபாயமுள்ளது. விதிவிலக்கு வழங்கப்பட்ட அதே மக்களுக்கெதிராக அதே விதிவிலக்குகள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக படிப்படியாகத் தடைகளாக மாறிய சலுகைகள் ஆங்காங்கே மனிதசரித்திரத்தில் சிதறிக்கிடக்கக் காணலாம். ஒரு விதிவிலக்காகப்பட்டது ஒரு தடையாகவின்றி ஒரு சலுகையாக நல்ல முறையில் இயங்கிட சுமையானவையும், சிரமமானவையும், விரும்பத்தகாதவையும், எம்மக்களுக்கு அவை குறிப்பாக கஷ்டமாக இருக்கும் என்பது குறித்த சூழ்நிலைகள் பற்றியும் இணக்கம் காணப்பட வேண்டும். யாவற்றுக்கும் மேலாக, தாம் செய்ய விரும்பும் ஒரு காரியத்தைச் செய்வதினின்று மக்களுக்கு நாம் விதிவிலக்களிக்கக்கூடாது. தங்கள் சலுகைகளினின்று நாம் மக்களுக்கு விதிவிலக்களிக்க முடியாது. ஒரு சலுகையினின்று விதிவிலக்களிப்பதை ஒரு சலுகையெனக் கூறுவது பரிகாசமாக இருக்கும். புனித யாத்திரை செய்வதினின்று பெண்களுக்கு விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது என்பதை அதிப்புனித நூலில் நாம் காணும்போது, நிச்சயமாக பஹாவுல்லா அது குறித்து பரிகாசம் செய்யவில்லை என்பது நமக்குத் தெரியும். இது எனக்குப் புரியவில்லை. பொதுவாகவே சமய ரீதியில் புனித யாத்ரீகர்களுக்குப் புனித யாத்திரையானது ஒரு சலுகையெனக் குறிப்பிடத்தகுந்தமையை அடைந்துள்ளது, மற்றும் சில வேளைகளில் அவ்விதப் புனிதயாத்ரீகரைச் சந்திப்பதும் பெரும் சலுகையெனக் கருதப்படுகிறது. இச்சலுகை பொருளியல் ரீதியிலானதோ அல்லது பௌதீக ரீதியிலானதோ அல்ல, ஆனால் அதற்கு மாறாக ஆன்மீக ரீதியிலானது. கடந்தகாலங்களில் இம்மரபை தவறாகப் பயன்படுத்தியும், ஏமாந்தவர்களை ஏமாற்றுவதற்கு இதை உபயோகப்படுத்தியும், தங்கள் சாதனைகளில் ஒன்றாக அதைக் காண்பித்தும், அது அவர்களுக்கு ஏதோ ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அளித்துள்ளதாக எண்ணியும் செயல்பட்டும் வந்த போதிலும் அழியாமல் இம்மரபு காலங்காலமாகத் தலைத்தே வந்துள்ளது. நிச்சயமாகவே, இது குறித்த தெளிவற்ற நோக்கங்களும், “புறப்பயணம்” மற்றும் “அகவரவு” ஆகியவற்றுக்கிடையிலான குழப்பங்களும் கடந்த காலங்களில் மாபெரும் இலக்கியப் படைப்புக்களைத் தூண்டியுள்ளன. புனிதப்பயணமென்பது தனிப்பட்ட வகையில் ஆசீர்வாதத்தின் ஓர் அடையாளமாகவே இருந்துள்ளது, மற்றும் அதை அடைவது ஆன்மீக வாழ்வின் ஒரு குறிக்கோளாகவும், மறுஅர்ப்பணிப்பின் ஓர் அறிகுறியாகவும் இருந்துள்ளது. புனிதப்பயணமெனும் கடுமையான பாதை பாவம் தீர்க்கும் ஒரு வழியாகவும் பயன்பட்டுள்ளது, மற்றும் மனதில் பெரிதும் ஐயம் கொண்ட யாத்ரீகரும் தனது இதய ஆவலின் திருவாசலில் தனக்கென வெகுமதிகளை இரகசியமாக எதிர்பார்ப்பார்.
