கலியுக முடிவும் கல்கி அவதாரமும்


( இதனுடன் தொர்புடைய பிற கட்டுரைகள்: ஸ்ரீ கிருஷ்ணர் – https://goo.gl/krv8qo ; 1844 – மையக்குறி ஆண்டு https://goo.gl/7lN3Du; To read in english: https://kprsamy.wordpress.com/2017/12/15/1844-in-hindu-prophecies/)

19ம் நூற்றாண்டின் ‘அவதார எதிர்பார்ப்பு’

ஸ்ரீமத் பகவத் கீதை
ஸ்ரீ பகவான் உவாச
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத|
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)

(எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன்)

துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் (दुष्ट निग्रह सिष्ट परिपालन) செய்திட நவயுக அவதாரமாகிய கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் தோன்றவேண்டும். இது புராணங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படும் வாக்குறுதி. ஸ்ரீ கிருஷ்ணர் தமது பேருபதேசமாகிய பகவத் கீதையிலும் இதே வாக்குறுதியை வழங்குகிறார்.

கல்கி அவதாரம் குறித்த வாதங்கள் நெடுங்காலமாகவே நடந்துவந்துள்ளன. ஆனால், இத்தோன்றல் குறிப்பாக எப்போது, எப்படி, மற்றும் எங்கு நடக்கும் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் பத்தோன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரத்தின் தோற்றம் குறித்து பரவலான எதிர்ப்பார்ப்பு இருந்துள்ளது என்பதை பழைய நாளேடுகளைப் புரட்டிப்பார்த்தால் தெரியும். சில ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறியுள்ளனர். இவ்விதம் கூறியவர்களுள் வட இந்தியாவின் ராஜநாராயன் ஷட்ஸாஸ்திரி என்பவரும் அடங்குவார். அதே சமயத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரம் தோன்றப்போகிறது எனும் தீர்க்கதரிசனத்தையும் பல ஞானிகள் வழங்கிச் சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் பக்த சூரதாஸர்.

ஓர் அவதாரத்தின் தோற்றம் குறித்து இந்துக்கள் மட்டுமல்லாது மற்ற சமயத்தினரும் எதிர்ப்பார்ப்பு கொண்டிருந்தனர். பத்தோன்பதாம் நூற்றண்டில் ஏற்பட்ட அறிவியல் விழிப்புணர்வு மற்றும் தொழில்துறை மேம்பாடுகள் மக்கள் மனதில் பல குழப்பங்களுக்குக் காரணமாயிற்று. தத்தம் சமயங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சமய விசுவாசிகள் உலகில் ஏற்பட்ட இவ்விதமான மாற்றங்களுக்கான காரணங்களை அவரவர் சமயங்களில் காண முற்பட்டனர். இவ்விசாரனையிலிருந்து சமய அவதாரங்களின் மீள்தோற்றம் பற்றிய கருத்து மறு உயிர்ப்பு பெற்றது. அவரவர் சமயங்களை ஸ்தாபித்த அவதாரங்கள் மீண்டும் தோன்றப்போகிறார்கள் என்னும் நம்பிக்கை வலுவடைந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த ‘மீள்தோற்ற’ நம்பிக்கைக்கு அடிப்படையில்லாமல் இல்லை. கீதையில் கிருஷ்ணர் தாம் உலகில் தர்மத்தை நிலைப்படுத்திட மீண்டும் மீண்டும் சம்பவிப்பேன் என்னும் அதே தீர்க்கதரிசனத்தை எல்லா சமயங்களிலும் அதனதன் ஸ்தாபகர்கள் வாக்களித்துச் சென்றுள்ளனர்.

இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களில் ‘மீள்தோற்றம்’ குறித்த தீர்க்கதரிசனங்கள் பல உள்ளன. இஸ்லாமிய உலகின் சுன்ன பிரிவினரிடையே இயேசு நாதர் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவார் என்னும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதே போன்று ஷீயா வர்க்கத்தினரிடையே அவர்களின் 12-வது இமாமாகிய இமாம் மெஹ்டி 60-ஆம் வருடம், அதாவது ஹிஜ்ரி 1260ல் (கி.பி.1844), பூமியில் மீண்டும் அவதரிப்பார் என்னும் தீர்க்கதரிசனம் உள்ளது. அதே போன்று பல கிருஸ்தவ பிரிவினர்களிடையே விவிலிய குறிப்புகளின்படி கி.பி.1844-இல் இயேசு நாதர் மறுபடியும் இப்பூமியில் தோன்றி விசுவாசிகளை ஒன்றுதிரட்டுவதுடன் சுவர்க்கத்தில் உள்ளது போன்று பூமியிலும் கடவுளின் இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார் என்னும் நம்பிக்கை உள்ளது. கிருஸ்துவ பிரிவுகளில் ஒரு பிரிவினரான “Seventh Day Adventists” ஒரு படி மேலே சென்று இயேசு நாதரின் மறுவருகை 21 மார்ச் 1843லிருந்து 21 மார்ச் 1844க்குள் நடைபெறவேண்டுமென அறுதியிட்டுக் கூறினர். இது போக, யூத மதத்தினரிடையிலும் ‘மீட்பாளர்’ அதாவது ‘messiah’ மறுபடியும் தோன்றுவார் என்னும் நம்பிக்கையும், புத்த சமயத்தில் புத்தர் மீண்டும் ‘மைத்திரேயி அமிதபா’ எனும் பெயரில் தோன்றுவார் என்னும் நம்பிக்கையும் பார்ஸி மதத்தினரிடையேயும் தங்கள் அவதாரமான ஸாராதுஸ்ட்ரா, ‘ஷா பாஹ்ரம்’ என்னும் பெயரில் பூமியில் தோன்றுவார் என்னும் தீர்க்கதரிசனமும் உள்ளது. இது போக நான்தான் வாக்களிக்கப்பட்ட அவதாரம் என கணக்கிலடங்காதோர் அப்போது கூறினர், மற்றும் இப்போதும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் நடக்கும் அதே வேளை உலக நிலவரம் முதலாம் உலக யுத்தம் பிறகு இரண்டாம் உலக யுத்தம் என மிகவும் மோசமான போர்களைத் தாண்டி வந்துள்ளது. ஆயுதப் போர்கள் நின்றுபோனாலும் இன்று உலகை வேறு விதமான சமூக மற்றும் ஆன்மீக ரீதியான போர்கள் உலகை உலுக்கிக்கொண்டிருக்கின்றன. இன்று உலக நிலவரத்தை காணும் எவருமே உலகிற்கு ஒரு வழிகாட்டி இப்போது தேவையில்லை, தற்போது இருக்கும் முறைகளே போதுமானவை எனக் கூறிடமுடியாது. முன் எப்போதையும் விட இப்போதுதான் ஒரு வழிகாட்டியின் தேவை இன்றியமையாததாக இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.

