குரங்கிலிருந்து மனிதன்…


சமயம் மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் எனக் கூறுகின்றது, ஆனால் அறிவியலாளர்களோ மனிதன் குரங்கின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் என வாதிடுகின்றனர். நடத்தையைப் பொறுத்த மட்டில் மனிதன் குரங்கின் சாயலைக் கொண்டுள்ளான் எனப் பிசகாமல் கூறலாம், ஆனால் அவன் மெய்நிலையைய் பொறுத்தமட்டில் அவனை அவ்வாறு கூற இயலாது. ஆவியின் புத்திரனே! யான் உன்னை உயர் பண்பினனாய்ப் படைத்துள்ளேன், இருந்தும் நீயே உன்னைத் தாழ்த்திக் கொண்டு ள்ளாய். எதற்காக நீ படைக்கப்பட்டாயோ அதன்பால் உயர்வாயாக, என பஹாவுல்லா கூறுகின்றார்.

சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் 1980களில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘ஐடா’ எனப் பெயர் சூட்டப்பட்ட குரங்கு போன்ற உருவுடைய புதைபடிமம் (fossil) ஒன்றை மறு ஆய்வு செய்த அறிவியலாளர்கள் அப்படிமம் குரங்கினம் மற்றும் மனித இனத்தை இணைக்கும் ஒரு வகை உயிரினமாக இருக்கக்கூடும் என அறிவித்துள்ளனர்.

ida darwinus
ida darwinus

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனும் வாதம் நீண்டகாலமாகவே நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், குரங்கு இனத்திலிருந்து மனித இனம் எப்போது பிரிந்தது, ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ (மனிதனின் அறிவியல் ரீதியான பெயர்) இனம் எப்போது ஆரம்பித்தது என்பது போன்ற கேள்விகளுக்கான பௌதீக ரீதியான தடயங்கள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பல வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் சுமார் மூன்று அடி உயரமுள்ள குரங்கு போன்ற ஆனால் இருகாலின உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ‘லூசி’ என பெயர்கூட சூட்டப்பட்டது.

lucy
lucy

3 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த இந்த லூசியின் உடலமைப்பைப் பொருத்தவரை, அதன் தலை குரங்கினத்திற்கு சற்று ஒத்திருந்தும், அதன் உடல் வாகு இருகாலி மனிதனைப் போன்றும் உள்ளது மற்றும் இந்த லூசி ஒரு பெண் ஆவாள்.

பிற்காலத்தில் ஐடா மற்றும் லூசியிலிருந்து உதித்த மனிதன் பல மனிதப் பிரிவுகளாகி இறுதியில் ‘ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்’ ஆனான் என்பது அறிவியலாய்வு கருத்து. இடையிடையே பல மனித இனப் பிரிவுகள் காலமாற்றத்திற்கு உட்பட்டு அழிந்துவிட்டன, உதாரணமாக ‘நியாண்டர்த்தல்’ மற்றும் ‘ஆஸ்த்ராலோபித்திக்கஸ்’ மனிதப்பிரிவுகள்.

இங்கு இவற்றை விவரிப்பதன் நோக்கம் தற்போது மனிதவியல் வல்லுனரிடையே நிலவும் ‘குரங்கிலிருந்துதான் மனிதன் பிரிந்துதித்தான்’ எனும் கருத்தை வலியுறுத்துவதற்காகவோ, சில சமய நம்பிக்கையாளர்கள் கூறுவது போன்று மனிதன் சுமார் 6000 வருடங்களுக்கு முன்புதான் தோன்றினான் என்பதை வலியுறுத்துவதற்காகவோ அல்ல.

Man's evolution
Man’s evolution

மனிதனின் தோற்றம் மற்றும் அவனுடைய பரிணாம வளர்ச்சி குறித்து பஹாய் எழுத்தோவியங்களில் பல குறிப்புகளைக் காணலாம். இவற்றோடு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒப்பிட்டுப்பார்த்து பஹாய் எழுத்தோவியங்கள் இவ்விஷயம் குறித்து என்ன விளக்கமளிக்கின்றன, இந்த இரண்டும் எந்த அளவுக்கு ஒத்துப்போகின்றன என்பதை காணலாம். ஒரு முக்கிய பஹாய் போதனை சமயமும் அறிவியலும் ஒன்றாக கைகோர்த்துச் செல்லவேண்டும் என்பதாகும். அறிவியல் என்பது வஸ்துக்கள் குறித்த உண்மை பற்றிய ஆய்வாகும்; சமயம் ஆன்மீக உண்மைகள் குறித்ததாகும். ‘உண்மை’ என்பது ஒன்றுதான் எனும்போது இந்த இரண்டு அறிவுப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதற்கு அடிப்படையே கிடையாது.

மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து அப்துல்-பஹா என்ன கூறுகிறார் என்பதை இப்போது பார்ப்போம்:

…தற்போது காணப்படும் இக் கோளம் திடீரென தோன்றிவிடவில்லை என்பது தெளிவு; ஆனால்… பல கட்டங்களைச் சிறுக சிறுக கடந்து தற்போதுள்ள இப்பூரண நிலையெனும் அலங்காரத்தைப் பெற்றுள்ளது. …

… மனிதன், தாயின் கர்ப்பத்தில் உள்ள கருவைப் போன்று, தனது தோற்றத்தின் ஆரம்பத்திலும் இவ்வுலகின் மடியிலும், சிறுக சிறுக வளர்ந்து மேம்பாடடைந்து, இந்த அழகுடனும் பூரணத்துவத்துடனும், இந்த ஆற்றலுடனும் வலிமையுடனும் … ஓர் உருவநிலையிலிருந்து வேறோர் உருவநிலைக்கு மாறியுள்ளான் … ஆரம்பத்தில் அவனுக்கு இந்த சௌந்தரியமும் அழகும் நளினமும் கிடையாது, மற்றும் அவன் சிறுக் சிறுகவே இந்த வடிவத்தையும், இந்த உருவத்தையும், இந்த அழகையும், இந்த நளினத்தையும் அடைந்தான். …

… இவ்வுலகில், ஆரம்பம் முதல் இந்த தோற்றத்தை, வடிவத்தை, மற்றும் நிலையை மனிதன் அடையும்வரை அவன் படைப்பு வெகு நீண்ட காலமுடையதாகும்… ஆனால், மனிதனின் படைப்பின் ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு தனிப்பட்ட உயிரினமாவான். …[மனித உடலில்] மறைந்துவிட்டதாக கூறப்படும் சில உறுப்புக்கள் உண்மையிலேயே மனிதனுக்கு இருந்திருந்தன என ஒப்புக்கொண்டாலும் அது அவ்வுயிரினத்தின் நிலையற்றதன்மை மற்றும் மூலமில்லாமையை நிரூபிக்கவில்லை. ஆகக்கூடிய வகையில் உருவம், வடிவமைப்பு, மற்றும் மனிதனின் உடலுருப்புக்கள் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளன என்பதையே அது நிரூபிக்கின்றது. மனிதன் என்றுமே ஒரு வெகு தனிப்பட்ட உயிரினம், மனிதன், அவன் மிருகமல்ல.

ஆகவே, பஹாய் கருத்துக்கள் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் கருத்துக்களோடு ஒரே ஒரு விஷயம் தவிர மற்றெல்லாவற்றிலும் ஒத்திருக்கின்றன. அதாவது, மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை என்பது. கோடி வருடங்களுக்கு முன் அவன் பார்ப்பதற்கு நீண்ட வாலுடைய குரங்கைப்போன்று இருந்திருக்கலாம், அவன் மரத்திற்கு மரம் தாவியிருக்கலாம், அவனுடைய மரபனுக்கள் குரங்குகளுடையதோடு வெகுவாக ஒத்திருக்கலாம், ஆனால், மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை. அவன் ஓர் அனுவாக இவ்வுலகில் தோன்றியதிலிருந்து, நீரிலிருந்து நிலத்திற்கு மாறி சென்றதிலிருந்து, இன்றுவரை, அவன் அரிதான, ஓர் ஆன்மாவைப் பெற்ற, மானிடப் பிறவியே ஆவான். ஓர் உயிரினம் மற்றோர் உயிரினத்தை தோற்றத்திலும் மரபனுக்கள் வாயிலாகவும் ஒத்திருப்பதால் அவை இரண்டும் ஒன்றுதான் என முடிவு செய்யமுடியாது. குரங்கு குரங்குதான் மனிதன் மனிதன்தான்.