பஹாய் சமயத்தில், ஒரு குறிப்பிட்ட வித்தியாசத்தைத் தவிர்த்து இம்மரபு முழுமையாக பின்பற்றப்படுகின்றது: பெண்கள் இதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டடுள்ளனர். இத்தனியொரு விதிவிலக்கு இம்மரபு குறித்தும், கடந்த மற்றும் வருங்காலங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும், மற்றும் வார்த்தைகளின் பயன்கள் குறித்தும் பல கேள்விகளை எழுப்புகின்றது. புனிதப்பயணத்திலிருந்து ஒருவர் எவ்வாறு “விதிவிலக்களிக்கப்படலாம்”? போவதற்கோ அல்லது போகாமல் இருப்பதற்கோ ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். இக்கடமையை ஆற்றுவதிலிருந்து ஒருவர் நிச்சயமாக விடுவிக்கப்படலாம். ஆனால் ஒரு சலுகையிலிருந்து ஒருவர் எவ்வாறு “விதிவிலக்குப்” பெறுவது? புனிதயாத்திரை கலந்துரையாடல் குறித்த எழுவாயாகவும் “விதிவிலக்கு” வினைச் சொல்லாகவும் இருக்கும் வரையில் இது எனக்குப் புரியப்போவதில்லை.
ஆகாயப் பயணம், மருத்துவ வசதிகள், ஆரோக்கியமான உடல், மற்றும் சுமாரான சுதந்திரம் பெற்ற இருபதாம் நூற்றாண்டில் வாழும், முக்கியமாக மேற்கு நாடுகளில் வதியும் பெண்கள் இச்சந்தேகத்திற்குறிய சிறப்பிற்காக தனிப்படுத்தப்பட்டிருப்பது குறித்து ஆச்சர்யப்படலாம். தவிர்ப்பதைவிட மாறுவதே சிறப்பாகும் எனக்கூடிய சூழ்நிலை மற்றும் இருப்புநிலைகளைக் குறிக்கும் ஒரு விதிவிலக்கை அவர்கள் எவ்வாறு கருதுவது என்பது குறித்து ஆச்சர்யப்படலாம்.
தாங்கள் பெண்கள் என்பதைத் தவிர்த்து வேறு காரணங்களுக்காகவும் அவர்கள் இச் சலுகையைப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகுவது குறித்தும் இப்பயணம் பெண்களுக்குக் கட்டாயமானதல்ல எனும் காரணத்தினால் ஆண்கள் அவர்கள் அப்பயணத்தில் ஈடுபடுவதினின்று அவர்கள் மனதை மாற்ற முயற்சிக்கலாம் என்பது குறித்தும் பெண்கள் யோசிக்கலாம். தேக அசௌகர்யத்தினாலோ, பொருளாதார சிறமங்களினாலோ இச்சலுகையைப் பெறவேண்டிய நிலையில் பெண்களல்லாதவரும் இருப்பார்கள் எனும் அதே வேளையில் பெண்கள் எனும் காரணத்தினால் தங்களுக்குத் தேவைப்படாத ஒரு சலுகையைப் பெற்றிருப்பது குறித்தும் அவர்கள் குழப்பமடையலாம் யாவற்றுக்கும் மேலாக, மனுக்குல முழுமைக்குமான ஆசிகள் குறித்த விளைவுகளைத் தாங்கி வரும், பல நூற்றாண்டுகளாக இருந்துள்ள வழக்கமான ஒன்றை, நமது சமயத்திலிருந்தும் கிரகிக்கக்கூடியதுமான ஒரு செயலை ஆற்றுவதிலிருந்து நமது பெண்கள் விலக்களிக்கப்பட்டுள்ளது பற்றி அவர்கள் குழப்பமடையலாம்.