சமயங்களின் படிப்படியான தோற்றம்

ஸ்ரீமத் பகவத் கீதை
ஸ்ரீ பகவான் உவாச
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானகமவ்யயம்|
விவஸ்வான்மனவே ப்ராஹ மனுரிக்ஷ்வாகவே’ப்ரவீத்|| (4-1)

(அழிவுறாத இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு போதித்தேன், விவஸ்வான் மனுவுக்கு போதித்தான், மனு இக்ஷ்வாகுவிற்கு போதித்தான்)

சமயங்கள் எப்போதுமே தன்னிச்சையாக தோன்றுவதில்லை. அவை ஒவ்வொன்றும் ஒரு மாபெரும் செயல்முறையின் (process) தனிக் கூறுகளாகும். அவை காலம், இடம், சமூக சூழ்நிலை ஆகியவற்றைப் பொருத்தே வெளிப்படுகின்றன. அதாவது, அவை கடவுள் மானிடத்திற்காக வகுத்திருக்கும் திட்டத்தின் படிப்படியான வெளிப்பாடுகள் எனக் கூறலாம். புராணங்களின் கூற்றின்படி விஷ்ணு காலத்திற்குக் காலம் பல அவதாரங்களை எடுத்து வந்துள்ளார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். அவற்றுள் கல்கி அவதாரம் தவிர்த்து முக்கியமானவை ஒன்பது என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, கிருஷ்ண, புத்தர் ஆகிய அவதாரங்கள் என வரிசைப்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் எட்டாவது அவதாரம் கிருஷ்ணரின் சகோதரரான பலராமர் எனவும் ஒன்பதாவதாக கிருஷ்ணர் எனவும் வரிசைப்படுத்துகின்றனர். இந்த வரிசையை காணும்போது இதில் ஒரு பரிணாம வளர்ச்சி, ஒரு படிப்படியான வளர்ச்சி இருப்பதை நம்மால் காணமுடிகிறது. நீரில் மட்டுமே வாழும் மீன், பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, நிலத்தில் மட்டும் வாழும் வராகம், பாதி மனிதனும் பாதி மிருகமுமான நரசிம்மர், மனிதர் ஆனால் முழுமையான உருவத்தில் இல்லாத வாமனர், மிகவும் ஆக்ரோஷமான பரசுராமர், முழுமையான நற்குணங்கள் நிறைந்த இராமர் என ஒரு விதமான படிப்படியான வளர்ச்சியை, ஒரு செயல்முறையை நம்மால் காண முடிகிறது. அதே போன்று கடந்த 6000 வருடங்களாக ஆதாம் (Adam) முதல் உலகில் தோன்றியுள்ள கடவுளின் அவதாரங்களும் சுமார் 1000 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் தோன்றி மக்களை ஒரு நிலையிலிருந்து வேறோர் உயர்ந்த நிலைக்கு, கடவுள் மனிதனுக்காக எண்ணியிருக்கும் இலக்கிற்கு, தங்களின் போதனைகளின் மூலமாக உயர்த்தியிருக்கின்றனர். சமய வரலாறுகளைச் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் இது புலப்படும். சமயங்களை, அவற்றின் ஆன்மீக போதனைகள் தவிர்த்து சமூகவியல் ரீதியாக ஆராயும் போது தனிமனிதன், குடும்பம், சமூகம், சமுதாயம் என சமய போதனைகள் காலத்திற்கு காலம் உயர்ந்துகொண்டே செல்வதை நம்மால் காணமுடிகிறது. இக்கால அவதாரமான பஹாவுல்லா உலக ஒற்றுமை, சமயங்களுக்கிடையே ஒற்றுமை, உலகப் பொது அரசு, உலகப் பொது மொழி என உலக ரீதியிலான போதனைகளை வழங்கிச் சென்றுள்ளார்.

கல்கி தோன்றக்கூடிய உலகச் சூழ்நிலை

பகவத் கீதை
ஸ்ரீ பகவான் உவாச
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத|
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)
பரித்ரானாய சாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்|
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே|| (4-8)

(எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன். நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன்)

ஸ்ரீமத் பாகவதம்
இத்தம் கலௌ கதப்ராயே ஜனே து கரதர்மினீ|
தர்மத்ராணாய ஸத்வேன பகவானவதரிஷ்யதி|| ((12-2-16)

(இவ்வாறு கலியுகத்தில் மக்கள் அதர்மவாதிகளான பின் தர்மத்தை உறுதிபடுத்திட பகவான் அவதரிப்பார்)

பூமியில் எப்போதெல்லாம் தர்மம் தாழ்வுற்று அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் ஓர் ஆன்மாவை பூமிக்கு அனுப்புகின்றார் என கீதையில் கிருஷ்ணர் வாக்களித்துள்ளார். ஆனால், அதற்காக பூமியில் உண்மையிலேயே தர்மம் அழிந்துவிட்டதென பொருள்படாது. இதன் கருத்தாக்கம் என்னவென்றால், மனிதன் ஒரு நிலையிலிருந்து வேறோர் நிலைக்கு, ஆன்மீக ரீதியிலும், சமூக ரீதியிலும், மேம்பாடு அடைந்தும், அவன் அதற்கப்பால் செல்வதற்கு நடப்பிலுள்ள சமய போதனைகளுக்கு வலுவில்லாததால் மேற்கொண்டு ஒரு புதிய வழிகாட்டி தேவைப்படுகிறது என்பதே இதன் பொருளாகும். ஒரு வழிகாட்டி இல்லாத நிலையில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதற்கிணங்க மனிதர்களின் வாழ்க்கை அமைந்துவிடும். இன்று உலகில் நடக்கும் கோரங்கள் இதற்கு நல்ல உதாரனமாகும்.

ஒவ்வொரு சமய நம்பிக்கையிலும் அதன் ஸ்தாபகர் மறுபடியும் பூமியில் அவதரிப்பார் எனும் தீர்க்கதரிசனம் இருக்கின்றது மற்றும் அவர்கள் கல்கி, மைத்ரேயி அமிதபா, ஷா பாஹ்ரம், யூதர்களின் மெஸ்ஸாய்யா, கடவுளின் ஒளியில் இயேசு நாதர், இமாம் மெஹ்டி எனும் நாமங்களில் இவர்கள் அனைவரும் மீண்டும் அவதரிக்கப்போவதாக அவரவர்களின் சமய திருவாக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கண்டோம். இங்கு ஒரு கேள்வி மனதில் உதிக்கக்கூடும். இவர்கள் அணைவரும் உலகில் அவரவரின் விசுவாசிகளின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப தனித்தனியாகத் தோன்றப்போகிறார்களா அல்லது கடவுள் ஒருவரே எனும் அடிப்படையில் இவர்கள் அணைவரும் ஒரே ரூபத்தில் உலகில் தோன்றப்போகிறார்களா?

ஒரு காலத்தில் பூகோள ரீதியிலும், இன ரீதியிலும், மொழி ரீதியிலும், பலவாறாகப் பிரிந்துகிடந்த மனுக்குலம் இன்று அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, போன்றவற்றால் வேறு வழியின்றி மிகவும் அணுக்கப்பட்டுக்கிடக்கின்றது. மக்கள் கூட்டங்கள் பெரும்பாலும் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் பெரும் பெரும் எண்ணிக்கையில் தங்கள் நாடுகளை விட்டு பொருளும் பாதுகாப்பும் தேடி வெவ்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். ஆகவே வெவ்வேறு சமய விசுவாசிகளின் அவதாரங்கள் தனித்தனியே வந்து இவர்களுக்கு காட்சி தரப்போகிறார்களா என்பதைக் கற்பனை செய்வது கூட இயலாது. உலகில் பிரிவினைக்கான காரணங்கள் வெகுவாக இருக்கின்றன அதில் சமய ரீதியில் மேலும் பிரிவினைகள் தேவையில்லை. ஆகவே, இந்த அவதாரங்கள் யாவரும் குறிப்பிடுவது ஒருவரையே என்பது தெளிவு.

இப்போது இந்த அவதாரம் தோன்றப்போவது எப்போது என்பதை முதலில் காண முற்படுவோம். அவதாரம் தோன்றும் காலத்தை ஓரளவிற்கு  நம்மால் கணித்திட முடியும். இதற்கான ஆதாரங்களை எல்லா சமயங்களின் புனித நூல்களிலும் காணலாம். உதாரணமாக ஹிஜ்ரி 1260 மற்றும் கி.பி.1844 வருடங்களை குறிப்பிடலாம். இரண்டும் ஒரே வருடத்தைதான் குறிப்பிடுகின்றன.

புத்தர் நந்த அரசர்கள் ஆட்சியின் போது அவதரிப்பார்

விஷ்ணு புராணம்
यदा महाम्यो यास्यन्ति  पूर्वाषाढा महर्षयः|
तदा नन्दात्प्रब्र्त्येष  कलि: वृद्धि गमिष्यति||
யதா மஹாம்யோ யாஸ்யந்த்தி பூர்வஷாடா மஹர்ஷய:|
ததா நந்தாத்ப்ரப்ர்த்யேஷ கலிர்வ்ர்த்தி கமிஷ்யந்தி||

மக நட்சத்திரத்திலிருந்து பூர்வஷாடாவுக்கு எப்பொழுது சப்தரிஷிகள் செல்கிறார்களோ அப்பொழுது நந்த அரசர்களின் காலத்திலிருந்து கலி தன் முழு வலுவை அடையும்

நந்த அரசர்களின் காலத்தில் கலியுகம் தனது உச்சியினை, அல்லது தனது மத்திய நிலையை அடைந்து தொடர்ந்து மேலும் வலிமை பெறும் என பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது. நந்தர்கள் கி.மு. சுமார் 600களிலிருந்து 300கள் வரை இன்றயை வட இந்தியாவில் ஆட்சி புரிந்தனர். இது கலியுகத்தில் சுமார்  2400 வருடங்கள் சென்ற பின் நடந்ததாகும்.

கிருஷ்ணரின் இறப்பிலிருந்து புத்தரின் தோற்றம் வரை ஏறத்தாழ 2400 ஆண்டுகள் ஆகின்றன. அதே போன்று புத்தரின் தோற்றத்திலிருந்து 2400 ஆண்டுகள் 19ம் நூற்றாண்டில் முடிகின்றன. எவ்வகையில் பார்த்தாலும் இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் குறிப்பிடுவது ஒருவரையே என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.

அவதாரங்களின் இரண்டு நிலைகள்

பகவத் கீதை
ஸ்ரீ பகவான் உவாச
அஜோ’பி சன்னவ்ய்யாத்மா பூதானாமீஷ்வரோ’பி சன்|
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாம்யாத்மமாய்யா|| (4-6)

(பிறப்பும் இறப்பும் இல்லாமல், உயிரினங்களுக்கெல்லாம் ஈஷ்வரனே எனினும், எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.)

கடவுளின் அவதாரங்கள் மனித பிறப்பு எடுக்கும்போது அவர்கள் மனிதநிலையில் ஒருபுறமும் தெய்வீக நிலையில் மறுபுறமுமாக செயல்படுகின்றனர். மனிதநிலையில் அவர்கள் பிறக்கின்றனர், பூமியில் எல்லா மனிதர்களைப்போலவே வாழ்கின்றனர் பிறகு காலம் கனிந்தவுடன் மனிதர்களைப்போலவே மரணமெய்துகின்றனர். கீதையில் பகவான் அல்லது கடவுளின் நிலையில் கிருஷ்ணர் அர்ஜுனனோடு உரையாடுகிறார் என்பதால் கிருஷ்ணர் சம்பந்தமான அத்தியாயங்கள் ‘ஸ்ரீ பகவான் உவாச’ என ஆரம்பிக்கின்றன. இது குறித்து கடவுள் அவதாரமான பஹாவுல்லா: “எனது உறவை நான் ஆழ்ந்து சிந்திக்கையில் படைப்பினங்கள் யாவற்றிடமும் ‘மெய்யாகவே யாமே கடவுள்’ என இயம்பிட நான் உந்தப்படுகிறேன்; எனது சொந்த நிலைதனை நான் கருத்தில் கொள்ளும்போது, அந்தோ நான் என்னை மண்ணிலும் கீழானவனாகக் காண்கிறேன்!” என கூறுகின்றார்.

யுகங்கள்

ஸ்ரீமத் பாகவதம்

க்ருத த்ரேதா த்வாபரம் ச கலிஷ்சேதி சதுர்யுகம்|
திவ்யை த்வாதஷபி வர்ஷை: ஸாவதானம் நிரூபிதம்॥ (3-11-18)
சத்வாரி த்ரீணி த்வை கைகம் க்ருதாதிஷு யதாக்ரமம்|
ஸம்க்யா தானி ஸஹஸ்ரானி த்விகுணானி ஷதானிச॥(3-11-19) ॥

(கிருத, திரேதா, துவாபர, மற்றும் கலி என்பன சதுர்யுகங்களாகும். 12,000 திவ்ய வருடங்களை இதில் கவனமாக நிரூபிக்கவும். நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று ஆயிரம் வருடங்கள் இவற்றிற்கு.)

கிருஷ்ணாவதாரமும் கல்கி அவதாரமும் கலியுகத்தோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணர் மறைந்த அடுத்த கணமே கலி பிறந்தது, அதன் முடிவில் கல்கி அவதாரம் உண்டாக வேண்டும் என்பது புரானங்களின் கூற்று. ஸ்ரீ கிருஷ்ணர் கி.மு.3102ல்[1] விண்ணேற்றம் அடைந்தார் என்பது பொதுவாக ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். அவர் விண்ணேற்றம் அடைந்த அடுத்த கணமே கலி பிறந்தது என புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவர் மீண்டும் கல்கியாக அவதரித்து சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார் என்பதும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுகங்கள் எனும்போது, நான்கு யுகங்கள், அதாவது சத்திய, துவாபர, திரேதா மற்றும் கலி என நான்கு யுகங்களும் அவற்றின் சந்தி மற்றும் சந்தியாம்ச காலங்கள் சேர்ந்து 12,000 மானிட வருடங்கள் ஒரு சதுர்யுகமாகின்றன. ஆனால் கலியுகத்திற்கு 4.32,000 ஆண்டுகள் என்பது பரவலான நம்பிக்கையாகவும் இத்தகைய நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒரு கணிப்பு எவ்வாறு ஏற்பட்டிருக்கவும் கூடும் என்பதை காண்போம். சுலோகங்களில் எண்கள் எழுதப்படும்போது அவை ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு என எழுதப்படாமல் அவை நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று என எதிர்வரிசையில் எழுதப்படுவது மரபாகும். அதே வேளை யுகங்களை வரிசையாக எழுதும்போது சத்ய, த்வாபர, த்ரேதா மற்றும் கலி என நேர்வரிசையாகவே எழுதப்படும். இரண்டையும் ஒன்று சேர்த்து எழுதும்போது சத்ய, த்ரேதா, த்வாபர மற்றும் கலியுகங்களுக்கு நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஓர் ஆயிரம் வருடங்கள் என ஸ்லோகங்களில் கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக சத்திய யுகத்திற்கு 4000 வருடங்கள் மற்றும் கலியுகத்திற்கு 1000 வருடங்கள் எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது ‘அங்கானாம் வாமதோ கதி’ (இங்கு ‘வாம’ என்பதற்கு ‘எதிரான’ என்பது பொருளாகும்) என்னும் விதியை கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட தவறு என பல பண்டிதர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கலியுகத்திற்கு 1200 வருடங்கள் வருவதைக் கண்டு காலக்கணிப்பு சரிவராததால் திவ்ய (சூரிய) வருடங்களைத் தைவ்ய (தெய்வ) வருடங்கள் என வியாக்கியானம் செய்து அதை 1200×360=4,32,000 மானிட வருடங்கள் என கணித்துள்ளனர். (360 திவ்ய, அதாவது மானிட வருடங்கள் 1 தேவ வருடம் என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே மனுஸ்மிருதியில் 4000 வருடங்கள் கழித்து கிருதயுகம் என அத்தியாயம் 1 – 68 ல் குறிப்பிடப்பட்டுள்ளது) யுகங்களின் கால வரையறை பின்வருமாறு திவ்ய (சூரிய) வருடங்களாக இருக்கவேண்டும.

யுகம்சந்திகாலம்சந்தியாம்சம்மொத்தம்
சத்திய10010001001,200
திரேதா20020002002,400
துவாபர30030003003,600
கலி40040004004,800
   சதுர்யுகம்12,000

கலியுகத்தில் நடக்கவிருக்கும் சில சம்பவங்கள் மற்றும் நடப்பு உலக நிலை

ஸ்ரீமத் பகவத் கீதை
ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:|
ச காலேனேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப||(4 – 2)

(இவ்விதமாக தொடர்ச்சியாக இந்த யோகத்தை இராஜரிஜிகள் உணர்ந்திருந்தனர். ஆனால், காலம் செல்ல செல்ல இந்த யோகம் நலிவடைந்தது.)