விதிவிலக்கு மற்றும் தடைவிதிப்பு ஆகியவற்றுக்கிடையில் சுலபத்தில் ஏற்படக்கூடிய நிலைச்சறுக்கல் குறித்தும் அவர்கள் சிந்தனை செய்யலாம். யாவற்றையும் விட, ஓர் ஆன்மீக அதிகாரி ஒரு சாரருக்கு சிறப்பு விதிகள் விதித்திடும் போது இந்நிலைச்சறுக்கல் நிகழ்ந்திட வாய்ப்புள்ளது என்பதைச் சோர்ந்த உள்ளத்துடனும், சரிந்திடும் எதிர்பார்ப்புகளுடனும் அவர்கள் நினைத்துப்பார்ப்பார்கள்; அதாவது, சமயம் ஒரு சாரரை மட்டும் தனிப்படுத்தும் விதிவிலக்கை அளிக்கும் போது இந்நிலைச்சறுக்கல் நிகழக்கூடும், அதாவது சமூகத்தின் குறிப்பிட்ட உறுப்பினர்களாகிய, குறிப்பாக பெண்களிடையே சில சிரமங்களை நீக்கிடும் பொருட்டு மனித அலுவல்களை இறைவன் ஒழுங்குபடுத்த முனையும் போது இது நிகழக்கூடும். பொதுவாக என்ன நடக்கின்றதென்றால், ஒரு விதிவிலக்கை மனிதர்கள் தடைவிதிப்பாக மாற்றிடும் போது ஒரு நிலைச்சறுக்கல் ஏற்படுகின்றது, நிதானமான, கண்ணுக்குத்தெரியாத நிலைச்சறுக்கல் இது. இது ஒரு குற்றச்சாட்டல்ல, கண்டணமும் அல்ல. ஆறாயிர வருடப் ப ழக்கம் சுலபத்தில் நீங்காது. அது உடலோடு ஒட்டியது, அது சமூகங்களைப் பிணைத்திடும், எண்ணிக்கையற்ற நுண்ணிய சேர்க்கை இழைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்பதும் ஒன்று. அது குறித்து நாம் ஒன்றும் செய்யவியலாது, ஆனால் அதை நாம் கண்டும்காணாமல் இருக்கக்கூடாது. கண்டும்காணாமல் இருப்பது அதே சரித்திரத்தை மறுபடியும் எழுதியும் உண்மையை மறுப்பதும் ஆகும். அதே சரித்திரத்தை மறுபடியும் எழுதிட வழிகள் நிச்சயமாக உண்டு. மனித இயல்பின் இருள்சார்ந்த பக்கத்தைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதற்காக சலுகைளிலிருந்து பெறப்படும் விதிவிலக்கை அதே சலுகைகள் எனும் கோணத்திலிருந்து மறுவரையறுக்கும் வழிகள் உண்டு. இது சிறமமானதல்ல. பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க மகாசபை இதைச் செய்துள்ளது. பல விதமான கொடுமைகளை இதே விதத்தில்தான் ஃபாசிஸ்ட் சர்வாதிகார சமூகங்கள் நியாயப்படுத்தி வந்துள்ளன. சர்வாதிகார ஆட்சிகள் இதை “மறுகல்வி புகட்டுதல்” எனக் கூறின.
தேவைப்படுவதெல்லாம் சிறிது புத்தி சாதுர்யமே:
– நீண்ட பயணங்களுக்குத் தேவைப்படும் வலிமையைக் குறைக்கும் கடினங்களையும் இடைவிடாத மனோபாரங்களையும் தாங்கிடுவதற்கு ஆண்களைவிட பெண்களே அதிக இயற்சக்திகள் பெற்றுள்ளனர் எனும் விஞ்ஞான ரீதியான சமீப கால ஆய்வுகளை நாம் உணர மறுத்தும் கடந்த நூற்றாண்டு முதல் சகிப்புத்தன்மை குறித்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ள குறிப்பிடத்தகுந்த பெண் பயணிகள் பற்றிய குறிப்புகள் யாவற்றையும் புறக்கனிப்பது;
விளையாட்டு மைதானத்தில் கடுமையான துன்பங்களுக்குள்ளாகியும், மனித உள்ளம் எய்திட நினைக்கும் நித்தியமான இல்லம் நோக்கிய பிரயாணத்தின்போது எதிர்நோக்கக்கூடிய எந்தச் சிரமங்களுக்கும் இணையாகாத, தங்கள் இல்லங்களில் எவ்வித வெகுமதிகளும் இல்லாமல் தாங்கள் எதிர்நோக்கும் பெரும் சிரமங்களுக்குள்ளாகும் உலகப் பெண்களின் உடல் மற்றும் மனோ வலிமையை நாம் புறக்கனிப்பது;