பல புராணங்களில் கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகளும் வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்:

• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள்.
• ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
• அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள்
• சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானிகள் எனப் போற்றப்படுவர்
• அகதிகளாகப் பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள்
• தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவர்
• தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்
• எவரையுமே நம்ப முடியாமல் போகும்
• மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள்
• பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதைத் தாண்டமாட்டர்கள்
• பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள்
• இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள்
• மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா.
• வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள்
• பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள்
• கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள்
• செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணக்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்
• ஆட்சித் தலைவர்கள் மக்களைக் காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களைப் பறித்துக்கொள்வார்கள்
• நீர் கிடைக்காமல் போகும்
• விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்

மேற்கண்ட சம்பவங்கள் சில உதாரணங்களே ஆகும். பல புராணங்களில் கலியுகத்தில் மனிதர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலை குறித்த பன்மடங்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு இடம் போதாது. புராணங்கள் குறிப்பிடாதவையாக, கடந்த சில நூற்றாண்டுகளாகப் புராணங்கள் கூட எதிர்ப்பார்க்காத அளவு, உலகில் நாசங்கள் பெருகியும் நடந்தும் உள்ளன. உதாரணத்திற்கு முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களும் அதன் விளைவாக உலகில் ஏற்பட்ட நாசங்களைக் குறிப்பிடலாம். அரசர்களின் இராஜ்யங்கள் கவிழ்ந்து உலகில் மக்களாட்சி முறை ஏற்பட்டு, அதுவும் சில வேளைகளில் கவிழ்ந்து கம்யூனிச சித்தாந்தத்தின் ஆதிக்கம், சர்வாதிகார ஆட்சிமுறைகள், சமயச்சர்வாதிகார ஆட்சிமுறைகள் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். மேலும் ஐரோப்பாவில் பிளேக் நோயினாலும் பிற நோய்களினாலும் இயற்கைப் பேரிடர்களாலும் மக்கள் கோடிக்கணக்கில் அழிவுற்றதையும் இங்குக் குறிப்பிடலாம். முதலாம் உலக யுத்தம் முடிந்த சில வருடங்களில் இன்ஃபுலுவென்ஸா நோயினால் சுமார் 10கோடி மக்கள் மாண்டனர். இன்று மத்திய கிழக்கில் சிறிய பொறியினால் கூட பெரும் போர்த்தீ வெடிக்கும் அபாயத்தையும் இங்கு குறிப்பிடலாம். கலியுகத்தின் லக்ஷனம் இவ்வாறாகவே இருக்கின்றது.

கலியுகத்தின் முடிவு

ஸ்ரீ விஷ்ணுபுரானம்
யதா சந்திரஸ்ச ஸூர்யஸ்ச ததா திஷ்யோ ப்ருஹஸ்பதி|
ஏக ராஸௌ ஸமேஷ்யந்திததா பவதிக்ருதம்|| (4-24-102)

(சந்திரனும் சூரியனும் அதே போன்று குருவும் ஒரே ராசியில் ஒன்றுகூடும் போது அது கிருத யுகம் ஆகும்.)

கலியுகம் எப்போது முடிந்தது அல்லது முடிந்திருக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். கிருஷ்ணர் மறைந்தவுடன் கலியுகம் தோற்றம் கண்டது எனவும் கலியுகத்திற்கு பொதுவாக 4,32,000 வருடங்கள் தவறான கணக்கு எனவும், அதற்கு 4800 வருடங்களே எனவும் குறிப்பிட்டுள்ளோம். கலியுகம் துவங்கி 4,32,000 வருடங்களுக்குப் பிறகுதான் கல்கி அவதாரம் தோன்றவேண்டுமானால், அத்தோற்றம் வரை மனிதகுலத்தின நிலைமை என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. இப்போது இருக்கும் நிலையே இப்போதோ அப்போதோ என்றிருக்கும்போது 4,32,000 வருடங்கள் வரை அடுத்த அவதாரத்திற்காக நாம் காத்திருக்கமுடியுமா, அது நியாயமா? எல்லா வகையிலும் கலியுகத்திற்கு 4800 வருடங்களே என்பது தர்க்க ரீதியில் ஏற்புமிக்க ஒன்றாக இருக்கின்றது. அப்படி ஏற்றுக்கொண்டோமானால், கலியுகம் (4800-3102) கி.பி.1698லேயே முடிவுக்கு வந்திருக்கவேண்டும் எனப் பொருள்படுகின்றது. 1200 வருடங்களான சத்திய யுகம் நடப்பிற்கு வந்திருக்கவும் வேண்டும் மற்றும் சத்திய யுகத்தில் இதுவரை 300 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டிருக்கவும் வேண்டும். பகவத் கீதையில் கிருஷ்ணர் மனிதர்களிடையே தர்மம் நலிவுறும்போது யுகத்திற்கு யுகம் தோன்றுவேன் என கூறியுள்ளார். கலியுகத்தின் முடிவும் சத்திய யுகத்தின் ஆரம்பமும் கிரகங்களின் சேர்க்கையின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் கல்கி எப்போது தோன்றுவார் என்பது குறிப்பாக எழுதப்படவில்லை. யுகங்களின் ஆரம்பம் அல்லது முடிவோடு அவதாரங்களின் தோற்றத்தைச் சம்பந்தப்படுத்த முடியாது என்னும் ஒரு வாதமும் உள்ளது. உதாரணமாக இராமர் சுமார் கி.மு.5000ல் தோன்றியதாக பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், அதே பஞ்சாங்க கணிப்புப்படி துவாபர யுகம் ஆரம்பித்ததோ கி.மு. (3102+3600) 6702-இல். அதாவது துவாபர யுகம் ஆரம்பித்து சுமார் 1700 ஆண்டுகளுக்கு பிறகே இராமர் அவதரித்துள்ளார்.

கல்கி அவதாரம் எங்கே நடக்கும்

ஸ்ரீமத் பாகதவதம்
ஸம்பலக்ராம: முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன:|
பவனே விஷ்னுயஸஸ: கல்கி ப்ராதுர் பவிஷ்யதி|| (12-2-15)
அதாசௌ யுகசந்த்யாயாம் தஸ்யுப்ராயேஷு ராஜஸு|
ஜனிதா விஷ்னுயஸஸோ நாம்நா கல்கிர்ஜகத்பதி:|| (1-3-25)

(சம்பலக்கிராமத்தில் முக்கியஸ்தாராக விளங்கும் விஷ்ணுயாசர் என்பவரின் இல்லத்தில் கல்வி தோன்றுவார். யுகசந்தியில் கெட்டகுணங்கள் மேவிய காலத்தில் ஜகத்பதியான கல்கி விஷ்ணுயாசர் எனும் நாமத்தோடு ஜனனம் காண்பார்.)

புரானங்கள் கிருஷ்ணர் கல்கி விஷ்ணுயாஷாவாக கலியுகத்தின் முடிவில் மறுபடியும் அவதரிப்பார் என கூறுகின்றன. ஆனால், குறிப்பாக இது எப்போது நடக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை. 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கலியுகத்தின் முடிவு நெருங்கிவிட்டது என்பது பரவலாக விவாதிக்கப்பட்டது. சிலர் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறினர். இவர்களுள் ஒருவர் பண்டிதர் ராஜநாராயன் ஷட்சாஸ்திரி என்பவர். இவர் தமது ‘சேதாவனி’ எனும் பத்திரிக்கையின் 1924-ஆம் பிரதியில் பக்தியோகத்தின் சாதனையால் கல்கி அவதாரம் எங்கோ தோன்றிவிட்டது என தமக்குத் தெரியவந்துள்ளது என எழுதியுள்ளார். கலியுகத்திற்கு 4,32,000 வருடங்கள் கொடுத்திருப்பது தவறு, அதற்கு உண்மையில் 4800 திவ்ய வருடங்களே என இவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய நூல் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் 8 முறை பிரசுரிக்கப்பட்டும் உள்ளது. கிருஷ்ணர் மதுராவில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து துவாரகாவில் ஆட்சி செலுத்தினார். ஆனால் அவருடைய மறுவருகை இதே போன்று அதே இடங்களிலும் நடக்கப்போவதில்லை. அவர் தாம் மறுபடியும் தோன்றுவேன் எனப் பொதுவாக கூறினாலும் உலகில் எங்கே தோன்றுவார் என்பதைக் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் அவர் இந்தியாவிற்கு வெளியிலும் தோன்றலாம் என்பதற்கு புராணங்களிலும் பிற மூலாதாரங்களிலும் பல அடிப்படைகளைக் காணலாம்.

இரண்டு அவதாரங்கள்

ஸ்ரீமத்பாகவதம்
தேவாபி: ஷந்தனோர்ப்ராதா மருஷ்சேக்ஷ்வாகுவம்ஷஜ:|
கலாபக்ராம ஆசாதே மஹாயோகபலான்விதௌ|| (12-2-37)
தாவிஹைத்ய கலேரந்தே வாஸுதேவானுஷிக்ஷிதௌ|
வர்ணாஷ்ரமயுதம் தர்மே பூர்வவத் ப்ரதயிஷ்யத:|| (12-2-38)

(மகா யோகபலம் பொருந்திய தேவாபியும் மருவும் கலாபக்கிராமத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் கலியுகத்தின் இறுதியில் வெளிவந்து ஆயிரம் வருடங்கள் கொண்ட சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார்கள்.)

பகவத்கீதை
பஷ்யாதித்யான்வஸூன்ருத்ரானஸ்வினௌ மருதஸ்ததா|
பஹூனியத்ரிஷ்டபூர்வானி பஷ்யாஷ்சர்யாணி பாரத || (11-6)

(விஷ்வரூப தரிசனத்தின்போது: ஆதித்யர்களையும்; வசுக்களையும்; அஸ்வினிகள் இருவரையும்; மருத்துக்களையும்; இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களையும் பாரதா, பார்.)

ஸ்ரீமத் பாகவதத்தில் கலியுகம் முடிந்தவுடன் சத்திய யுகத்தைச் சந்திரவம்சத்தை சார்ந்த ராஜா தேவாபியும், இக்ஷ்வாகு வம்சத்தை சார்ந்த ராஜா மருவும் தங்களின் யோக பலத்தினால் பகவானின் ஆணையால் வெளிவந்து 1000 வருடங்களான சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார்கள் என விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ளது. தேவாபி சந்திரவம்சத்தினர், ராஜா மரு சூரிய வமசத்தினர். இவர்கள் இருவரும் கடவுளின் அவதாரங்களேயன்றி வேறு யாரும் இலர். கல்கி மற்றும் மரு என்பதெல்லாம் பெயர்களே அன்றி அவை வெவ்வேறு மனிதர்களைக் குறிப்பிடுவன அல்ல. இதே போன்று எல்லா சமயங்களிலும் மூல அவதாரத்தோடு முன்னோடி அவதாரம் ஒருவர் தோன்றுவது வழக்கமாகும். உதாரணமாக கிருஸ்துவ சமயத்தில் முதலில் யோவான் (John the Baptist) தோன்றினார் பிறகு இயேசு நாதர் தோன்றினார். இஸ்ரேலின் சரித்திரத்திலும் சரி உலக சரித்திரத்திலும் சரி இதே போன்று இரு தெய்வ அவதாரங்கள் தோன்றுவார்கள் என்பது யூதர்களின் சமயவழக்குகளில் உள்ள ஒரு நம்பிக்கையாகும். கிருஷ்ணர் காலத்திலும் அவருக்கு துணையாக பலராமர் இருந்தார் மற்றும் அவரும் விஷ்ணுவின் ஓர் அவதாரம் எனக் கருதப்படுகிறார். மோஸஸ் காலத்திலும் அவருக்கு துணையாக ‘எர்ரன்’ என்னும் பெயர் கொண்ட தீர்க்கதரிசி இருந்தார். இக்காலத்தில் பஹாய் வரலாற்றிலும் ‘பாப்’ என்பவர் பஹாவுல்லவிற்கு முன்னோடியாக, ஒரு தனி அவதாரமாகத் தோன்றினார். இவ்விரட்டை அவதாரங்கள் குறித்து பைபிலின் புதிய ஏற்பாட்டின் நான்கு கோஸ்ப்பல்களிலும் ‘ஒரே மஞ்சத்தில் இருவர் இருப்பர் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ ‘இரு பெண்கள் (மா)வரைப்பார்கள் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ ‘வயலில் இருவர் இருப்பர் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ என எழுதப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அவதாரங்கள் தோன்றுவார்கள் அதில் ஒருவர் சில காலங்களுக்கே இருப்பார் மற்றவர் தொடர்ந்திருப்பார் என்பதாகும். (பாப் அவர்கள் 1850-இல் மரண தண்டனைக்கு ஆளாகி 750 துப்பாக்கிகளால் சுடப்பட்டு இறந்தார், மற்றும் பாப் அவர்களால் வாக்களிக்கப்பட்ட பேரவதாராம் தாமே என பஹாவுல்லா 1863-இல் அறிவித்தார்)

கல்கி அவதாரம் நடக்கக்கூடிய நேரம்

கடவுள் அவதாரங்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நேரடியான வார்த்தைகளால் விவரிப்பதில்லை. உதாரனமாக தமது மறுவருகை தர்மம் நலிவுற்று அதர்மம் ஓங்கும் போது நடக்கும் என கிருஷ்ணர் பொதுவாகக் கூறுகிறார். அது எப்போது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. (இயேசு நாதரின் மறுவருகை குறித்தும் இதே ரீதியில்தான் தீர்க்கதரிசனம் வழங்கப்பட்டுள்ளது. இருளில் திருடனைப்போல் வருவேன் என அவர் கூறியுள்ளார்.) கிருஷ்ணரின் மறுவருகை குறிப்பாக எப்போது நடக்கும் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? முதலாவதாக நடப்பு உலகச் சூழ்நிலையை வைத்து ஏறக்குறைய எப்போது நடக்கும் அல்லது நடக்க வேண்டும் என்பதை நாம் யூகிக்கலாம். இன்று உலகம் இருக்கும் சூழ்நிலையில் மனிதர்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையில்லை என எவருமே கூறிட முடியாது. உலக நிலை அத்தகைய படுமோசமான நிலையில் இருக்கின்றது. அடுத்து நடப்பில் உள்ள காலம் குறித்த கணிதக் கணக்குகளில் அவதாரம் உதிக்க வேண்டிய குறிப்பான நேரம் எங்காவது மறைந்துள்ளதா என்பதைக் கண்டறிய முயலலாம். கடவுளின் அவதாரத்தை கண்டுகொள்ளும் திறனை கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே வழங்கியுள்ளார் என பஹாவுல்லா தமது திருவாசகங்களில் கூறியுள்ளார்.

“உங்கள் ஒவ்வொருவரின் உள்ளேயும் நான் எனது படைப்பை முழுமைப் பெறச் செய்துள்ளேன்; அதனால் நீங்கள், உங்களின் சுயநல ஆசைகள் என்னும் தடிப்பான திரைகளைக் கொண்டு, உங்களை மறைத்துக் கொண்டிடாதீர்; அதன்வழி, எனது கைவேலையின் சிறப்பு மனிதர்களுக்குப் பூரணமாக வெளிப்படுத்தப்படாமல் இருந்திடப் போகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனும், ஆண்டவனின் மகிமைப்படுத்தப்பட்ட அழகினைத் தானாகவே புரிந்து மதித்துணர முடிந்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் அவ்வாறே முடிந்து வரும். அத்தகைய ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லையெனில், எங்ஙனம், அவன், தன் தவறுக்குக் காரணங்கூற அழைக்கப்பட முடியும்?”