– மனம்வெதும்பியும், உறங்கிக்கொண்டும், அதிகமாக சாப்பிட்டு உடலை பருமனாக்கிக்கொண்டும், அல்லது நன்கு உணவு உட்கொள்ளாமல், தங்கள் உடையலங்காரங்களில் மூழ்கியும், கனவுலகில் சஞ்சரித்தும், சுறுக்கமாகச் சொல்லப்போனால் இந்த மாதிரியெல்லாம் தங்களைப் பலவீனர்களாக மாற்றிக்கொள்ளாமல், அனுமதிக்கப்பட்ட வரை ஆண்களைப் போலவே பெண்கள் ஓடியும், குதித்தும், பிரயாணங்களுக்கான வலிமையில் ஆண்களுக்கீடான வலிமையோடு ஒப்பிடுகையில் அனுவளவும் குறைவேற்படுத்தாத எந்தவொரு உயிரியல் குறைபாடுகளையும் பெண்கள் அநுபவிக்கவில்லையென்பது;
– தங்கள் இல்லங்களிலேயே அடங்கிக் கிடந்து, சிக்கனமாக செலவுகள் செய்தும், தங்கள் கற்புக்குக் கலங்கமில்லாமல் தேசாடணம் செய்யவோ அல்லது அறிமுகமில்லாதவர்களை உபசரிக்கவோ விடாத, ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் தங்கள் கற்புக்குக் களங்கம் விளைவிப்போரை உருவாக்கிய ஆணாதிக்கத்தினால் உருவாக்கப்பட்ட பயம், தங்கள் உடல்கள் அகன்றுள்ளதைப்போன்றே, அகன்றுள்ள பெண்களின் மனங்களை மீண்டும் அந்த ஆதி மற்றும் பூர்வநிலை இருளில் இட்டு அடக்குவதை நாம் நிச்சயிப்பது;
– இறுதியாக, தனது பூர்வத்தூய்மையிலிருந்து கனிந்து பஹாய் புனித யாத்திரை கூட ஒருநாள் கடந்த காலங்களைப் போல் புனிதம் சிதைந்துவிடும் எனவும், ஆண்களைவிட பெண்களுக்கு மிகவும் கடுமையாக விளங்கக்கூடியதும் வலிமையைச் சோதிக்கும் ஒன்றாகவும் அது ஆகும் எனவும், வருடா வருடம் லட்சோபலட்ச மக்கள் ஆற்றும் புனிதப்பயணங்களிலிருந்து தோன்றும் குறைபாடுகளை, லௌகீக ஈடுபாடுகளை, மூட நம்பிக்கைகளை, வெறுப்பேற்படுத்தக்கூடிய நடத்தைகளை உலக நீதி மன்றத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது போகும் என நாம் எண்ணினோமானால்:
அதற்கான பதில் ஆமாம் எனவே வரும். பெண்கள் புனிதஸ்தலங்களை நேரடியல்லாத காட்சிகளாக காணவே விரும்புவார்கள், மற்றும், ஆமாம், பௌதீகப் பிரயாணத்திலிருந்து கிடைக்கும் விதிவிலக்கானது உண்மையிலேயே ஒரு சலுகையாகிவிடும். ஆனால் இதைத்தானே நாம் நிலைச்சறுக்கல் எனக் கூறுகின்றோம். இதுதானே எதையும் ஓய்வில்லாமல் நியாயப்படுத்தும் மனதிலிருந்து தோன்றும் பின்விளைவுகள் எனப்படுகின்றது. அர்த்தங்களைத் தேடும்போதும், கற்பனா பின்விளைவுகளை அனுமானம் செய்தும், நினைத்தும், கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தோமானால் பெரும் பயங்கரங்களை நாம் வெளிக்கொணருவோம். இவ்வித நிலைச்சறுக்கல் குறித்து சமூகம் பெரிதும் எதிர்ப்பு தெரிவியாமல் இருக்கும் வரை, எல்லா சட்டங்களும், விதிமுறைகளும் இவ்வித துர் உபயோகத்தை முற்றாக தடுக்காதவரை, பெண்களுக்கான விதிவிலக்குகள் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதிலிருந்து இறைவன் தாமே, பெண்களை பாதுகாக்கும் வரை, இவ்வித கொடுமைகள் மீண்டும் மீண்டும் நடக்கவே செய்யும்.