மனம் பரிசுத்தமாக இருந்தால் நாம் கடவுளின் அவதாரத்தைக் கண்டுகொள்ளலாம்.

உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

கடந்த மூன்று நூற்றாண்டுகளும் உலக வரலாற்றிலேயே ஒப்பிலா நூற்றாண்டுகளாகும். மனிதனின் சீரான வாழ்வு முற்றிலும் தலைகீழாக மாறிய காலகட்டம் இது; புராணங்களில் கூறப்பட்டுள்ள கலியுக சம்பவங்கள் அப்படியே நடந்தேறிய காலம் இது. அது போக அறிவியலில் ஏற்பட்ட முன்னேற்றமும் அதன் விளைவான கணக்கிலடங்கா கண்டுபிடிப்புகள்; உலக அரசியலில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள், ஓர் உலகளாவிய அமைப்பான ஐ.நா. நிறுவப்பட்டது போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். சமய ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் வியப்பளிப்பனவாக இருக்கின்றன. மனுஸ்மிருதியில் மனு விதித்திருந்த வர்ணாசிரம விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறைந்துகொண்டே வருகிறது. பிராமனர்கள் யார், க்ஷத்திரியர்கள் யார், வைசியர்கள் யார் மற்றும் க்ஷூத்திரர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியாத நிலை வளர்ந்துவருகிறது. விவேகானந்தர் சத்திய யுகத்தில் ‘பிராமனர்கள்’ மட்டுமே இருப்பார்கள் என கூறியுள்ளார். இங்கு பிராம்மனர்கள் என்பது ‘கடவுள் வழியில் நடப்பவர்கள்’ எனப் பொருள்படும்.

இத்தகைய மாற்றங்களுக்கான காரணம் என்ன?

உலகில் மக்களின் வாழ்க்கை முறையில் கடந்த சில நூற்றாண்டுகள் வரை பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. ஆனால், பத்தொன்பதாம் நூற்றண்டு முதல் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் தலையை கிறுகிறுக்க வைப்பதாக உள்ளது. தட்டையாய் படிந்த நிலையில் இருந்த உலக வாழ்வுமுறை அதுமுதற்கொண்டு திடீரென செங்குத்தாக உயர்ந்து சென்றது; இன்று வரை அவ்வாறே உயர்ந்து கொண்டும் செல்கிறது. புதிய சகாப்தம் ஏதும் ஆரம்பித்துள்ளதா? இதற்கு தூண்டுகோலாக இருந்தது என்ன?

பின்னுரை

கிருஷ்ணர் மறைந்த வருடம் கி.மு.3102[1] என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாகும். கலியுகத்திற்கு 4800 திவ்ய வருடங்களே என்பதை ஏற்றுக்கொண்டோமானால் கலியுகம் கி.பி.1698லேயே முடிவடைந்திருக்க வேண்டும். அவ்வாறு அது கி.பி. 1698ல் முடிவடைந்தருந்தால் நாம் அது முதற்கொண்டு சத்திய யுகத்தில் வாழ்கின்றோமா? ஆனால் அது அவ்வாறல்ல. பஹாய் சமயத்தவர்களைப் பொறுத்த வரை சத்திய யுகம் பிறந்தது கி.பி.1844இல். (இதன் முழு விவரங்களைக் காண https://prsamy.wordpress.com/2016/10/29/1844-எல்லா-சமயங்களுக்கும்-மை/ செல்லவும். இறை அவதாரங்கள் உலகில் தோன்றும் காலங்களில் உலகில் அவதாரங்களின் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் நிலவை சுற்றி நட்சத்திரங்கள் போன்று பலர் தோன்றுவர். இவர்கள் ஆன்மீக ரீதியில் அவதாரங்களின் தோற்றத்தை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்; அது குறித்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உரைப்பார்கள். அவர்களின் கூற்றுகளை இப்போது காண்போம்:

சந்த் சூரதாஸ் (15வது நூற்றாண்டு)

வடநாட்டைச் சார்ந்த சந்த் சூரதாஸர் குறிப்பிட்ட காலம்: சூரதாஸர் பிறப்பிலேயே கண்பார்வையற்றவராக இருந்தார். 6 வயதிலேயே தமது பெற்றோரை பிரிந்து வாழ்ந்தார். சிறந்த கிருஷ்ண பக்தரான இவர் தமது ‘ஸூர்ஸாகர்’ எனும் தொகுப்பிற்கு சுமார் 1,00,000 பாடல்கள் இயற்றியதாக கூறப்படுகிறது ஆனால், அவற்றில் சுமார் 8000 பாடல்களே எஞ்சியுள்ளன. இவர் விக்ரம சம்வத் 1900-க்கு மேல் உலகில் ஒரு பெரும் மாற்றம் உண்டாகும் என கூறியுள்ளார். வி.ச. 1900க்குச் சமமான ஆங்கில வருடம் கி.பி. 1844 ஆகும்.

வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கர் (கி.பி.1823 – 1873)

திருவருட்பா

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே

என தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். ஆம், கடவுள் தாமே உலகில் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார், அதற்கான நேரமும் இதுதான் என்பது வள்ளலாரின் வாக்கு. மேலும் கலியுகத்திற்குச் சுமார் 5000 வருடங்களே உள்ளன எனவும் இவர் கூறியுள்ளார்.

இயேசுநாதரின் மறுவருகை குறித்து விவிலியத்தின் தானியேல்

இயேசுவின் மறுவருகை குறித்து அவருடைய சிஷ்யர்கள் வினவியபோது இயேசுபிரான் அவர்களை பழைய ஏற்பாட்டின் தானியேலின் நூலைப் பார்க்கும்படி கூறினார்.

தானியேல் 8:13 பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.

தானியேல் 8:14 அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான். தானியேல் 8:24 அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.

அதாவது, புனிதஸ்தலமான ஜெருசலம் எப்போது பரிசுத்தப்படுத்தப்படும் என ஒரு தேவகணம் கேட்க அதற்கு தானியேலின் பதிலே மேல்காணப்படுவது. ஜெருசலத்தை மறுநிர்மாணம் செய்திட அர்டிஷர் என்னும் பெயர் கொண்ட பாரசீக மன்னன் கி.பி.457-இல் உத்தரவிட்டான். இந்தத் தேதியிலிருந்து 1844 வரை சரியாக 2300 ஆண்டுகளாகும். மேலே இராப்பகல் என குறிப்பிடப்படும் ஓர் இராப்பகல் என்பது மனிதர்களின் ஒரு வருடத்தைக் குறிக்கும். தானியேலின் தீர்க்கதரிசனம் சரியாக முற்றுப்பெற்றது.

வில்லியம் மில்லர்

இந்த வரிசையில் அடுத்து முக்கியமானவராக உள்ளவர் கிருஸ்தவ சமயத்தில் வில்லியம் மில்லர் (கி.பி.1782 – 1849). இவர் இயேசு நாதர் வெகு விரைவில் அவதரிக்க போகிறார் என ஐக்கிய அமெரிக்காவில் போதித்தார். இவரது கணிப்புப்படி இயேசு நாதரின் மறுவருகை 1844-இல் கண்டிப்பாக நடக்கும் என இவர் உறுதியாக நம்பினார்.

ஷேய்க் அஹ்மட்-இ-அஹ்ஸாயி (1753 – 1826)

அடுத்து மத்திய கிழக்கில் ‘மறுவருகை’ குறித்து போதித்தவர்களில் ஷேய்க் அஹ்மட் உள்ளார். இவர் அரேபியாவின் வடகிழக்கில் பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்தவராவார். இவர் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுவோர் எவ்வாறு அதன் ஐக்கியத்தை நாசம் செய்து, அது தன் ஆற்றலை இழக்குமாறு செய்து, அதன் நோக்கங்களை பிறழ்வுறச் செய்தும் அதன் புனித நாமத்தைத் தாழ்த்திடுகின்றனர் என்பதைக் கண்டார். ஷீயா வர்க்கத்தினரிடையே காணப்பட்ட ஊழல்களையும் போராட்டங்களையும் கண்டு அவரின் ஆன்மா வேதனையடைந்தது… பாரசீக வளைகுடாவின் தெற்கு திசையில் உள்ள பாஹ்ரேய்ன் தீவில் வாழ்ந்த தமது குடும்பத்தினரை பிரிந்து… ஒரு புதிய அவதாரம் ஒன்றின் வருகையை முன்னறிவிக்கும் இஸ்லாமிய சாஸ்திரங்களில் அடங்கியுள்ள மர்மங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் மனதில் இஸ்லாம் சமயத்தில் எத்தகைய தீவிரம் நிறைந்த மறுசீரமைப்பும் இவ்வழிதவறிய மக்களுக்கு புத்துயிரளிக்கப் போவதில்லை என்னும் உறுதியான நம்பிக்கை மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. இஸ்லாமின் திருமறைகளில் பதிக்கப்பட்டிருக்கும் மற்றும் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் புதியதும் ஒரு தன்னிச்சையானதுமான ஒரு கடவுளின் வெளிப்பாட்டினைத் தவிர வேறெதுவுமே நலிவுறும் அச்சமயத்தின் நற்பேற்றை மறுவுயிர்ப்பித்து அதன் தூய்மையைப் புதுப்பிக்கவும் முடியாது… என அவர் அறிந்தார்.
இவர் இந்த ரீதியிலேயே மக்களுக்குப் போதித்தார். இவரது மறைவிற்குப் பிறகு இவருடைய பெயரால் ‘ஷேய்க்கிகள்’ என்னும் சமயப்பிரிவினர் உருவாயினர். ஷேய்க் அஹ்மட் தமது வாழ்நாளிலேயே சைய்யிட் காஸிம் என்பவரைத் தமது வாரிசாக நியமித்தார்.

ஸையிட் காஸிம் (1793 – 1843)

ஷேய்க் அஹ்மட்டின் வாரிசாகவும் விரைவில் தோன்றக்கூடிய புதிய கடவுளின் அவதாரத்தைக் கண்டுகொள்ளும் பொறுப்பும் ஸையிட் காஸிமுக்கு வழங்கப்பட்டது. இவர் தமது சீடர்கள் புதிய அவதாரத்தை எவ்வாறு கண்டுகொள்வது என்பது குறித்து 1843-இல் தமது மறைவு வரை போதித்து வந்தார். தாம் மறைந்தவுடன் கலைந்து சென்று புதிய அவதாரத்தைத் தேடிக் கண்டுகொள்ளும்படி தமது மாணவர்களைப் பணித்தார்.

முல்லா ஹுஸேய்ன-இ-புஷ்ரூயி (1813 – 1849)

ஸையிட் காஸிமின் தலைமை மாணாக்கராக இருந்த முல்லா ஹுஸேய்ன் ஸையிட் காஸிமின் மறைவுக்குப் பின்னர் ஸையிட் காஸிமின் சீடர்களையெல்லாம் கலைந்து சென்று புதிய அவதாரத்தைத் தேடிக் கண்டுகொள்ளுமாறு பணித்தார். தமது பங்கிற்குத் தாமும் நாற்பது நாள் பிரார்த்தனையும் நோன்புமாக இருந்து பின் தமது ஊராகிய புஷீருக்கும் பின்னர் ஷிராஸ் நகருக்கும் பயணமானார். தம்மை ஏதோ ஒரு சக்தி ஷிராஸ் நகரை நோக்கி இழுத்து சென்றதாக அவர் கூறியுள்ளார். கி.பி.1844-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி முன்மாலை நேரம் அவர் ஷிராஸ் நகரின் தலைவாசலைச் சென்றடைந்தார். அப்போது அங்கே தமக்காகவே காத்திருப்பதுபோல் தோன்றிய ஓர் இளைஞரை அவர் கண்டார். அந்த இளைஞர் முல்லா ஹுஸேய்னைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று நலம் விசாரித்து அவர் ஷிராஸ் வந்த நோக்கத்தையும் வினவினார். பிறகு முல்லா ஹுஸேய்ன் தேடி வந்த அவதாரம் தாமே எனப் பிரகடனப்படுத்தினார். அப்போது பொழுது மங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அந்த இளைஞரே பஹாய் சமத்தின் முன்னோடி அவதாரமாக விளங்கிய அலி முகம்மட் எனும் இயற்பெயருடைய ‘பாப்’ பெருமானார் ஆவார்.

பாப் (கி.மு.1819 – 1850) பெருமானாரின் தோற்றத்தால் பாரசீக நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக அந்த நாட்டை ஆண்டுவந்த ஷா மன்னன் பாப் அவர்களைக் கைது செய்யும் ஆணையை பிறப்பித்து 1850-இல் அவருக்கு மரண தண்டனையும் விதித்து, தலா 250 வீரர்கள் கொண்ட 3 பிரிவான படைவீரர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாப் அவர்கள் தாம் தமக்குப் பின் தோன்றவிருக்கும் ஒரு மாபெரும் அவதாரத்திற்கான முன்னோடியே என அறிவித்தார்.

பாப் அவர்களைத் தொடர்ந்து கி.பி. 1863-இல் பஹாவுல்லா (கி.பி. 1817 – 1892) டைகிரிஸ் நதிக்கரையில் உள்ள ரித்வான் பூங்காவில் பாப் அவர்களால் அறிவிக்கப்பட்ட அவதாரம் தாமே என பிரகடனப்படுத்தினார். பஹாவுல்லா தமது உயிலும் சாசனத்தில் தமக்கு பிறகு பஹாய் உலகின் தலைமத்துவத்திற்கு தமது மூத்த மகனாகிய அப்துல் பஹாவை (கி.பி. 1844 – 1921) நியமித்தார்.

அப்துல் பஹா பஹாய் உலகின் தலைமத்துவத்தை சுமார் 30 ஆண்டுகாலம் தாங்கிய பிறகு 1921-இல் காலமானார். இவர் பஹாய் சமயத்தின் உதாரன புருஷர், கடவுளின் மர்மம், கடவுளின் ஒப்பந்தத்தின் மையம் எனப் பல நாமங்கள் பெற்றவராவார். இவர் முதலாம் உலக யுத்தத்தின்போது பாலஸ்தீனத்தில் ஆற்றிய உணவு நிவாரண சேவைகளுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கம்  அவருக்கு ‘சர்’ (Sir) பட்டம் வழங்கியது. இவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து தமது தந்தையாரின் செய்தியைப் பிரகடனப்படுத்தினார். அப்துல் பஹா தமது உயிலும் சாசனத்தில் தமக்குப் பிறகு பஹாய் உலகின் பாதுகாவலராகத் தமது மூத்தப் பேரராகிய ஷோகி எஃபெண்டியை (கி.பி.1898 – 1957)நியமித்தார்.

ஷோகி எஃபெண்டி பஹாய் உலகின் பாதுகாவலராக சுமார் 35 வருட காலம் சேவையாற்றிய பிறகு 1957-இல் மறணமடைந்தார். அதன் பிறகு பஹாய் உலகம் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் உலக அமைப்பின் கீழ் இன்று செயல்படுகிறது.


இத்தகவல்களை வழங்குவதன் காரணம் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து 21-ஆம் நூற்றாண்டு வரை உலகில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய விழிப்புணர்வை காட்டுவதற்காகவே. இதை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காகக் கீழேயுள்ள படங்களை பார்க்கவும்.

உலகில் கடந்த சில நூற்றாண்டுகளாக ஏற்பட்டுள்ள புரட்சிகளின் வளர்ச்சி
உலகில் கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி

மேலே காணப்படும் கிராஃப்களை கூர்ந்து கவனித்தால் அறிவியல் வளர்ச்சியும் சரி புரட்சிளும் சரி ஒரே சீராக வளரவில்லை, மாறாக, வெளிப்படையான காரணங்கள் ஏதும் இன்றி அவை கடந்த சில நூற்றாண்டுகளிலேயே திடீரென துரித வளர்ச்சி கண்டுள்ளன. அமைதியாகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏதும் இல்லாமல் இருந்த உலகத்தின் மேம்பாடு திடீரென கடந்த சில நூற்றாண்டுகளில் ஏன் இவ்விதமான திடீர் வளர்ச்சி கண்டது? செடி கொடிகள் வளர்ச்சி காண வேண்டுமானால் அவற்றிற்கு நீர் அவசியம். மழையே இல்லாமல் இருந்த ஒரு நிலப்பகுதியில் திடீரென மழை பெய்தால் அங்கு அதற்குமுன் காணப்படாத புல் பூண்டுவகைகளில் திடீர் வளர்ச்சி காணப்படுவது இயல்பே. அதே போன்றதுதான் உலக மேம்பாடு. ஏதோ ஒரு நிகழ்வு அதன் திடீர் மேம்பாட்டிற்குத் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும். வேறு ஒரு உதாரணத்தை இப்போது காணலாம். கல்வியோ வாழ்க்கை அனுபவமோ இல்லாமல் வளர்ந்த ஒரு மனிதனுக்கு கல்வி வழங்கப்பட்டு அவனுடைய அறிவாற்றல் தூண்டப்பெற்றால் அவனுடயை வாழ்வில் திடீர் மாற்றத்தை, ஒரு மேம்பாட்டை நாம் காண முடியும். இதே ரீதியில் மானிடத்தின் வாழ்விலும் ஏதோ ஒறு புதிய உணர்வு ஊட்டப்பட்டது போன்று மேற்கண்ட படங்களில் நாம் ஒரு திடீர் வளர்ச்சியை காணுகின்றோம்.

இவ்விதமான உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கமுடியும். உலக வரலாற்றில் சமுதாய மற்றும் கலாச்சார ரீதியான வளர்ச்சியை காணும்போது அதன் பின்னனியில் ஒரு சமயவெளிப்பாட்டின் தோற்றம் இருப்பதை உணரலாம். உதாரணமாகச் சிந்து வெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்வோம். அது ஏறக்குறைய கி.மு. 3500-இல் தீவிரம் அடைய ஆரம்பித்தும் பின்னர் சுமார் 2000 வருடங்கள் நிலைத்திருந்த பரவலான ஒரு நாகரிகமாகும். கிருஷ்ணரின் வெளிப்பாடு நடந்தது கி.மு. 3228 – 3102ற்குள். இவ்வெளிப்பாட்டையும் சிந்துவெளி நாகரிகத்தையும் தொடர்புபடுத்துவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. சிந்துவெளி நாகரிகத்திற்குத் தூண்டுகோலாகவும் மூலாதாரமாகவும் இருந்தது கிருஷ்ணர் மூலமான கடவுளின் திருவெளிப்பாடே ஆகும். அடுத்து இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியை காணலாம். நாகரிகமற்ற அரபு மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒரு மாபெரும் இஸ்லாமிய நாகரிகத்தை, அறிவியல், கணிதசாஸ்திரம் மற்றும் பிற விஷயங்களில் ஒரு மாபெரும் வளர்ச்சியை உருவாக்கியது இஸ்லாமிய திருவெளிப்பாடே ஆகும். இதே போன்று இயேசு நாதர், புத்தர் ஆகியோரின் வருகையால் உலகில் ஏற்பட்ட மேம்பாடுகளை நாம் கணக்கிட முடியும்.

கி.மு. 1844-ஆம் வருடம் பல மூலாதாரங்களின் வாயிலாக ஒரு முக்கியமான வருடம் என்பதை நாம் உணரலாம். பஹாய் திருவெளிப்பாடு அவ்வருடத்திலேயே துவங்கியது. பஹாவுல்லாவின் எழுத்துகள் சுமார் 100 நூல்களாகத் தொகுக்கப்படலாம். தமது வெளிப்பாடு குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறியுள்ளார்:

அதி சிறந்த இப்புதிய உலக அமைப்பின் இயக்கத்தின் நடுக்கமுறச் செய்திடும் பாதிப்பினால் உலகின் சமநிலையே சீர்கேடடைந்துள்ளது. இணையற்ற, அற்புதமிக்க இவ்வமைப்பு முறையின் செயற்பாட்டினால், மனித இனத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கை பெரும் மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு முறையை மானிடக் கண்கள் இதுவரைகண்டதே கிடையாது.

இறுதியாக,

திருக்குரள்
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

பஹாவுல்லாவின் போதனைகளுள் மிக அடிப்படையான போதனை ஒன்று தன்னிச்சையாக உண்மையை ஆராய்ந்து உணர வேண்டும் என்பதாகும். இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ள மேலோட்டமான விஷயங்கள் யாவும் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுவதற்காகவே அளிக்கப்பட்டுள்ளன. பஹாய்கள் வன்மதமாற்ற நடவடிக்கைகளில் (proselytize) ஈடுபடுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். நம்பிக்கை என்பது உள்ளத்திலிருந்து தானாக மலர வேண்டும். அதை வெளியில் இருந்து உருவாக்க முடியாது. இன்று உலகத்தில் நூற்றுக்கணக்கில் நான்தான் கல்கி, நான்தான் இயேசு, நான்தான் வாக்களிக்கப்பட்ட அவதாரம் எனப் பலர் கூறிக்கொள்கின்றனர். இவர்களுக்கிடையே பாரசீக நாட்டில் தோன்றிய பஹாவுல்லா என்பவர் தாம்தான் என்றென்றும் வாக்களிக்கப்பட்டு வந்துள்ள இக்காலத்திற்கான கடவுளின் அவதாரம் எனத் தம்மை 1863-இல் பிரகடனப்படுத்திக்கொண்டார். வைரம் என்பது கற்களுக்கிடையில் கிடக்கும்போது அதுவும் கல்லைப் போன்றுதான் தோற்றமளிக்கும், தவறாகக் கருதப்படவும் கூடும். வைரம் எது கல் எது என்பதை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவது தனிநபர் கடமை, அதை மற்றவர்களின் வார்த்தைகளை வைத்து தீர்மானிக்க முடியாது தீர்மானிக்கவும் கூடாது, மாறாக, சுதந்திரமான சுய ஆய்வின் மூலமே அதைக் கண்டறிய வேண்டும். அதற்கான ஆற்றல்களைக் கடவுள் மனிதர்களுக்கு இயல்பாகவே வழங்கியுள்ளார். தூய சிந்தனை மிக்க தியானத்தின் மூலமாகவும் பிரார்த்தனையின் வாயிலாகவும் கல்கி அவதாரம் குறித்த உண்மையை உணர்ந்திட கடவுள் நமக்கு நிச்சயமாகவே அருள் புரிவார்.

கடவுள் அருள் மானிடத்தின் மீது என்றென்றும் பொழியப்படுவதாக.

[1] According to KD Abhyankar, the starting point of Kaliyuga is an extremely rare planetary alignment, which is depicted in the Mohenjo-Daro seals[citation needed]. Going by this alignment the year 3102 BCE is slightly off. The actual date for this alignment is February 7 of 3104 BCE. There is also sufficient proof to believe that Vrdhha Garga knew of precession at least by 500 BCE. Garga had calculated the rate of precession to within 30% of what the modern scholars estimate. (https://en.wikipedia.org/wiki/Kali_Yuga)